Tuesday, June 23, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 21-06-2020 - பொதுக்காலம் 12ஆம் வாரம் ( ஆண்டு- A)

பொதுக்காலம் 12ஆம் வாரம் ( ஆண்டு- A)

21-06-2020

ஞாயிற்றுக்கிழமை

 

 

நிழலுக்கு அஞ்சாதீர்கள்...நிஜத்துக்கு அஞ்சுங்கள்...

 

 

அது ஒரு சூஃபி கதை.   ஒரு சூஃபி குருவிடம், அவருடைய சீடர், குருவே வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நீங்கள் யாரை மாதிரியாய் எடுத்தீர்கள் என்று சொல்லுங்கள், அவரையே நானும் பின்பற்றுகிறேன் என்று கேட்டான். அதற்கு அந்த சூஃபி குரு தன்னுடைய  சீடனிடம் நாய் என்றானாம். சீடனோ, குருவே விளையாடாதீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் யாரை நீங்கள் முன்மாதிரியாக தேர்ந்து இருக்கிறீர்கள், சொல்லுங்கள் நான் அவரைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினாராம். குரு மீண்டுமாக நாய் என்று கூறி, தன்னுடைய கதையை கூற ஆரம்பித்தாராம். ஒருமுறை அவர் ஒரு ஆற்றின் ஓரத்தில் தாகமாய் சாகக் கிடந்த ஒரு நாயை பார்த்தாராம். அந்த நாய் தாகத்தோடு சாகின்ற நிலையில் இருந்தது. ஒரு ஆற்றின் ஓரத்தில்  எந்த நேரமும் அதில் நீரானது ஓடுகின்றது. இது சென்று குடிப்பதற்கு ஏதுவாக இடம் இருக்கின்றது. அப்படி இருக்கையில் ஏன் இந்த நாய் அந்த ஆற்றில் தண்ணீரை குடிக்கவில்லை என்று  அதனருகே சென்று பார்த்தாராம். அந்த நாய் சிறிது நேரம் கழித்து  ஆற்றின் ஓரத்தில் செல்லுமாம், ஆற்றிலே நீரை குடிக்கின்ற போது, நீரின் மீது அதனுடைய நிழலைப் பார்த்து ஏதோ ஒரு மிருகம் தன்னை போலே நீரிலே இருக்கின்றது என்று பயந்து மீண்டும் வந்து விடுமாம்.  தாகத்தின் வலியை பொறுக்க முடியாமல் மீண்டுமாக அது ஆற்றிலே நீர் குடிக்க செல்லும், அதன் நிழலை பார்த்து, பயந்து  நாயானது கரையை நோக்கி வந்து விடுமாம்.  இப்படியே இருந்த  ஒரு தருணத்தில் இறுதியாக தான் இறக்கப் போகிறேன். நான் நீரை குடிக்காவிடில் கண்டிப்பாக இறந்து விடுவேன் என்ற ஒரு நேரத்தில் அந்த நாயானது ஆற்றின் அருகே சென்று எப்படியிருந்தாலும் பரவாயில்லை அதனுடனும் நான் போராட தயார் என்று அந்த நீரிலே குதித்து தண்ணீரை அருந்தியது.

 

ஆம் கிறிஸ்து இயேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இன்றைய நாளிலே இன்றைய இறைவார்த்தை வழிபாடானது நாம் நம்முடைய வாழ்க்கையில நிழலாக இருக்கின்ற நம்முடைய உடலுக்கு அஞ்சாமல், நிஜமாக இருக்கின்ற நம்முடைய உள்ளத்தை காப்பாற்ற, அஞ்ச  நமக்கு அழைப்பு தருகின்றது.

 

நிழலுக்கு அஞ்சுபவர்கள்:

 

மத்தேயு 14: 22- 33- இல் சீடர்கள் படகில் இருந்த பொழுது இயேசு கடல்மீது நடந்து வருவதைக் கண்டு ஐயோ பேய் என்று  பயந்து போனார்கள்.  இயேசு அவர்களைப் பார்த்து நான்தான் அஞ்சாதீர்கள் என்கின்றார். சீடர்கள் அங்கு நிஜமான இயேசுவைக் கண்டு கொள்ளவில்லை மாறாக அவர்கள் நிழலான பேயை தான் கண்டார்கள். அதனால்தான் அங்கு அஞ்சினார்கள் அதன்பிறகு பேதுரு நானும் இயேசுவைப் போல கடலில் நடக்க வேண்டும் என்று நடக்க முயற்சிக்கிறார். ஆனால் அங்கு அவர் நிஜமான இயேசு தன்னோடு இருப்பதை உணர்வதில்லை. மாறாக, நிழலான அந்த நீரை தான்   கண்டார்.  அதனால் தான் அங்கு  அவர் மூழ்கினார். மத்தேயு 8 :23 -28 -இல் இயேசுவும் சீடர்களும் படகில் பயணித்து கொண்டிருந்த பொழுது பெரும் சீற்றமும், கடல் அலையும் வந்தபோது அவர்கள் நிஜமான இயேசு தன்னோடு இருப்பதை உணரவில்லை. மாறாக நிழலான பெரும் அலையையும், சூறாவளி காற்றும் தான் கண்டு பயந்தார்கள். யோவான் 20: 19 -29 –இல் இயேசுவினுடைய இறப்புக்கு பின்பு சீடர்கள் தன்னோடு நிஜமாக இருந்த இயேசுவை அவர்கள் உணரவில்லை. மாறாக நிழலான  யூத தலைவர்களை கண்டு பயந்தார்கள். அஞ்சினார்கள். இயேசு அங்கு வந்து அஞ்சாதீர்கள், உங்களுக்கு அமைதியைத் தருவேன் என்று நிஜத்தை வெளிப்படுத்துகின்றார்.

 

நிஜத்துக்கு அஞ்சுபவர்கள்:

 

இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் சிறைப்படுத்தபடுகின்ற துன்பத்தை அனுபவிக்கிறார். ஆனால், இவையெல்லாம் நிழல். நான் நிஜமாகிய  இறைவனுக்கு மட்டுமே அஞ்சுவேன். பாவம் செய்ய மட்டுமே அஞ்சுவேன் என்று, தன்னுடைய உள்ளத்துக்கு மட்டுமே அஞ்சக்கூடிய ஒரு முன் உதாரணமாக இறைவாக்கினர் எரேமியா இருப்பதை நாம் பார்க்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும், இறைமகன் இயேசு கிறிஸ்து பயமின்றி நற்செய்தி அறிவிக்க சீடர்களுக்கு அழைப்பு தருகின்றார். நற்செய்தியின் மூன்று இடங்களில் வசனம் 26, 28 மற்றும் 29- 31 ஆகிய இடங்களில் "அஞ்சாதீர்கள்" என்கிறார். குறிப்பாக நற்செய்தி அறிவிக்க செல்கின்ற போது சவால்கள், பிரச்சனைகள் இவையெல்லாம்  நிழல்கள்.  “நான் உங்களோடு இருக்கின்றேன்” என்று இயேசு கூறுவதை நாம்   நிஜமாக   பார்க்கின்றோம்.

 

நிழல் என்னும் உடல்:

 

உடல் என்பது அழிந்து போகக்கூடியது. அது என்றும் நிரந்தரம் கிடையாது. இந்த உடலை காப்பாற்றுவதற்காக நாம் இந்த மண்ணுலகில் போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்த உடலை காப்பாற்றுவதற்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால், இவை யாவும் வெறும் நிழல். நாம் இந்த நிழலுக்காக ஒரு போதும் நம்முடைய வாழ்க்கையிலே அஞ்ச வேண்டியதில்லை என்று இன்றைய இறைவார்த்தை பகுதி மீண்டும் மீண்டுமாக நமக்கு குறிப்பிடுகின்றது. இந்த உடலை கொல்ல வருகின்ற எதற்கும் நாம் அஞ்சவே கூடாது, ஏனென்றால் உடல் நிழலாக இருக்கின்றது.

 

நிஜம் என்னும் உள்ளம்:

 

உள்ளத்தை காப்பவர்களாக நாம் மாற வேண்டும். இந்த  உள்ளம் என்றும் அழியாதது. இந்த உலகத்தை அழிக்கக்கூடிய பாவத்திற்கு, இந்த உலகத்தை அழிக்கக்கூடிய தீய செயல்களுக்கு மட்டுமே நாம் அஞ்ச வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவைக் கொல்ல வருபவர்களுக்காக அஞ்சாதீர்கள் உங்களுடைய உள்ளத்தை கொல்பவர்களுக்காக அஞ்சுங்கள் என்று பாவத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றார். இங்கு உள்ளம் மட்டுமே நிஜமாக இருக்கின்றது.   இன்றைய இறைவார்த்தை இந்த நிஜத்தை நாம் காத்துக் கொள்ள

அழைக்கின்றது.

 

நிழலும் நிஜமும் ஆன வாழ்க்கை:

 

நம்முடைய வாழ்க்கை பல வேளைகளில் நிஜமும், நிழலும் சூழ்ந்து கிடக்கின்றது. இவை நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் பல வேளைகளில் எது நிஜம், எது நிழல் என்பதை நாம் உணர்வதே கிடையாது. நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற அனைத்து  நிழலுக்கும் நிஜத்துக்கும் நாம் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நிஜத்துக்கு அஞ்சியும், நிழலுக்கு அஞ்சாமல் வாழ, இன்றைய நாளிலே அழைக்கப்படுகின்றோம். நம்முடைய வாழ்க்கையிலே அழிந்து போகக்கூடிய சில நிமிடங்களே, சில நாட்களே, சில ஆண்டுகளே இருக்கக்கூடிய செல்வங்களுக்கு, பதவிக்கு, போட்டி பொறாமை உறவுகளுக்கு நாம் அஞ்சி கொண்டிருக்கின்றோம். அவை அனைத்தும் நம்முடைய வாழ்வின் நிழல். ஆனால், நாம் நினைத்த மாதிரியே இறைவனுக்கு, நிஜமாகிய ஆன்மாவிற்கு, நிஜமாகிய உள்ளத்திற்கு நாம் அஞ்சாமல் வாழ  அழைக்கப்படுகின்றோம். அது தான் இறுதி வரைக்கும் காத்து வழி நடத்தும். நிஜத்துக்கு அஞ்சுவோம். நிழலுக்கு அஞ்சாமல் வாழ்வோம். பாவம் அது நம்மை  அழிக்கும், நம்முடைய ஆன்மாவை அழிக்கும், அதை செய்வதற்கு நாம் அஞ்ச வேண்டும்.

 

தீய வழி நம்முடைய வாழ்வை பாழாக்கும், அதனை செய்ய நான் அஞ்சவேண்டும். வாழ்க்கையில் நல்லது செய்வதற்கு, பிறருக்கு உதவுவதற்கு, அன்பு செய்வதற்கு, நாம் ஒருபோதும் அஞ்சவே கூடாது. எனவே வாழ்க்கையில் எதற்கு அஞ்ச வேண்டும், எதற்கு அஞ்சாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, இன்றைய இறைவார்த்தை  அடித்தளத்தில் நம்முடைய உள்ளத்தை காக்கின்ற நிஜத்தை ஏற்று வாழ்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

 

 

 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

 

கும்பகோணம்.