மே மாதம் - 2ஆம் தேதி.
பாஸ்கா காலத்தின் மூன்றாம் வாரம் சனிக்கிழமை
நற்செய்தி: யோவான் 6: 60-69
கிறிஸ்தவ வாழ்வின் இகிகாயை உணர்வோம்.
(இறைவார்த்தையின் இரண்டு கனிகள்)
ஜப்பானியர்களின் நீண்டகால மகிழ்ச்சிக்கான வாழ்க்கை ரகசியமாக இருக்கிறது இகிகாய் தத்துவம். இகிகாயை “இருத்தலின் காரணம்” என்று பிரெஞ்சு மொழியில் விளக்குவார்கள். உலகிலேயே 100 வயதை கடந்தவர்கள் அதிகமாக வாழும் பகுதி ஒக்கினாவா தீவு, அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாடம் காலையில் விழிப்பதற்கான காரணமாக இகிகாயை தெரிவிக்கிறார்கள். நிறைவு, மகிழ்ச்சி, வாழ்க்கைக்கான அர்த்தம் போன்றவை நமது இகிகாயை நாம் கண்டறியும்போது கிடைக்கின்றன. கிறிஸ்தவர்களாகிய நாம் நம் வாழ்வின் இகிகாய் தத்துவத்தை, நம் வாழ்வின் காரணத்தை அறிந்திட, இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு தருகிறது. நமது கிறிஸ்தவ வாழ்வு அர்த்தம் உள்ள வாழ்வாக அமைய அடித்தளம் இறைவார்த்தை. இறைவார்த்தை இரண்டு விதமான கனிகளை நமக்கு தருகின்றது என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
முதலாவதாக இறைவார்த்தை ஆவியை தருகின்றன. "நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன" யோவான் 6: 63 என இன்றைய நற்செய்தி நமக்கு கூறுகின்றது.
"ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது வாழ்வு தருவது தூய ஆவியே" ஊனியல்பு மனித இயல்பு சதை, இது ஒன்றுக்கும் உதவாது. யோவான் 3 : 6-ல் "மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர் தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்" தூய ஆவியைப் பெற்றுக்கொள்ள இறைவார்த்தையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இரண்டாவதாக இறைவார்த்தையின் அடித்தளத்தில் வாழ்கின்ற போது, நாம் வாழுகின்றோம். எபிரேயர் 4:2-ல் "ஆண்டவருடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது" இந்த உயிருள்ள வார்த்தைதான், அன்று உலகத்தைப் படைத்தது, இஸ்ராயேல் மக்களை வழிநடத்தியது, மனுருவாகி நம் அனைவருக்கும் தீர்ப்பை வழங்கியது, இந்த உயிருள்ள வார்த்தை. ஒரு அடிப்படையான அடித்தளமான வாழ்வை வாழ இங்கே நாம் இகிகாயை அறிந்துகொள்ள வேண்டும். இதனால் தான் பேதுரு "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" என இன்றைய நற்செய்தி யோவான் 6: 68 -ல் கூறுகின்றார். ஆக இறைவார்த்தை நமக்கு வாழ்வையும் தூய ஆவியையும் தருகின்றது.
யோவான் 6: 60-ல் இயேசுவின் சீடர்கள் "அவர் வார்த்தையை அவர் பேச்சைக் கேட்பது கடினம் அல்ல, ஏற்றுக்கொள்வது தான் கடினம்" என்கின்றனர். நமது கிறிஸ்தவ வாழ்வில் ஆண்டவருடைய வார்த்தையை கேட்பது கடினம் அல்ல, அதன் படி வாழ்வது அதனை ஏற்றுக் கொள்வது தான் கடினம். ஒருவன் விளையாட வேண்டும் என்பதற்காக விளையாடும் போது அது நேரத்தை வீணாக்கும் செயலாக உள்ளது.. நானும் சாப்பிட வேண்டுமென சாப்பிடும்போது அது அர்த்தமற்ற செயல். என் உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். நான் உடல் நலத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காக விளையாடும்போது, சாப்பிடும்போது வாழ்வு அர்த்தம் பெறுகின்றது. நான் கிறிஸ்தவனாக இருக்க வேண்டும் என்பதற்காக வாழும் பொழுது நம்முடைய வாழ்வு அர்த்தமற்றது. எனது கிறிஸ்தவ வாழ்வு அர்தமுள்ள வாழ்வாக மாற வேண்டும் என்பதற்காக, நாம் வாழவேண்டும். இறைவார்த்தையை பற்றிக்கொள்ள வேண்டும். அது நமக்கு தூய ஆவியையும் புது வாழ்வையும் தரும். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்.