Friday, September 2, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 23-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 04 -09-2022- ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம் : சீராக்கின் ஞானம் 9: 13-18
இரண்டாம் வாசகம் : பிலமோன் 9b-10, 12-17
நற்செய்தி : லூக்கா 14: 25-33

இயேசுவின் சீடத்துவத்தில் பங்கேற்க …|

பள்ளிக்கூடத்தின் வாயிலில் ஒருவர் பலூன் விற்று கொண்டிருக்கின்றார். அதை ஒரு சிறுமி நிறைய நேரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். மெதுவாக அந்த சிறுமி பலூன் விற்பவரிடம் சென்று இங்கிருக்கின்ற எல்லா பலூன்களும் பறக்குமா? என்று கேட்கின்றாள். அதற்கு அவர் 'ஆம்' என்கிறார். அந்த சிறுமி மீண்டுமாக எல்லா கலர் பலூன்களும் பறக்குமா? என்று கேட்கின்றாள். அதற்கு அவர் மீண்டுமாக 'ஆம் பறக்குமே' என்கின்றார். அந்த சிறுமி கருப்பு நிற பலூனாக இருந்தாலும் பறக்குமா? என மீண்டும் கேட்கின்றாள். அந்த சிறுமி தான் கருப்பு நிறமாக இருப்பதை நினைத்துக் கொண்டு தான் இவ்வாராக கேட்கின்றாள் என்பதை உணர்ந்த அந்த பலூன் வியாபாரி, அந்த சிறுமியை பார்த்து பலூன் பறப்பது வெளியே உள்ள நிறத்தினால் அல்ல, மாறாக உள்ளே உள்ள கேஸினால் மட்டுமே என்றார். இன்றைக்கு நாமும் பல வேளைகளிலே வெளித்தோற்றத்தை வைத்து, அதை மதிப்பீட்டு அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இயேசு செய்த வெளிப்புற வல்ல செயல்களை பார்த்து பலர் இயேசுவை பின்பற்ற முயன்ற போது, அவரது சீடத்துவத்தில் நுழைவதற்கான நிபந்தனைகளை இயேசு முன்வைப்பதே இன்றைய நற்செய்தி வாசகமாகும். வெறும் வெளிப்புற வல்ல செயல்களை பார்த்து அல்லாது, நமது உட்புற குணங்களை வைத்து மட்டுமே இயேசுவின் சீடத்துவம் சாத்தியமாகும் என்பதை உணர்ந்து கொள்ள அழைப்பு பெறுகின்றோம். கிரேக்க மொழியில் சீடன் என்பதற்கு கொடுக்கப்பட்ட பதம் மதட்டஸ் (mathetes), இதன் பொருள் மாணவன், பயிலுனன் என்பவையாகும். சீடன் என்பவன் குருவோடிருந்து, அவர் எடுத்துரைக்கின்ற யாவற்றையும் கேட்டு, அதன்படி செயல்படுகின்றவன். சீடத்துவத்தின் நிபந்தனைகளை அறிந்து, அதை பின்பற்ற இயலுமா என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
"The Seven Habits of Highly effective people" என்பது Stephen Covey எழுதிய புத்தகம், இவர் இந்த புத்தகத்திலே மனிதனுக்கு தேவையான ஏழு முக்கியமான பழக்கங்களை குறிப்பிடுகின்றார். அதிலே ஏழாவது பழக்கமான 'ரம்பத்தை கூர்மைப்படுத்து' அதாவது Sharpen the saw என்னும் பழக்கத்தை விவரிப்பதற்காக நான்கு விதமான கூர்மைகளைப் பற்றி எடுத்துரைக்கிறார்.
1. உணர்வு கூர்மை
2. ஆன்மீக கூர்மை
3. உள்ளத்து கூர்மை
4. உடற் கூர்மை

இந்த நான்கு கூர்மைகளும் மனிதன் தன்னுடைய வாழ்வில் தன்னையே செதுக்கிக் கொள்ள அடிப்படையாக தேவைப்படுகிறது. இயேசுவின் சீடர்களாக வாழ நமக்கும் சில நிபந்தனைகள் தேவைப்படுகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு சீடத்துவ வாழ்விற்கு எடுத்துரைக்கும் நிபந்தனைகளை இந்த நான்கு கூர்மைகளின் அடித்தளத்தில் எடுத்துரைக்கின்றார்.
1. உணர்வு கூர்மை (உணர்வுகளை கடந்து வருதல்...)
“என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது." (லூக்கா 14:26) என நம் உறவுகளின் உணர்வுகளைக் கடந்து, ஏன் நம் உயிரையும் கடந்து, இயேசுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரின் சீடர்களாக வாழ நம் உணர்வுகளை கூர்மைப்படுத்த அழைப்பு பெறுகின்றோம். இன்றைக்கு நான் எனது வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்? இந்த உலகில் நம் உறவுகளின் உணர்வுகளைக் காட்டிலும் இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோமா? சிந்திப்போம். பல நேரங்களில் எங்கள் வீட்டிற்கு நண்பர்கள் மற்றும் உறவுகள் வந்திருக்கின்றார்கள் என்று இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதாவது ஞாயிறு திருப்பலியில் பங்கேற்காமல், குடும்ப ஜெபமாலையில் செய்யாமல், அதற்கான தயாரிப்பிற்கும், அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டிருக்கின்றோம். இத்தகைய நிலையிலும் இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே உண்மையான கிறிஸ்தவ சீடத்துவ வாழ்வு. இன்று நம்முடைய உணர்வுகளை கூர்மைப்படுத்தி இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக நாம் மாறுவோம்.

2. ஆன்மீக கூர்மை ( துன்பங்களை கடந்து வருதல்...)
"தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது." (லூக்கா 14:27) என்னும் இயேசுவின் வார்த்தைகள் நாம் நமது வாழ்வின் துன்பங்களை மற்றும் சோதனைகளை ஏற்றுக்கொள்ள அழைப்பு தருகிறது. இன்று தன் துன்பங்களை ஏற்றுக் கொள்கின்றவனே நாளைய சாதனையாளனாகவும் மாறுகின்றான். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும். எனது சொல்லால், செயல்களால் மற்றும் நான் செய்கின்ற பாவங்களால் ஏற்படுகின்ற துன்பங்கள் என்னும் சிலுவைகளை நானே சுமக்க வேண்டும். இதுவே சீடத்துவத்திற்கான வழியாகவும் அமைகின்றது என்கின்றார் இறைமகன் இயேசு. நாம் நமது வாழ்வின் அன்றாட சிலுவைகளை சுமத்தல் என்பது நம்மை ஆன்மீக கூர்மைக்கு அழைப்பு விடுக்கின்றது. இன்றைக்கு வளர்ந்து வருகின்ற இந்த மாய உலகிலே எல்லாம் எனக்கு கஷ்டமில்லாமல் கிடைக்க வேண்டும் என்ற ஒரு உணர்வு நம்மிடையே இருக்கின்றது. இப்புதிய சமுதாயத்தின் நாகரீக வளர்ச்சியில் எதுவும் நமக்கு எளிமையாக கிடைப்பதில்லை. உழைப்பும் விடாமுயற்சியும் மற்றும் துன்பங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற மனமும் தான் வாழ்க்கையில் வெற்றி கொள்ளுகின்ற மனமாகும். இறைமைந்தன் இயேசு கிறிஸ்து அத்தகைய மனதோடு தான் சிலுவையை சுமந்து நமக்கு மீட்பை அளித்தார். தொடக்க கிறிஸ்தவர்களும் அன்று துன்பம் என்னும் சிலுவைகளை ஏற்றுக்கொண்டதால் தான் இன்று கிறிஸ்தவம் வளர்ந்தெழ செய்திருக்கின்றது. எனவே நமது கிறிஸ்தவ வாழ்வில் நாம் அனுபவிக்கும் அன்றாட சோதனைகளையும் மற்றும் துன்பங்களையும் ஏற்றுக்கொண்டு நமது ஆன்மீக வாழ்வை கூர்மைப்படுத்துவோம்.
3. உள்ளத்து கூர்மை (திட்டமிடுதலும், சிந்தனையும்)
நற்செய்தியில் திட்டமிடுதலையும் சிந்தனையையும் எடுத்துரைப்பதற்காக இயேசு இரண்டு விதமான உவமைகளை எடுத்துரைக்கின்றார். கட்டிடம் கட்டுபவன் அதற்காக திட்டமிடுகின்றான் மற்றும் அதற்கான செலவினங்களை பற்றி யோசிக்கின்றான். போருக்கு செல்லும் அரசன் தான் கொண்டிருக்கின்ற படைவீரர்களைக் கொண்டு எதிர் நாட்டு அரசின் படைகளோடு போராட முடியுமா என சிந்திக்கின்றான் (லூக்கா 14:28-32). இதே போல இயேசுவினுடைய சீடராக மாறுவதற்கு முன், என்னால் இந்த சீடத்துவ வாழ்க்கையை வாழ முடியுமா என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் மற்றும் சீடத்துவ வாழ்விற்கான திட்டமிடலை செய்ய வேண்டும். ஆக திட்டமிடுதலும் ஆழ்ந்த சிந்தனையும் நமது உள்ளத்தில் பிறப்பவையாகும், அதை கூர்மையாக்குதலிலே இவை சாத்தியமாகும். ஆழம் தெரியாமல் காலை விடாதே என்னும் பழமொழிக்கு ஏற்ப நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் யோசித்து சரியாக திட்டமிட்டு செய்ய முயல வேண்டும். நமது வீடுகளில் நடக்கும் திருமணத்திற்கும் மற்ற விசேஷங்களுக்கும் திட்டமிட்டு யோசித்து செயல்படுகின்ற நாம், தனிப்பட்ட ஆன்மீக வாழ்விற்காக சிந்திப்பதும் கிடையாது, திட்டமிடுவதும் கிடையாது. நாம் என்ன படிக்க வேண்டும்? எந்த வேலை செய்ய வேண்டும்? என்னுடைய குடும்பத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதை திட்டமிடுகின்ற நாம் நமது ஆன்மீக வாழ்விற்கு எவ்விதமான திட்டமிடுதலையும் சிந்திப்பதையும் செய்வது கிடையாது. ஒவ்வொரு நாளும் நான் அரை மணி நேரம் இறைவார்த்தையை வாசிப்பதற்கு செலவிடுவேன், குடும்ப ஜெபமாலை ஜெபிப்பேன், திருப்பலியில் பங்கேற்பேன், ஆலய நிகழ்வுகளிலும் மற்றும் பக்த சபைகளிலும் முழுமையாக பங்கேற்பேன என பலவிதமான திட்டமிடுதல்கள் நமது கிறிஸ்தவ சீடத்துவம் வாழ்வை ஆழப்படுத்தும்.

4. உடற்சார்ந்த கூர்மை (உடல் ஆசைகளை கடந்து)
"உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது." (லூக்கா 14:33) என நம் உடலை அலங்கரிக்கின்ற ஆடைகளை அதாவது நம் உடமைகளை கடந்து, இன்னும் குறிப்பாக உடல் ஆசைகளைக் கடந்தால் தான் இயேசுவின் சீடர்களாக வாழ முடியும் என்கின்றார். இது உடை, நகை, அழகு சாதனங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் என உடலை அழகூட்ட மற்றும் அலங்கரிக்க பயன்படுவதில் ஆசை கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலகம். அதுவே நமது கிறிஸ்தவ சீடத்துவ வாழ்விற்கு மிகப்பெரிய தடைக்கல்லும் ஆகும். இத்தகைய உடல் ஆசைகளை கடந்து இறைவனுக்கும் மனிதருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ இறைவன் அழைப்பு விடுக்கின்றார்.

ஆக, நம்முடைய உறவுகளை கடந்து நம் உணர்வுகளை கூர்மைப்படுத்தி, துன்பங்களைக் கடந்து ஆன்மீகத்தை கூர்மைப்படுத்தி, ஆழ்ந்த சிந்தனை கொண்டு உள்ளத்தை கூர்மைப்படுத்தி மற்றும் நம்மை அழகுப்படுத்துவதை கடந்து உடலைக் கூர்மைப்படுத்தி இயேசுவின் சீடத்துவத்திற்குள் நுழைவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

                     

காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)



காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...(ஆங்கிலம்)