Saturday, September 19, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 20-09-2020 - பொதுக்காலம் 25ஆம் வாரம் ( ஆண்டு- A)

 

பொதுக்காலம் 25ஆம் வாரம்
(
ஆண்டு- A)

20-09-2020

ஞாயிற்றுக்கிழமை


நம் வாழ்வை சீர்குலைக்கும் பொறாமை

 


ஒரு பள்ளியில் ராமு மற்றும் மணி என்னும் இரு மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். ராமு எப்பொழுதும் முதல் மதிப்பெண்ணை எடுப்பான். மணி எப்பொழுதும் இரண்டாவது மதிப்பெண்ணை எடுப்பான். மணி மிகப்பெரிய பண்ணையார் வீட்டு பையன். ராமு அந்த பண்ணையார் வீட்டில் வேலை செய்கின்ற சாதாரண விவசாயின் மகன். அந்த ஆண்டு அரையாண்டு தேர்விலும் தொடர்ந்து ராமு முதல் மதிப்பெண்ணையும், மணி இரண்டாம் மதிப்பெண்ணையும் எடுத்தார்கள். அப்பொழுது மணியிடம் அவனுடைய நண்பர்கள் நீயோ மிகப் பெரிய  பண்ணையார் வீட்டு பையன்ராமுவோ விவசாயின் மகன் ஆனால் அவன்  உன்னை விட அதிக மதிப்பெண்கள் எடுக்கின்றான் என மணிக்கு ராமுவின் மீது பொறாமை வருவதற்கு அவர்கள் காரணமாக இருந்தார்கள். அதன்பிறகு மணியோ தன்னுடைய தந்தையிடம் சென்று நடந்த யாவற்றையும் கூறி அவனை எப்படியாவது பள்ளியை விட்டு நீக்க வைக்க வேண்டும் என்று தன்னுடைய தந்தையிடம் கூறினான். பண்ணையாரோ தன்னுடைய நிலத்துக்குச் சென்று, அங்கு வேலை செய்து கொண்டிருந்த ராமுவின்  தந்தையை அழைத்து, நீ எனக்கு இதுவரை செலுத்த வேண்டிய அனைத்து கடனையும் உடனடியாக செலுத்த வேண்டும் என்று கேட்டார். ராமுவின் தந்தையோ, ஐயா! திடீரென்று இப்படி கேட்டால், எப்படி? நான் கண்டிப்பாக கொடுத்து விடுகிறேன் என்று கூற, பண்ணையாரோ, இல்லை நீ கொடுத்தே ஆக வேண்டும் என்று அவனைக் கட்டாயப்படுத்தினார். அதன் பிறகு, அவர் அதே கோபத்தோடும், வைராக்கியத்தோடும் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, எப்படியும் இவன் வந்து என்னுடைய காலில் விழுவான். அப்போது நான் கூறுவேன் ராமுவை பள்ளியை விட்டு நீக்கி ஆக வேண்டும் என  யோசித்துக் கொண்டே, அவர் செல்லும் பொழுது அருகில் இருந்த பாழும் கிணற்றில் தெரியாமல்  விழுந்து விட்டார்.

 அவர் விழுந்ததை கண்டதும், உடனடியாக ராமுவின் தந்தை ஓடோடிச் சென்று, அந்த கிணற்றில் இருந்து மீட்டு, அவரை மருத்துவமனையில் சேர்த்து அவருடைய உயிரை காப்பாற்றினார். அப்பொழுது தான் பண்ணையாருக்கு புரிந்தது தான் கொண்ட பொறாமைதன்னுடைய உயிரையே பறிப்பதற்கு காரணமாக இருந்திருக்கும் என்று. பின்பு அவர் விவசாயிடம் மன்னிப்பு கேட்டார். இறுதிவரை உன் மகன் படிப்பதற்கு நான் எல்லா செலவினங்களையும் பார்த்து கொள்கின்றேன் என வாக்குறுதி கொடுத்தார். மணியும் தான் இனிமேல் படித்து ராமுவை விட அதிக மதிப்பெண் எடுப்பேன் என்று தன்னுடைய பொறாமை குணத்தை உணர்ந்து அதிலிருந்து விடுபட்டான்.

 ஆம், கிறிஸ்து இயேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தை பகுதி நாம் நம்முடைய வாழ்க்கையில் பொறாமை குணத்தை அறவே ஒழிக்க வேண்டும் எனவும், பொறாமை நம்முடைய வாழ்க்கையை சீர்குலைக்கும் என்பதையும் எடுத்துரைக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் நிலக்கிழார் மேல் பொறாமை கொண்ட வேலையாட்களை பார்க்கின்றோம். நிலக்கிழார்  விடியற் காலை, 9 மணி, 12 மணி, 3 மணி மற்றும் 5 மணி என வெளியே செல்லும் பொழுதெல்லாம் வேலையற்று இருந்தவர்களுக்கு வேலை கொடுத்த, ஒரு இரக்க குணம் கொண்ட ஒருவராக இருக்கின்றார். ஆனால், காலையில் வேலைக்கு வந்தவர்கள் அவரை நோக்கி முனுமுனுக்கின்றனர். இதுவே   அவர்களின் பொறாமையை எடுத்துரைக்கின்றது. மேலும் கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். எங்களையும் இவர்களோடு இணைத்து  விட்டீரே என்று அவர்கள் கேட்டது அவர்களுடைய பொறாமை நிறைந்த வார்த்தைகளை காட்டுகின்றது. அவர்களுடைய உள்ளமும், அவர்களுடைய வார்த்தைகளும்  பொறாமையை எடுத்துரைக்கின்றது.

 1. இருப்பதை மறக்க செய்த பொறாமை

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் நிழக்கிழார் மீது பணியாட்கள் கொள்ளுகின்ற பொறாமை இருப்பதை மறக்க செய்கின்ற பொறாமை. அவர்கள் தங்களுக்கு ஒரு வேலை கிடைத்திருக்கின்றது. அந்த வேலைக்கான ஒரு நாள் ஊதியம் சரியாக கிடைத்திருக்கிறது என  தங்களிடம் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளாமல், பிறரை பார்த்து பொறாமைப்படுகிறார்கள். இது அவர்களிடம் இருப்பதை  மறந்து விட வைக்கின்ற  பொறாமையாக இருக்கிறது.

 2. உயிரை கொன்ற பொறாமை (தொ.நூ. 4:1-16)

பழைய ஏற்பாட்டில் இறைவன் ஆபேல் அளித்த காணிக்கையை ஏற்றுக் கொண்டார். காயின் அளித்த தானியங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே காயின் தன்னுடைய சகோதரன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த பொறாமையின் விளைவு தன்னுடைய சகோதரரின் உயிரை கொல்கின்றான். தன்னுடைய சகோதரனுடைய உயிரை கொன்ற பொறாமையாக காயினின் பொறாமை மாறியது.

 3. அடிமையாக்கிய பொறாமை (தொ.நூ. 37:1f)

பழைய ஏற்பாட்டில் யோசேப்பின் சகோதரர்கள், யோசேப்பின் மீது பொறாமை கொள்வதைப் பார்க்கின்றோம். தன்னுடைய தந்தை இளைய மகனான யோசேப்பின் மீது அதிகம் அன்பு கொண்டு இருப்பதை ஏற்றுக் கொள்ளாத மற்ற சகோதரர்கள் யோசேப்பின் மீது பொறாமை கொள்கின்றனர். இந்த பொறாமையின் விளைவாக அவரை கொல்ல முயற்சிக்கிறார்கள். இறுதியாக அடிமையாக யோசேப்பை விற்கின்றார்கள். யோசேப்பின் சகோதரர்கள் அடிமையாக்கிய பொறாமை.

 4. நல்ல பங்கை தராத பொறாமை (லூக். 10::38-42)

 இயேசு மார்த்தா மரியாவின் வீட்டிற்கு சென்றபோது, மரியா இயேசுவோடு உட்கார்ந்திருந்தாள். மார்த்தா பல பணிகளில், அவரை கவனிக்க வேலைகளை செய்து கொண்டிருந்தாள். தன்னுடைய சகோதரி வேலை செய்யாமல் இயேசுவோடு பேசிக் கொண்டிருக்கிறாள் என மார்த்தா மரியாவின் மீது பொறாமை கொள்கின்றாள். மரியாவின் மீது கொண்ட பொறாமை நல்ல பங்கை அவளுக்கு  தராத ஒரு பொறாமை.

 5. வெறுக்க வைத்த பொறாமை  (லூக். 15::11-33)

 புதிய ஏற்பாட்டில் ஊதாரி மைந்தன் உவமையில் ஊதாரி மைந்தனனான இளைய மைந்தன் மீண்டுமாக வருகின்ற பொழுது, தன்னுடைய தந்தை அவன் மீது அன்பு செலுத்தி, மன்னித்து, அவனுக்கு புதிய ஆடை அணிகலன்களை அணிவித்து அதனை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற பொழுது, மூத்த மகன் தன்னுடைய சகோதரன் மீது பொறாமை கொள்வதை பார்க்கின்றோம். இந்த பொறாமை தன்னுடைய சொந்த சகோதரனை வெறுக்க வைத்த பொறாமை.

 "கெடுவான் கேடு நினைப்பான்" என்னும் பழமொழிக்கேற்ப நாம் கேடு நினைத்தால் அது நமக்கே அழிவைத்தரும். நாம் பொறாமை கொள்ளுகின்ற பொழுது அது நம்முடைய வாழ்வை சீர்குலைக்கும். நாம் பொறாமையோடு வாழ்கின்ற பொழுது நம்முடைய திறன்களை, திறமைகளை மற்றும் குணநலன்களை உணராமலே போகின்றோம். நம்மிலே இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம், உணராமலே இருக்கின்றோம். அப்பொழுது நாம் நம்மிலே எந்த ஒரு வளர்ச்சியையும் காணமுடியாது. எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாத பொழுது, நம்முடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. வாழ்வு மகிழ்ச்சியாக இல்லாத போது முற்றிலுமாக வாழ்க்கையானது சீர்குலைந்து விடும்.

 பொறாமை நம்முடைய வாழ்க்கையை மட்டும் சீர் குலைக்காமல், நாம் யார் மீது பொறாமை கொள்கிறோமோ, அவர்களுடைய வாழ்க்கையும் கெடுப்பதாக இருக்கின்றது. பொறாமை வாழ்வை சீர்குலைக்கும் ஒரு மாபெரும் ஆயுதம். பொறாமையை நம்முடைய வாழ்க்கையிலிருந்து, நம்மிடையே இருந்து  அறவே விட்டு விட இறைவனை நம்முடைய வாழ்க்கையிலே தேடுவோம். இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் கூறுவதை போல, ஆண்டவரை தேடுபவர்களாக மாறுவோம். அப்பொழுது தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிட்டு இறைவனில் சேர்வர். ஏனென்றால் இறைவனுடைய இரக்கம் மிகுதியானதுஎனவே இறைவனுடைய இரக்கத்தை பெற்று வாழ்க்கையை சீர்குலைக்கும் பொறாமையை நம்மிடையே ஒழிப்போம்.

 



இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

 

 

 

 

 

 







Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.