இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2: 6-11
நற்செய்தி: லூக்கா 22: 14- 23: 56
கழுதை பயணம் எதற்காக?
(இயேசுவின் மனநிலை)
குருத்து ஞாயிறு இயேசுவின் பாடுகளின் வார துவக்கமாக அமைகின்றது, இது புனித வாரத்தின் துவக்கம் அதாவது இயேசுவின் பணி வாழ்வின் கடைசி ஏழு நாட்கள் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ திருஅவையின் மிக முக்கியமான புனித நாட்களின் துவக்கமாக அமைகின்றது. இயேசுவின் இந்த பாடுகளின் வாரம் ஆடம்பரமான எருசலேம் நுழைவில் துவங்கி, அலங்கோலமான கல்வாரி மலை சிலுவை பயணத்தில் பயணித்து, அவரின் உயிர்ப்பில் நம்மை கொண்டு போய் சேர்க்கிறது. நாம் கொண்டாடுகின்ற இந்த குருத்து ஞாயிறு இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்பாக பாடுகளின் ஞாயிறு மற்றும் குருத்து ஞாயிறு என இரண்டு ஞாயிறுகளாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு தான் இரண்டையும் இணைத்து ஒரே ஞாயிறாக நாம் கொண்டாடுகின்றோம், அதனால் தான் இன்றைய நாளிலே பவனியின் முன் ஒரு நற்செய்தி வாசகமும் திருப்பலியின் போது மற்றொரு நற்செய்தி வாசகமும் என இரண்டு நற்செய்தி வாசகங்கள் வாசிக்கப்படுகிறது. இயேசு ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற பாஸ்கா விழாவை கொண்டாடுவதற்காக எருசலேம் நகருக்குள் சென்ற போது மக்கள் அவரை கழுதையின் மீது அமர வைத்து (லூக் 19:35), அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை வழியெங்கும் அவருக்காய் விரித்து(லூக் 19:36), கைகளில் மரக்கிளைகளை வைத்து (மத் 21:8) மற்றும் ஓசான்னா என முழக்கமிட்டு (மத் 21: 9) எருசலேம் நகருக்குள் அழைத்து செல்கிறார்கள். ஏன் மக்கள் இயேசுவுக்கு இவ்வாறாக செய்ய வேண்டும்? ஏன் தங்களுடைய ஆடைகளை அவர் வரும் பாதையெல்லாம் விரித்து ஓசன்னா என அவர்கள் முழக்கமிட வேண்டும்? ஏன் இயேசுவுக்கு இந்த கழுதை பயணம்? இவையெல்லாம் நமக்கு எதை வெளிப்படுத்துகிறது?
1.மக்களின் மனநிலை
2.இயேசுவின் மனநிலை
1. மக்களின் மனநிலை
ஏன் மக்கள் இவற்றையெல்லாம் செய்தார்கள்? என சிந்திக்கும் போது அவர்களின் மனநிலை இங்கு வெளிப்படுகிறது. இயேசு பாஸ்கா விழா கொண்டாடுவதற்காக எருசலேமை நோக்கி செல்வதற்கு முன்பாக பெத்தானியாவில் பல புதுமைகளை செய்கிறார், குறிப்பாக இலாசரை உயிர்ப்பிக்கிறார் மற்றும் பார்வையற்றவருக்கு பார்வை கொடுக்கின்றார், இந்தச் செய்தி எருசலேம் நகர் முழுவதும் பரவுகிறது. எருசலேமில் உரோமையர் ஆட்சி, அதுமட்டுமின்றி மக்கள் பன்றி இறைச்சி சாப்பிடவும் மற்றும் சீசரை வழிபடவும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். மேலும் மதச்சுதந்திரம் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை, விருத்தசேதனமும் செய்ய இயலாத நிலை, பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் கூட அவர்களுக்கு இல்லாமல் இருந்தது. அதனால் தான் அவர்கள் விடுதலை அதாவது மீட்பை பெற வேண்டும் என நினைத்தார்கள், இயேசு தான் நமக்காக வந்திருக்கின்ற மீட்பர் மற்றும் அரசர் என்று நினைத்து "ஓசான்னா" என முழங்கி இயேசுவை அந்நகருக்குள் வரவேற்றார்கள். இந்த "ஓசன்னா" வார்த்தை "Yasha" மற்றும் "na" என்னும் இரண்டு எபிரேய சொல்லின் உருவாக்கமாக இருக்கிறது. அதாவது "Yasha-na" என்னும் வார்த்தையே ஓசான்னா என்பதாகும், அப்படியென்றால் "எங்களை காப்பாற்றும்" என பொருள்படும். பல ஆண்டுகளாக நம்மை மீட்க மெசியா வருவார் என்று எதிர்பார்த்த மக்கள் இயேசுவை தம்மை மீட்க வந்த அரசராக எண்ணி ஓசான்னா என ஆர்ப்பரித்து பாடுகிறார்கள். பல புதுமைகளை செய்து வரும் போதகரான இயேசு தான் பல நாட்களாக நாம் எதிர்பார்த்த மெசியா மற்றும் நமக்கு விடுதலை தரும் அரசர் என்னும் மக்களின் மனநிலை தான் இயேசுவின் இந்த கழுதை பயணம்.
2. இயேசுவின் மனநிலை
மக்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் இயேசுவின் மனநிலை தன் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் தெளிவாய் இருந்தது. இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்து அதைப் பார்த்து அழுததும்(லூக்கா 19:41) மற்றும் தன் சீடர்களிடம் தான் எருசலேம் செல்ல வேண்டும், அங்கு பாடுகள் பட வேண்டும் என முன்னறிவித்ததும் அவரது மனநிலையையே நமக்கு காட்டுகிறது. "மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்" (செக்கரியா 9:9) என்னும் இறைவாக்கினரின் வாக்கு நடைபெறவிருக்கும் மீட்பு திட்டத்தின் செயல்பாடுகளை முன்னறிவிப்பாக எடுத்துரைக்கிறது. இயேசுவின் இந்த எருசலேம் நகர் பயணம் கல்வாரி பயணமாக மாறும் என்பதையும், கழுதை அவரை சுமந்த நிலை மாறி சிலுவையை இயேசு சுமக்க நேரிடும் என்பதையும், ஓசன்னா என்னும் குரல்கள் சிலுவையில் அறையும் என கூவும் என்பதையும் மற்றும் துணியை அவிழ்த்து பாதையில் போட்டவர்கள், அவரது துணியை அவிழ்க்க வைப்பார்கள் என்பதை உணர்ந்த மனநிலையோடு இந்த கழுதை பயணத்திலே மீட்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அதாவது மனித குலத்தை தன்னுடைய சிலுவைப் பாடுகளின் வழியாக மீட்பதற்காக பயணித்து செல்கின்றார்.
மனித வாழ்வு பலத்தையும் மற்றும் பலவீனத்தையும் கொண்டது. இன்று மனிதத் தன்மையில் இயேசுவின் பாடுகளின் முன் அடையாளத்தையும் இறைத்தன்மையில் அவரது வெற்றிக்கான பாதையின் கதவுகள் திறக்கப்படுவதையும் பார்க்கின்றோம். தவக்காலத்தின் இறுதியில் பாடுகளின் வாரத்தை துவங்கியிருக்கின்ற நாம், இன்று எத்தகைய ஒரு மனநிலையோடு இருக்கின்றோம் என்பதை சிந்திப்போம். பல வேளைகளில் எதாவது ஒரு நிகழ்வு நடக்கின்ற பொழுது நமக்கும் இத்தகைய இரண்டு விதமான மனநிலைகள் ஏற்படலாம். இறைவனின் இறை திட்டமான இயேசுவின் மனநிலை மற்றும் நமக்கு ஏற்படுகின்ற துன்பங்கள், கஷ்டங்கள், பாரங்கள், மகிழ்வான நிகழ்வுகள் என அனைத்தையும் நாம் மனித கண்ணோட்டத்தோடு பார்க்கும் மனித மனநிலை. இறைவன் நம் சுய விருப்பத்திற்கு ஏற்றவாறு நடக்க வேண்டும் என மனித மனநிலையோடு வாழ்கின்றோம். ஆனால், அதையும் தாண்டி இறைவனுடைய இறைத் திட்டங்களை உணர்ந்த ஒரு மனநிலையை நாம் நன்கு உணர வேண்டும் மற்றும் அதை நமது வாழ்வாக்க வேண்டும்.
ஒருமுறை அரசர் ஒருவருக்கு அவரது பற்கள் எல்லாம் விழுந்து, பொக்கை வாயாக அவர் இருப்பது போல் கனவு வந்ததாம். அடுத்த நாள் காலையில் ஜோதிடர் ஒருவரை அழைத்து அதை பற்றிய விளக்கம் கேட்டாராம். அந்த ஜோதிடரும் தன்னிடமிருந்த எல்லா ஓலைச்சுவடிகளையும் புரட்டிப் பார்த்து, அரசே உங்களுடைய குடும்பத்தார் மற்றும் உற்றார் உறவினர் என எல்லோரும் உங்களுக்கு முன்பாகவே இறந்து விடுவார்கள் என்பதை தான் இந்த கனவு காட்டுகிறது என்று கூறினாராம். இதைக் கேட்ட அரசன் கோபம் கொண்டு அந்த ஜோதிடரை சிறையில் அடைத்தான், இருந்தாலும் அரசருக்கு அந்த கனவை நினைத்து கவலையாக இருந்தது. அடுத்த நாள் மற்றொரு ஜோதிடரை அழைத்து, அதே கனவுக்கு விளக்கம் கேட்டான், அவரும் தன்னிடையே இருந்த அனைத்து ஓலைச்சுவடிகளையும் புரட்டிப் பார்த்து அரசரிடம், அரசே உங்கள் குடும்பத்தார் மற்றும் உற்றார் உறவினர்கள் என அனைவரை காட்டிலும் நீங்கள் பல ஆண்டுகள் உயிர் வாழ்வீர்கள் என்பதைத்தான் இந்த கனவு காட்டுகிறது என்று கூறினாராம். அரசர் அவருக்கு நிறைய பொற்காசுகளை பரிசாக கொடுத்து அனுப்பினாராம். ஏறக்குறைய இரண்டு ஜோதிடர்களும் ஒரே செய்தியைத்தான் வெவ்வேறு விதத்தில் கூறினார்கள். முதலாவதாக கூறியவர் தன்னுடைய மனநிலையிலிருந்து கூறினார், ஆனால் இரண்டாவதாக கூறியவர் அரசரின் மனநிலையை உணர்ந்து கூறினார். இன்றைக்கு நாமும் பல வேளைகளில் நம்முடைய மனநிலையிலே நினைக்கின்றோம், பேசுகின்றோம் மற்றும் செய்கின்றோம். ஆனால், இறைவனுடைய மனநிலைக்கு ஏற்றவாறு மற்றும் நம்மை சுற்றி வாழுகின்ற நம்முடைய சகோதர சகோதரிகளின் மனநிலைக்கு ஏற்றவாறு நாம் வாழ்வதற்கு இன்றைய நாளிலே அழைக்கப்படுகின்றோம். இந்த புனித வாரத்தில் இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்பு நமக்காக என்பதை முழுமையாக உணர்ந்து, அவரின் மனநிலையை நமது வாழ்க்கையில் ஏற்று அதற்கேற்றவாறு வாழ்க்கையை அமைப்போம். இறைவனில் இணைந்திருப்போம், இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
அன்புடன்:-
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...