Thursday, February 25, 2021

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 2-ஆம் வாரம்- ( ஆண்டு- B)- 28-02-2021- ஞாயிற்றுக்கிழமை

 🌱விவிலிய விதைகள்🌱    

 தவக்காலம் 2-ஆம் ஞாயிறு 

 மலை உருமாற்றம் வெளிப்படுத்தும் நற்கருணை திருவருட்சாதனம்

    

  அன்பிற்குரியவர்களே, நாம் எல்லோரும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றிருப்போம். அதுவும் தமிழ்நாட்டில் பல விதமான இடங்களுக்கு சென்று சுற்றி பார்ப்பது என்பது நமது பழக்கமாகவே இருக்கின்றது. அதிலும் கொடைக்கானல், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் ஏற்காடு என பலவிதமான மலைப்பகுதிகளில் இருக்கின்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்வது ஒரு புதுவிதமான உணர்வை நமக்குத் தருகிறது. மலையும், காடுகளும், அருவியும் மற்றும் சுற்றி வரும் குரங்குகளும் என இயற்கையின் அழகு நம்மை பிரமிக்க வைக்கின்றது. மேலும் தென்றல் காற்றும் மற்றும் அது ஏற்படுத்தும் குளிரும் என அனைத்தும் நமக்கு ஒரு புது உணர்வையும், அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. இன்று மட்டுமல்ல, அன்றும் மலை பல அனுபவங்களையும், உணர்வுகளையும் மனிதர்களுக்கு தந்திருக்கின்றது. இது வெறும் இயற்கை அனுபவம் மட்டுமல்ல இறை அனுபவமும் கூட. அதனால் தான் விவிலியத்தில் எண்ணற்ற இறை அனுபவங்கள் மலையில் நடப்பதை நாம் பார்க்கின்றோம்.

 விவிலியத்தின் மலை அனுபவங்கள்:-

விவிலியம் ஏறக்குறைய ஏழு விதமான மலை அனுபவங்களை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. 

1. அராரத் மலை -நோவா பெட்டகம் கடும் மழை பொழிவுக்குப் பிறகு சென்றடைந்த ஒரு பகுதி.

2. மொரியா மலை -ஆபிரகாம் தன் ஒரே மகனான ஈசாக்கை பலியிட சென்ற பகுதி.

3. சீனாய் மலை -மோசே இறைவனை சந்தித்து 10 கட்டளைகளை பெற்ற பகுதி.

4. பிஸ்கா அல்லது நெபோ மலை -பல ஆண்டுகள் பாலைவனத்தில் அலைந்த பிறகு மோசே ஏறி வாக்களிக்கப்பட்ட நாட்டை பார்த்த பகுதி.

5.கார்மேல் மலை -எலியா உண்மை கடவுளை நிரூபித்த பகுதி.

6. ஹார்மோன் அல்லது தாபோர் மலை -இயேசு உருமாற்றம் பெற்ற பகுதி.

7. ஆலிவெட் மலை -இந்த மலையின் அடிவாரத்தில் தான் கெத்சமணி தோட்டம் அமைந்திருந்தது.

 இவ்வாறு எண்ணற்ற மலைகளையும், மற்றும் மலை அனுபவங்களையும் விவிலியத்தில் நாம் கண்டாலும், இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான ஒரு வெளிப்பாடு நடந்த பகுதி தாபோர் மலை.

இயேசுவின் உச்சக்கட்ட வெளிப்பாடு:-

இயேசுவினுடைய வாழ்க்கையில் ஜந்து முக்கியமான நிகழ்வுகள் நடக்கின்றது.

 1. திருமுழுக்கு 

 2. உருமாற்றம் 

 3. பாடுகள் 

 4. உயிர்ப்பு 

 5. விண்ணேற்றம் 

 இந்த ஐந்து முக்கிய வெளிப்பாடுகளில், திருமுழுக்கு பணி வாழ்வின் தொடக்கமாகவும், உருமாற்றம் பணி வாழ்வின் உச்சக்கட்டமாகவும், விண்ணேற்றம் பணி வாழ்வின் நிறைவாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. இன்றைய இறைவார்த்தை பகுதி இரண்டு விதமான மலை அனுபவங்களை நமக்கு சுட்டிக்காட்டுகின்றது. இன்றைய முதல் வாசகம் ஆபிரகாமின் மொரியா மலை அனுபவத்தையும், இன்றைய நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் இயேசுவின் உருமாற்றத்தைக் கண்ட தாபோர் மலை அனுபவத்தையும் நமக்கு எடுத்தியம்புகிறது. விவிலியத்தில் மலை என்றாலே அது இறை அனுபவத்தை காட்டுகின்ற ஒரு இடமாகத்தான் இருக்கின்றது. அதிலும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் தாபோர் மலையில் நடந்த சீடர்களின் இறையனுபவம் இயேசுவின் பணி வாழ்வின் உச்சக்கட்ட வெளிப்பாடாக இருக்கின்றது.

மலை உருமாற்றம் வெளிப்படுத்தும் நற்கருணை திருவருட்சாதனம்:-

இன்றைய இறைவார்த்தை பகுதி   இறை அனுபவத்தை வெளிப்படுத்துகின்ற மலைப்பகுதிகளை சுட்டிக்காட்டினாலும், குறிப்பாக நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கின்ற இயேசுவின் உருமாற்றம் நிகழ்வு இயேசு உருவாக்கவிருந்த நற்கருணை என்னும் திருவருட்சாதனத்தை முன் குறித்து காட்டுகிறது.

1. உருமாற்றம்:- (மாற்கு.9:2)

     இயேசுவின் உருமாற்றம் அவரது உடல் நற்கருணையாக உருமாற போகிறது என்பதை சுட்டிக்காட்டுகின்ற ஒரு நிகழ்வு.

 2. சீடர்கள்:- (மாற்கு.9:2)

   பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் என சீடர்களின் பிரசன்னம், இயேசு உருவாக்கும் 'நற்கருணை என்னும் திருவருட்சாதனம்' தன் சீடர்களால் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என இயேசு சீடர்களிடம் "இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என கூற இருப்பதையும், தான் துன்பங்கள் பட்டு இறந்தாலும் இது தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என்பதற்காக சீடர்கள் அங்கு இருப்பதைப் பார்க்கிறோம்.

3. ஆடையில் வெண்மை நிறம்:- (மாற்கு.9:3)

இது நற்கருணையின் வெண்மை நிறத்தையும் அதன் சக்தியையும் நமக்குக் காட்டுகின்றது.

4. தாபோர் மலை:- (மாற்கு.9:2)

   பழைய ஏற்பாட்டிலே மலை இறைபிரசன்னம் நிறைந்த இடமாக இருக்கின்றது. மோசே ஒவ்வொரு முறையும் இறைவனை சந்திக்க மலைக்கு சென்றார். இங்கு தாபோர் மலையில் நற்கருணை ஆண்டவராம் இயேசுவின் பிரசன்னம் உருமாற்றத்தில் வெளிப்படுகிறது.

5. மேகம்:- (மாற்கு.9:7)

பழைய ஏற்பாட்டில் ஒவ்வொரு முறையும் மோசே இறைவனை சந்திக்கச் செல்கின்ற போது உடன்படிக்கை பேழை இருந்த கூடாரம் மேகத்தால் சூழ்ந்து இருக்கும். இங்கு நற்கருணை ஆண்டவராம் இயேசு தன்னுடைய பிரசன்னத்தை வெளிபடுத்துகின்ற போது மேகம் சூழ்ந்து இருப்பதை பார்க்கின்றோம்.

6. மோசே/எலியா:- (மாற்கு.9:4)

   மோசேயின் பிரசன்னம் திருச்சட்டத்தையும், எலியாவின் பிரசன்னம் இறைவாக்கினர்களையும் சுட்டிக் காட்டினாலும், பழைய ஏற்பாட்டில், எகிப்தில் நடந்த முதல் பாஸ்காவை மோசேயின் பிரசன்னம் நமக்கு நினைவுபடுத்துகிறது. இறைமகன் இயேசு கிறிஸ்து தான் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்த நற்கருணை என்னும் திருவருட்சாதனத்தை பாஸ்கா விழாவின் போது  ஏற்படுத்தப் போகிறார் என்பதை இதன் அர்த்தமாகலாம். இறைவாக்கினர் எலியா உண்மைக் கடவுளை நிரூபித்திருக்கிறார், ஆக நற்கருணை உண்மை இறைவனுடைய பிரசன்னம் என்பதை இது நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

7. குரல்:- (மாற்கு.9:7)

          "என் அன்பார்ந்த மைந்தர் இவரே" என்னும் குரலில் இறைவனுடைய பிரசன்னம் அவருடைய மகன் வழியாக நற்கருணையில் இருக்கப்போகின்றது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

   அன்பார்ந்தவர்களே, நற்கருணை மகிமையின் மற்றும் வாக்களிக்கப்பட்ட திருவருட்சாதனம் என்பது இயேசுவின் உருமாற்ற நிகழ்வு நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. இந்த உருமாற்றம் நமக்கு எத்தகைய ஒரு அழைப்பை கொடுக்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம். நமது வாழ்க்கையில் பல வேறுபட்ட தருணங்களில் இறைவன் கொடுக்கின்ற அந்த பிரசன்னத்தை நாம் உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? நற்கருணையில் இறை பிரசன்னம் இருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோமா? அன்றாட வாழ்க்கையில் நற்கருணை பக்தியில் வளர்கின்றோமா? மலைகள் இறையனுபவத்தை கொடுத்தது போல நற்கருணை ஆண்டவர் இறையனுபவத்தை நமக்கு தருவதை நாம் உணர்கின்றோமா? அவரை நாம் சந்திக்கின்றோமா? நற்கருணை திருவருட்சாதனம் தருகின்ற இறையனுபவத்தை நமது வாழ்க்கையில் உணர்ந்து இறைவனின் பிள்ளைகளாய் வாழ இறையருளை வேண்டுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அருட்பணி. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்