மே மாதம் - 3ஆம் தேதி.
பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம் ஞாயிற்றுக்கிழமை
நற்செய்தி: யோவான் 10: 1-10
நல்லாயனின் முப்பரிமான அழைப்பு
(நல்-ஆயனின்/ஆடுகளின் மூன்று தகுதிகள்)
மரமின்றி ஆழ்கடலுக்குள் செல்ல இயலாது. உளியின்றி சிலை செதுக்க இயலாது. இதைத்தான் அறிஞன் ஒருவன் "சுவரின்றி சித்திரம் வரைய இயலாது" என்று கூறி இருக்கின்றார். அதுபோல தான் ஆயன் இன்றி ஆடுகள் நலமாக வாழ இயலாது. ஆயனில்லா ஆடுகளாய் வாழாமல் ஆயனை அறிந்து அவரை உணர்ந்த ஆடுகளாய் வாழ இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு தருகிறது. அதிலும் மூன்று விதமான அழைப்புகள், அதாவது முப்பரிமான அழைப்பை பெறுகின்றோம்.
1. நல்லாயனாம் இயேசுவை உணர்தல் .
2. நம் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நல்லாயனாக மாறுதல்.
3. நம் தலைவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்ல ஆடுகளாக மாறுதல்.
1. நல்ல ஆயன் இயேசு :
ஆயன், ஆடுகள் இயேசுவின் காலத்தில் புரியாத வார்த்தைகள் அல்ல. தொடக்கநூல் நான்காம் அதிகாரத்தில் ஆபேல் ஆடு மேய்ப்பவனாக இருக்கிறான். விடுதலைப்பயணம் மூன்றாவது அதிகாரத்தில் மோசே ஆடு மேய்ப்பவராக இருக்கின்றார். 1 சாமுவேல் 17: 34 -ல் தாவீது ஆடு மேய்ப்பவராக இருக்கின்றார். எசேக்கியேல் 34 :11 -16 கடவுளுக்கும் இஸ்ராயேலுக்கும் உள்ள உறவானது, ஆயன் ஆடுகள் உறவாக சித்தரிக்கப்படுகின்றது. இயேசு பிறந்த பொழுது, இயேசுவின் பிறப்பு ஆடு மேய்த்த இடையர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. ஆக இத்தகைய ஒரு சூழலில் இறைமகன் இயேசு கிறிஸ்துவும் தன்னையே ஒரு நல்ல ஆயனாக குறிப்பிடுகின்றார்-யோவான்10: 11
2. நல்ல ஆயனாக மாறுதல்:
நம்முடைய சமுதாயத்தில் குடும்பத்தில் நல்ல ஆயனாக நாம் நம்முடைய பொறுப்புகளில் இருக்க வேண்டும். நல்ல ஆயன் மூன்று தகுதிகளை கொண்டிருப்பான்.
ஒன்று- ஆடுகளை அறிதல். மக்களின் சமூக, பொருளாதார, சூழலை அறிந்து செயல்படுதல். நம்முடைய பிள்ளைகளுடைய ஆசையை, நிலையை, விருப்பத்தை அறிந்து செயல்படுதல்.
இரண்டு -ஆடுகளுக்கான பாதையை அறிந்திருத்தல். இந்த நாட்டின் எதிர்கால திட்டம் எப்படி, என்ன என்பதை அறிந்திருத்தல். நம்முடைய பிள்ளைகளை எப்படி வளர்ப்பது, அவர்களுடைய எதிர்காலம் என்ன என்பதை உணர்ந்து நடத்தல்.
மூன்று- ஆயன் என்பவன் பாதுகாக்க வல்லவராக இருப்பார். இந்த நாட்டை நீதி, அன்பு, உண்மையின்படி வழிநடத்துபவனாக இருப்பான். பிள்ளைகளை ஆபத்து, நோயிலிருந்து, பாதுகாப்பவராக இருப்பான்.
3. நல்ல ஆடுகளாக மாறுதல்:
சமுதாயத்தில் நாம் நல்ல ஆடுகளாக வாழ அழைக்கப்படுகிறோம். நம்முடைய பெற்றோர்களுக்கு நல்ல ஆடுகளாக, நம்முடைய தலைவர்களுக்கு நல்ல ஆடுகளாக வாழ அழைக்கப்படுகிறோம்.
i. ஆயனை அறிந்தல்,
ii. அவருடைய குரலுக்கு செவி கொடுத்தல்,
iii. அவரை பின்பற்றுதல்
என மூன்றும் நல்ல ஆடுகளின் தகுதிகளாக இருக்கின்றது.
எனவே நாமும் பெற்றோர்களுக்கும், தலைவர்களுக்கும் நல்ல ஆடுகளாக வாழ்வோம். திருப்பாடல் 23 -ல் "என் ஆயன் ஆண்டவரே, எனக்கேதும் குறையில்லை" என்ற இறை வசனத்தின் படி நாமும் திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து நல்ல ஆயனாக இறைமகன் இயேசுவை ஏற்றுக் கொள்ளவும், நல்ல ஆயனாக, நல்ல ஆடுகளாக வாழ இறையருளை வேண்டுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்.