🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 2-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(15 ஜனவரி 2023, ஞாயிறு)
முதல் வாசகம்: எசாயா 49: 3. 5-6
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 1: 1-3
நற்செய்தி: யோவான் 1: 29-34
கடவுளின் ஆட்டுக்குட்டி
2001 செப்டம்பர் 11 அன்று காலை 8.45 மணிக்கு ஒரு விமானத்தை கொண்டு அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கோபுரத்தை தீவிரவாதிகள் நொறுங்கிவிழச் செய்ததை யாரும் மறந்து விட முடியாது. அந்நிகழ்வில் பல உயிர்கள் பிழைப்பதற்கு மிக முக்கிய காரணம் பெஞ்சமின் கீபே கிளார்க். நம்மில் பலரும் அறியாத இவர் ஒரு காவலாளியோ அல்லது தீயணைப்பு படை வீரரோ அல்ல. மாறாக அதே வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தின் 96-வது மாடியிலிருந்த ஒரு ஓட்டலில் வேலை செய்த சமையல்காரர். அந்நிகழ்வு நடந்தபோது தன்னுயிரை காப்பாற்றிக் கொள்ள இவர் ஓடவில்லை மாறாக பலரின் உயிரை காப்பாற்ற வழிகாட்டியாக இருந்தவர். உயிருக்காக போராடி 78-வது மாடியில் சக்கர நாற்காலியில் அவதியுற்ற ஒருவரை காப்பாற்றி இருக்கிறார். இவ்வாறு நூற்றுக்கணக்கான மனிதர்களை காப்பாற்ற பெஞ்சமின் அன்று தன்னுயிரை தந்தார். வரலாற்றில் பெஞ்சமினைப் போல பலர் பிறருக்காக தன்னுயிரை தந்திருக்கிறார்கள். ஆனால் மனித குலம் முழுவதற்கும் தன்னுயிரை தந்து மீட்பளித்தவரைத்தான் திருமுழுக்கு யோவான் இன்றைய நற்செய்தியில் 'கடவுளின் ஆட்டுக்குட்டி' என்று சான்று பகர்கின்றார். திருமுழுக்கு யோவான் எடுத்துரைக்கும் இந்த ஆட்டுக்குட்டி நமது கிறிஸ்தவ வாழ்வில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சிந்திப்போம்.
1. கடவுளின் ஆட்டுக்குட்டி (இறைமகன்)
இன்றைய நற்செய்தியில் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" (யோவான் 1:29)
என்கிறார். யார் இந்த ஆட்டுக்குட்டி? திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கு திருமுழுக்கு அளித்த போது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது (மத்தேயு 3:17). இக்குரல் கடவுளின் ஆட்டுக்குட்டி இறைமகன் என்பதை சுட்டிக்காட்டியது, எனவேதான் இறைவன் தந்த அந்த ஆட்டுக்குட்டிக்கு அவர் சான்றும் பகர்ந்தார். நமக்காக இறைவன் அனுப்பிய இயேசுவுக்கு நாமும் சான்று பகர அதாவது சாட்சிய வாழ்வு வாழ இன்று அழைப்புப் பெறுகின்றோம்.
2. பாவம் போக்கும் ஆட்டுக்குட்டி (மீட்பு)
"இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று இயேசுவை சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவான் தொடர்ந்து, "ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" என்றும் எடுத்துரைக்கின்றார். ஏன் இவரை திருமுழுக்கு யோவான் ஆட்டுக்குட்டி என அழைக்க வேண்டும்? பழைய ஏற்பாட்டில் வரவிறுக்கின்ற மெசியாவை பற்றி எடுத்துரைக்கின்ற போது எசாயா இறைவாக்கினர், "அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்" (எசாயா 53:5,6) எனவும், மேலும் தொடர்ந்து "அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்." (எசாயா 53:7) என்கிறார். இதைத்தான் புதிய ஏற்பாட்டில் திருத்தூதர் பவுல், "நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்." (1 கொரிந்தியர் 5:7) என்கிறார். ஆக நமக்காக மற்றும் நம்முடைய பாவங்கள் மீட்கப்பட இறைமகன் இயேசு கிறிஸ்து தன்னையே பழைய ஏற்பாட்டில் பாவம் போக்கும் பலியாக அர்ப்பணிக்கின்ற செம்மறி ஆட்டை போல சிலுவை மரத்தில் அர்ப்பணிக்கின்றார். எனவேதான் ஒவ்வொரு முறையும் நாம் திருப்பலியில் பங்கேற்கின்ற பொழுது "உலகின் பாவங்களைப் போக்குகின்ற இறைவனின் செம்மறி" என ஜெபிக்கின்றோம். இன்று நமது திருஅவையும் 2000 ஆண்டுகளாக நிலைத்திருப்பதற்கு காரணம் பாவம் போக்கும் ஆட்டுக்குட்டியான இயேசுவை பின்பற்றி பல மறைசாட்சிகள் தன்னுயிரை தந்ததே காரணமாகும். இதைத்தான் "மனசாட்சிகளின் ரத்தம் கிறிஸ்தவத்தின் வித்து" என்கிறார் புனித தெர்த்தூலியன். உலகின் பாவங்களைப் போக்கிய இறைவனின் ஆட்டுக்குட்டியை போல மற்றும் திருஅவையின் மறைசாட்சியர்களைப் போல நாமும் சாட்சிய வாழ்வு வாழ அழைப்பு பெறுகின்றோம்.
3. தன்னை தந்த ஆட்டுக்குட்டி (நற்கருணை)
பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்களுக்கு ஆண்டவர் முதல் பாஸ்கா விழாவை கொண்டாட, குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதன் இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூசவும், இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவும் அழைப்பு தருகிறார் ( விடுதலைப் பயணம் 12:3,7,8). இது இறைவன் தன் ஒரே மகனின் உயிரையே கல்வாரி மலையில் அர்ப்பணித்து, அதை நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு தரும் நற்கருணையாக விட்டு செல்வார் மற்றும் அதை ஒவ்வொரு நாளும் நாம் நம் உள்ளத்திலே ஏற்று வாழ வேண்டும் என்பதன் முன் அடையாளமாகும். இன்று ஒவ்வொரு நாளும் திருப்பலி வழியாக இந்த ஆட்டுக்குட்டியாம் நற்கருணையை நம்முடைய உள்ளத்திலும் வாழ்க்கையிலும் ஏற்று சான்று பகிர்ந்து வாழ அழைப்பு பெறுகின்றோம்.
ஆட்டுக்குட்டியை கொல்வதற்காக நம்முடைய கரங்களில் நாம் ஏந்துகின்ற போது அதை அறியாத அது கரங்களை நக்குமாம். இது ஆட்டுக்குட்டியின் மாசற்ற மற்றும் தன்னலமற்ற நிலையை எடுத்துரைக்கிறது. இத்தகைய ஆட்டுக்குட்டியை உருவகமாக கொண்டு இயேசுவை சுட்டிக்காட்டுவது அவர் நமக்காக தன்னை அர்ப்பணிக்க வந்த இறைமைந்தன் என்பதை காட்டுகிறது. இன்றும் நற்கருணை வடிவிலே பிரசன்னமாகியிருக்கின்ற இந்த கடவுளின் செம்மறிக்கு சாட்சிய வாழ்வு வாழ்வோம்.
தூய ஆவியின் துணையில்...
பொதுவாக ஒருவரை நாம் மற்றவருக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்றால் அவரைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால் திருமுழுக்கு யோவான் இயேசுவை 'கடவுளின் ஆட்டுக்குட்டி, உலகின் பாவங்களை போக்க வந்தவர்' மற்றும் 'இறைமகன்' என்று நான் முதலில் அவரை அறிந்திருக்கவில்லை. பின்னர் தூய ஆவியாரின் அருளால் தான் அறிந்து கொண்டேன் என்கிறார். இன்றைக்கு இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவை நாமும் நமது வாழ்வில் அறிந்து கொள்ள மற்றும் அவருக்கு சாட்சிய வாழ்வு வாழ தூய ஆவியின் அருளைப் பெற்றவர்களாக நாம் வாழ வேண்டும். இதைத்தான் "உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது நிறையுன்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்" என (யோவான் 16:18) வாசிக்கிறோம். தொடர்ந்து தூய ஆவியின் துணையோடு கடவுளின் ஆட்டுக்குட்டியாம் இயேசுவுக்கு சான்று பகர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை