🌱விவிலிய விதைகள்🌱
திருவருகைக் காலம் 4-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(18 டிசம்பர் 2022, ஞாயிறு)
முதல் வாசகம்: எசா 7:10-14
இரண்டாம் வாசகம்: உரோ 1:1-7
நற்செய்தி: மத் 1: 18-24
யோசேப்பும் இறைத்தொடுதலும்
ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாம். ஆம், முயல் என்ன செய்யும் பாவம். ஒரு பக்கம் வேடன் விரட்டுகிறான், இன்னொரு பக்கம் நாய், மறுபக்கம் புலி என எந்த பக்கம் சென்றாலும் எதிரிகள் துரத்துகிறார்கள். எப்படியெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்தது. இறுதியாக குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று எண்ணி குளத்திற்குச் சென்றது முயல். அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி குளத்தின் கரையிலிருந்த தவளைகள் குளத்துக்குள் குதித்தது. அட நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளன என்று ஆச்சரியப்பட்டு தன் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு தைரியத்தோடு தனக்கு நேர்ந்த எல்லா பிரச்சனைகளையும் மற்றும் துன்பங்களையும் சந்தித்தது. ஆம் முயலின் இக்கட்டான மற்றும் துன்பமான வேளையில் வாழ்வதற்கு ஒரு தூண்டுதலாக இருந்தது அந்த குளத்திலிருந்த தவளைகள்தான். நம் மனித வாழ்க்கையிலும் இக்கட்டான சூழலில் ஏதாவது ஒன்றின் வழியாய் இறைத் தொடுதல் நமக்கு கிடைக்கும். அத்தகைய இறைத்தொடுதலை நம் வாழ்வில் உணர்ந்து வாழ இன்றைய திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு தருகிறது. இன்றைய நற்செய்தியில் புனித யோசேப்பு தன்னுடைய இக்கட்டான சூழலில் இறைத்தொடுதலை உணர்ந்து, அதை எதிர்கொண்டு வாழ்ந்ததைப் போல நாமும் வாழ அழைக்கப்படுகின்றோம்.
விவிலியத்தில் பல பகுதிகளில் புனித யோசேப்பை ஒரு வார்த்தை கூட பேசாத நபராக பார்க்கிறோம். அதே வேளையில் பல இக்கட்டான சூழல்களை சந்தித்த ஒரு நபராகவும் பார்க்கிறோம்.
1. இன்றைய நற்செய்தியில் அன்னை மரியா யோசேப்போடு நிச்சயிக்கப்பட்ட பின் அவர் கருவுற்று இருப்பதை அறிந்த யோசேப்பு, என்ன செய்வது? என்னும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுகிறார் (மத் 11:2-11).
2. பேரரசர் அகுஸ்து சீசர் கட்டளையை ஏற்று கணக்கெடுப்பிற்காக தனது சொந்த ஊராகிய பெத்லகேமுக்கு சென்ற போது மரியாவுக்கு பேறுகாலம் வந்தது. அச்சூழலில் அவர்கள் தங்குவதற்கு ஒரு விடுதி கூட கிடைக்கவில்லை (லூக் 2: 1-7). இதுவும் யோசேப்பை இக்கட்டான ஒரு சூழலுக்கு தள்ளியது.
3. குழந்தை பிறந்த பிறகும், ஏரோது குழந்தையை கொல்ல தேடுகிறான் என்பதை அறிந்து யோசேப்புக்கு ஆண்டவரின் தூதர் கனவில் எகிப்துக்கு தப்பி ஓட சொல்லுவதும், (மத் 2: 13-15) மீண்டுமாக எகிப்துக்கு திரும்பி வர செய்தலும் யோசேப்பு சந்தித்த இக்கட்டான சூழல்கள். (மத் 2: 19-21)
4. யோசேப்பும் அன்னை மரியாவும் சிறுவன் இயேசுவோடு பாஸ்கா விழாவை கொண்டாட எருசலேமுக்கு சென்ற போது அவர் காணாமல் போனதும், என்னை ஏன் தேடினீர்கள்? என இயேசு கேட்டதும் இயேசுவின் வளர்ப்பு தந்தையாகிய யோசேப்புக்கு மிகவும் இக்கட்டான ஒரு சூழலை கொடுத்திருக்கும் (லூக் 2: 1-7).
புனித யோசேப்பு தான் சந்தித்த இத்தகைய எல்லா இக்கட்டான சூழலிலும் இறைத் தொடுதலை உணர்ந்தார். அதனால்தான் அவரால் எல்லா துன்பங்களையும் கடந்து பயணிக்க முடிந்தது. மீட்புத்திட்டத்திற்காக தன்னை அர்ப்பணிக்க முடிந்தது. யோசேப்பு வாழ்ந்த காலத்தில் யூத முறைப்படி திருமணத்தில் மூன்று படிநிலைகள் இருந்ததை பார்க்கின்றோம்.
1. பேசி முடிவெடுத்தல்: பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் சிறு வயதில் இருக்கின்ற போதே அவர்களது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து அவர்களுக்காக பேசி முடிவெடுப்பார்கள்.
2. நிச்சயதார்த்தம்: இது திருமணத்திற்கு சில மாதங்கள், வாரங்கள் அல்லது நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வோரின் முழு சம்மதத்தோடு மேற்கொள்ளப்படும் ஒப்பந்தமாகும். ஆனால் அவர்கள் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் ஒன்று கூடி வாழ மாட்டார்கள். இருப்பினும் யூத முறைப்படி நிச்சயதார்த்தத்திற்கு பிறகு அவர்கள் பிரிய வேண்டுமென்றால் விவாகரத்து என்று சொல்லக்கூடிய திருமண முறிவு சீட்டைப் பெற வேண்டும். அன்னை மரியாவும் யோசேப்பும் இந்நிலையில் தான் இருந்தார்கள்.
3. திருமணம்: இதுதான் இன்றைய காலகட்டத்தில் நாம் பார்ப்பதை போல
திருமணத்தின் முழுமையான நிலையாகும். இதன் பின் இருவரும் ஒன்று கூடி ஒரே இல்லத்தில் வாழ்வார்கள்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையிலிருக்கும் பொழுது அதாவது "மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை நகரில் ஒருவன் சந்தித்து அவளோடு உறவுகொண்டால், அவர்கள் இருவரையும் நகர் வாயிலுக்குக் கொண்டு போய்க் கல்லால் எறிவர்," (இணைச் சட்டம் 22:23,24) இத்தகைய பின்னணியில்தான் ஒரு நேர்மையாளராக இருந்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட மரியா கருவுற்றிருப்பதை அறிந்து, அவரை இச்சூழலுக்கு உள்ளாக்க அவர் விரும்பாமல் மேலும் குழப்பமடைந்து இக்கட்டான ஒரு சூழலை சந்திப்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. அன்னை மரியாள் தூய ஆவியால் கருவுற்று இயேசுவை தன்னிலே ஏற்றதை போல, புனித யோசேப்பு கனவில் வானத்தூதரின் வழியாய் வந்த இறைவார்த்தையால் தொடப்பட்டு, இறைவனை உணர்ந்து மீட்புத்திட்டத்தில் தன்னை அர்ப்பணித்தார். இன்றைக்கு நாம் புனித யோசேப்பை போல நமது இக்கட்டான சூழலிலும் இறைத் தொடுதலை உணர்கின்றோமா? மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கை பயணத்தில் திடீர் துன்பங்கள் மற்றும் சோதனைகளின் வழியாய் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுகிறோம். இத்தகைய சூழல்களில் எல்லாம் இறைவன் பலரின் வழியாக நம்மிடையே இறைச்செய்தியை அனுப்புகிறார், அதுவே நாம் துன்பத்திலிருந்து விடுபட இறைவனின் இறைத்தொடுதல், அதை நமது வாழ்க்கையில் உணர்கின்றோமா? இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேலின் அரசன் தமாஸ்சு நாட்டின் அரசனோடு கூட்டணி வைத்து யூதாவின் தலைநகரான எருசலேமை தாக்க தயாராக இருக்கின்ற போது, கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக "அஞ்சாதே! யாவே இறைவன் மீது நம்பிக்கை வை. நீயும் உன் மக்களும் காப்பாற்றப்படுவீர்கள். எருசலேமுக்கு எத்தகைய துன்பமும் வராது" எனும் நம்பிக்கை செய்தியை எடுத்துரைக்கிறார். அன்று யூத மக்களுக்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்படுகின்ற போது இறைவாக்கினர் எசாயா வழியாக இறைத்தொடுதல் வெளிப்படுகிறது. இறைவன் மீது நாம் கொள்ளுகின்ற ஆழமான நம்பிக்கைதான் நமது இக்கட்டான மற்றும் துன்பமான சூழலில் இறைத்தொடுதலை நமக்கு உணர வைக்கும். அத்தகையோராய் வாழ்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை