Tuesday, October 19, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 30-ஆம் வாரம் - ( ஆண்டு- B) ----- 24 -10-2021- ஞாயிற்றுக்கிழமை






நற்செய்தி:-

மாற்கு 10:46-52


விவிலிய விளக்கம்:-


  1.  பார்த்திமேயுவின் தந்தையான திமேயுவும் பார்வையற்றவர்.
  2. எருசலேம் நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது எரிகோ, இயேசு பாஸ்காவிற்காக எருசலேம் செல்ல எரிகோவை கடந்து தான் செல்ல வேண்டும். பொதுவாக குருவோ அல்லது ரபியோ சென்றால் மக்கள் கூட்டமாக வந்து, அவர் சொல்வதை கேட்பதும் அவரோடு செல்வதும் வழக்கம்.
  3. திமேயுவின் மகனான பார்த்திமேயு வடக்குபுற வாயிலில் அமர்ந்திருந்தான்.
  4. இன்றைய நற்செய்தி பகுதியின் ஒத்தமை நற்செய்தி நூல்களின் பகுதிகளாக மத்தேயு 20:29 மற்றும் லூக்கா 18:35 ஆகியவை உள்ளன.
மறையுரை:-

மூவர்ண - மூப்பரிமான நம்பிக்கை




நமது நாட்டினுடைய தேசிய கொடியாம் மூவர்ணக் கொடியை நாம் நன்கு அறிவோம். அனைவரும் மதிக்கத்தக்க, அனைவருக்கும் பொதுவாக மற்றும் நம் நாட்டினுடைய தேசப்பற்றின் ஒரு அடையாளமாக இருப்பது தேசிய கொடிஇந்த கொடியில் இருக்கின்ற மூன்று நிறங்களை நாம் நன்றாக அறிவோம். மேலே காவி நிறம். அதற்கடுத்து வெள்ளை நிறம்கடைசியாக பச்சை நிறம் இதனுடைய அர்த்தங்களையும் நாம் நன்கு அறிவோம். காவி நிறம் விடுதலைக்காய் தேசத்தினுடைய தலைவர்களின் தியாகத்தை வெளிப்படுத்துவதாகவும், வெள்ளை நிறம் நம் நாட்டினுடைய தூய்மையை வெளிப்படுத்துவதாகவும், பச்சை நிறம் நாட்டின் பசுமையையும், இயற்கை வளத்தையும் மற்றும் நம்பிக்கையை குறிக்கும் விதமாகவும் இருக்கின்றது. இந்த மூவர்ணக் கொடியை இன்றைய நற்செய்தி பகுதியில் வரும் பார்வையற்ற பார்த்திமேயுவிலே பார்க்க முடிகின்றது. இயேசுவில் இவன் கொண்ட நம்பிக்கையை மூவர்ண கொடியின் நிறத்தோடு ஒப்பிட முடிகின்றது. மூவர்ண கொடியின் நிறங்களின் குணங்களும், பார்வையற்ற பார்த்திமேயுவின் நம்பிக்கையும் ஒத்து போகின்றது. பார்த்திமேயுவின் நம்பிக்கை ஒரு மூவர்ண கொடியின் நிறங்களை போல மூவர்ண நம்பிக்கையாக இருக்கின்றது. இதனை மூப்பரிமான நம்பிக்கை என்றும் அழைக்கலாம்.

இன்றைய நற்செய்திப் பகுதியில் பார்வையற்ற பர்த்திமேயு யாரோ வருவதாக கேள்விப்படுகின்றார்.

உடனே யாரென்று வினவுகின்ற  பொழுது நாசரேத்து இயேசு தான் வருகின்றார் என்று உணர்ந்து, உடனடியாக அவரை கூவி அழைப்பதாக நாம் பார்க்கின்றோம். நாசரேத்து இயேசு தான் வருகின்றார் என அறிந்து அவரை கூவி அழைத்தது தேசிய கொடியின் காவி நிறத்தோடு ஒப்பிட முடிகின்றது. இங்கு காவி நிறம் தியாகத்தின் அடையாளம் என்கின்ற பொழுது இறைமகன் இயேசு கிறிஸ்து நமக்காக தன்னுடைய இரத்தத்தை சிந்தி தியாகம் செய்தார் என்பதை காட்டுகின்றது. ஆக காவி நிறம் இறை நம்பிக்கையை உணர்த்துகின்றது, பார்வையற்ற பர்த்திமேயு கொண்டது இறைநம்பிக்கை, அதனால் தான் பார்வையற்றவன் இறைநம்பிக்கையோடுஇயேசுவே, தாவீதின் மகனே எனக்கு இரங்கும்” (மாற்கு 10:47b) என்கிறான். இறைநம்பிக்கை மூப்பாரிமான நம்பிக்கையின் முதல் நம்பிக்கை.

இரண்டாவதாக பார்வையற்றவன் யாரோ இயேசு தான் வருகின்றார் என சொல்வதை கேட்டு அதை உண்மை என்று நம்புகின்றான் (மாற்கு 10:47a) அவனிடம் பிறர் நம்பிக்கை அதிகமாக இருந்தது என்று குறிப்பிடலாம். பிறர் நம்பிக்கை நம் மூவர்ண கொடியின் பச்சை நிறத்தை சுட்டிக்காட்டுகின்றது. பச்சை நிறம் இயற்கை வளத்தை அதாவது நம் நாட்டினுடைய முதுகெலும்பான விவசாயத்தை சுட்டிக்காட்டுகின்றது, எவ்வாறு ஒரு விவசாயி இயற்கையை  நம்புகின்றாரோ, அதே போல இந்த பர்த்திமேயு  பிறரை நம்புவதை நாம் பார்க்கின்றோம்ஆக பார்த்திமேயுவின் நம்பிக்கை பச்சை நிறத்தை உணர்த்துகின்றது. பிறர் நம்பிக்கை மூப்பாரிமான நம்பிக்கையின் இரண்டாவது நம்பிக்கை.

 மூன்றாவதாக பார்வையற்றவன் அனைத்தையும் கேள்விப்பட்ட பிறகுஇயேசுவே, தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று தன்னிலே நம்பிக்கையோடு கூறுவதை பார்க்கின்றோம். யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டு அதை நம்புவது  அவர் அவரில் கொண்ட நம்பிக்கையையும் காட்டுகின்றது.


இயேசுவால் நான் குணம் பெறுவேன் என்ற தன்னம்பிக்கை அவரில் இருந்தது. இந்த நம்பிக்கையின் விளைவாக தான் அவன் இயேசுவே என கூவி அழைக்கின்றான். நம் தேசிய கொடியின் வெண்மை நிறம் தூய்மையையும் வெண்மையையும் குறிப்பதாக இருக்கின்றது. ஒரு தனிப்பட்ட மனிதனின் நல்ல குணங்கள் தன்னம்பிக்கையை காட்டுகின்றது என்றால் அது வெண்மை நிறத்தை குறிக்கின்றது. தன்னம்பிக்கை மூப்பாரிமான நம்பிக்கையின் மூன்றாவது  நம்பிக்கை.

பார்வையற்ற பார்த்திமேயு கொண்ட நம்பிக்கை ஒரு மூவர்ண மற்றும் மூப்பரிமான நம்பிக்கை. இன்றைய நாளிலே இந்த மூவர்ண மற்றும் மூப்பரிமான நம்பிக்கை நம்முடைய வாழ்க்கையிலும் வெளிப்பட வேண்டும். நாம் நம்முடைய வாழ்விலும், இறைவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் (இறைநம்பிக்கை). நமது குடும்பங்களிலும்  குறிப்பாக நமது தாய், தந்தை, கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகள் மீது நம்பிக்கை கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும் (பிறர் நம்பிக்கை). நாம் நம்மீது தன்னம்பிக்கை கொண்டவர்களாக வாழ வேண்டும், நமது தன்னம்பிக்கை தான் நம் வாழ்வின் இலக்குகளை அடைய நமக்கு வழி வகுக்கும். தன்னம்பிக்கை இல்லா மனிதன் அரை மனிதன் ஆவான், எனவே வாழ்வின் எல்லா நிலைகளிலும் தன்னம்பிக்கையோடு வாழ்வோம். ஆக, இறை நம்பிக்கை, பிறர் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை என்னும் மூப்பரிமான நம்பிக்கையை நாம் ஏற்றுக் கொள்கின்ற பொழுது நமக்கு வாழ்வும், மகிழ்ச்சியும் கிடைக்கும். எவ்வாறு இந்த பார்வையற்ற பார்த்திமேயு தான் நினைத்ததை வாழ்க்கையில் சாதித்தானோ, அதே போல நாமும் நம்முடைய வாழ்க்கையில் நம்பிக்கையோடு நினைக்கின்ற  ஒவ்வொன்றையும் சாதிக்க இயலும். பார்வையற்றவனாக இருக்கும் பார்த்திமேயு தனது வாழ்வின் இருளை நீக்க நம்பிக்கை என்னும் நிறங்களை பயன்படுத்தி ஒளி என்னும் புது வாழ்வை பெறுகின்றார். இன்று நமது வாழ்விற்கும் இத்தகைய நம்பிக்கை என்னும் நிறங்கள் தேவைப்படுகிறது. நம் வாழ்வின் இருளான துன்பம்கஷ்டம், கவலை, வேதனை  இவை அனைத்தும் தீர்ந்திட, மீண்டும் புது ஒளி பெற்றிட இறை, பிறர் மற்றும் தன்னம்பிக்கை என்னும் நிறங்கள் தேவைப்படுகிறது. எனவே வாழ்வின் வளர்ச்சிக்கு அடித்தளமான மூப்பரிமான நம்பிக்கையை நமது வாழ்க்கையாக்குவோம்.   


இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

ஆடியோவாக கேட்க...

    https://youtu.be/8p94KCGx5Fw                    

அன்புடன்,

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF