Friday, October 23, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் -25-10-2020 - பொதுக்காலம் 30ஆம் வாரம் ( ஆண்டு- A)

பொதுக்காலம் 30ஆம் வாரம்
(
ஆண்டு- A)

25-10-2020

ஞாயிற்றுக்கிழமை



முப்பரிமான/ முக்கால அன்பு


ஒரு முறை அரசர்  நகர்வலம் செல்வதற்காக பயணித்துக் கொண்டிருந்தார்அப்போது ஒரு குழந்தை  நடுரோட்டில் அழுதுகொண்டிருந்தது. தன்னுடைய தேரை விட்டு இறங்கி வந்த அரசர், அந்த குழந்தையிடம் சென்று, ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். அந்த குழந்தை "அம்மா... அம்மா..." என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அழுதது. அரசருக்கு புரிந்துவிட்டது தன் தாயை தொலைத்துவிட்டு தான் இந்த குழந்தை அழுது கொண்டே இருக்கின்றதுஉடனே  அரசர், உன் தாய் எப்படி இருப்பார்? என்று சொல். நான் உன்னை உன் தாயிடம் அழைத்துச் செல்கின்றேன் என்று கூறினாராம்அந்த குழந்தை என்னுடைய தாய் மிகவும் அழகாக இருப்பாள் என்று கூறியது. உடனேஅரசர் அந்த குழந்தையை தன்னுடைய அரண்மனைக்கு அழைத்துச் சென்று, தன் காவலாளிகளை அழைத்து, இந்த ஊரில் உள்ள அனைத்து அழகான திருமணமான  பெண்களை அழைத்து வாருங்கள் என்று கூறினாராம். உடனே இதை ஊர் முழுவதும் அறிவித்து, அனைத்து அழகான திருமணமான பெண்களை அழைத்து வந்தார்களாம். அவர்களை பார்த்த அந்த குழந்தை எந்த ஒரு உணர்வும் காட்டாமல் இருந்ததால்  இவைகளில் இந்த குழந்தையின் தாய் இல்லை என்று அவர் புரிந்து கொண்டு, வெளியூர்களில் உள்ள   அழகான திருமணமான பெண்களையும் அழைத்து வாருங்கள் என்று கூறினாராம். அவர்கள் வரவே, அவர்களிலும் யாரும் குழந்தையின் தாய் இல்லை என்பதை உணர்ந்தார்உடனே  அரசர் குழந்தையை அழைத்துக் கொண்டு, ஊர் ஊராக தாயை தேடி சென்றாராம். நாட்கள் ஓடின, வாரங்கள் கடந்தன.

அந்தத் தாயை கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஒரு நாள் தேரிலே அந்த குழந்தையோடு அரசர் சென்ற பொழுது சாலை ஓரத்தில் ஒரு பெண்மணி முகத்தை மூடிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தாள்அந்த பெண்ணை பார்த்தவுடன், அந்த குழந்தை அம்மா... அம்மா... என்று அழ ஆரம்பித்தது. உடனடியாக தேர் நிறுத்தப்படகுழந்தை இறங்கி ஓடி சென்று அந்த பெண்ணின் காலைப் பிடித்து கொண்டது. அரசருக்கும் காவலாளிகளும் ஒன்றுமே புரியவில்லை. பின்னர், அவர்கள் இதுதான் அந்த குழந்தையின் தாய் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.    உடனே  அந்த தாயின் அருகே சென்று பார்த்த அரசருக்கு ஒரே ஆச்சரியம். அந்த பெண்ணின் முகம் மிக விகாரமாக அம்மை நோய் வந்து, முகம் முழுவதும் தழும்புகளாக, பார்க்கவே முடியாத அளவுக்கு இருந்தது. அப்பொழுது தான் அரசருக்கு புரிந்தது, அன்பு என்பது  அழகையும் கடந்த ஒன்று.

ஆம் கிறிஸ்து இயேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, அன்பு என்பது வெறும் அழகையும், அறிவையும், உணர்வையும் மற்றும் உறவையும் அடிப்படையாகக் கொண்டு அமைவது அல்ல. அது அனைத்தையும் கடந்தது. இவை அனைத்தையும் உள்ளடக்கியது. அதுதான் உண்மையான அன்பு, ஆழமான அன்பு மற்றும் முழுமையான அன்பு. இன்றைய நாளிலே இறைமகன் இயேசு கிறிஸ்து இத்தகைய ஒரு முழுமையான, அன்போடு, முப்பரிமாண, முக்கால அன்போடு வாழ நமக்கு இன்றைய இறைவார்த்தையின் முலமாக அழைப்பு தருகிறார்.

அன்பார்ந்தவர்களே, அன்பு என்பது முழுமை பெற வேண்டுமென்றால் முப்பரிமான அன்பாக இருக்க வேண்டும். ஒருவர்  அழகாக, அறிவோடு,உறவுக்காரராக  இருக்கிறார் என்ற  காரணத்திற்காக    நாம் ஒருவரை அன்பு செய்வது முழுமையான அன்பு கிடையாதுநம்முடைய அன்பு முப்பரிமான அன்பாக, முக்கால அன்பாக இருக்கின்ற பொழுது மட்டுமே நமது அன்பு முழுமையான அன்பாக இருக்கும். இன்றைய நற்செய்தியில் "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை" என்பது நாம் இறைவன் மீது காட்டுகின்ற அன்பு முழுமையான அன்பாக, முப்பரிமான, முக்கால மற்றும்
ஆழமான அன்பாக இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு காட்டுகிறது

முக்கால  அன்பு:

நிகழ்காலஅன்பு: (உன் முழு இதயத்தோடு...)

இதயம் துடிப்பது என்பது ஒவ்வொரு நொடியும், நிமிடமும், மணித்துளியும் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிகழ்கால செயல். ஆக உன் முழு இதயத்தோடு அன்பு செய் என்பது நிகழ்காலத்தில் அன்பு செய்ய விடுக்கும் அழைப்புஇது நிகழ்கால அன்பு.

இறந்தகால அன்பு:  (உன் முழு உள்ளத்தோடு...)

உள்ளம் என்பது உணர்வுகளை வெளிக்கொணரும் ஆற்றல். உணர்வுகள் வெளிவருவது ஒரு நிகழ்வு அல்லது செயலின் முடிவாக இறந்த காலத்தின் வெளிப்பாடு. உணர்வின் பிறப்பிடம் உள்ளம். உன் முழு உள்ளத்தோடு என்பது இறந்த காலத்தை சுட்டிக்காட்டுகிறது. முழு உள்ளத்தோடு நீ எக்காலத்திலும் அன்பு செய்ய விடுக்கும் அழைப்பு இது.

எதிர்கால அன்பு: (உன் முழுமனதோடு...)

நம் நினைவுகளை, எண்ணங்களை உருவாக்குவது நமது மனம். நம் மனம் எப்படி அமைக்கப்படுகின்றதோ, அப்படியே நம் நினைவுகளும், எண்ணங்களும் கட்டி எழுப்பப்படுகிறது. மனம் அடுத்து நடக்க இருக்கின்ற நினைவுகளை, எண்ணங்களை உருவாக்குவது, எனவே அது எதிர்காலத்தை காட்டுகின்றது.

நம்முடைய அன்பு நிகழ்காலத்தில் மட்டுமல்லாது, இறந்த காலத்தில் மட்டுமல்லாது, எதிர்காலத்திலும் அமைய வேண்டும்.
ஆக உன் முழு இதயத்தோடு, உள்ளத்தோடு மற்றும் மனதோடு என்பது நீ அன்பு செய்வது  முழுமையான அன்பாக அமைதல் வேண்டும். நிகழ்காலத்திலும், இறந்த காலத்திலும் மற்றும் எதிர்காலத்திலும் என முக்காலத்திலும், நீ எப்பொழுதும், என்றென்றும் காட்டப்பட வேண்டிய அன்பே  ஆழமானது, முழுமையானது  என்கின்றார் இறை மைந்தன் இயேசு.

முப்பரிமான அன்பு

உடல் சார்ந்த அன்பு: (இதயம்)

இதயம் உடலில் இருக்கக்கூடிய உறுப்புஅது உடல் சார்ந்த அன்பை  எடுத்து கூறுகின்றது. நாம் காட்டுகின்ற அன்பு ஒருவரின் உடல் அமைப்பை, அழகை, வைத்து அமைவது முழுமையான அன்பாக அமையாது. அப்படி அது ஒருவரின் அழகையும், உடல் அமைப்பையும் கண்டு அவர்கள் மீது நாம் காட்டுகின்ற அன்பாக இருந்தால், அது உடல் சார்ந்த அன்பு. அது முழுமையான அன்பாக இருக்காது.

உணர்வு சார்ந்த அன்பு:(உள்ளம்)

உள்ளம் என்பது உணர்வுகளின் பிறப்பிடம் எனவே அது உணர்வு சார்ந்த அன்பு. எனது அன்பு ஒருவர் எனக்கு என்னுடைய குடும்பத்திற்கு உதவி செய்தார். என்னை அதிகம் அன்பு செய்கின்றார். பாசமான வார்த்தைகளைப் பேசுகிறார். ஒருவர் மீது எனக்கு அதிகம் ஈர்ப்பு இருக்கிறது. அவன் என்னுடைய உறவு, அவள் என்னுடைய உறவு (என் அம்மா, அப்பா, சகோதரர், சகோதரி, உற்றார், உறவினர், நண்பர் மற்றும் சொந்தக்காரர் என்னும் காரணங்களுக்காக அன்பு செய்வது உணர்வு சார்ந்த அன்பு.

அறிவுச்சார்ந்த அன்பு: (மனம்)
 

 மனம் அறிவை வளர்த்தெடுப்பது ஆகும். அறிவு சார்ந்த அன்பு என்பது ஒருவர் அதிகம் படித்து இருக்கிறார், நன்றாக திறமையாக இருக்கிறார், திறமையாக பேசுகின்றார், நடிக்கிறார்நடனமாடுகிறார் மற்றும் திறமையோடு இருக்கின்றார் என ஒருவரை நாம் அன்பு செய்வது  அறிவு சார்ந்த அன்புஅதுவும் அது முழுமையானதாக மாறிவிடாது

ஆக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு நான் என்னுடைய சகோதர சகோதரிகள் மீது கொண்டிருக்கின்ற அன்பு எத்தகைய அன்பாக இருக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்க்க நமக்கு அழைப்பு தருகின்றது. நான் வைத்திருக்கின்ற அன்பு உடல் சார்ந்த அன்பா? அறிவு சார்ந்த அன்பா? உணர்வு சார்ந்த அன்பா? என்பதை இன்றைய நாளிலே சிந்தித்துப் பார்ப்போம்.
எந்தவிதமான பாரபட்சமும் அல்லாதுஎதிர்பார்ப்பும் அல்லாது காட்டுவதே உண்மையான அன்பு எனும் ஆன்றோர் வாக்கிற்கேற்ப நம்முடைய அன்பு   எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் முழுமையாக அமைய  இறையருளை வேண்டுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பார்.

 

 

 

 

 

 

 

 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.