விவிலிய விதைகள்
ஆண்டவரின் திருக்காட்சி திருவிழா
(ஆண்டு- B)
03-01-2021
ஞாயிற்றுக்கிழமை
இறைவன் காட்டும் வாழ்வின் கருவிகள்
1960-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்த கார் ஷோ ரூமில் ஒரு நோட்டீஸ் போர்டு ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த ஷோ ரூமில் யார் அதிகமான காரை விற்பனை செய்கிறார்களோ, அவர்களுடைய பெயர் அந்த நோட்டீஸ் போர்டில் இடம் பெறும். இதற்காக பலரும் பல முயற்சிகளை எடுக்கின்றார்கள். அங்கு பணியாற்றிய ஜோ ஜெரால்டு என்பவர் எப்படியாவது அந்த நோட்டீஸ் போர்டில் தன்னுடைய பெயர் இடம் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றார். ஆனால் அதற்காக பல முயற்சிகள் எடுத்தும் ஒரு வாரம் கூட அவருடைய பெயர் அதில் இடம் பெறவில்லை. ஒரு முறை அவர் அந்த கார் ஷோ ரூமின் முதலாளியிடம் சென்று அதற்கான வழிவகைகளை கேட்கின்றார். அவர் நீ அதிகமான காரை விற்பனை செய், உன்னுடைய பெயரும் இந்த நோட்டீஸ் போர்டில் இடம் பெறும், அதற்கு நீ உன்னுடைய தனித்திறமையை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றார். உடனே அவர் யோசிக்கின்றார், குழப்பமடைகின்றார், குழப்பமுற்று அருகே உள்ள ஒரு காபி ஷாப்பில் சென்று உட்கார்ந்து கொண்டிருக்கின்றார். எந்த வகையான காபி அவருக்கு தேவை என்பதை, குழப்பத்திலிருந்த அவரிடம் கேட்க தயங்கிய அங்கிருந்த பணியாளன், அவரே காபியை எடுத்து வந்து கொடுக்கின்றார். இந்த கலவை காபி தான் எனக்கு பிடிக்கும் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கின்றார். உடனே அந்த பணியாளன், ஐயா! தாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள், ஒவ்வொரு முறையும் நான் தான் உங்களுக்கு காபி கொடுக்கிறேன். முகமலர்ச்சியோடு எனக்கு நன்றி சொல்வீர்கள், அதுமட்டுமல்லாது கிறிஸ்துமஸ்க்கு எனக்கு வாழ்த்து அட்டையை நன்றி சொல்லி அனுப்பி இருந்தீர்கள். அதனால் நீங்கள் எதை குடிப்பீர்கள் என எனக்கு நன்றாகவே தெரியும் என்கின்றார். ஜோ ஜெரால்டுக்கு இப்போது ஒரு உண்மை புரிகின்றது, தனது தனித்திறமையை உணர்கின்றார், உடனே யார் யாருக்கெல்லாம் காரை விற்பனை செய்கின்றாரோ, அவரைப் பற்றிய ஒரு குறிப்பையும் மற்றும் விலாசத்தையும் டைரியில் எழுதுகின்றார். அவர்கள் கார் வாங்கிய ஒரே மாதத்தில் அவர்களுக்கு வாழ்த்து அட்டை ஒன்றை அனுப்புகின்ற பழக்கத்தை உருவாக்குகின்றார். அந்த பழக்கத்தின் வாயிலாக அவருக்கு எண்ணற்ற நண்பர்கள் கிடைக்கின்றார்கள், அது மட்டுமல்லாது ஒவ்வொரு கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் ஈஸ்டர் விழாக்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்புகின்றார். அவருடைய பயனாளர்கள், அவர்களுடைய பிள்ளைகளுக்கு, தெரிந்தவர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு கார் வாங்க இவரையே தொடர்பு கொள்கின்றார்கள். இதன் பலனாக இவருக்கு நிறைய காரை விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. அது ஷோ ரூமிலிருந்த நோட்டீஸ் போர்டில் மட்டுமல்ல கின்னஸ் புத்தகத்திலும், ஒரே ஆண்டில் அதிக காரை விற்பனை செய்த விற்பனையாளர் என்ற பெயரும் அவருக்கு கிடைக்கின்றது.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, ஜோ ஜெரால்டுக்கு வாழ்த்து அட்டை என்னும் ஒரு கருவி கிடைத்தது. அது அவருடைய இலக்கை அடைய, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழிவகை செய்தது, அது அவருடைய பெயரை நோட்டீஸ் போர்டில் மட்டுமல்லாது, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெயரச் செய்தது. இன்றைய நாளிலே நாம் கொண்டாடுகின்ற ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா நம்முடைய வாழ்க்கைக்கு இறைவன் கொடுக்கின்ற மாபெரும் கருவிகளை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இயேசுவை தேடி வந்த மூன்று ஞானிகளுக்கு விண்மீன் அவரை தேட, கண்டு கொள்ள மாபெரும் கருவியாக அமைந்தது, இயேசுவை அவர்கள் வணங்கியதையும், மதித்ததையும் அவர்கள் கொடுத்த காணிக்கைகள் என்னும் கருவிகள் எடுத்துரைக்கின்றது. மீண்டும் ஏரோதிடம் செல்லாது நாடு திரும்ப கனவு என்னும் கருவிகள் பயன்பட்டது. நாம் கொண்டாடுகின்ற ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா விண்மீன், காணிக்கைகள் மற்றும் கனவு என்னும் மூன்று கருவிகளை சுட்டிக்காட்டுகின்றது. அவர்கள் தங்களுடைய இலக்கான இறைமகன் இயேசு கிறிஸ்துவைக் கண்டுகொள்ள அது அவர்களுக்கு உதவியது. இன்று பிறந்து இருக்கின்ற இயேசு எண்ணற்ற கருவிகளை நம்முடைய வாழ்க்கைக்கு தருகின்றார். ஞானிகள் கிடைத்த கருவிகளை சரியான விதத்தில் பயன்படுத்தினார்கள், நாம் நம்முடைய வாழ்வின் கருவிகளை சரியான விதத்தில் பயன்படுத்துகிறோமா என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
1. விண்மீன் என்னும் கருவி
“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்”. (மத்தேயு 2:2) என்னும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடித்தளத்தில் ஞானிகளுக்கு விண்மீன் மாபெரும் கருவியாக இருப்பதை நாம் பார்க்கின்றோம். இந்த விண்மீன் தான் அவர்களுக்கு எங்கோ ஒரு அரசர் பிறந்திருக்கிறார் என்று சுட்டிக் காட்டுகின்றது, அவர்களுக்கு வெளிச்சமாக மாறியது, அவர்கள் அரசராக, தெய்வக் குழந்தையாக இறைமகன் இயேசு கிறிஸ்துவை காண்பதற்கு வழியாக இருக்கின்றது. ஆக ஒரு விண்மீன் அவர்களுக்கு தங்களுடைய வாழ்வில் ஒரு இலக்கை உருவாகியிருக்கின்றது. அரசர் பிறந்திருக்கின்றார், அவரை காண வேண்டும் என்று அந்த விண்மீனே அவர்களுக்கு வெளிச்சமாகவும், வழியாகவும் மற்றும் மாபெரும் கருவியாக இருந்திருக்கின்றது.
2. காணிக்கைகள் என்னும் கருவி
ஞானிகளுக்கு கிடைத்த இரண்டாவது கருவியை அவர்கள் கொண்டு வந்த பேழைகளில் இருந்த காணிக்கைப் பொருட்களான பொன், தூபம் மற்றும் வெள்ளைப்போளம் எனும் காணிக்கைகள். அவர்கள் பிறந்திருக்கின்ற இயேசுவை ஒரு தெய்வமாக, அரசராக மற்றும் குணமளிப்பவராக கண்டுகொண்டார்கள் என்பதன் அடையாளமாக கருதப்படுகிறது. அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளை தங்கள் மனதில் எழுந்த எண்ணங்களை வெளிப்படுத்த கருவியாக பயன்படுத்தினார்கள்.
"வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்".(மத்தேயு 2:11) என்னும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறைவார்த்தையும் நமக்கு இதைத்தான் உணர்த்துகின்றது.
3. கனவு எனும் கருவி
"ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்."
(மத்தேயு 2:12) என்னும் நற்செய்தி வாசகத்தின் அடித்தளத்தில் எவ்வித பிரச்சனையும் இன்றி நலமோடு தங்களுடைய நாடு செல்வதற்கு தங்களுடைய இலக்கை முழுமையாக நிறைவு செய்வதற்கு கனவுகள் கருவியாக ஞானிகளுக்கு பயன்பட்டது.
4. நம் வாழ்வின் கருவிகள்
"உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்". (எபேசியர் 3:2) என்னும் இன்றைய இரண்டாம் வாசகத்தின் அடித்தளத்தில், பல வேளைகளில் நாம் நம்முடைய வாழ்க்கையில் இறைவன் கொடுத்திருக்கின்ற கருவிகளை உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய வாழ்க்கையிலே இறைவன் நம்முடைய குணங்கள், திறமைகள், ஆற்றல்கள் என்னும் கருவிகளை கொடுத்திருக்கிறார். இவை நம்மை செம்மைப்படுத்தும் மற்றும் பலப்படுத்தும் நம்முடைய இலக்கை அடைய வழிவகை செய்யும் வாய்ப்புகளாக இருக்கின்றது. பெரியவர்களின், அறிவுரைகளும், ஆலோசனைகளும், திருஅவையில் நமக்குக் கொடுத்திருக்கின்ற திருவருட்சாதனங்களும், பக்தி முயற்சிகளும் குறிப்பாக நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் நாம் பங்கேற்கின்ற திருப்பலியும், ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிரசன்னமாகி இருக்கின்ற நற்ருணையும் இறைவன் நமக்கு கொடுத்திருக்கின்ற கருவிகள். இந்தக் கருவிகள் யாவற்றையும் நாம் நம்முடைய வாழ்க்கையிலே உணர்ந்து வாழ்கின்றோமா? சிந்திப்போம். இது தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகின்ற ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா நமக்கு கொடுக்கின்ற அழைப்பாக இருக்கின்றது.
"இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!" (எசாயா 60:2) என்னும் இன்றைய முதல் வாசகத்தின் இறைவார்த்தை அடித்தளத்தில் இறைமகன் இயேசு கிறிஸ்துவே நமக்கு ஒளி என்னும் கருவி, மண்ணுலகில் மானிடராகப் பிறந்திருக்கின்ற இயேசு பாலனே இறைவன் நம்முடைய வாழ்க்கைக்கு கொடுத்திருக்கின்ற மாபெரும் கருவி. எனவே இறைமகன் இயேசு கிறிஸ்துவும், அவர் நமக்குக் கொடுக்கின்ற வாழ்வின் கருவிகளையும் நாம் நம்முடைய வாழ்க்கையிலே உணர்வோம். வளர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் நிறைவாய் ஆசீர்வதிப்பார்.
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்