Saturday, December 3, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - திருவருகைக் காலம் 2-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) - 04 -12-2022- ஞாயிற்றுக்கிழமை



                    🌱விவிலிய விதைகள்🌱

திருவருகைக் காலம் 2-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(04 டிசம்பர் 2022, ஞாயிறு)

முதல் வாசகம்: எசா 11:1-10
இரண்டாம் வாசகம்: உரோ 15: 4-9
நற்செய்தி: மத் 3: 1-12

மனமாற்றம் என்னும் பாதை

        தன்னிடம் சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்கிறார், "ஆன்மீகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?" புதிய சீடன், "இறைவனை அறிவதும், அடைவதும் தான் ஆன்மீகத்தின் நோக்கம்" என்கிறான். "இத்தனை நாள் ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறாயே, இறைவனை அறிந்தாயோ" என்று கேட்கிறார். "இல்லை, ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்" என்றான். அதற்கு குரு, "நல்லது, உண்மையிலேயே இறைவனை அறிந்து விட முடியும் என்று நம்புகிறாயா?" என்று மீண்டும் கேட்டார். சீடன் சற்றே யோசித்து விட்டுச் சொன்னான், "நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது." "எதனால் இந்த சந்தேகம் வருகிறது? "பலர் பலவிதமாக இறைவனைப் பற்றி சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவைவிட குழப்பமே மிஞ்சுகிறது." என்றான் சீடன். 'நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே... இப்போது நான் வேறு விதமாக கேட்கிறேன்... நீ ஆண்டவனை தெரிந்து கொள்ள, அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா?" "ஆமாம் குருவே." என்றான். சீடனே, உன் விருப்பத்தின் காரணமாகவே நீ ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டு இருக்கிறாய். இறைவனை அடைய ஒரு எளிமையான மாற்று வழியை சொல்லித் தருகிறேன். இந்த வழியில் இறைவனை அடைய முடியாது. ஆனால், இறைவன்தான் உன்னை வந்து அடைவார்" என்றார் குரு. "இது குழப்பமாக இருக்கிறதே." என்றான் சீடன். "ஒரு குழப்பமும் இல்லை, அரசன் இருக்கிறார் அவர் அருகே நெருங்குவதோ, பேசுவதோ, அறிவதோ எளிமையான விஷயமல்ல. முடியவும் முடியாது, ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்ற ஆசை ஒருவனுக்கு இருக்கிறது. அவன் நாட்டில் உள்ள எல்லா மக்களும் பயன்படும்படியாக கடுமையாக உழைக்கிறான். பல நல்ல செயல்களை செய்கிறான். இந்த செய்தியை ராஜா அறிகிறார். உடனே தான் கேள்விப்பட்ட அந்த மனிதனை பார்ப்பதற்கு அவரே அழைப்பு தருகிறார் அல்லது அவரே சென்று நேரில் பார்க்கிறார். அவனோடு உரையாடுகிறார், பாராட்டுகிறார் மற்றும் பரிசுகள் தருகிறார். இவ்வாறெல்லாம் நடக்கும் இல்லையா?" "நிச்சயம் நடக்கும் குருவே" என்கிறான் அந்த சீடன். மேலும் குரு சீடனிடம், "ராஜா தான் இறைவன், நீ தான் அவன், நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவை அடைய இயலாது. ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்தால் ராஜாவே உன்னை பார்க்க வருவார். இறைவனை பார்க்கும் முயற்சியை கைவிடு, இறைவன் உன்னை தேடி வர தகுதியான செயல்களில் ஈடுபடு, உன்னை தயாரித்துக் கொள், இறைவன் உன்னை வந்து அடைவார்" என்று கூறினார் குரு. இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இறைவனை சந்திக்க வேண்டும் மற்றும் அவர் அருளாசீரோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக பல பக்தி முயற்சிகளிலும் ஈடுபடுகிறோம். ஆனால் இந்த இறைவன் நிரந்தரமாக நம்மில், நம் உள்ளத்தில் மற்றும் நம் வாழ்வில் வந்து தங்க வேண்டும் என்று ஆசை கொள்வதில்லை. திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் அடியெடுத்து வைத்துள்ள நம் ஒவ்வொருவரையும் இன்றைய இறைவார்த்தை வழிபாடு வெறும் இறையாசீரை பெறுகின்ற கிறிஸ்தவர்களாக வாழாது, நம்மை தேடி வரும் தெய்வத்தை வரவேற்று அவரில் வாழுகின்ற கிறிஸ்தவர்களாக வாழ, அதற்காக நம் வாழ்வின் பாதையை தயாரிக்க அழைப்பு தருகிறது.

    இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் ஆண்டவரின் வருகைக்காக நம் உள்ளங்களை தயாரிக்க அழைப்பு தருகிறார். "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது." என்று பறைசாற்றி நம் எல்லோருக்கும் மனமாற்றம் என்னும் புது பாதையை தருகிறார். இன்றைய நற்செய்தி முழுவதையும் வாசித்து தியானிக்கின்ற பொழுது நம்முடைய மனமாற்றம் எப்பேற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நம்மால் உணர முடியும்.

1. எளிமையான வாழ்வு

            நற்செய்தி எடுத்துரைக்கின்ற திருமுழுக்கு யோவானின் எளிய வாழ்வு நம் மனமாற்றத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. திருமுழுக்கு யோவான் பாலைவனத்தில் வாழ்ந்ததையும், ஒட்டக முடியாலான ஆடையை அணிந்ததையும், தோல் கச்சையை இடையில் கட்டியதையும் மற்றும் காட்டுத் தேன், வெட்டுக்கிளி போன்ற உணவை உண்டதையும் எடுத்துரைத்து, அவரின் எளிய வாழ்வை நமக்கு காட்டுவதன் அர்த்தம் நாமும் எளிய வாழ்வை ஏற்றுக் கொள்ள பெறும் அழைப்பாகும். இங்கு எளிமையான வாழ்வு என்பது நமது செல்வங்களை தூக்கி எறிந்து விட்டு குடிசையில் வாழ்வது அல்ல, மாறாக நம் வாழ்வில் எல்லோரையும் ஏற்றுக் கொள்வதும், நம்மிடையே இருப்பதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் ஆகும். எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் ஏற்றுக்கொண்டு, ஏழை எளியவருக்கு நம்மாலான உதவிகளை செய்கின்ற எளிமையான உள்ளம் கொண்ட வாழ்வே உண்மையான மனமாற்றம் என்பதை திருமுழுக்கு யோவானின் பாலைவன வாழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.

2. வெளிவேடமற்ற வாழ்வு

            இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் சதுசேயர் மற்றும் பரிசேயர்களை "விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?" எனக் கேட்பது சரி செய்யவில்லை வெளிவேட வாழ்வு உண்மையான மனமாற்றம் அல்ல என்பதை எடுத்துரைக்கிறது. சதுசேயர்களும், பரிசேயர்களும் சுயநல வாழ்வை வாழ்ந்து தங்கள் வாழ்வுக்காக பிறரை கஷ்டப்படுத்தி வாய்ப்பேச்சு வீரர்களாக வாழ்ந்தவர்கள். சட்டங்களை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தி, பிறர் வாழ்வை அழித்து இயேசு கூட தங்கள் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். கிறிஸ்தவர்களாகிய நமது மனமாற்றம் இத்தகைய பரிசேய மற்றும் சதுசேய வெளிவேட மாற்றமாக அல்லாது, உண்மையான மனமாற்றமாக அமைய திருமுழுக்கு யோவான் அழைப்பு தருகிறார்.

3. தூய ஆவியில் வாழ்வு

            திருமுழுக்கு யோவான் மனமாற்றத்தின் அடையாளமாக மக்களுக்கு தண்ணீரால் திருமுழுக்கு கொடுத்தார். அவரே "எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னை விட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக் கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்." என்று உரைக்கிறார். இது கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரின் மனமாற்றமும் தூய ஆவியில் வாழ நம்மை அழைத்துச் செல்லும் மாற்றமாக அமைய வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியின் ஆலயங்களாக வாழுகின்ற ஒரு மாற்றமாக நமது மனமாற்றம் அமைவதே ஆண்டவரின் வருகைக்காக உண்மையான தயாரிப்பாகும். அப்படியென்றால் நமது மனமாற்றம் நம்மை தூய ஆவியின் கனிகளையும் கொடைகளையும் நமது வாழ்வாக்க அழைத்துச் செல்வதாக இருக்க வேண்டும். அன்று அன்னை மரியாள் தூய ஆவியின் அருளால் கிறிஸ்துவை தன்னுடைய கருவில் தாங்கி, ஆவியின் ஆலயமாக மாறி இறுதி வரை மீட்பு திட்டத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார். ஆண்டவர் இயேசுவின் இறப்புக்குப் பிறகு திருத்தூதர்களும் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியை பெற்று இயேசுவை அகில உலகத்திற்கும் எடுத்துச் சென்றனர். இன்று நாமும் அதே ஆவியில் வாழ்கின்ற ஒரு மாற்றத்தை நம்மில் உருவாக்கி பிறக்கவிருக்கின்ற இயேசுவை நம்முள் ஏற்றுக்கொள்வோம்.

4. கிறிஸ்துவில் வாழ்வு

                இன்றைய முதல் வாசகம் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிதறி சென்ற இஸ்ராயேல் மக்களுக்கு, ஜெசெவின் கோத்திரத்திலிருந்து மெசியா தோன்றுவார். அவர் மீது ஆண்டவரின் ஆவி தங்கும்‌. நீதியோடு தீர்ப்பு வழங்குவார் என்னும் தேடி வரும் மெசியாவின் நம்பிக்கையூட்டும் செய்தியை இறைவாக்கினர் எசாயா அறிவிக்கின்றார். இன்றைய இரண்டாம் வாசகம் நாம் ஒரே மனத்தினராக வாழ வேண்டும் என்றும் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின் வருகைக்காக நம்மை தயாரிக்க அழைப்பு தருகிறது. இன்றைய நற்செய்தியில் நம்மை தேடி வரும் தெய்வத்திற்கு மனமாற்றம் என்னும் பாதையை நம் வாழ்வில் உருவாக்க திருமுழுக்கு யோவான் அழைப்பு தருகிறார். நமது மனமாற்றம் கிறிஸ்துவில் நம்மை வாழ வைக்க வேண்டும். கிறிஸ்துவை சாராத வாழ்வு உண்மையான மனமாற்றம் பெற்ற வாழ்வாக அமையாது. எனவே திருவருகை காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற நம் ஒவ்வொருவரும் மனமாற்றம் என்னும் பாதையை ஆண்டவருக்காக உருவாக்குவோம் அவரை நம் உள்ளத்திலும் வாழ்விலும் ஏற்றுக் கொள்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை