🌱விவிலிய விதைகள்🌱
பாஸ்கா காலத்தின் 2-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(16 ஏப்ரல் 2023, ஞாயிறு)
வழங்குபவர்
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை
முதல் வாசகம்: திபணி 2: 42-47
இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 1: 3-9
நற்செய்தி: யோவான் 20: 19-31
இயேசுவின்
அமைதி தரும் புதுவாழ்வு
(பயத்திலிருந்தும் - ஐயத்திலிருந்து)
அமைதி தரும் புதுவாழ்வு
(பயத்திலிருந்தும் - ஐயத்திலிருந்து)
ஜெனீவாவில் பக்தியும் கருணையும் குடிகொண்டிருந்த குடும்பமொன்றில் 1828ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்தார். தனது பெற்றோரிடமிருந்து கற்ற அனுபவங்கள் காரணமாக சிறுவயதிலிருந்தே சமூக சேவைகளில் ஆர்வமிக்கவராக விளங்கினார். சிறிய வயதிலே பிறர் படும் இன்னல் கண்டு வேதனையுற்றார். சிறைக் கைதிகள் அனுபவிக்கும் கடும் தண்டனைகளுக்காக மனம் நொந்தார். சிறைக் கூடங்களுக்குச் சென்று கைதிகளுக்கு ஆறுதல் கூறி வந்தார். பின்னர் வங்கித் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறினார். 1859 ஜுன் 25ல் அவர் வட இத்தாலிக்குச் சென்றபோது அங்கு சோல்பரினோவில் போர் நடைபெற்று கொண்டிருந்தது. ஆஸ்திரிய, பிரான்ஸிய, இத்தாலிய படைகளின் 3 லட்சம் பேர் போரிட்டதன் விளைவாக 40000 பேர் போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடந்தனர். இவ்வாறு குற்றுயிராய்க் கிடந்தவர்களிடத்தே எத்தரப்பினரும் அக்கறை காட்டவில்லை. இந்தக் காட்சி ஹென்றி டியூனண்டின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. அப்பகுதி மக்கள் உதவியுடன் காயப்பட்டோருக்கு எத்தகைய பேதங்களுமின்றி சிகிச்சையளித்தார். பகை நிரம்பிய அச்சூழலில் இவரது பணி புரட்சிகரமானதாகவும், மக்கள் மத்தியில் அமைதியை விதைப்பதாகவும் அமைந்தது. பின்பு ஜெனீவா திரும்பிய டியூனண்ட் ''சோல்பரினோ நினைவுகள்' என்ற நூலை எழுதினார். இந்நூலில் அவர் மனித சமுதாயத்திற்கு உதவக்கூடிய அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வினையடுத்து நாடு நாடாகச் சென்று போர்களப் பணிகள் பற்றிய அவசியத்தை எடுத்துரைத்தார். உலக செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கினார். இச்சங்கம் போர்களினாலும் இயற்கை பேரிடர்களாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி உதவி செய்வதும் முரண்பாடுகள் மிக்க தரப்பினரிடையே நடுநிலை வகித்து அமைதியை ஏற்படுத்தியும் வருகிறது. போர்க்களத்தில் உதவுவதற்கும், என்றும் மக்கள் மனதில் அமைதியை விதைப்பதற்கும் ஹென்றி டியூனண்டும் அவர் ஏற்படுத்திய செஞ்சிலுவை சங்கமும் காரணமாக இருந்து புதுவாழ்வை அளித்து வருகிறது. அதேபோல் சீடர்கள் மத்தியில் எழுந்த பயத்தையும் ஐயத்தையும் நீக்கி உயிர்த்த இயேசுவின் அமைதி அவர்களுக்கு புதுவாழ்வை தந்தது. இன்றைக்கு அச்சத்திலும் சந்தேகத்திலும் நிறைந்திருக்கும் நம்முடைய உள்ளங்களுக்கும், இல்லங்களுக்கும் மற்றும் சமுதாயத்திற்கும் உயிர்த்த இயேசு தரும் அமைதி புது வாழ்வை தரும் என்னும் மைய சிந்தனையை எடுத்துரைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
இரக்கம் தந்த வாழ்வு
பாஸ்கா காலத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை தாயாம் திருஅவையானது இரக்கத்தின் ஞாயிறாக கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைய இரண்டாம் வாசகம் இறைவனின் இரக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. (1 பேதுரு 1:3) இன்றைய நற்செய்தியிலும் இயேசு மக்களின் மீது இரக்கம் கொண்டு அவர்களின் பாவங்களை மன்னிக்கின்ற அதிகாரத்தை சீடர்களுக்கு தருகிறார். இந்நாளில் இறைவன் தரும் இரக்கத்தை நாமும் பெற்று பாவம் என்னும் இருளிலிருந்து
புதுவாழ்வை பெறுவோம்.
இன்றைய நற்செய்தி இயேசுவின் இரண்டு விதமான காட்சிகளை நமக்கு எடுத்துரைக்கிறது. இவ்விரண்டு காட்சிகளும் புது வாழ்வை தருவதாக அமைகிறது. இயேசு தன்னுடைய உயிர்ப்புக்குப் பிறகு முதல் முறையாக சீடர்களுக்கு (அதாவது யூதாஸ் மற்றும் தோமா அல்லாத பத்து பேருக்கு) தோன்றியது அவர்களின் பயத்திலிருந்து புது வாழ்வை கொடுத்தது. இரண்டாவதாக இயேசு தோமா இருக்கும்போது சீடர்களுக்கு காட்சி கொடுத்தது. இது தோமாவின் ஐயத்திலிருந்து நம்பிக்கை என்னும் புது வாழ்வை கொடுத்தது.
1. பயத்திலிருந்து வாழ்வு
இயேசுவை கைது செய்தது போல நம்மையும் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பூட்டிய அறைக்குள் சீடர்கள் இருக்கிறார்கள், இயேசு அவர்கள் முன் தோன்றுகிறார். இயேசு தன்னை இரண்டு அடையாளங்கள் மூலமாக சீடர்களிடம் வெளிப்படுத்தி அவர்களின் பயத்திலிருந்து வாழ்வு தருகிறார்.
அ. உங்களுக்கு அமைதி உரித்தாகுக:
தன்னை வெளிப்படுத்துவதற்காக யூதர்கள் மத்தியில் பொதுவாக வாழ்த்துச் செய்தியாக சொல்லக்கூடிய "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்னும் வாழ்த்தை இயேசு சீடர்களிடம் எடுத்துரைக்கிறார்.
ஆ. கைகள் மற்றும் விலா:
இரண்டாவதாக இயேசு தன்னை வெளிப்படுத்துவதற்காக சீடர்களிடம் தம் கைகளையும் விலாவையும் காட்டுகின்றார். இது சீடர்களுக்கு தங்களோடு உடன் வாழ்ந்து சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு மீண்டும் அவர்கள் மத்தியில் உடலோடு வந்திருக்கிறார் என்பதை உறுதி செய்வதாக அமைந்தது.
இயேசுவின் இந்த இரண்டு விதமான வெளிப்பாடுகளால் பயத்திலும் கலக்கத்திலும் இருந்த சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசுவின் காட்சிகளும் வெளிப்பாடுகளாலும் சீடர்கள் பயத்திலிருந்து வெளிவந்து புது வாழ்வை பெற்றார்கள். தொடர்ந்து இயேசு சீடர்களுக்கு பணி வாழ்வு என்னும் புது உலகத்திற்கு அழைப்பு கொடுத்து அவர்களுக்கு தூய ஆவியை தந்து பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும் தருகிறார்.
2. ஐயத்திலிருந்து வாழ்வு
தோமா சீடர்களோடு இல்லாமல் தனித்து வெளியே சென்றிருந்ததால் இயேசுவை கானும் வாய்ப்பை இழந்தார். தோமா எதையும் எளிதில் ஏற்றுக் கொள்பவரும் தமக்கு புரியாத ஒன்றை புரிந்தது போல் காட்டிக் கொள்பவரும் அல்ல. நம்பியது போல் நடிக்கவும் தெரிந்தவர் அல்ல. எனவே தன்னோடு மூன்று ஆண்டுகள் உடன் வாழ்ந்த மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்”என சான்று பகர்ந்ததை ஏற்றுக் கொள்ளவில்லை. தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். (யோவான் 20:25) தோமா இயேசுவை ஒரு சாதாரண மனிதனாக அதாவது ஆசிரியராக, இறைவாக்கினராக மட்டுமே பார்த்தார். அவரை ஒரு இறைமகனாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் ஐயம் அவரை சூழ்ந்தது. தோமாவின் இத்தகைய ஐயத்திலிருந்து புது வாழ்வை தருவதற்கு இயேசு அவர்முன் தோன்றினார். தம் கைகளையும், விலாவையும் காட்டி விரலை அதில் விடுவதற்கு அழைப்பு தந்தார். இங்கு இயேசுவின் பிரசன்னமும், இறைவார்த்தையும் தோமாவின் ஐயத்தை நீக்கி, அவரை "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" என்று சொல்ல வைத்தது. இயேசுவின் இரண்டாம் காட்சி தோமாவின் ஐயத்திலிருந்து ஆழ்ந்த நம்பிக்கை என்னும் புது வாழ்வை தருகிறது.
அமைதி தந்த வாழ்வு
இன்றைய நற்செய்தியில் இயேசு சீடர்கள் முன் இரண்டு முறை தோன்றினார். இவ்விரண்டு முறையும் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று கூறினார். அமைதி என்பது ஷாலோம் என்னும் எபிரேய சொல்லின் மொழிபெயர்ப்பாகும். இச்சொல்லின் பொருள் 'யாவும் நலமே அமைக' என்பதாகும். எனவே அமைதியின் முழுப்பொருள் நல வாழ்வாகும். வாழ்வை அதுவும் நிறைவாழ்வைக் கொடுப்பதே உயிர்த்த இயேசு சீடர்களுக்கு தோன்றியதன் காரணமாகும். இத்தகைய நல வாழ்வை கொடுப்பதே சீடத்துவத்தின் பணியாகும் அதற்காகவே தூய ஆவியின் துணையோடு அவர்களை அனுப்புகிறார். நிறை வாழ்வை பெற்றுக்கொள்ள தடையாக இருக்கின்ற பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீடர்களுக்கு பாவங்களை மன்னிக்கின்ற அதிகாரத்தையும் தருகிறார். இயேசு தன்னுடைய பணி வாழ்வில் சீடர்களை இருவர் இருவராக அனுப்பும் போது கூட நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று கூறுங்கள் எனக் கூறியிருக்கிறார். மேலும், "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்" (யோவான் 14:27) எனவும் எடுத்துரைத்து இருக்கிறார். இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நம்முடைய வாழ்விலும் உயிர்த்த ஆண்டவரின் அமைதி தேவைப்படுகிறது. நடந்து முடிந்த இறந்த கால நிகழ்வுகளைப் பற்றியும் நடக்கவிருக்கும் எதிர்கால நிகழ்வுகளை பற்றியும் நினைத்து நம்முடைய உள்ளங்கள் பயத்திலும் ஐயத்திலும் சீடர்களைப் போல அமைதியற்று இருக்கிறது. நம்முடைய குடும்பங்களும் பயம், ஐயம், பொறாமை, சுயநலம், மண்ணாசை, பொருளாசை, ஆணவம், அகங்காரம், சண்டை மற்றும் சச்சரவுகளால் அமைதியற்று இருக்கிறது. நம்முடைய உள்ளங்கள் மற்றும் இல்லங்கள் போல நமது சமுதாயமும் சாதி, மத, இன, மொழி, சமய மற்றும் அரசியல் சூழ்நிலையால் பிளவுப்பட்டு அமைதியற்று இருக்கிறது. இத்தகைய சூழ்நிலைகள் மாற உயிர்த்த ஆண்டவரின் அமைதி நமது வாழ்க்கையாக மாற வேண்டும். இன்றைய முதல் வாசகம் தொடக்க கிறிஸ்தவர்கள் ஒருமித்த உள்ளத்தோடு, ஒற்றுமை உணர்வோடு, பொருளாதார மற்றும் சமூக அளவில் வேறுபாடு காட்டாமல், நட்புறவோடு ஒற்றுமை, அப்பம் பிடுதல் இறை வேண்டல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற நற்பண்புகளில் நிலைத்திருந்ததை எடுத்துரைக்கிறது. இதைப் போல இன்று ஆண்டவரின் அமைதியை பெற்று நமது வாழ்வும் ஒருமித்து அமைய வேண்டும். புனித பிரான்சிஸ் அசிசியார் ஜெபித்தது போல "இறைவா என்னை உமது அமைதியின் கருவியாக்கும்" என நாமும் உயிர்த்த இயேசு தரும் அமைதியின் கருவிகளாக மாற நம்மை அர்ப்பணிப்போம்.