விவிலிய விதைகள்
பொதுக்காலம் 5-ஆம் வாரம் ( ஆண்டு- B)
07-02-2021
ஞாயிற்றுக்கிழமை
மனித நேயமிக்க பணிவாழ்வு
இளைஞன் ஒருவன் சாலையில் நடந்து கொண்டிருக்கின்றான். அப்போது சாலையின் அருகே ஒரு சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை கவனிக்கின்றான். அதில் தான் ஒரு மூதாட்டி, "எனக்கு கண் பார்வை தெரியாது என்னுடைய 100 ரூபாயை இந்த இடத்தில் தொலைத்துவிட்டேன். யாராவது கண்டுபிடித்தால் அருகே உள்ள தெருவில் உள்ள எனது வீட்டில், அதை ஒப்படைக்க கேட்டுக் கொள்கின்றேன்' என்று எழுதப்பட்டிருந்தது. உடனே அந்த இளைஞனும், அருகே உள்ள அந்த தெருவிற்கு சென்று அந்த வயதான மூதாட்டினுடைய வீட்டை கேட்டறிந்து, அந்த வீட்டிற்கு சென்று பார்வை தெரியாத அந்த மூதாட்டியிடம் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த 100 ரூபாயை எடுத்து கொடுக்கின்றான். அந்த மூதாட்டி ஆச்சரியத்தோடு உண்மையிலேயே காலையிலிருந்து அதிகமானோர் வந்து நூறு ரூபாயை நான் தொலைத்ததாக என்னிடம் கொடுத்தார்கள். நான் இந்த பணத்தை தொலைக்கவும் இல்லை. அந்த சுவரொட்டியை நான் ஒட்டவுமில்லை என்று கூறினாராம். இது அவனுள் ஒரு உணர்வை ஏற்படுத்தியது. யாரோ ஒரு நல்ல உள்ளம் படைத்தவர் இந்த மூதாட்டிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு இவ்வாறு ஓட்டியதை எண்ணி மகிழ்ந்தான். அந்த நூறு ரூபாயை மூதாட்டியிடம் கொடுத்து என்னுடைய அன்பிற்காக இதை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினான். உடனே அந்த மூதாட்டி நீ செல்லும் வழியில் அந்த சுவரொட்டியை கிழித்து விட்டு போ, இல்லாவிடில் வேறு யாராவது இதே போல வந்து பணத்தைக் கொடுப்பார்கள் என்று கூறினார். அவன் சிரித்துக்கொண்டே நிச்சயமாக இதை நான் செய்யமாட்டேன் என்று உள்ளத்தில் எண்ணினான். அவன் அந்த மூதாட்டினுடைய வீட்டை விட்டு வெளியே வந்த பொழுது, இன்னொரு நபர் அவனிடம் வந்து, இங்கு யாராவது கண் தெரியாத மூதாட்டி இருக்கிறார்களா? அவர்களுடைய வீடு எங்கே? என்று கேட்டார். அதற்கு இந்த இளைஞன், எதற்கு என்று கேட்க? அவரோ அந்த மூதாட்டினுடைய பணம் கீழே கிடந்தது, அதை கொடுக்கவேண்டும் என்று கூறினாராம். அந்த இளைஞனும் மகிழ்ச்சியோடு அந்த மூதாட்டியின் வீட்டை காட்டிக் கொடுத்தான். ஆம், அன்புமிக்கவர்களே, இது தான் மனித நேயமிக்க பணி வாழ்வு. மாறிவரும் இந்த மாய உலகில் இன்றும் மனித நேயமிக்க மனிதர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இந்த மனித நேயம் நம் ஒவ்வொருவரிடத்திலும் பணி வாழ்வாக மாற வேண்டும் என்று இறைமகன் இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கின்றார். இயேசுவினுடைய பணிவாழ்வு, மனித நேயமிக்க பணி வாழ்வாக இருக்கின்றது. இத்தகைய மனிதநேய மிக்க பணிவாழ்வு ஜெபத்தில் துவங்கி சீடத்துவத்தில் நிறைவு பெறுகிறது.
இன்றைய நற்செய்தியில் இயேசு சீமோனுடைய மாமியாரின் காய்ச்சலை குணமாக்குவதையும், மேலும் எண்ணற்ற நோயாளிகளை குணமாக்குவதையும், பேய் பிடித்தவர்களுக்கு விடுதலை கொடுப்பதையும், மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று நற்செய்தியைப் பறைசாற்றுவதையும் பார்க்கின்றோம். இயேசுவின் இத்தகைய பணி வாழ்வை நாம் மனித நேயக்கண் கொண்டு பார்க்கலாம். இயேசு தன்னுடைய பணி வாழ்வு முழுவதையும் மனித நேயத்தோடு செய்திருக்கின்றார். அதற்கான ஏழு நிலைகளை இன்றைய நற்செய்தியின் அடித்தளத்தில் நாம் தியானிப்போம்.
மனித நேயத்தோடு இயேசுவின் பணி வாழ்வு தரும் ஏழு நிலைகள்
1. ஜெபித்தல்
இன்றைய நற்செய்தியின் தொடக்கம் இயேசு சீடர்களோடு தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வருவதாக நமக்கு தரப்படுகின்றது. இது அவர் ஜெபித்து விட்டு வந்ததை நமக்கு குறிப்பிட்டு காட்டுகின்றது. இதுமட்டுமல்லாது இயேசு நற்செய்தி அறிவிப்பதற்கு முன்பும் விடியற்காலை கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று ஜெபித்ததாக நமக்கு தரப்படுகின்றது. இயேசுவினுடைய மனிதநேய பணி வாழ்வின் தொடக்கமாக ஜெபம் இருக்கின்றது. நமது வாழ்க்கையிலும் எல்லா நிலைகளிலும் ஜெபமே தொடக்கமாக இருக்க வேண்டும். நாம் எதை செய்தாலும், எப்படி செய்தாலும், யாருடன் செய்தாலும், ஜெபம் நம் வாழ்வின் அடித்தளமாக அமைய வேண்டும், ஏனென்றால் ஜெபமே வாழ்வு. "ஜெபிக்கத் தெரியாத கிறிஸ்தவன், நீந்தத் தெரியாத மீனுக்கு சமம்" என்னும் வார்த்தைக்கு ஏற்ப நமது வாழ்வு ஜெபத்தின் அடித்தளத்தில் அமைய வேண்டும். இயேசு தன்னுடைய மனித நேயமிக்க பணி வாழ்விற்கு ஜெபத்தை தொடக்கமாக கொண்டிருந்ததை போல, நாமும் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும், வேலையையும் மற்றும் செயலையும் ஜெபத்திலிருந்து துவங்குவோம்.
2. களத்திற்கு செல்லுதல்
இயேசுவின் மனித நேயமிக்க பணி வாழ்வின் இரண்டாவது நிலையாக அவர் ஒரு குறிப்பிட்ட களத்திற்கு செல்லுதலை அதாவது இடத்திற்கு செல்வதை பார்க்கிறோம். எங்கு தன்னுடைய பணியை இயேசு செய்ய விரும்பினாரோ, அந்த இடத்திற்கு அவர் செல்வதை பார்க்கின்றோம். பல வேளைகளில் எல்லோரும் நம்மை தேடி வரவேண்டும் என்று நாம் விரும்புவோம். ஆனால், இறைமகன் இயேசு கிறிஸ்து பணி தேவைப்படுகின்ற இடத்தை நோக்கி செல்கின்றார். அதனால் தான் அவர் சீமோனுடைய மாமியார் வீட்டிற்கு செல்கின்றார். நோயுற்றவரின் இடத்திற்கே சென்று நோயை குணப்படுத்துவது ஒரு மனிதநேய மிக்க ஒரு செயல். எங்கு பணி தேவைப்படுகிறதோ அவ்விடத்திற்கு செல்லுகின்ற ஒரு சூழல் இதைத் தான் இயேசுவினுடைய பணிவாழ்வு முழுவதிலும் நாம் பார்க்கின்றோம். பணித்தளத்தை தேடி அவர் செல்கின்றார், பல இடங்களுக்கும் மற்றும் ஊர்களுக்கும் தேடிச் சென்று நற்செய்தியை அறிவிக்கின்றார். நாமும் மனித நேயமிக்க செயல்களை செய்ய விரும்புகின்ற பொழுது நாம் நமது பணி தேவைப்படுகின்ற இடத்திற்கு செல்லுவோம்.
3. அருகே இருத்தல்
மனித நேயமிக்க பணி வாழ்வில் மூன்றாம் நிலையாக நாம் தியானிப்பது "அருகில் இருத்தல்" இறைமகன் இயேசு கிறிஸ்து நோயாளியினுடைய வீட்டிற்கு மட்டும் அதாவது களத்திற்கு மட்டும் செல்லவில்லை, மாறாக நோயாளியின் அருகில் செல்வதை பார்க்கின்றோம். இயேசு அவர் அருகில் சென்று நோயை குணப்படுத்தியதை பார்க்கின்றோம். "அருகில் இருத்தல்" அல்லது "உடன் இருத்தல்" என்பது பணி வாழ்வில் குறிப்பாக மனித நேயத்தில் மிகச்சிறந்த ஒரு பண்பாக இருக்கின்றது. இயேசு இத்தகைய மாண்புமிக்க ஒரு பண்பை தன்னுடைய பணி வாழ்க்கையில் பின்பற்றி மனிதநேயத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். இன்று நாமும் பலவேளைகளில் உடனிருக்க மற்றும் அருகிலிருக்க அழைக்கப்படுகின்றோம். நோயாளிகள், ஆதரவற்றவர்கள், ஏழைகள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் துன்பத்தில் இருந்து கொண்டிருப்பவர்கள் என இவர்கள் அருகே இருப்பதற்கு இறைவன் அழைப்பு தருகிறார்.
4. தொடுதல்
தொடுதல் ஒருவருடைய உணர்வை தூண்டுவதாக அமைகின்றது. தொடு உணர்வு ஒருவரை வாழவும் வைக்கும், ஒருவரை அழிக்கவும் செய்யும். தொடுதல் என்பது ஒரு உறவை வலுப்படுத்துகின்றது, ஒருவரை தொட்டுப் பேசுவது என்பது அவருக்கும் நமக்கும் உண்டான நெருங்கிய உறவை சுட்டிக்காட்டுகின்றது. யாரேன்று தெரியாத ஒருவரை நாம் தொடுவது கிடையாது, மாறாக நமக்கு நன்கு தெரிந்தவரை மற்றும் பழகியவரை மட்டுமே நாம் தொடுகின்றோம். ஒருவரை தொட்டு உதவுவது என்பது உயர்ந்த மனிதநேய மிக்க செயலாக இருக்கின்றது, இதைத்தான் இயேசு செய்வதை நாம் பார்க்கின்றோம். ஆக, இயேசுவினுடைய பணி வாழ்வில் மனித நேயம் கலந்திருக்கின்றது, அது இத்தகைய பண்புகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று நாமும் பிறரை தேற்றும் போது, நம் அன்பை, உறவை மற்றும் பாசத்தை வெளிப்படுத்த இத்தகைய உன்னத பண்பான தொடுதலை தேவையான இடங்களில் பயன்படுத்துவோம்.
5. உதவிக்கரம் நீட்டுதல்
உதவிக்கரம் நீட்டுதல் என்பது மனித நேயத்தினுடைய முக்கியமான தூணாக இருக்கக்கூடிய நற்பண்பு. இதை தான் இறைமகன் இயேசு கிறிஸ்து செய்வதை பார்க்கின்றோம். இறைமகன் இயேசு கிறிஸ்து ஜெபத்திற்கு பின்பு, களத்திற்கு அதாவது சீமோனுடைய மாமியார் வீட்டிற்கு வந்து, அவரருகே சென்று, அவரை தொட்டு தூக்குவதை பார்க்கின்றோம். இங்கு தூக்குதல் என்பது உதவிக்கரம் நீட்டுதல் ஆகும். இது வெறும் நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, யார் யாரெல்லாம் உதவிக்காக காத்திருக்கின்றார்களோ, அவர்களுக்கெல்லாம் மனிதநேயத்தோடு, எந்த ஒரு வேறுபாடுமின்றி, நாம் உதவுவதற்கு கொடுக்கும் அழைப்பாகும்.
6. குணமாக்குதல்
இயேசுவினுடைய மனிதநேய பண்புகளில் முதல் ஐந்து பண்பும் வெளிப்படுகின்ற வேளையிலே, ஆறாவது பண்பான குணமாக்குதல் தானாகவே நடைபெறுவதை பார்க்கின்றோம். இயேசு ஜெபித்து, களத்திற்கு சென்று, அருகிலிருந்து தொட்டு, உதவிக்கரம் நீட்ட சென்றபொழுது தானாகவே அங்கு குணமாகும் அற்புதம், அதாவது நோய் நீங்க பெறுகின்ற வல்ல செயல்களை நாம் பார்க்கின்றோம். நமது வாழ்விலும் பல ஆதரவற்றவர்களுக்கு நாம் அருகிலிருந்து உதவும் போது, அவர்கள் உள்ளங்கள் குணமாகும். அவர்கள் இருக்கின்ற இடத்திலே சென்று, அவர் அருகே அமர்ந்து, அவரைத் தொட்டு, அவருக்கு தேவையான உதவிகளை செய்கின்ற போது, தானாகவே அவர்கள் மன நிறைவு பெறுவார்கள், மேலும் உடலாலும் உள்ளத்தாலும் குணம் அடைவார்கள். இன்று அத்தகைய மனித நேயமிக்க மனிதர்களாக நாம் மாறுவதற்கு, நம் ஒவ்வொருவரும் இறைமகன் இயேசு கிறிஸ்துவினுடைய முன்மாதிரியைப் பின்பற்றி வாழ அழைக்கப்படுகின்றோம்.
7. சீடராக்குதல்
சீமோனுடைய மாமியார் குணமாகி இயேசுவுக்குப் பணிவிடை செய்வதை நற்செய்தி பதிவு செய்கின்றது. இங்கு பணிவிடை என்பது சீடத்துவதின் மறு வார்த்தையாக இருக்கின்றது. இயேசுவினுடைய அந்த மனித நேய செயல் ஒரு சீடரை அங்கு உருவாக்கி தந்திருக்கின்றது. சீமோனுடைய மாமியார் இயேசுவினுடைய சீடராக மாறுவதை நாம் பார்க்கின்றோம். இது தான் மனித நேய பணி வாழ்வினுடைய சக்தி. இன்று நாமும் பல ஆதரவற்றவர்கள் இருக்கின்ற இடத்திற்கு சென்று, அருகே அமர்ந்து, அவர்கள் அருகே அமர்ந்து, அவர்களைத் தொட்டு, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்ற போது அவர்கள் உள்ளத்தால் குணமடைந்து ஒரு புதிய பாதையை பெற்றுக் கொள்கின்றார்கள். அத்தகைய புதிய வாழ்வை நாம் ஒவ்வொருவரும் மற்றவருக்கு கொடுக்கையில் நாமும் ஒரு புதிய வாழ்வை பெறுவோம்.
"மண்ணில் வாழ்வது மனிதருக்கு போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாட்கள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன" என்னும் யோபுவின் இன்றைய முதல் வாசகத்தின் வார்த்தைக்கு ஏற்ப, இன்று மனித வாழ்க்கை எண்ணற்ற துன்பங்களுக்கும், கஷ்டங்களுக்கும் மத்தியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் மானிட குலத்திற்கு மனித நேய செயல்கள் மற்றும் மனிதநேய பணிகள் தேவைப்படுகிறது.
"நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்கு கேடு!" எனும் புனித பவுல் அடிகளாரின் இன்றைய இரண்டாம் வாசக வார்த்தைகளுக்கு ஏற்ப கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமது திருமுழுக்கின் வழியாக நற்செய்தி அறிவிக்க அழைப்பு பெறுகின்றோம். மனித நேய செயலை துணிந்து செய்ய, இறைமகன் இயேசுவைப் போல பணி வாழ்வில் நம்மை அர்ப்பணிக்க அழைப்பு பெறுகின்றோம். எனவே இயேசுவே முன்மாதிரியாக இருக்கின்ற நமது வாழ்க்கையில் அவரைப் பின்பற்றி, நம்முடைய மனிதநேய பணி வாழ்வும் ஜெபத்தில் தொடங்கி சீடத்துவத்தில் முடிய, மனிதநேயத்தின் பணி வாழ்வில் இயேசு பின்பற்றிய இந்த ஏழு நிலைகளையும் நாம் பின்பற்றுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
Fr. குழந்தை யேசு ராஜன் CMF