🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 15-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(16 ஜூலை 2023, ஞாயிறு)
வழங்குபவர்
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை
முதல் வாசகம்: எசாயா 55: 10-11
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8: 18-23
நற்செய்தி: மத்தேயு 13: 1-23
இறைவனின் பெருந்தன்மை
(எல்லோருக்கும் எல்லாம்)
இங்வர் காம்பரத் என்பவர் சுவீடன் நாட்டு தொழில் அதிபர் ஆவார். செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த பல வீட்டு உபயோக மரச்சாமான்கள் அதாவது (furniture) நடுத்தர மற்றும் ஏழ்மையான வீடுகளிலும் கிடைப்பதற்கு வழி செய்தார். தச்சர்களை ஒருங்கிணைத்து, பல வகையான மரங்களையும் மொத்தமாக வாங்கி, வித்தியாசமான முறையில் வீட்டு உபயோக மரச்சாமான்களை செய்து, எல்லா விதமான மக்களும் வாங்கும் விலைக்கு விற்க தொடங்கினார். தொடக்கத்தில் பலரும் பலவிதமான ஏளன பேச்சுகளை பேசியிருந்தாலும் எல்லா மக்களும் இதனால் பயன் பெற்றனர். அவரோ மரச்சாமான்கள் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஐக்கியா(IKEA) என்ற பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று 62 நாடுகளில் 460 ஐக்கியா வணிக நிறுவனங்கள் உள்ளன. இத்தகைய மாபெரும் வளர்ச்சிக்கு இங்வர் காம்பரத் பயன்படுத்திய தொழில் யுக்திதான் "எல்லோருக்கும் எல்லாம்". இன்றைக்கு இதே யுக்தியை பயன்படுத்தி பல வணிக நிறுவனங்களும் வளர்ந்து வருகின்றது. அதனால்தான் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் சிறிய டப்பா அல்லது பாக்கெட்டில் தொடங்கி பெரிய டப்பா வரை கிடைக்கிறது. இத்தகைய வணிக யுக்தியின் முதல் சொந்தக்காரர் இறைவன் என கூறலாம். ஆம், தன் அன்பை, இரக்கத்தை மற்றும் மன்னிப்பை பாரபட்சமின்றி எல்லோருக்கும் எல்லாம் என பெருந்தன்மையோடு தருகிறார். பொதுக்காலத்தின் 15-ஆம் ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தை வழிபாடும் நாம் இறைவனின் 'எல்லோருக்கும் எல்லாம்' என்னும் பெருந்தன்மையை உணர்ந்து நம்பிக்கையோடு வாழ அழைப்பு தருகிறது. இன்றைக்கு நற்செய்தியில் இயேசு விதைப்பவர் உவமையை எடுத்துரைக்கிறார். நாம் நன்கு அறிந்த இந்த உவமையில் விதைப்பவர் - கடவுள் எனவும், விதை - இறைவார்த்தை எனவும் மற்றும் இதில் கூறப்பட்டுள்ள நான்கு வகையான நிலங்கள் இறைவார்த்தையை கேட்கும் மனித உள்ளங்கள் எனவும் நாம் நன்கு அறிவோம். இயேசு எடுத்துரைக்கும் இந்த உவமையை நாம் தியானிக்கும்போது அதிகமாக இறைவார்த்தை பற்றியும், இறைவார்த்தையை கேட்கின்ற நம்முடைய மனித உள்ளங்களைப் பற்றியும் மட்டுமே எடுத்துரைக்கப்படுகிறது. விதைக்கும் இறைவனின் பெருந்தன்மையை நாம் சிந்திப்பதில்லை.
விதைப்பவரின் பெருந்தன்மை:
இயேசு எடுத்துரைக்கும் விதைப்பவர் உவமையில் விவசாயி தாராளமாக விதைக்கிறார். விதை எந்த வகையான மண்ணில் விழும் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. விதைகள் வீணாகும் எனவும் நினைக்கவில்லை. எல்லா வகையான மண்ணுக்கும் உயிர் உற்பத்தி செய்யும் வாய்ப்பை வழங்குகிறார். பாறையின் மேலுள்ள மண்ணில் விதைகள் வேரூன்றுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு, பாதைகள் விளைவதற்கு தகுதியற்ற இடம், முட்செடிகள் மத்தியில் விதைகள் முளைத்தாலும் வளர்ந்து கனி தர வாய்ப்பில்லை. ஆனால் எல்லா பகுதிகளிலும் பாரபட்சமின்றி விதைகள் விதைக்கப்படுகிறது. இது இறைவன் தாராளமானவர் தனது கருணையை, அன்பை மற்றும் மன்னிப்பை அனைவருக்கும் தருகிறார் என்பதை எடுத்துரைக்கிறது. இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கோ, மதத்தை, மொழியை, குலத்தை மற்றும் இனத்தைச் சார்ந்தவருக்கோ கிறிஸ்து சொந்தக்காரர் என கூற இயலாது. அவர் எல்லோருக்கும் எல்லாமும் ஆனவர், எல்லோருக்கும் எல்லாவற்றையும் தருபவர். அதனால்தான் "கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்." (யோவா 3:16) அனைத்து மனித உள்ளங்களும் இறையன்பை இறைவார்த்தையில் சுவைப்பதற்கு இறைவன் வாய்ப்பு அளிக்கின்றார். அவர் அன்பையும் இரக்கத்தையும் மற்றும் மன்னிப்பையும் சுவைத்து வாழ நம்பிக்கை கொண்ட நல்ல உள்ளங்கள் தேவைப்படுகிறது. இன்று நமது உள்ளங்கள் எப்படி இருக்கிறது?
பெருந்தன்மைக்கு சொந்தமாவோம்:
விதைப்பவராம் இறைவன் பெருந்தன்மையோடு எல்லாவிதமான உள்ளங்களிலும் இறைவார்த்தையை விதைக்கிறார். உவமையின் நான்கு விதமான நிலங்கள் காட்டும் உள்ளங்களில், எத்தகைய உள்ளத்திற்கு நாம் சொந்தக்காரர்? "மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர்." (யோவா 3:36) முழுமையான, ஆழமான மற்றும் பலனளிக்கும் நம்பிக்கையை நம் உள்ளங்கள் கொண்டிருக்கிறதா? இந்த நான்கு விதமான நிலங்களை வெவ்வேறு நிலைகளில் நம்பிக்கை கொண்டிருக்கின்ற கிறிஸ்தவர்களுக்கு ஒப்பிடலாம்.
1. பயனற்ற நம்பிக்கை: வழியில் விழுந்த விதைகள் கடினமான மண்ணின் பொருட்டு உயிர் வாழ முடியாது. அப்படியிருந்தால் அது பறவைகளால் விழுங்கப்படும். இது உள்ளங்களை கடினப்படுத்தி நற்செய்தியைக் கேட்க மறுக்கும் கிறிஸ்தவர்களை குறிக்கிறது. இத்தகையோர் பயனற்ற மற்றும் செத்த நம்பிக்கையை கொண்டு வாழ்வோர் ஆவர். இவர்கள் திருப்பலிக்கு செல்லாதவர்கள், மனமாற்றம் பெறாதவர்கள் மற்றும் நாங்களும் கிறிஸ்தவர்கள் என்று பெயரளவில் வாழ்பவர்கள்.
2. வேரற்ற நம்பிக்கை: மண் குறைந்த இடமான பாறையில் விதைகளை விதைக்கும்போது, அவை வேர் கருகி சுருண்டு விடுகிறது. உயிர் வாழ போதுமான ஆழம் மண்ணில் இல்லை. இவ்வகை விதைகள் ஆரம்பத்தில் உற்சாகமாக நம்பிக்கையோடு இருக்கும் கிறிஸ்தவர்களை குறிக்கிறது. அவர்களின் வேர்கள் ஆழமாக செல்லவில்லை. வாழ்க்கை நகர்ந்தது, துன்பம் ஏற்பட்டது, அவர்களின் நம்பிக்கை மங்கிவிட்டது. இவர்கள் மேற்பரப்பிற்கு கீழே வளரா வேரற்ற நம்பிக்கை கொண்டவர்கள். தாவரங்களுக்கு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தங்கி உயிர்வாழ ஆழமான வேர்கள் தேவை. இதேபோல் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து இறைவனில் புதுப்படைய நம்பிக்கை என்னும் ஆழமான வேர்கள் தேவைப்படுகின்றன.
3. மேலோட்டமான நம்பிக்கை: வளமான மண் இருக்கும் போது நல்ல விதைகள் மட்டும் வேரூன்றாது, முட்களும் மண்ணைப் பயன்படுத்திக் கொள்ள முயலும். இத்தகைய சூழலில் அவை முளைத்து வளரும் இளம் செடிகளையும் நெரித்துவிடும். இவர்கள் முட்கள் மத்தியில் இருப்பதால் அதாவது மேலோட்டமான நம்பிக்கை கொண்டிருப்பதால் உலக மாயைகளால் அழிந்து விடுகின்றனர். இயேசுவில் நம்பிக்கை கொண்டிருந்தாலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கவில்லை. நம் வாழ்க்கையைத் தாக்க விரும்பும் எதையும் நாம் தொடர்ந்து கவனித்து தவிர்க்க வேண்டும். ஆலயத்திற்கு செல்ல நினைப்போம், குடும்ப ஜெபமாலை ஜெபிக்க திட்டமிடுவோம், ஆனால் தொலைக்காட்சியில் நல்ல படம் மற்றும் நாடகம் போடுகிறார்கள் என அதை தள்ளி வைப்போம். நம் ஆன்மீக காரியங்களை இவை முப்புதர்களைப் போல நெறித்து விடுகிறது, ஏனெனில் நமது நம்பிக்கை மேலோட்டமாயுள்ளது.
4. பலனளிக்கும் நம்பிக்கை: விதைகள் நல்ல வளமான மண்ணில் விதைக்கப்பட்டால் மிகுந்த விளைச்சலைத் தரும். இத்தகைய கிறிஸ்தவர்கள் தங்களது பலனளிக்கும் நம்பிக்கையால் இறைவார்த்தையை கேட்டு இறைவனின் பெருந்தன்மைக்கு முற்றும் சொந்தமானவர்கள். இவர்களின் நம்பிக்கை என்னும் வேர்கள் ஆழமாகச் சென்று வாழ்க்கையின் கஷ்டங்களைத் தாங்கி நிற்கும். எந்த முட்களும் வாழ்க்கையை நெரித்துவிடவும், எந்த பறவையும் வாழ்க்கையை முழுங்கி விடவும் கூடாது என்பதற்காக உள்ளங்களை தூய ஆவியின் ஆலயமாக்கும்.
நமது உள்ளத்தை கவனிக்கும் விதமே வாழ்க்கையை தீர்மானிக்கும். நம் உள்ளங்கள் கடினமாக இருந்தால், நம் நம்பிக்கையும் ஆழமற்றதாகவும், இறைவனின் பெருந்தன்மையை உணராமலும் இருக்கும். எல்லோருக்கும் எல்லாவற்றையும் தரும் அன்பு உள்ளம் கொண்ட இறைவனின் வார்த்தையை வாழ்வாக்க பலனளிக்கும் நம்பிக்கையில் வளர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.