Thursday, November 10, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 33-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 13 -11-2022- ஞாயிற்றுக்கிழமை


 🌱விவிலிய விதைகள்🌱

பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(13 நவம்பர் 2022, ஞாயிறு)

முதல் வாசகம்: மலா 4: 1-2a
இரண்டாம் வாசகம்: 2 தெச 3: 7-12
நற்செய்தி: லூக் 21: 5-19

தயாரிப்போம்

வெளிநாட்டு பிரபல பாடகர் ஒருவர் இந்தியாவில் தன்னுடைய பாடல்களை அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய ரசிகர்களுள் ஒருவர் அவருக்கு ரோஜா பூ மாலையை அணிவிக்கிறார். அந்த மாலையை பெற்றுக் கொண்ட பின்னும், அந்த பாடகர் தொடர்ந்து நடனத்தோடு பாடலை பாடிக் கொண்டிருக்கிறார். தன்னை மறந்து நடனம் ஆட ஆட மாலையிலிருந்து ரோஜா பூ கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து தரையில் விழ ஆரம்பித்தது. இதை பார்த்துக் கொண்டிருந்த தம்பதியருள் கணவர் மனைவியை பார்த்து, 'நீ வேண்டுமானால் பார், இவர் பாடி முடிப்பதற்குள் இவருடைய கழுத்தில் வெறும் மாலையின் நாறு மட்டும் தான் இருக்கும்' என்று கூறினார். அதற்கு அவருடைய மனைவி 'நீங்கள் ஏன் அவருடைய கழுத்திலிருக்கின்ற மாலையின் நாறை பார்க்கிறீர்கள். அதே மாலையிலிருந்த ரோஜா பூ இதழ்கள் உதிர்ந்து தரையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அவர் நிற்கின்ற இடம் முழுவதும் ரோஜா பூ நிறைந்து கிடக்கின்றது' என்று கூறினார். இன்றைக்கு நாம் பார்க்கின்ற, கேட்கின்ற ஒவ்வொன்றிலும் பல்வேறு உள்ளார்ந்த அர்த்தங்கள் இருக்கும். நாம் எதை பார்த்து மற்றும் எவற்றை எடுத்து கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. இன்றைய இறைவார்த்தையை வாசிக்கும் போது, குறிப்பாக நற்செய்தியில் இயேசு எருசலேமின் அழிவை எடுத்துரைப்பது நமக்கு அச்சத்தை கொடுத்தாலும் அதன் பின்னணியில் அவர் தரும் அழைப்பை உணர வேண்டும். பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறான இன்றைய 33-வது ஞாயிறு திருவழிபாட்டு வாசகங்கள் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரையும் தகுந்த முன் தயாரிப்போடு வாழ அழைப்பு தருகிறது. இன்றைய இறைவார்த்தை வழிபாடு மூன்று விதமான எச்சரிக்கைகளை நம்முன் வைக்கின்றது. இதன் மூலம் இயேசு எவ்வாறு தன் சீடர்களையும் நம்மையும் முன் தயாரிப்போடு வாழ அழைப்பு தருகிறார் என்பதை சிந்திப்போம்.

1. துன்பத்தை எதிர்கொள்ள தயாரிப்போம்
(எருசலேம் கோவிலின் அழிவு)

இயேசுவின் காலத்தில் கட்டப்பட்டு இருந்த எருசலேம் ஆலயம் பெரிய ஏரோதால் கிமு. 20 மற்றும் 19-ல் கட்ட தொடங்கப்பட்டு கிபி 60-ல் முடிவடைந்த மூன்றாவது ஆலயமாகும். சலவைக் கற்களால் கட்டப்பட்டு, தங்க ஏடுகளால் பொதியப்பட்டு அழகிய சிறந்த வேலைப்பாடுகளுடன் விளங்கியது. உலகமே கண்டு வியக்கும் அளவுக்கு மிகவும் நேர்த்தியான கட்டடக்கலை தேவாலயத்தில் வெளிப்பட்டது. யூத மக்கள் இதன் அழகு கண்டு பெருமையால் பூரித்தார்கள். இயேசுவின் சீடர்களும் எருசலேம் தேவாலயத்தின் அழகை கண்டு பிரம்மித்தார்கள். இவ்வளவு உலகப் புகழ்பெற்ற மிகவும் அழகிய ஆலயம் அழிக்கப்படும் என இயேசு கூறுவது சீடர்களுக்கு ஒரு அடையாளம். இன்று இயேசுவோடு மகிழ்வாக இருக்கிற அவர்கள் எருசலேம் தேவாலயம் அழிவுறுவதை போல ஒரு நாள் மானிட மகன் சிலுவை சாவுக்கு ஆளாக்கப்படும் போது சீடர்கள் பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகும் நிலைவரும். இதை மனதைரியத்தோடு எதிர்கொண்டு இயேசுவின் பணியை தொடர்ந்தாற்ற அவர் அவர்களை தயார் செய்கிறார். இயேசு முன்னறிவிக்கின்ற துன்பம் லூக்கா நற்செய்தியின் இரண்டாம் பாகமாக கருதப்படுகின்ற திருத்தூதர் பணிகள் நூலில் நிறைவேறுவதை நாம் காண முடியும். திருத்தூதர்களும் மற்றும் தொடக்க கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் பொறுத்து அனுபவித்த துன்பங்களை தான் இயேசு முன்னறிவிப்பதாக இருக்கிறது. இயேசு தன்னுடைய சீடர்களை தயார் செய்கிறார். அவரது இறப்புக்குப் பிறகு தொடர்ந்து அவர்கள் அவரின் சீடர்களாக, அவர் விட்டு செல்லுகின்ற இறைப்பணியை தொடர்ந்தாற்ற ஏற்படுகின்ற துன்பங்களை எதிர்கொள்ளும் மன திறனை ஏற்படுத்த அவர்களை தயாரிக்கிறார். வரவிருக்கும் அழிவின் மத்தியிலும் மற்றும் துன்பங்களுக்கு இடையிலும் இயேசுவின் எதிர்கால சீடர்கள் இறைவழியில் வாழ முன்னறிவித்து திருத்தூதர்களை தயார்படுத்துகிறார். இன்றைக்கு இயேசு நம் ஒவ்வொருவரையும் கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு இச்சமுதாயத்தில் பெறப்போகும் துன்பங்களை ஏற்றுக்கொள்ள தயாராக அழைப்பு தருகிறார். லஞ்சம், அநீதி, பொய், ஏமாற்றுத்தனம் என்னும் தவறுகளும் பாவமும் சூழ்ந்து நிற்கும் இச்சமுதாயத்தில் இயேசு கற்பித்த நற்செய்தியின் விழுமியங்களோடு உண்மை கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு எண்ணற்ற தியாகங்களையும், துன்பங்களையும் சோதனைகளையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்தகைய ஒரு வாழ்வுக்கு நம்மை தயாரிக்க கிறிஸ்து இன்று அழைப்பு தருகிறார்.

2. உண்மையானதை அறிந்திட தயாரிப்போம்
(போலி இறைவாக்கினர்கள்)

எருசலேமின் அழிவு எப்போது வரும் அதனுடைய அறிகுறி எப்படியிருக்கும் என்று இயேசுவிடம் கேட்கப்படுவதற்கு அவர் எவ்விதமான அடையாளங்களையும் தராமல் எச்சரிக்கை தருகிறார். அதாவது தாங்களே மெசியா என்று சொல்லிக் கொண்டும், மெசியாவின் காலம் வந்து விட்டது எனவும் பல போலி இறைவாக்கினர்கள் வருவார்கள், எனவே எச்சரிக்கையோடு இருக்க அழைப்பு தருகிறார். இன்று நமது அன்றாட வாழ்விலும் இறைவன் இருக்க வேண்டிய இடத்தில் பணமும், பொருளும், பதவியும் மற்றும் சிற்றின்ப ஆசைகளும் சூழ்ந்து கிடக்கின்றது. இவையெல்லாம் போலிகளே, இறைவன் ஒருவரே உண்மையானவர் மற்றும் நிரந்தரமானவர் என்பதை நாம் நமது வாழ்க்கையில் உணர்ந்து, இத்தகைய போலிகளிலிருந்து விடுபட்டு “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" (யோவான் 14:6) என்று சொன்ன இயேசுவை ஏற்றுக் கொள்ள நம்மை முழுவதுமாக தயாரிப்போம்.

3. மனமாற்றம் பெற்றிட தயாரிப்போம்
(உலக முடிவு)

இன்றைய முதல் வாசகம் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த தென்னாடான யூதா மக்களுக்கு சொல்லப்பட்டது. இவர்கள் கோவிலையும் மற்றும் வீடுகளையும் கட்டி எழுப்பிய பின்னும் ஒழுக்கமின்மை, ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வறுமை போன்றவற்றால் மனசோர்வடைந்து இருந்த சூழலில் இறைவாக்கினர் மலாக்கி ஆண்டவரின் நாள் வரும் எனவும், அது எப்படியிருக்கும் என்பதையும் மற்றும் அவரின் பெயருக்கு அஞ்சி நடக்கிற ஒவ்வொருவர் மீதும் "நீதியின் கதிரவன் எழுகிறது" (2:7) என்பதையும் எடுத்துரைக்கின்றார். மேலும் இன்றைய நற்செய்தியில் இயேசு பல பேரிடர்கள் மூலம் உலகம் அழிவுறும் போதும் கிறிஸ்தவர்களாக வாழ உங்களை தயார்படுத்துங்கள் என சீடர்களுக்கு எடுத்துரைக்கின்றார். இறைவன் இஸ்ராயேல் மக்களுக்கு அவர்களது பாவ வாழ்வை பற்றிய எச்சரிக்கையை அளித்தது போல இன்றைக்கு நமது பாவ வாழ்வையும் பலர் வழியாக இறைவன் நமக்கு சுட்டிக் காட்டி எச்சரித்துக் கொண்டிருக்கிறார். இதை நமது வாழ்வில் ஏற்று, ஆண்டவரின் நாளில் நாம் ஒவ்வொருவருமே தீர்ப்பிடப்படுவோம் என்பதை முழுவதுமாக உணர்வோம். நாம் அடியெடுத்து வைக்கவிருக்கின்ற திருவருகை காலத்தில் இயேசுவை நமது உள்ளத்திலும் வாழ்விலும் ஏற்றுக்கொள்ள மனமாற்றம் பெற நம்மை முழுவதுமாக தயாரிப்போம்.

இன்றைய இரண்டாம் வாசகம் பவுலடிகளார் தெசலோனிய திருச்சபைக்கு எழுதியதாகும். இது ஆண்டவரின் இரண்டாம் வருகையை முழுமையாக உணராது சோம்பேறித்தனமாய் வாழ்ந்த மக்களை உழைத்து வாழவும், தங்களது கடமைகளை செய்யவும் மற்றும் இறுதி நாளை குறித்து அஞ்சாமல் உண்மையோடு வாழவும் அழைப்பு தருகிறது. இன்றைக்கு நாமும் ஆண்டவர் ஒரு நாள் நம் மத்தியில் நீதி தீர்ப்பிடுவார் என்பதை உணராமல் சோம்பேறித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையை தவிர்த்து இயேசுவை ஏற்றுக் கொள்கின்ற மனம் பெற இறையருளை வேண்டுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF