விவிலிய விதைகள்
பொதுக்காலம் 4-ஆம் வாரம் ( ஆண்டு- B)
31-01-2021
ஞாயிற்றுக்கிழமை
நம்
அன்றாட
வாழ்வில்
அதிகாரம்
1. அதிகாரத்தை உணர்ந்திருத்தல்
இன்றைய முதல் வாசகத்தில் மோயீசன் இறைவன் தனக்கு கொடுத்த அதிகாரத்தை உணர்ந்திருத்தலை நாம் பார்க்கின்றோம். தன்னை "இறைவாக்கினர்" என்று கூறுவதும் "அவருக்கு செவி கொடு" என்று எடுத்துரைப்பதும் அவர் தனக்கு இறைவன் கொடுத்த அதிகாரத்தை உணர்ந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு அதிகாரத்தோடு அறிவிப்பதும், குணமாக்குவதும் அவர் தன் அதிகாரத்தை முழுவதுமாக உணர்ந்திருந்ததை நமக்கு எடுத்துரைக்கின்றது. கிறிஸ்து தன்னுடைய அதிகார சக்தியை உணர்ந்திருந்தார். அதன் மத்தியில் விழிப்பாய் இருந்ததால், அதனை செயல்படுத்துவதில் பெரும் மகிழ்வும், நிறைவும் கொண்டிருந்ததால், அதனை இறை ஆசீரோடு செயல்படுத்த, இரவெல்லாம் செபித்தார். இன்று நாமும் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இறைவன் கொடுத்த பொறுப்புகளின் வழியாக நாம் பெற்றிருக்கின்ற அதிகாரத்தை முதலில் உணர்ந்து வாழ்வோம்.
2. அதிகாரத்தை பயன்படுத்துதல்
இன்றைய முதல் வாசகத்தில் மோயீசன் தன்னுடைய அதிகாரத்தை பிறருக்காக பயன்படுத்துவதை பார்க்கின்றோம். இறைவன் தனக்கு கூறிய யாவற்றையும் அதிகாரத்தோடு மக்கள் நலம் பெற எடுத்துரைத்தார். இயேசு கிறிஸ்து தன்னுடைய அதிகாரத்தை குணமாக்குவதிலும், நற்செய்தியை அறிவிப்பதிலும் பயன்படுத்துவதை, அதிலும் மக்கள் வாழ்வு பெற பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இறைமகன் இயேசு அனைத்து அதிகாரங்களையும் தன் தேவைக்காக பயன்படுத்தாமல், மக்கள் வாழ்வு பெற பயன்படுத்தியதால், நோய் நீங்கியது, அனைத்தும் அவருக்கு அடி பணிந்தது, தீமைகளை அழித்தார். மோசே, ஆபிரகாம், ஈசாக்கு, தாவீது மற்றும் சாலமோன் என பழைய ஏற்பாடு தொடங்கி புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவால் தலைமைத்துவப் பணியில் அமர்த்தப்பட்ட சீடர்கள் வரை அனைவரும் தங்களுடைய அதிகாரத்தை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் அழைப்பின் நோக்கம் அறிந்து, பிறர் நலம் பெற செயல்படுத்த ஆர்வமாக இருந்தார்கள். விழிப்பாய் இருந்தார்கள்.நம் வாழ்வில் கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ அழைப்பு பெற்ற நாம், நம்முடைய அதிகாரத்தை இறைவனைப் போல் பயன்படுத்தி வாழ்ந்தால் நாம் நல்ல ஆயனாக இருப்போம்.
3. அதிகாரத்தால் தன்னை வெளிப்படுத்துதல்
மோயீசனின் அதிகாரம் அவரை ஒரு இறைவாக்கினராக வெளிப்படுத்தியது அதனால் தான் அவர் தன்னையே ஒரு "இறைவாக்கினர்" ஆக இன்றைய முதல் வாசகத்தில் சுட்டிக்காட்டுகின்றார். இறைமகன் இயேசு கிறிஸ்துவின் அதிகாரம் அவரை ஒரு இறை மைந்தனாக, இறைவனுடைய மகனாக வெளிப்படுத்திக் காட்டியது. ஆக ஒரு அதிகாரம் ஒருவரை இறைவாக்கினர் ஆகவும், நற்செய்தியில் இயேசுவை இறைமகனாகவும் வெளிப்படுத்திக் காட்டுகின்றது. இன்று என்னுடைய அதிகாரம் என்னை ஒரு அரக்கனாக, ஆணவம் பிடித்தவனாக மற்றவர் மனதிலே வெளிப்படுத்திக் காட்டுகின்றதா அல்லது நேர்மையான உண்மையுள்ள தலைவனாக சுட்டிக் காட்டுகின்றதா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
நம் அன்றாட வாழ்வில் அதிகாரம்
அ. பதவியால் வரும் அதிகாரம்
ஆ. பணத்தால் வரும் அதிகாரம்
இ. அறிவால் வரும் அதிகாரம்
ஈ. அனுபவத்தால் வரும் அதிகாரம்
ஊ. கட்டாயத்தால் வரும் அதிகாரம்
சிலரை கட்டாயப்படுத்தி சில பொறுப்புகளில் அமர செய்வார்கள். அந்த பொறுப்புகளின் நிமித்தமாக அவர் சில அதிகாரங்களை பெறுகின்றார். இது கட்டாயத்தால் வருகின்ற அதிகாரம் ஆனால் இத்தகைய அதிகாரங்கள் நிச்சயமாக முழுமை பெறுவதில்லை.
அன்பார்ந்தவர்களே, நாம் எத்தகைய விதமான அதிகாரங்களை நம்முடைய வாழ்க்கையிலே பெற்றாலும், அந்த அதிகாரங்களை நான் என்னுடைய வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்துகிறேன் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். என்னுடைய அதிகாரம் மற்றவரை வாழ வைக்க வேண்டும், என்னுடைய அதிகாரத்தை நான் என்னுடைய வாழ்க்கையிலே உணர வேண்டும். எனக்கு இறைவன் தந்த அதிகாரத்தை ஒரு தந்தையாக, தாயாக, பிள்ளையாக, தலைவனாக, ஆயனாக, சகோதரனாக மற்றும் சகோதரியாக உணர்ந்து, வாழ்ந்து, அதை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி, குறிப்பாக பிறருடைய நலனுக்காக அவர்கள் வளர முயல வேண்டும். இறுதியாக அதிகாரத்தின் வழியாக நாம் நம்மை வெளிப்படுத்த வேண்டும். நான் ஒரு நல்ல தந்தையாக, ஆசிரியராக, தலைவனாக, ஆயனாக, சகோதரனாக இருக்கின்றேன் என்பதை நம்முடைய அதிகாரத்தில் பிறருக்கு வெளிப்படுத்துவோம். இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி நாம் நம்முடைய வாழ்க்கையில் நாம் பெறுகின்ற அதிகாரங்களை உணர்ந்து, பிறர் வாழ்வுக்காக நாம் அதனைப் பயன்படுத்தி, நம்முடைய நிலையை பிறருக்கு வெளிப்படுத்துவோம்.
Fr. குழந்தை யேசு ராஜன் CMF