விவிலிய விதைகள்
இயேசுவின் திருமுழுக்கு
திருவிழா
(ஆண்டு- B)
10-01-2021
ஞாயிற்றுக்கிழமை
அன்றாட வாழ்வில் திருமுழுக்கு
"இன்று உலகம் முழுவதும் கோவித்-19 அல்லது கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறது. எனவே, ஃபேஸ் கவர் அல்லது மாஸ்க்கை அணியும்போது மூக்கு மற்றும் வாய் நன்கு மூடி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெளியில் சென்று திரும்பும் போது கைகள் மற்றும் கால்களை சுத்தமாக கழுவி கொள்ளுங்கள்."
என்னும் கொரோனா காலர் டோன் டயலாக்கை கடந்த ஒரு ஆண்டாக கேட்டுக்கேட்டு நம் உள்ளங்கள் எல்லாம் அலுத்து போய் விட்டது. சிலர் வாழ்க்கையை வெறுத்தும் விட்டார்கள். இது கடந்த ஒரு ஆண்டு முழுவதும் நம்முடைய உலகின் நிலையாக இருக்கின்றது. இதற்கு இன்று உலகமே தடுப்பூசியை பரிசோதித்து கொண்டிருக்கின்றது, அதற்காக காத்து கொண்டிருக்கின்றது. அதற்கு எண்ணற்ற விமர்சனங்களும் எழுந்து கொண்டிருக்கின்றது. இன்று உலகின் நிலையை மாற்ற ஒரு தடுப்பூசி தேவைப்படுவதை போல, நமது வாழ்வின் நிலையை மாற்ற ஒரு கழுவுதல் அல்லது திருமுழுக்கு தேவைப்படுகின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய திருமுழுக்கு பெருவிழாவை கொண்டாடுகின்ற இந்நாளிலே இயேசுவின் திருமுழுக்கின் உண்மையான வெளிப்படுத்துதலை நாம் நமது வாழ்க்கையில் உணர்ந்து கொள்ளவும், நமது திருமுழுக்கின் மதிப்பீடுகளை அறிந்து கொள்ளவும், நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் திருமுழுக்கு தரும் வெளிப்பாட்டை வாழ்ந்து காட்டவும் நாம் அழைக்கப்படுகின்றோம்.
1. இயேசுவின் திருமுழுக்கு
இயேசுவின் திருமுழுக்கு நமக்கு மூன்று விதமான வெளிப்படுத்துதலை உணர்த்துகின்றது.
A. பணி வாழ்வின் தொடக்கம்
"என் கடன் பணி செய்து கிடப்பதே"
என்னும் தமிழ்ப் புலவர் திருநாவுக்கரசரின் கூற்றுக்கு ஏற்ப, "தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டாற்றுவதற்கே வந்தேன்" என்னும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை வாழ்வாக்க, ஊற்றாக அமைந்தது தான் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இந்த திருமுழுக்கு. முப்பது ஆண்டுகள் தன்னுடைய பிரசன்னத்தால் நற்செய்தியை அறிவித்தவர், அடுத்த மூன்று ஆண்டுகள் ஆற்றும் மகத்தான வரலாற்று நினைவுக்கு தொடங்கியிருக்கும் பணிக்கு அச்சாணி தான் இந்த திருமுழுக்கு. அவரின் இந்த மகத்தான பணியை போல எவரும் இம்மண்ணுலகில் செய்ததும் இல்லை, ஏன்? இவ்வாறு செய்ய போவதும் இல்லை என்று கூறலாம். அதற்காக தம்மை கடுமையாக தயாரித்து அளப்பெரிய இறைபணியாம் மீட்புப்பணியை இறைமகன் இயேசு கிறிஸ்து செய்தார் என்பதை தான் அவரது இந்த திருமுழுக்கு நினைவுப்படுகின்றது. "ஜெபமின்றி ஜெயம் இல்லை, தூய ஆவியின்றி பணியில் நிறைவில்லை" என்பதை முற்றிலும் உணர்ந்த இறைமகன் இயேசு கிறிஸ்து, ஆவியின் துணைப்பெற்று பணி வாழ்வை தொடங்க முற்படுகின்ற ஒரு நினைவுச் சின்னம் தான் அவரது இந்த திருமுழுக்கு.
B. இறை மைந்தன்
“என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” (மாற்கு 1:11) என இடிமுழக்கம் போன்ற சொல்லானது இயேசுவின் திருமுழுக்கின் போது ஒலிக்கப்படுகின்றது. அவரது மீட்புப் பணியை, பணி வாழ்வை செய்யத் தூண்டிய திருமுழுக்கு, இயேசு இறை மைந்தன் என்பதையும் எடுத்துரைக்கின்றது. தான் வெறும் மனித சாயலை மட்டும் கொண்டவன் அல்ல, மாறாக இறை சாயலைக் கொண்ட இறை மைந்தன் என்பதை இயேசுவின் திருமுழுக்கு நமக்கு எடுத்துரைக்கின்றது.
C. தாழ்ச்சி
பாவம் இல்லா வெண்புறாவான கிறிஸ்து என்னும் மலர் மாலை சூடியவராய், ஆயிரம் மனிதர்கள் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெறுகையிலே ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிய மனிதராய், முன்னுரிமையை தேடாமல் வரிசையில் சென்று திருமுழுக்குப் பெற்றுக் கொள்கின்றார். "தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" என்னும் வார்த்தைகள் இங்கு இயேசுவுக்கே உரியதாகும். திருவருட்சாதனமே இங்கு திருமுழுக்கு என்ற திருவருட் சாதனத்தை பெறுவதைப் பார்க்கின்றோம். தூய ஆவி நம்மில் செயல்படத் தொடங்கி விட்டால் நம்முடைய சொல், செயல், வாழ்வு, நடை, உடை மற்றும் பாவனை எல்லாம் தாழ்ச்சியையும், எளிமையையும் எடுத்து காட்டுகிறது. இறைவனின் மகனே இறங்கி வந்து, சாதாரண மனிதனைப் போல திருமுழுக்கு பெறுவது அவரது தாழ்ச்சியை நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
2. நமது திருமுழுக்கு
இறைமகன் இயேசு கிறிஸ்துவினுடைய இந்த திருமுழுக்கு மனிதர்களாகிய நம்முடைய திருமுழுக்கை நினைவுபடுத்துகின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய திருமுழுக்கு பெருவிழாவை நாம் கொண்டாடுகின்ற இந்த வேளையிலே, நாம் ஒவ்வொருவரும் நமது திருமுழுக்கை நினைவு கூற அழைப்பு பெறுகின்றோம். நம்முடைய திருமுழுக்கை பற்றி நாம் நினைவு கூறுகின்ற போது நம்முடைய திருமுழுக்கு உணர்த்துகின்ற உண்மைகளை, நாம் நம்மிலே மீண்டுமாய் புதுப்பித்துக் கொள்ள அழைப்பு பெறுகின்றோம். நமது திருமுழுக்கு நம்மிடையே ஐந்து விதமான உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
A. பாவம் போக்குதல்
ஜென்ம பாவ நிலையிலிருந்து மீண்டு மாசற்ற நிலையில் வாழ உதவுவது இந்த திருமுழுக்கு என்ற திருவருட்சாதனம். "பாவ நிலையிலே என் தாய் என்னை கருத்தரித்தாள்" என்ற திருப்பாடல் ஆசிரியரின் கூற்றுக்கு ஏற்ப, பாவ நிலையில் பிறந்த நாம் திருமுழுக்கு வழியில் புதுப் பிறப்பு எடுக்கிறோம்.
B. கிறிஸ்துவோடு இணைதல்
தாயையும் செய்ய இணைப்பது தொப்புள்கொடி உறவு போல, திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு தொப்புள் கொடி உறவு கொண்டவர்களாக, அவரோடு நாம் இணைக்கப்படுகின்றோம். கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவர்களாக கிறிஸ்தவ வாழ்வுக்கு அழைக்கப்படுகின்றோம். இன்று நாம் கிறிஸ்தவராக மாறுகிறோம், தூய ஆவியின் வழியில் கிறிஸ்துவோடு இணைக்கப்படுகின்றது, இணைந்து அவர்களது அன்பின் வழி வாழ இறைவன் கொடுத்த அருட்கொடை தான் இந்த திருவருட்சாதனம். திருமுழுக்கில் புதிய கிறிஸ்தவராக வாழ, இறைவனில் வளர மற்றும் இறை மதிப்பீட்டில் வாழ நம்மிடையே அழைப்பு விடுக்கப்படுகிறது .
C. கடவுளின் பிள்ளைகள்
அன்று, கிறிஸ்து திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெறும்போது, இறைவன் வானத்திலிருந்து இடிமுழக்கம் போன்ற பெரும் ஒலி எழுப்பி 'இவரே என் அன்பார்ந்த மகன்' என்ற சான்று பகர்ந்தார். அன்று, கிறிஸ்து இயேசுவை பெற்ற அந்த அப்பா - மகன் உறவை, இன்று நாமும் நமது திருமுழுக்கின் வழியாக பெறுகின்றோம். கடவுளின் பிள்ளை என்னும் முத்திரையை நாம் பெறும் பாக்கியம் பெறுகின்றோம். திருமுழுக்கின் வழியாக கடவுளே நம்மைத் தேடி வந்து நம்மை பிள்ளைகளாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுகின்றார்.
D. திருச்சபையின் உறுப்பினராகுதல்
அகில உலக திருச்சபையின் உறுப்பினராக நாமெல்லோரும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் திருநாள் எதுவென்றால் அது நம்முடைய திருமுழுக்கு என்னும் திருநாளாகும். குடும்பத்தில் உறுப்பினராக்க தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட நாம், பெரிய திருஅவையின் உறுப்பினராக வாழ தேர்ந்தெடுத்துக் கொள்ளப்படுகின்றோம். திருஅவையின் உறுப்பினர் என்ற முறையில் பல கடமைகளை செய்ய கடமைப்பட்டிருக்கின்றோம். திருஅவையின் திருத்தந்தைக்காக ஜெபித்தல், கட்டளைகளைப் பின்பற்றுதல், நற்செய்தியை அறிவித்தல் மற்றும் திருப்பலியில் பங்கெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை செய்ய அழைப்பு விடுக்கின்றது இந்த திருமுழுக்கு என்னும் திருவருட்சாதனம். எனவே திருஅவையோடு இணைந்து, திருஅவையின் உறுப்பினராக அதன் வழிகாட்டுதலில் வாழ்வோம்.
E. திருவருட்சாதனங்களின் நுழைவுவாயில்
இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஏழு புனிதத் திருவருட்சாதனங்களில் முதன்மையானதும் தலைச்சிறந்ததுமாய் கருதப்படுவது இந்த திருமுழுக்கு என்னும் முதன்மையான திருவருட்சாதனம். இதுதான் மற்ற எல்லாத் திருவருட்சாதனங்களுக்கு நுழைவு வாயிலாக அமைகின்றது. திருமுழுக்கின் வழியில் நாம் கிறிஸ்துவில் இணைந்து விடுகிறோம். இணைப்பின் வழியாக திருவருட்சாதனங்கள் பெற நாம் உரிமையையும் பெற்றுக் கொள்ளுகின்றோம். உரிமை வாழ்வை பெற திருவருட்சாதனம் மிகப்பெரிய பலமாக திகழ்கின்றது.
கிறிஸ்துவினுடைய திருமுழுக்கு பெருவிழாவை கொண்டாடுகின்ற இந்த நாளிலே, நாம் நம்முடைய திருமுழுக்கை நினைவுகூர்ந்து திருமுழுக்கு நமக்கு எடுத்துரைக்கின்ற இந்த மேலான வெளிப்பாடுகளை நம் வாழ்க்கையில் உணர்ந்து வாழ்வோம்.
3. நம் அன்றாட வாழ்வில் திருமுழுக்கு
இயேசுவினுடைய திருமுழுக்கு பெருவிழா நம்முடைய திருமுழுக்கை மட்டும் நினைவுபடுத்தாது, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் கொண்டிருக்கின்ற பல சூழ்நிலைகளில் திருமுழுக்குப் பெற நமக்கு அழைப்பு பெறுகின்றோம். திருமுழுக்கு என்பது ஒரு கழுவுதல், இன்றைய கொரோனா சூழ்நிலைக்கு தடுப்பூசி எப்படி ஒரு கழுவுதலாக தேவைப்படுகிறதோ, அதேப் போல நம் வாழ்க்கையின் பல நிலைகளில் கழுவுதல்/திருமுழுக்கு நமக்கு தேவைப்படுகின்றது. மீள முடியாமல் துவண்டு கிடக்கும் பாவத்திலிருந்து விடுதலை பெற திருமுழுக்கு நமக்குத் தேவை. இன்று என்னுடைய நோய்களுக்கெல்லாம் ஒரு கழுவுதல்/ திருமுழுக்கு தேவை. எனது மன பிரச்சனைகளுக்கு ஒரு கழுவுதல்/ திருமுழுக்கு தேவை. என் வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் நான் செய்கின்ற ஒவ்வொரு தவறுக்கும் ஒரு கழுவுதல்/திருமுழுக்கு தேவை. நான் மனம் நொந்து என்னுடைய வாழ்க்கையில் பிறரை இகழ்கின்ற பொழுது எனக்கு கழுவுதல்/திருமுழுக்குத் தேவை. நான் குற்ற உணர்வோடு இருக்கின்ற பொழுது எனக்கு கழுவுதல் தேவை. நான் பிறரை இகழ்ந்து பேசுகின்ற பொழுது எனக்கு கழுவுதல் தேவை. பிறரை கஷ்டப்படுத்துகின்ற பொழுது, வேதனைபடுத்துகின்ற பொழுது, கோபப்படுகின்ற பொழுது, என்னில் தேவையில்லாத குணநலன்கள் வளருகின்ற பொழுது, என்னால் பிறர் கஷ்டப்படுகிற பொழுது என்னிடையே கழுவுதல் தேவை. ஆக திருமுழுக்கு என்பது வெறும் ஒரு சடங்கு அல்ல, குழந்தையாக ஒரு குறிப்பிட்ட ஒரு நாளில் நடக்கின்ற நிகழ்வு அல்ல, மாறாக நான் தவறு செய்கின்ற போது, வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் நான் கிறிஸ்துவை விட்டு விலகி வருகின்ற பொழுதெல்லாம், நான் மீண்டும் கிறிஸ்துவோடு இணைப்பதற்கு, எனக்கு திருமுழுக்கு/கழுவுதல் தேவை. நான் கிறிஸ்துவில் வாழ, கிறிஸ்தவனாக வாழ, வாழ்வின் எல்லா நிலைகளிலும் இந்த திருமுழுக்கு அடித்தளமாக இருக்கின்றது. இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
|
|
||||
|
|
|
|||
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்.
|