பொதுக்காலம் 19ஆம் வாரம்
(ஆண்டு- A)
09-08-2020
ஞாயிற்றுக்கிழமை
இணைந்திருக்கும் உறவுகளெல்லாம்
இனிய உறவா?
ஒரு முறை ஹிட்லரிடம் ஒருவர் உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேள்வி கேட்டாராம். அதற்கு ஹிட்லர் என்னுடைய வெற்றியின் ரகசியம் என்னுடைய பணியாட்கள் தான் என்று கூறினாராம். அதற்கு அந்த நபரோ தெளிவாக சொல்லுங்கள், உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன? என்று மீண்டுமாக கேட்டாராம். அதற்கு ஹிட்லர், என்னுடைய வெற்றியின் ரகசியம் என்னுடைய பணியாட்கள் தான். நான் எதைச் சொன்னாலும் அதை அவர்கள் செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள், என்று கூறினாராம் பாருங்கள் என்று ஒரு பணியாளரை அழைத்து, இதோ இந்த கிணற்றில் விழுந்து இறந்து போ என்று கூறினாராம். உடனே அந்த பணியாளர் கிணற்றுக்குள் விழுந்து இறந்து போனாராம். மீண்டுமாக மற்றொரு பணியாளரை அழைத்து நீயும் இந்த கிணற்றுக்குள் விழுந்து இறந்து போ என்று கூறினாராம், அவரும் கிணற்றுக்குள் விழுந்து இறந்து போனாராம் இந்த மனிதருக்கு ஒரே ஆச்சரியம். மீண்டுமாக இப்படி நான் எதைச் சொன்னாலும் செய்கின்ற பணியாட்கள் எனக்கு கிடைத்தது தான் என்னுடைய வெற்றிக்கு காரணம் என்று கூறி, இறுதியாக இன்னொரு நபரை உனக்காக அழைக்கிறேன் பாருங்கள் என்று மற்றொரு பணியாளனை அழைத்தாராம். அவரும் கிணற்றில் விழுந்து இறந்து விடு என்னும் அழைப்பை பெற்றவுடன், கிணற்று அருகே வந்தாராம். இதனைக் கண்ட அந்த நபர் பொறுக்க முடியாமல் விரைவாகச் சென்று அந்தப் பணியாளனின் கையைப் பிடித்து ஏன் உங்களுடைய தலைவர் கூறியவுடன், நீங்கள் எல்லோரும் உங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டவுடன் அதற்கு அந்த நபரைப் பார்த்து, “அட போங்க சார் இவன் கிட்ட வேலை செய்வதை விட நாங்க செத்தே போயிடலாம்” என்று கூறினாராம்.
ஆம் அன்பார்ந்தவர்களே,இது தான் இன்றைய நிலை, நம்மோடு இருக்கின்றவர்கள், நம்மை சுற்றி இருக்கின்றவர்கள், நம்முடைய உறவாக இருக்கின்றவர்கள் பலவேளைகளில் அச்சத்தின் பெயராலும், பயத்தின் பெயராலும், தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காக, வாழ்க்கையை அன்றாடம் நடத்துவதற்காகவே நம்முடைய உறவுகளில் இணைந்து இருக்கின்றார்கள். அவர்கள் ஒருபோதும் ஒரு அர்த்தமுள்ள, உண்மையான, பாசமுள்ள ஒரு உறவில் நம்மோடு இணைந்திருப்பது இல்லை. இன்று நாம் எத்தகைய உறவுகளோடு இருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு அழைப்பு தருகிறது.
இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எலியா இறைவனோடு கொண்ட உறவை வெளிப்படுத்துவதாகவும், இன்றைய இரண்டாம் வாசகம் பவுல் அடிகளார் இறைமகன் இயேசு கிறிஸ்துவோடு கொண்ட உறவை வெளிப்படுத்துவதாகவும், இன்றைய நற்செய்தி வாசகம் பேதுரு இயேசுவோடு கொண்ட உறவை வெளிப்படுத்துவதாகவும் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
உளவியலில் உறவுகளை பொதுவாக ஐந்து வகைகளாக பிரிப்பார்கள்.
1. போட்டியும் கட்டுப்பாடும் நிறைந்த உறவு
2. செயல்பாடும் செயல்பாடில்லாத உறவு
3 .ஆளுமையுணர்வும் ஏற்றுக் கொள்ளுதலும் நிறைந்த உறவு
4. துண்டிக்கதக்க உறவு
5. சமநிலையான உறவு.
1. போட்டியும் கட்டுப்பாடும் நிறைந்த உறவு
போட்டியும் கட்டுப்பாடும் நிறைந்த உறவில் எப்பொழுதும் இருதரப்பினரும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இருவரும் ஒருபோதும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இவ்வாறாக ஒருவர் மற்றவரை சார்ந்து வாழாமல், விட்டுக் கொடுக்காமல் தங்களுடைய கருத்து, தங்களுடைய போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த உறவு ஒரு நாள் பிரிந்து போகும். இன்று குடும்பத்தில் பல நேரங்களில் கணவனும் மனைவியும் தான் சொல்வது தான் சரி என்ற ஒரு நிலையில் தங்களுடைய கருத்தை பிடித்து அதிலே நிலைத்து தங்களுடைய குடும்ப வாழ்வை இழுந்துக்கொள்வார்கள்.
விவிலியத்தில் இறைமகன் இயேசு கிறிஸ்து வாழ்ந்த போது இருந்த பரிசேயர்களும் சதுசேயர்களும் இத்தகைய ஒரு உறவில் இருந்தார்கள். ஒரு போதும் எவருக்கும் தங்களுடைய கருத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். தங்களுடைய சட்டங்களில் நிலைத்து இத்தகைய ஒரு உறவை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அதனால்தான் இவர்கள் ஒருபோதும் இறைமகன் இயேசு கிறிஸ்து கூறிய அந்த கருத்தின்படி தங்களுடைய வாழ்க்கையில் இவர்களால் வாழ இயலவில்லை. இன்று நாமும் நம்முடைய குடும்பங்களில் இத்தகைய ஒரு உறவுமுறையில் விட்டுக் கொடுக்காத ஒரு உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா?
2. செயல்பாடும் செயல்பாடில்லாத உறவு
செயல்பாடும் செயல்பாடில்லாத உறவுமுறையில் ஒருவர் அல்லது ஒரு தரப்பினர் மட்டுமே மீண்டும் மீண்டும் தங்களுடைய உறவை வலுப்படுத்துவதற்கான பொறுப்புகளை, செயல்பாடுகளை செய்துகொண்டே இருப்பார்கள். மற்றவரோ அதனைப் பற்றி கண்டுகொள்ளவே மாட்டார்கள். இத்தகைய ஒரு உறவு நீண்டநாள் நீடிக்காது. இறைமகன் இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் அவரோடு இருந்த யூதாஸ் இஸ்காரியோத்து இத்தகைய ஒரு உறவு முறையை சார்ந்தவனாக இருந்தான். அதனால் தான் இறைமகன் இயேசு கிறிஸ்து கூறிய எதுவும் அவனுடைய வாழ்க்கைக்குள் செல்லவே இல்லை. இயேசு செயல்பாடோடு இருந்த பொழுது, அவன் செயல்பாடு இல்லாதவனாக இருந்தான். அதனால் தான் அவனுடைய இந்த உறவு முறிந்து போனது.
இன்று பல குடும்பங்கள் இத்தகைய ஒரு உறவில் மூழ்கி கிடக்கிறது குடும்பத்தில் ஒருவர் மட்டுமே எல்லா பொறுப்புகளையும் எடுத்து குடும்பத்தை வழி நடத்துகின்ற ஒரு சூழ்நிலை. இத்தகைய ஒரு உறவு பல நாள் நீடிக்காது குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அல்லது நண்பர்களில் ஒருவர் மட்டுமே உறவை வலுப்படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்ற போது மற்றவர் அதைப்பற்றி எதுவும் செய்யாத ஒரு நிலையில் அத்தகைய ஒரு உறவு பல நாட்கள் நீடிக்காமல் அழிந்து போகும் உறவாய் அமையும். நாமும், நம்முடைய குடும்பமும் இத்தகைய உறவில் நிலைத்திருக்கின்றோமா?
3 .ஆளுமையுணர்வும் ஏற்றுக் கொள்ளுதலும் நிறைந்த உறவு
ஆளுமை உணர்வும் ஏற்றுக் கொள்ளுதலும் நிறைந்த உறவில் ஒரு பகுதியினர் எப்பொழுதும் கோபப்பட்டு கொண்டே இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். மற்ற தரப்பினரோ, மற்றவரோ அதனை ஏற்றுக் கொண்டு, விட்டுக் கொடுத்து விடுவார்கள். இத்தகைய ஒரு உறவு முறையும் பல நாட்களுக்கு நீடிக்காது. ஒரு நாள் உடைந்து போகும். விவிலியத்தின் உவமையில் கொடிய குத்தகைக்காரர் இத்தகைய ஒரு உறவை சார்ந்தவராக இருக்கின்றார். உரிமையாளர் ஒவ்வொரு முறையும் ஏற்றுக் கொள்கின்ற போது, விட்டுச் கொடுத்த போது, பங்கை கேட்க வந்தவர்களை அடித்து கொன்ற குத்தகைகாரர், இத்தகைய ஒரு உறவை சார்ந்தவர். இது நீண்ட நாள் நீடிக்கவில்லை. உரிமையாளர் ஒருநாள் உறவை துண்டித்து விடுகிறார். இன்று நம்முடைய குடும்பங்களிலும் இத்தகைய ஒரு உறவு முறையோடு பலர் இருக்கிறார்கள். குடிகார கணவனை கொண்ட மனைவியரும், அகங்காரம், ஆணவம் மிகுந்த மனைவியை கொண்ட கணவரும் இத்தகைய ஒரு உறவு முறையில் இருக்கின்றார்கள். இன்று நாமும், நம்முடைய உறவும், நம்முடைய குடும்பங்களும் இத்தகைய உறவில் இருக்கின்றதா?
4. துண்டிக்கதக்க உறவு
துண்டிக்க தக்க உறவுகள் ஒருவருடைய செயல், திறமை, வெளிப்புறத் தோற்றம், அதனைக் கண்டு, கவர்ந்து இழுக்கப்பட்டு, உருவான உறவுகள் இத்தகைய உறவுகளில் அவர் செய்த தவறுகளை நாம் அவரிடம் கூற மாட்டோம். இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பிய இளைஞன் இயேசு கிறிஸ்து பிரபலமானவர் என்ற ஒரு எண்ணத்தில், அவரில் கவர்ந்து இழுக்கப்பட்டு வந்தான். அதனால்தான் அவனுடைய உறவு இறைமகன் இயேசு கிறிஸ்துவோடு தொடர்ந்து நீடிக்க வில்லை இது ஏறக்குறைய துண்டிக்க தக்க உறவுகள். இன்று பல உறவுகள், நம்முடைய குடும்பத்தில் பார்க்கின்ற பல காதல் திருமணங்கள் இத்தகைய ஒரு உறவை சார்ந்ததாக இருக்கின்றது. இன்று நம்முடைய நட்பும் குடும்பமும் இத்தகைய உறவில் இருக்கிறதா?
5. சமநிலையான உறவு
சமநிலையான ஒரு உறவு என்பது இருவருக்கிடையே அன்பு, அமைதி, மகிழ்ச்சி, விட்டுக்கொடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல், மன்னித்தல் எனும் நற்பண்புகளுடன் வரும். இவர்களுக்கிடையே எண்ணற்ற முறை சண்டை சச்சரவுகள் வந்தாலும், இவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள். ஒருவரையொருவர் மன்னித்து கொள்வார்கள், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள்.
இன்றைய இறைவார்த்தை பகுதியில் நாம் காணும் உறவுகள் இத்தகைய ஒரு உறவுகளாக இருக்கின்றது. இறைவாக்கினர் எலியா இறைவன் கூறுகின்ற ஒவ்வொன்றையும் கேட்டு அதனை பின்பற்றுகின்ற ஒரு உன்னதமான உறவை நமக்கு வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவே எனக்கு எல்லாம் என்று கிறிஸ்துவை தன்னுடைய வாழ்வில் ஏற்றுக் கொண்ட ஒரு உன்னதமான பவுலடிகளாரின் உறவை இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு வெளிப்படுத்துகிறது. இன்றைய நற்செய்திலும் நற்செய்தி புத்தகங்களின் பல பகுதிகளிலும் இயேசுவுக்கும் பேதுருவும் இடையே உள்ள உறவு சமநிலையாக உருவாகியிருக்கின்றது.
நற்செய்தி புத்தகங்கள் ஏறக்குறைய ஒன்பது இடங்களில் பேதுருவும் இயேசுவுக்கும் இடையேயான உறவை சுட்டிக்காட்டுகின்றது ஒவ்வொரு முறையும் இயேசுவுக்கும் பேதுருக்கும் இடையே நடக்கின்ற அந்த உரையாடல்கள் இவர்களின் உறவு சமநிலையான உறவு என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
1. யோவான். 6: 67- 68 -ல் இயேசு பன்னிரு சீடரிடம் “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” என்று கேட்கின்ற பொழுது பேதுரு “ஆண்டவரே நாங்கள் யாரிடம் செல்வோம் வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன” என்று கூறிய அந்த வார்த்தைகளும்...
2. யோவான் 21ஆவது அதிகாரத்தில் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பிறகு மீன்பிடிக்கச் சென்ற பொழுது “உங்களுடைய வலையை வலப்பக்கத்தில் வீசுங்கள்” என்று இயேசு கூறியவுடன் இவர் தான் இயேசு என்று அறிந்து கடலில் குதித்து மிக வேகமாக இயேசுவை நோக்கி வருகின்ற அந்த சூழ்நிலையும்....
3. யோவான் 21 அதிகாரத்தில் 15 முதல் உள்ள இறை வசனங்களில் இயேசுவைப் பார்த்து மூன்று முறை “என்னை நீ அன்பு செய்கின்றாயா?” என்று கேட்பதும், அதற்கு “ஆண்டவரே எனக்கு உன்னிடம் அன்பு உண்டு என்பது உமக்குத் தெரியுமே” என்று பேதுரு பதிலளிப்பதும், “என் ஆடுகளை பேணி வளர்” என இயேசு கூறும் அந்த வார்த்தைகளும்.....
4.யோவான் நற்செய்தி பதினெட்டாவது அதிகாரத்தில் இயேசுவை கைது செய்யப்படுகின்ற போது பேதுரு தன்னுடைய வாளை எடுத்து தலைமை குருவினுடைய பணியாளரின் வலது காதை வெட்டும் நிகழ்வும்...
5. மத்தேயு. 16: 13 -17-ல் இயேசு சீடர்களைப் பார்த்து “மக்கள் மானிடமகன் யார் என்று சொல்லுகின்றார்கள்?” என்று கேட்கின்ற பொழுது “நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்” என்று பேதுரு கூறுகின்ற பேதுரு வார்த்தைகளும்.....
6. மத்தேயு. 16: 22-ல் இயேசு தன்னுடைய சாவை முதன் முறையாக அறிவிக்கின்ற பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்து கடிந்து கொண்டு, “ஆண்டவரே இது வேண்டாம், இது இப்படி நடக்கவே கூடாது” என்று கூறுகின்ற அந்த வார்த்தைகளும்.....
7. மத்தேயு. 17: 4-ல் இயேசு தோற்றம் மாறிய போது, பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே நாம் இங்கேயே இருப்பது நல்லது உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா இது உமக்கு விருப்பமா ?” என்று கேட்கின்ற அந்த வார்த்தைகளும்....
8. லூக்கா. 5:8-ல் இயேசுவினால் பேதுரு மிகுதியான மீன்களை பிடித்த பொழுது, அவருடைய காலில் விழுந்து, “ஆண்டவரே நான் பாவி நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்று கூறிய அந்த வார்த்தைகளும்....
9. மத்தேயு 14: 28-ல் இயேசு கடல் மீது நடக்கின்ற பொழுது, பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே நீர் தான் என்றால் நானும் கடல் மீது நடக்க ஆணையிடும்” என்று கேட்கின்ற அந்த வார்த்தைகளும் என
மேற்கூறிய ஒன்பது பகுதிகளிலும் இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே உருவாகின்ற சூழ்நிலையும், வார்த்தைகளும் அவர்களுக்கிடையே இருக்கின்ற சமநிலையான ஒரு உறவை நமக்கு சுட்டிக் காட்டுகின்றது. இத்தகைய ஒரு சமநிலையான உறவுதான் பேதுருவை திருச்சபையின் பாறையாகவும் தூணாகவும் மாற்றியது. நம்முடைய வாழ்க்கையிலும் நாம் இத்தகைய ஒரு சமநிலையான உறவோடு, இறைவனுடனும், நம்முடைய நண்பர்களுடனும், குடும்ப அங்கத்தினர்களுடனும் வாழ்கின்ற பொழுது நம்முடைய உறவு ஒருபோதும் துண்டிக்காமல் நிலைத்து நிற்கக்கூடிய உறவாக மாறும். அத்தகைய உறவாக நமது உறவுகள் மாற இறையருளை வேண்டுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
|
|||||
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்.