Friday, May 21, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தூய ஆவியார் பெருவிழா- ( ஆண்டு- B)- 23-05-2021- ஞாயிற்றுக்கிழமை

             🌱விவிலிய விதைகள்🌱   

           தூய ஆவியார் பெருவிழா
     தமிழ் திருவழிபாட்டு மறையுரை

     முக்காலத்துக்கும் துணையாளர்



           தாயாம் திரு அவையானது இன்று தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இது கிறிஸ்தவத்தின் பிறப்பு விழா. இயேசுவின் விண்ணேற்புக்கு பிறகு இயேசு துணையாளராம் தூய ஆவியானவரை அனுப்பிய விழா. சீடர்கள் தூய ஆவியால் புத்துணர்வு பெற்று உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்க தூண்டிய விழா. சீடர்களின் அச்சத்திற்கு விடுதலை தந்த விழா. இன்றைய நற்செய்தி வாசகத்தில்  இயேசு கிறிஸ்து தூய ஆவியானவரின் ஐந்து குணநலன்களை வெளிப்படுத்துகின்றார்.

1. துணையாளர். (15:26)
2. உண்மையை வெளிப்படுத்துபவர். (15:26)
3. உண்மையில் வழி நடத்துபவர். (16:13)
4. வருவதை முன்னறிவிப்பவர். (16:13)
5. இயேசுவை மாட்சிபடுத்துபவர்.(16:14)

         தூய ஆவியானவருக்கு எண்ணற்ற பண்புகளை எடுத்துரைத்து கொண்டே இருந்தாலும் அவர் நம் வாழ்வின் துணையாளர் என்பது மறுக்க முடியாத உண்மை. துணையாளர் என்னும் தூய ஆவியானவரை உமக்காக அனுப்புவேன் எனும் இயேசுவினுடைய வாக்கிற்கு ஏற்ப  ஆவியானவர் திருத்தூதர்கள் மீதும், அன்னை மரியாவின் மீதும் இறங்கி வந்தார் (திருத்தூதர் பணிகள் 2:3). ஆவியானவர் அவர்களில் இறங்கி வந்தது மட்டுமல்லாது, அவர்களின் வாழ்வில் துணையாய் இருந்து, அன்று மட்டுமல்லாது, இன்றும், என்றும், எக்காலத்திலும் நமது வாழ்வில் துணையாளராக ஆவியானவர் இருப்பார் என்பதை இன்றைய பெருவிழா எடுத்துரைக்கிறது.

1. இறந்த காலத்தில் துணையாளர்

(1)-படைப்பில்...

       படைப்பின் தொடக்கத்திலேயே ஆவியானவர் புது படைப்பின் ஊற்றாக  இருக்கின்றார். "மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது" (தொடக்க நூல். 1:2). ஆக, இறைவன் உலகை படைத்த போதே ஆவியானவர் துணையாளராக இருந்திருப்பதை இது தெளிவுப்படுத்துகிறது.

(2)-இயேசுவில்...

   இயேசுவின் வாழ்வு முழுவதும் ஆவியானவர் நிறைந்திருந்திருக்கின்றார். அவரது பிறப்பு ஆவியானவரின் துணையால் நிகழ்ந்திருக்கின்றது. வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்".(லூக்கா 1:35)  இயேசுவின் பணி வாழ்வின் தொடக்கத்தின் அடித்தளத்தில் கூட ஆவியானவர் இருந்திருக்கின்றார். அதனால் தான் இயேசு திருமுழுக்கு பெற்ற போது தூய ஆவியானவர் புறா வடிவில் பிரசன்னமாக இருந்ததை காண்கிறோம். "மக்களெல்லோரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது" (லூக்கா 3:21,22). அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்படுகின்றார். (மத்தேயு. 4:1) இயேசு இறையாட்சியை பறைசாற்றிய போது கூட "ஆண்டவருடைய ஆவி என் மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்".
(லூக்கா 4:18) என்று கூறுவதை காண்கிறோம்.

(3)-திருத்தூதர்களிடத்தில்...

         இயேசுவின் விண்ணேற்புக்கு பிறகு திருத்தூதர்களின் வாழ்வில் எல்லாமாய் இருந்தது தூய ஆவியானவர்‌. இது பெந்தகோஸ்து நாளில் அவர்கள் தூய ஆவியானவரை பெற்றதிலிருந்து, தங்களுடைய வாழ்வில் அவரை தாங்கியவர்களாக உலகெங்கும் சென்று நற்செய்தியை பறைசாற்றுவதிலும், செய்த யாவற்றையும் துணையாளராம் தூய ஆவியின் துணையோடு செய்வதிலும் வெளிப்படுகின்றது. "இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்". (திருத்தூதர் பணிகள் 15:28) ஆக படைப்பின் தொடக்கத்திலிருந்து இயேசுவிலும், திருத்தூதர்களின் பணி வாழ்விலும் துணையாளர் தூய ஆவியானவர் நிறைந்திருக்கின்றார். அன்று (இறந்த காலம்) அவர் அவர்களை காத்து வழிநடத்தியிருக்கின்றார்.

2. நிகழ்காலத்தில் துணையாளர்

துணையாளர் தூய ஆவியானவர் அன்று மட்டுமல்லாது, இன்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

(1)-திருஅவையில்...

   திருஅவையின்  பிறப்பிலிருந்து  இன்று வரை வழி நடத்திக் கொண்டிருப்பது தூய ஆவியானவர்.  திருஅவையை வழிநடத்துகின்ற ஒவ்வொரு திருத்தந்தையர்களும் தேர்ந்தெடுக்கப்படுவது தூய ஆவியானவரின் துணையால் தான். திருஅவையை வழிநடத்துகின்ற திருத்தந்தையர்கள் மட்டுமல்லாது, ஆயர்கள் மற்றும் குருக்களும்  ஆவியானவரால் திருநிலைப்படுத்தப்படுகின்றனர்.  ஆவியானவர்  இவர்களில் நாளும் வெளிப்படுகின்றார். திருஅவையில் எங்கெங்கெல்லாம் நன்மை நடந்துக் கொண்டிருக்கின்றதோ,  அங்கே ஆவியானவர் நிறைந்திருக்கின்றார்.
 
(2)-திருவருட்சாதனங்களில்...
 
   திருஅவையில் திருவருட்சாதனங்கள் வழியாக ஆவியானவர்  துணையாளராக ஒவ்வொருவரையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். திருஅவையின் திருவருட்சாதனங்களில் ஆவியானவரை  பார்க்கின்றோம். குறிப்பாக திருமுழுக்கு, உறுதிபூசுதல் மற்றும் குருத்துவம் ஆகிய திருவருட்சாதனங்களின் வழியாக ஆவியானவரின் ஆற்றல் மற்றும் கொடைகளை நாம் பெறுகின்றோம்.

(3)-மனிதர்களிடத்தில்...

    இயேசு பிலிப்பிடம், "அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்". (யோவான் 14:17) என்னும் வார்த்தைகள் இயேசு நமக்காக அனுப்பும் தூய ஆவியானவரை மட்டுமல்லாது, அவர் நம்மோடு, நம்முள்ளும் தங்கியிருக்கிறார் என்பதை காட்டுகிறது. இதைத்தான் பவுலடிகளார் "உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா?".(1 கொரிந்தியர் 6:19) என குறிப்பிடுகின்றார். நம்மோடு மற்றும் நம்முள் இருக்கும் தூய ஆவியானவர் இன்றும் மற்றும் என்றும் நம்முடன் துணையாளராக இருப்பார்.

3. எதிர்காலத்தில் துணையாளர்

      முற்காலத்தில் துணையாளராக இருந்து வழிநடத்திய ஆவியானவர், இக்காலத்தில் துணையாளராக இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் ஆவியானவர், வரும் காலங்களிலும் நம்மோடு துணையாளராக இருந்து வழிநடத்துவார். எதிர்காலத்திலும் உண்மையை, நன்மையை மற்றும் வரப்போவதை அறிவிப்பவராய் ஆவியானவர் நமக்கு துணையாயிருப்பார்.

(1)-வரப்போவதை அறிவிப்பவராய்...

   இயேசு வாக்களித்த தூய ஆவியானவர் நம் எதிர்காலத்தில் வரப்போவதை அறிவிப்பார். "உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்". (யோவான் 16:13) ஆக, வரும் காலங்களிலும் நிகழ்வதை சுட்டிக் காட்டி, எக்காலத்திலும் நம்மை காப்பவராக தூய ஆவியானவர் இருப்பார். "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக!" (எபேசியர் 1:17) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நம் எதிர்காலத்திற்கு ஞானத்தை தருபவராக ஆவியானவர் இருக்கிறார்.

(2)-உண்மையை வெளிப்படுத்துபவராய்...

         "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்".(யோவான் 15:26) என்னும் இயேசுவின் வார்த்தைகள் வரும் காலத்தில் எவை சரி என்னும் உண்மையை காட்டி நம்மை காக்கும் ஆவியானவரை வெளிப்படுத்துகிறது.

(3)-கனிகளை தருபவராய்...

       மனித வாழ்வு என்றும் மகிழ்வு பெற அடிப்படையாக எண்ணற்ற பண்புகள் நம்மில் வளர வேண்டும். "தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை,கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்" (கலாத்தியர் 5:22,23). ஆவியானவரின் இத்தகைய கனிகள் தான் மனித வாழ்வு மகிழ்ந்திருக்க உதவும் கருவிகள்.

         இயேசுவின் வார்த்தைகள் அன்று ஆவியானவர் அவரோடு துணையாக நின்றது மட்டுமல்லாது, அதன் பின்பு திருத்தூதர்களின் வாழ்விலும், இன்றும் பாதுகாத்து கொண்டு இருக்கின்றார். இது இறை சித்தம் ஏனென்றால் துணையாளர் ஆவியானவரை, நம்மை காப்பதற்காகவே, வழி நடத்துவதற்காகவே இறைவன் அனுப்பி இருக்கிறார். அது மட்டுமல்லாது இன்னும் வரும் காலத்திலும் அவர் நம்மை காப்பார் என்பது இயேசுவினுடைய வார்த்தைகள் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஆவியானவர் நம்மை அழைக்கின்றார் மற்றும் நம்மோடு இருக்கின்றார் என்பதை நாம் உணர கூடிய ஒரு தருணம் தான் நாம் கொண்டாடக் கூடிய இந்த ஆவியானவர் பெருவிழா. எனவே, ஆவியானவர் என்னுள் இருக்கின்றார் என்னோடு இருக்கின்றார் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்வோம்.  ஆவியானவர் எக்காலத்திற்கும் என்னோடு துணையாளராக வாழ்கிறார் என்பதை உணர்ந்து, அவருடைய கனிகளை பெற்று, மகிழ்வோடு இறைவனின் வழியில் செல்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்