Wednesday, April 5, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் மறையுரைகள் - ஆண்டவரின் இராவுணவு-06-04-2023 - திருப்பாடுகளின் வெள்ளி-07-04-2023 - ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு - 09-04-2023

 

மூன்று மறையுரைகள் 

🌱விவிலிய விதைகள்🌱
ஆண்டவரின் இராவுணவு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(06 ஏப்ரல் 2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 12: 1-8, 11-14
இரண்டாம் வாசகம்:  1 கொரிந்தியர் 11: 23-26
நற்செய்தி: யோவான் 13: 1-15

           "இதை என் நினைவாகச் செய்யுங்கள்” - (மத் 22:19)
         நினைவாக... வாழ்வாக... 

ஒரு ஊரில் ஒரு தாயும் ஒரு மகனும் இருந்தார்கள். அந்த மகனுக்குத் திடீரென்று வெளிநாட்டில் வேலை கிடைக்க அவன் புறப்பட்டுப் போய்விட்டான். ஒவ்வொரு மாதமும் அவன் தன் தாய்க்கு ஒரு கடிதம் அனுப்புவான். தான் கண்ட இடங்களையும், ரசித்த நிகழ்வுகளையும் நினைவாக புகைப்படமாகவும், கடிதமாகவும் அனுப்புவான். அப்படி அனுப்பும் ஒவ்வொரு முறையும் அக்கடிதத்தோடு தன் சம்பளப்பணத்தையும் வைத்து அனுப்புவான். இந்தத் தாயும் கடிதம் வந்தவுடன் தான் படித்ததோடு மட்டுமல்லாமல் அதைத் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமும் காட்டி மகிழ்வாள். ஐந்து வருடங்கள் வேலை முடித்து வீட்டிற்கு வருகின்றான் மகன். தன் இல்லம் சென்றவுடன் அவனுக்கு அதிர்ச்சி. தான் அனுப்பிய புகைப்படங்கள் அனைத்தையும் தன் இல்லம் முழுவதும் தன் தாய் ஒட்டி வைத்திருக்கக் காண்கிறான். அந்தப் புகைப்படங்களோடு அவன் அனுப்பிய பணக்காகிதங்களையும் அந்தத் தாய் சுவரில் ஒட்டி வைத்திருக்கின்றார். அவன் அம்மாவிடம், ‘இது படம் அல்ல அம்மா. நான் அனுப்பிய பணம்’ என்கிறான். ‘என்னது பணமா? நான் இதுவும் ஏதோ படம் என்றல்லவா நினைத்தேன்’ என்கிறார் தாய்.' ஆம் இயேசு நமக்குத் தந்த நற்கருணையையும் மற்றும் குருத்துவத்தையும் அவர் நினைவாக ஏற்றுக் கொண்ட நாம் அவற்றின் மதிப்பையும், மகத்துவத்தையும் மற்றும் மாண்பையும் அந்த தாயைப்போல உணர்வதே கிடையாது. இன்றைய பெரிய வியாழன் இந்த திருவருட்சாதனங்களை இறைவனின் நினைவாக மட்டுமல்லாது, அவற்றில் அவரின் பிரசன்னம் நிறைந்திருக்கின்றது என்பதையும், அவற்றின் உள்ளார்ந்த அர்த்தங்களையும் புரிந்து ஏற்றுக் கொள்ள அழைப்பு தருகிறது.

திருஅவையின் வரலாற்றில் இன்று மிகவும் சிறப்புமிக்க நாள். ஏனென்றால், இந்த நாளில்தான் ஆண்டவர் இயேசு குருத்துவத்தையும் நற்கருணையையும் ஏற்படுத்தினார். ஆக இன்று நற்கருணை மற்றும் குருத்துவம் என்னும் இரண்டு திருவருட்சாதனங்களின் பிறப்பு விழாவை கொண்டாடுகின்றோம். இந்த நாளில்தான் இயேசு தன்னுடைய சீடர்களின் பாதங்களைக் கழுவி அன்பு கட்டளையை தந்தருளினார். ஆதலால்தான், பெரிய வியாழன் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளாக கருதப்படுகிறது.
1. நற்கருணை

அ. பலியான உணவு
நற்கருணையில் இயேசு தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருகின்றார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யூதர்கள் கொண்டாடிய பாஸ்கா விழாவில் ஓர் ஆடானது பலியிடப்பட்டு, அது வீட்டிலுள்ள எல்லோராலும் உண்ணப்பட்டது. ஆனால் இயேசு கொண்டாடிய புதிய பாஸ்கா விழாவில் ஆட்டிற்குப் பதிலாக இயேசு தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருகின்றார். ஆக இது தன்னை பலியாக்கி தந்த உணவு‌.

ஆ. வாழ்வு தரும் உணவு
மனிதனால் மனிதனுக்கு வாழ்வு தருகின்ற உணவை தர இயலாது, அது இறைவனால் மட்டுமே முடியும். பாலைவனத்தில் இஸ்ராயேல் மக்கள் பசியால் தவித்த போது மோசே அவர்களுக்கு மன்னாவை தரவில்லை மாறாக இறைவன்தான் தந்தார். இறைவன் தரும் இந்த உணவு உடலுக்கானதல்ல மாறாக நம்முடைய உள்ளத்திற்கானது அதாவது ஆன்மாவை வலுப்பெற செய்வது. இது வாழ்வு தரும் உணவு (யோவான் 6:51).

இ. கிறிஸ்துவில் ஒன்றினைக்கும் உணவு
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கொரிந்திய கிறிஸ்தவர்களின் நற்கருணை கொண்டாட்டத்தில் இடம் பெற்றிருந்த குறைகளை தவிர்க்க வலியுறுத்தும் வகையில் இயேசு தான் துன்புறுவதற்கு முந்தின நாள் நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வை எடுத்துரைக்கின்றார். நாம் அனைவரும் இயேசுவின் உடல் என்றும், பிளவுகளையும் பிரிவினைகளையும் அகற்றி ஒரே மனதோடும் நோக்கத்தோடும் வாழ்வது அவசியம் என்றும் எடுத்துரைக்கிறார். ஆக இது கிறிஸ்துவில் நம்மை ஒன்றினைக்கின்ற உணவு.

ஈ. அன்பின் நினைவான உணவு
ஷாஜகான் மும்தாஜ் மீது கொண்ட அன்பின் நினைவுதான் தாஜ்மஹால். அதுபோல் இறைவன் நம்மீது கொண்ட எல்லையற்ற அன்பின் நினைவுதான் நற்கருணை. தன்னை அன்பின் அடையாளமாய் விட்டுச் சென்றவர் அவ்வன்பை ஒருவர் மற்றவரோடு பகிர அன்பு கட்டளையை தருகிறார். அன்பு கட்டளை ஏற்கனவே விவிலியத்தில் இடம் பெற்றுள்ளது (லேவியர் 19:18). எனவே வார்த்தை அளவில் இது புதிய கட்டளை அல்ல எனினும் இதன் பொருள், ஆழம் புதிது. அன்பு செலுத்தப்பட வேண்டிய மற்றவர் தம் உறவினரோ, இனத்தாரோ, சமயத்தாரோ அல்ல மாறாக தேவையில் உழல்வோரே அதுபோன்று இயேசு போதிக்கும் அன்பு சொல்லிலும், உணர்விலும் வெளிப்படும் ஒன்று அல்ல, அது செயலில், தியாகத்தில் தம் உயிரையே கையளிக்கும் நிலையில் வெளிப்படுவது. இவ்வாறு இயேசுவின் அன்பு கட்டளை அன்பு செய்யப்பட வேண்டியவரை பொறுத்தவரையிலும் அன்பு செய்யும் தன்மையை பொருத்தவரையிலும் முற்றிலும் புதிதாக அமைகிறது. எனவே இறைவனிடமிருந்து அன்பைப் பெறுகின்ற நாம் அதை ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதே அன்புக் கட்டளையின் நோக்கம்.

`நற்கருணை என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமும்’ என்றும் “திருச்சபை, தனது வாழ்வை நற்கருணையிலிருந்து பெறுகிறது” என்றும் இரண்டாம் வத்திக்கான் சங்கம் (LG 11) எடுத்துரைக்கின்றது. கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய வாழ்வுக்கான எல்லா ஆசியையும் அருளையும் நற்கருணையிலிருந்தே பெறுகின்றோம். அன்று முதல் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் 'அப்பம் பிட்டனர்', அதாவது, நற்கருணை விருந்தில் பங்கேற்றனர் (திப 2:46), அதே நேரத்தில் வீடுகளிலும் அப்பத்தைப் பிட்டு, மனமகிழ்வோடும் கபடற்ற உள்ளத்தோடும் பகிர்ந்து கொண்டனர். எனவே நற்கருணை நம் வாழ்வின் அங்கம் என உணர்ந்து அப்பிரசன்னத்தை நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஏற்றுவோம். கிறிஸ்தவம் உள்ளே நுழைவதற்கு மிகவும் சவாலாக இருந்த நாடுகளில் ஒன்றான சீனாவில், நற்கருணை விருந்து எப்படி கொண்டாடப்பட்டது என்பதற்கான ஒரு வரலாற்றுச் செய்தி உண்டு. அங்கு மறைபோதகராகப் பணியாற்றிய குருவானவர் ஒருவர் ஒரு கடைக்காரரைப்போல வேடமணிந்துகொண்டு இருப்பார். அங்கு வரும் கிறிஸ்தவர்களை, அவர்கள் வெளிப்படுத்தும் ஒருவிதமான சைகைகளைக் கொண்டு, இவர்கள் கிறிஸ்தவர்கள்தான் என்று அறிந்துகொண்டு, அவர்களுக்கு ஒரு சோப்புக் கட்டியை தருவார். அதில் நற்கருணை இருக்கும். அதை பெற்றுக் கொள்ளும் கிறிஸ்தவர்கள், தங்களுடைய இல்லங்களுக்குச் சென்று, இறைவேண்டல் செய்துவிட்டு, நற்கருணையை உண்பார்கள். இவ்வாறு அவர்கள் நற்கருணையை உண்டு ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வந்தார்கள். இன்று நாம் எப்படி நற்கருணையை ஏற்றுக் கொள்கின்றோம்? நற்கருணையை வெறுமனே ஒரு சடங்காக, வழிபாட்டுக் கொண்டாட்டமாக மட்டும் பார்க்காமல், அது நம்முடைய வாழ்வுக்கான அடையாளம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், ஆண்டவர் இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் மானுட மீட்புக்காகத் தந்தார். அவர் எப்படி மானுட மீட்புக்காக தன்னையே தியாகமாகத் தந்தாரோ, அதேபோல நாம் ஒவ்வொருவரும் நம்மையும், நம்மிடம் இருப்பதையும் தியாகமாகத் தர வேண்டும். அதைத்தான் நற்கருணை நமக்கு நினைவூட்டுகிறது.

2. குருத்துவம்

‘இதை என் நினைவாகச் செய்யுங்கள்!’ என சீடர்களின் பாதங்களை கழுவி மற்றும் அப்பம் பிட்டு இயேசு குருத்துவத்தை ஏற்படுத்துகிறார். பாதம் கழுவும் வழக்கம் தொடக்கத்திலிருந்தே பாலஸ்தீன நாட்டில் நிலவி வந்தது. விருந்துகளுக்கு முன் அழைக்கப்பட்ட விருந்தினரின் காலடிகளை கழுவுவது பழக்கமாக இருந்தது. பழைய ஏற்பாட்டில் தொடக்க நூல் 18 :4 தன்னை காண வந்த மூன்று மனிதருக்கு ஆபிரகாம் காலடிகளை கழுவ தண்ணீர் கொண்டு வந்ததை வாசிக்கிறோம். புதிய ஏற்பாட்டில் லூக்கா 7: 44 இயேசு சீமோனை பார்த்து "நான் உம் வீட்டிற்கு வந்த போது நீர் என் பாதங்களை கழுவ தண்ணீர் தரவில்லை. இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றை தம் கூந்தலால் துடைத்தார்" என்கிறார். இவ்வாறு வீட்டிற்கு விருந்தாளிகள் வருகின்ற போது காலடிகளை கழுவும் செயல் இருந்தது.

அ. அன்பின் அழைப்பு
பாதங்களைக் கழுவுவதை எல்லாராலும் செய்ய முடியாது. அது உள்ளத்தில் உண்மையான அன்பு வைத்திருப்பவர்களால் மட்டுமே செய்ய முடியும். இயேசு சீடர்கள் மீதும், நம் மீதும் உண்மையான அன்பு கொண்டிருந்தார். அதனாலேயே சீடர்களின் பாதங்களைக் கழுவினார். நாமும் நம்மோடு வாழக்கூடிய சகோதர, சகோதரிகளிடத்தில் அன்புகொண்டு வாழ்வோம்.

ஆ. பணிவின் அழைப்பு
“ஆண்டவரும், போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவுகிறேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவரது காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்று தன் முன்மாதிரியைப் பின்பற்ற சீடர்களை அழைக்கின்றார் இயேசு. ஏனெனில் அவர்கள் தங்களில் யார் பெரியவர் என வாதாடினார். நாம் ஒரு மிகப் பெரிய குருவை பின்பற்றுபவர்கள் அல்ல. மாறாக, ஒரு பணியாளனை பின்பற்றுபவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள சீடர்கள் அழைக்க பெறுகிறார்கள். அதாவது, நாம் ஒவ்வொருவருமே பிறருக்குப் பணிவோடு பணிவிடை செய்து வாழவேண்டும் என்றதொரு அழைப்பினத் தருகின்றார். இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருவர் மற்றவருக்குப் பணிவோடு பணிவிடை செய்யும் மக்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சகோதர சகோதரிகளே! இன்றைய நாளில் 'இதை என் நினைவாக செய்யுங்கள்!' என்று இயேசு ஏற்படுத்திய நற்கருணையும் குருத்துவமும் வெறும் நம் நினைவில் மட்டுமல்லாது நம் வாழ்விலும் ஏற்றுக் கொள்ள அழைப்பு பெறுகின்றோம். இயேசுவின் அன்பு பரிசாம் நற்கருணையை நம் வாழ்நாளெல்லாம் ஏற்று அவ்வன்பை பிறருக்கும் தருவோம். நம் திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவின் பொதுக்குருத்துவத்தில் இணைந்திருக்கின்ற நாம் இயேசுவின் பணி குருத்துவம் காட்டும் அன்பு வழியிலும், பணிவிடை செய்யும் பணிவு வாழ்விலும் நாளும் வளர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பார்.

 🌱விவிலிய விதைகள்🌱

திருப்பாடுகளின் வெள்ளி
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(07 ஏப்ரல் 2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: எசாயா 52: 13- 53: 12
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 4: 14-16; 5: 7-9
நற்செய்தி: யோவான் 18: 1- 19: 42

கிறிஸ்தவமும் கிறிஸ்துவின் துன்பமும்

                          உலகத்தை மீட்க பிறந்த இயேசுவின் மாபெரும் அன்பு வெளிப்படுத்தப்பட்ட நாள்தான் பெரிய வெள்ளி. ஆபிரகாம் லிங்கன், முகமது, வில்லியம் ஷேக்ஸ்பியர், நெப்போலியன், நாசரேத்து இயேசு என வரலாற்றில் தடம் பதித்த பலரின் வாழ்வை பற்றி மேற்கொண்ட ஆய்வில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டது இயேசுவும் அவருடைய மரணமும்தான். எனவே இன்று, உலக வரலாற்றில் மிக முக்கியமான நபரின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான நிகழ்வு இயேசுவின் சிலுவை மரணம். அதுவே கிறிஸ்தவத்தின் அடித்தளமாக மாறியிருக்கிறது. மூன்று கேள்விகளைக் கேட்டு இயேசுவின் பாடுகளை பற்றி சிந்திப்போம். 1) எப்படி இயேசு துன்பப்பட்டார்? 2) ஏன் இயேசு துன்பப்பட்டார்? மற்றும் 3) இயேசுவின் துன்பம் நமக்கு சொல்லும் அர்த்தம் என்ன ?

1) எப்படி இயேசு துன்பப்பட்டார்?
              மாற்கு நற்செய்தியாளர் மூன்று விதமான இயேசுவின் பாடுகளை எடுத்துரைக்கிறார். இயேசுவின் உடல் சார்ந்த பாடுகள், உணர்வு சார்ந்த பாடுகள் மற்றும் ஆன்மிக சார்ந்த பாடுகள்.

. உடல் சார்ந்த பாடுகள்
          இயேசுவின் உடல் சார்ந்த பாடுகளை சற்று நம் உள்ளங்களில் தியானித்துப் பார்ப்போம். ஒரு தூணில் கைகள் கட்டியப்படி தோலை உறித்தெடுக்கும் கசையடி இயேசுவுக்கு கொடுக்கப்பட்டது. அதில் பொதுவாக செம்மறி எலும்பின் துண்டுகள் மற்றும் கூர்மையான உலோகத் துண்டுகள் பதிக்கப்பட்டிருக்குமாம். இது இன்னும் மிகுந்த வேதனையை தந்து, உடலின் தசைகளை வெளியேற்றி பெரும் காயத்தை இயேசுவுக்கு உண்டாக்கியிருக்கும். இது இயேசுவின் உடலில் எண்ணற்ற இரத்தத்தை வெளிவர செய்து, அவரை பலவீனமாக்கியிருக்கும். இந்தச் சூழ்நிலையில் இயேசுவை ஆளுநரின் மாளிகைக்கு இழுத்துச் சென்றார்கள். அங்கு 'அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்தனர், அதனால் இரத்தம் வழிந்தது. இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களுக்கு முள்முடி சூட்டப்படவில்லை. அதற்கு முன்பாகவும் பின்பாகவும் உரோமையர்கள் பலரை சிலுவையில் அறைந்து கொன்ற போது கூட ஒருவருக்கு கூட முள்முடி வைக்கப்படவில்லை. முள்முடி சூட்டப்பட்டவராய் சிலுவையில் அறையப்பட்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே. இஸ்ரயேலில் ஏறக்குறைய 24 வகையான முட்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. அதில் மிகவும் கூர்மையான விஷம் நிறைந்த ஒரு வகை முள்ளைத்தான் இயேசுவின் தலையில் வைத்தார்கள். விஷம் நிறைந்த கொடிய முட்கள் அவர் தலையில் ஆழமாய் இறங்கியது. இதே வலியோடும் காயங்களோடும் இயேசு நிலை குலைந்து இருக்கின்ற போது அவர் மீது பாரமான சிலுவை வைக்கப்படுகிறது. அச்சிலுவையை சுமப்பது மட்டுமல்லாது, அதை சுமந்து கொண்டு கல்வாரி மலையை நோக்கி நடக்க வேண்டும், அதில் எண்ணற்ற கசையடிகள், பாரம் தாங்க முடியாமல் வழியில் விழுந்த நிலைகள் என எல்லா துன்பத்தையும் ஏற்று கல்வாரி மலையை அடைகிறார். பொதுவாக சிலுவையில் அறையப்பட்டவரின் மரணத்திற்கான காரணம் மூச்சுத்திணறல் என்கிறார்கள். சிலுவையில் அறையப்பட்டவரின் முழு எடையும் அவரின் மணிக்கட்டில் தொங்குவதால், அவரால் சரியாக மூச்சை வெளியேற்ற முடியாது. அப்படியெனில் இயேசுவின் ஒவ்வொரு மூச்சும் பெரும் வேதனையை அவருக்கு தந்திருக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக அவருடைய கரங்களிலும் பாதத்திலும் பதிந்த ஆணிகள் அத்துயரத்தோடு சிலுவையில் தொங்கிய அந்த கடைசி நிமிட வேதனை என இயேசு எண்ணற்ற உடல் சார்ந்த துன்பங்களை அதாவது பாடுகளை அனுபவித்தார்.

. உணர்வு சார்ந்த பாடுகள்
                            இயேசு கைது செய்யப்பட்ட பிறகு, அதிகாலையில், யூத மதத் தலைவர்களின் உயர் சபையில் பிலாத்துவிடம் கொண்டு வரப்பட்டார், அவர் கடவுளின் மகன் என்றும் தன்னை ஒரு அரசராக அறிவித்தார் என்றும் விசாரிக்கப்படுகிறார். விசாரணையின் போது, இயேசு குற்றமற்றவர் என்பது பிலாத்துவுக்குத் தெளிவாகிறது (15:14), இருப்பினும், பிலாத்து கூட்டத்தின் விருப்பத்திற்கு ஏற்ப, இயேசுவை சிலுவையில் அறையப்பட மரண தண்டனை விதிக்கிறார். குற்றம் செய்தவரைப் பிடித்து விசாரிப்பது நியாயம். ஒருவரை பிடித்து வைத்துக்கொண்டு குற்றம் தேடியது மிகவும் அநியாயம் (யோவான் 11 : 50, மாற்கு 14 : 1, 55). பொய் சாட்சிகளை உண்டாக்கினார்கள் (மத்தேயு 26 : 60, 61). குற்றவாளியின் சொற்களை அவர்கள் யாரும் கவனிக்கவில்லை (லூக்கா 22 : 67 — 71). ஆலோசனை சங்கமானது இரவில் சட்டப்படி கூட்டப்படக்கூடாது. எனவே அதுவும் தவறு (மத்தேயு 26 : 63 66). ஆலோசனை சங்கம் கூடிய இடம் வீடு. இது முறைப்படி தேவாலயத்துடன் இணைந்திருக்கும் நீதிமன்ற அறையில் கூடித்தான் தீர்ப்பிட வேண்டும். இதுவும் அவர்கள் செய்தது தவறு (லூக்கா 22 : 54). இவ்வாறு இயேசுவுக்கு நிகழ்ந்த நியாமற்ற விசாரணையும், அநியாய தீர்ப்பும், இயேசு கற்பித்த, குணப்படுத்திய, உணவளித்து, காப்பாற்றிய மக்கள் கூட்டம் அவரை மரணத்திற்கு அனுப்பியதும் அவரின் உள்ள மற்றும் உணர்வு சார்ந்த பாடுகளாகும். மேலும் "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்து பாடிய மக்கள் (மத் 21:9), பிலாத்திடம் "சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!" என்று கூறியதும் (மத் 27:22). மேலும் தன் நண்பர்களாக கருதிய சீடர்களுள் யூதாஸ் பணத்திற்காக முத்தமிட்டு காட்டிக் கொடுத்ததும் (மத் 27:48), பேதுரு மூன்று முறை அவரை மறுதலித்ததும் (மத் 26:70) அவரின் உணர்வு சார்ந்த பாடுகளே ஆகும். 'அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம் செய்ததும் (மத்தேயு 27:29), சிலுவையில் இயேசுவின் இருபுறமும் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் கூட ஒருவன் இயேசுவை ஏளனப்படுத்தியதும், அவரை சூழ்ந்து இருந்த படைவீரர்கள் அவரை எள்ளி நகையாடியதும், அவருடைய சீடர்கள் அவர் அருகே இல்லாமல் இருந்ததும் இயேசுவின் உள்ள மற்றும் உணர்வு சார்ந்த பாடுகளே ஆகும்.

. ஆன்மீகம் சார்ந்த பாடுகள்
                      இயேசுவின் தலைமீது முள்முடி சூட்டப்படுகிறது. முட்கள் சாபத்தை குறிப்பிடுகிறது, ஆதாம் பாவம் செய்த போதுஉன் மனைவியின் சொல்லைக்கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய். முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும்" (தொடக்க நூல் 3:17-18). பாவத்தால் சபிக்கப்பட்ட நிலம் விளைவித்த முள் தான் இயேசுவின் தலையில் துன்பமாய் இருக்கிறது. எல்லோரும் இந்த மண்ணுலகில் பிறப்பது வாழ்வதற்காக இயேசு இம்மண்ணுலகில் பிறந்தது இறப்பதற்காக அதாவது இறந்து நம்மை வாழ வைப்பதற்காக. அதனால்தான் கபிரியேல் வானத்தூதர் யோசேப்பிடம் பேசுகின்ற போது, "அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்என்றார். ஆம் நம் பாவங்களிலிருந்து நம்மை மீட்டு வாழ்வு தர இயேசு சுமந்த சிலுவையும் அதனால் எழுந்த எல்லா துன்பமும் அவருக்கு ஆன்மீக துன்பங்களே ஆகும்.

2) ஏன் இயேசு துன்பப்பட்டார்?
. இறைத்திட்டத்திற்காய்...
இயேசு பாடுகளை ஏற்றதன் வழியாகவும் சிலுவையில் தன் உயிரை தந்ததன் வழியாகவும் அவர் இறைவனுக்கு அதாவது அவருடைய மீட்பு திட்டத்திற்கு தன்னை முழுவதும் அர்ப்பணித்தார் என்பதை எடுத்துரைக்கிறது. இயேசு கெத்செமனி தோட்டத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, “அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்என்று (மாற்கு 14:36) ஜெபித்ததும், சிலுவையில் தொங்கியபோதுஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மத்தேயு 27:46) என்று மீண்டுமாக இறைவனை பார்த்து எடுத்துரைத்து இறந்ததும் இறைத்திட்டத்திற்கு தன்னை முற்றிலும் கையளித்ததன் அடையாளமாகும்.

. பாவங்களுக்காய்...
               மனிதர்கள் தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும் பாவங்களை மன்னிக்கும்படி கடவுளிடம் முறையிட்டு, அதற்காக ஆடு, மாடுகளை பலி கொடுப்பது, உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஆயிரங்கால நம்பிக்கை. இதே நம்பிக்கையை கொண்டிருந்த யூத மதத்தில் பிறந்தவர்தான் இயேசு கிறிஸ்து... பிரிவினைவாதமும், பிற்போக்குவாதமும் புரையோடிக் கிடந்த யூத மதத்தில், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற கடுமையான சட்ட திட்டங்களுக்கு பஞ்சமில்லை. யூதர்களை தவிர மற்ற இனத்தவர்கள் அனைவரும் கீழானவர்கள் என தீண்டாமையை கற்பித்த யூத மதம், கஷ்டங்களுக்கும், நோய்களுக்கும் பாவமே காரணம் என்றும் போதித்தது. ஆனால், எதிரியையும் அன்பு செய், ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு என்ற இயேசுவின் அன்பான அணுகுமுறையும், அனைவரும் சமம் என்று அவர் எடுத்துரைத்த போதனையையும் தாண்டி மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்க தன்னுயிரை தந்தார். இயேசுவின் விலாவிலிருந்து வந்த தண்ணீரும் இரத்தமும் மானிடர்களின் பாவங்களை கழுவும் ஜீவ ஊற்று ஆகும். எனவேதான் "மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்என்று மாற்கு நற்செய்தியாளர் 10:45-ல் எடுத்துரைக்கிறார்.

. இறையன்புக்காய்...
                 தொடக்கத்தில் உலகை படைத்து முதல் பெற்றோரிடம் ஒப்படைத்ததும், அதனைத் தொடர்ந்து பல நேரங்களிலே இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை விட்டு பிரிந்து சென்ற போதும் இறைவன் தன்னுடைய அன்பின் நிமித்தமாக நீதிதலைவர்களையும், அரசர்களையும் மற்றும் இறைவாக்கினர்களையும் அனுப்பி வழிநடத்தினார். அதே இறைவன்தான் அன்பின் அடையாளமாய் தம்மகனையே மனிதனாக பிறக்க செய்து சிலுவையில் கையளிக்க செய்தார். இதைத்தான் "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்." (யோவான் 3:16) என்னும் வார்த்தைகளில் இயேசு தன்னுயிரை கையளித்தது இறைவன் இம்மண்ணுலகின் மீது கொண்டிருந்த அன்பின் அடையாளம் என அறிகிறோம்.

3) இயேசுவின் துன்பம் நமக்கு சொல்லும் அர்த்தம் என்ன ?
             சிலுவையின்றி வாழ்வில்லை, சிலுவையே வாழ்வு என்பதை ஆழமாக ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் எடுத்துரைக்கிறது இயேசுவின் பாடுகள். இதைத்தான் "நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்." (எசாயா 53:5) என ஏசாயா இறைவாக்கினர் முன்னறிவித்தார். நம்முடைய பாவங்களிலிருந்து மீட்பு என்னும் புதுவாழ்வை தந்த இயேசுவின் பாடுகளும் இறப்பும், இன்றும் நம் வாழ்வின் சவால்களையும், துன்பங்களையும் மற்றும் சோதனைகளையும் ஏற்றுக் கொள்ளுகின்ற போது நிறைவான வாழ்வு கிடைக்கும் என்பதன் அடையாளமாக இருக்கிறது. "நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன்." (கலாத்தியர் 6:14) என்னும் பவுலடிகளாரின் வார்த்தைகள் சிலுவையை முற்றிலும் அவர் வாழ்வாக்கியதை எடுத்துரைக்கிறது. நாமும் சிலுவையை வாழ்வாக்குவோம், வாழ்வு பெறுவோம். மேலும் அன்று இயேசுவுக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, “இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்என்று (மாற்கு 15:39) அவருக்கு சான்று பகர்ந்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இன்றைக்கு நமக்காக மரித்த இயேசுவுக்கு சான்று பகரக்கூடிய ஒரு வாழ்வை வாழ்வதற்கு அழைக்கப் பெறுகின்றோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


🌱விவிலிய விதைகள்🌱

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(09 ஏப்ரல் 2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 10: 34a, 37-43
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 3: 1-4
நற்செய்தி: யோவான் 20: 1-9 

இயேசுவின் உயிர்ப்பு காட்டும் வெளிப்பாடுகள்

"உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார்,
இந்த உலகையே உயிர்த்து விட்டார்,
வென்றார் கிறிஸ்து வென்றார்,
இந்த அகிலத்தை வென்று விட்டார்,
ஆர்ப்பரிப்போமே... அல்லேலூயா,
ஆனந்திப்போமே... அல்லேலூயா,
அல்லேலூயா பாடுவோம்"
 
              எனும் பாடல் வரிகளுக்கேற்ப ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்ப்பு பெருவிழா நம் ஒவ்வொருவருக்கும் ஆர்ப்பரிப்பையும், ஆனந்தத்தையும் வழங்கக் கூடிய  விழா. இது நாம் பயணித்த தவக்காலத்தின் உச்சகட்ட விழா. இதை திருத்தந்தை முதலாம் சிங்கராயர் திருச்சபையின் எல்லா விழாக்களிலும் மேலான பெருவிழா என்று  குறிப்பிடுகின்றார். கிறிஸ்தவர்களுக்கு இது மிகப்பெரிய விழாஇது பாஸ்கா விழா, யூதர்களின் பாரம்பரிய விழா பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் கொண்டாடிய  விழா, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வாழ்வுக்கு கடந்து வந்த ஒரு விழா. புதிய ஏற்பாட்டில் இயேசு இறப்பிலிருந்து உயிர்ப்புக்கு கடந்து வந்த விழா. நம்முடைய பாவங்களிலிருந்து நமக்கு மீட்பை தந்த விழா. வரலாற்றில் சாவை வென்ற ஒரு மனிதர் என்றால் அது இறைமகன் இயேசு கிறிஸ்து தான், ஆக இது வரலாற்றை ஊடுருவி உலுக்கிய ஒரு விழாவரலாற்றில் சாவை வென்ற ஒரே ஒரு மனிதர் என்றால் அது இயேசு கிறிஸ்து தான்இந்த உலகத்தில் பல தலைவர்கள், அரசர்கள், மதத்தலைவர்கள் என பலர் வாழ்ந்தனர், போதித்தனர், தங்களை கடவுள் எனக் கூறினர், ஆனால் யாரும் உயிர்த்தெழவில்லைஎகிப்து நாட்டில் பிரமிடுகளில் இறந்தவர்களின் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் யாரும் அதில் உயிர்த்தெழவில்லை. சொன்னவாறு உயிர்த்தெழுந்த ஒரே மனிதர் இறைமகன் இயேசு கிறிஸ்து மட்டுமே.
 
              இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா இன்று கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் நான்கு விதமான வெளிப்பாடுகளைத் தருகிறது.
 
1. விசுவாசத்தின் பிறப்பு
2. ஒவ்வொருவருக்கும் உயிர்ப்பு
3. பாவங்களுக்கு மீட்பு
4. சாட்சிய வாழ்வின் அழைப்பு 

1. விசுவாசத்தின் பிறப்பு
                 இயேசுவினுடைய பிறப்போ அல்லது இறப்போ நமக்கு கிறிஸ்தவ விசுவாசத்தை அளிக்கவில்லை, மாறாக அவருடைய உயிர்ப்பு தான் கிறிஸ்தவ விசுவாசத்தை தருகிறதுஇயேசுவின் பிறப்பு,   நற்செய்தி, சிலுவைஇறப்பு   மட்டுமே இருந்திருந்தால் இங்கு விசுவாசம் வளர்ந்திருக்காது மாறாக இயேசுவின் உயிர்ப்பு தான் கிறிஸ்தவ விசுவாசத்தை தருகின்றது. சீடர்கள் பயத்திலிருந்து வெளியே வந்ததுநற்செய்தியை அறிவித்தது இயேசுவினுடைய உயிர்ப்பால், எனவே இன்று நாம் நம் விசுவாசத்தை புதுப்பிக்க அழைக்கப்படுகின்றோம். "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்(1கொரிந்தியர் 15:14) எனும் பவுலடிகளாரின் வார்த்தைக்கெற்ப இயேசுவின் உயிர்ப்பு நம் விசுவாசத்தின் பிறப்பு.

இயேசுவினுடைய உயிர்ப்புக்கு இரண்டு அடையாளங்களை  எடுத்துக் கூறலாம், அதுவே விசுவாசத்தின் வித்துகளாக மாறுகிறது.
 
A. காலி கல்லறை
              "வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்"யோவான். 20:1 எனும் இறைவார்த்தைகள் காலியான கல்லறை இயேசுவினுடைய உயிர்ப்பை சுட்டிக் காட்டுகின்ற முதல் அடையாளம் என்பதை காட்டுகின்றது.
 
B. துணிகள்: 
                 பேதுருவும் இயேசுவினுடைய அன்புச் சீடரும் கல்லறைக்குள் நுழைந்து பார்த்தபொழுது கல்லறையில் சுருட்டி கிடந்த துணிகள், இயேசுவினுடைய உயிர்ப்பை சுட்டிக் காட்டுகின்ற இரண்டாம் அடையாளம்.  (யோவான் 20:6,7 )

 2. ஒவ்வொருவருக்கும் உயிர்ப்பு
                 “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்". (யோவான் 11:25) என்று கூறிய இயேசு தான் மட்டும் இறந்து உயிருக்கவில்லை மாறாக அவருடைய உயிர்ப்பில் நமக்கும் பங்கு கொடுத்திருக்கின்றார்இதைத் தான் பவுல் அடிகளார் "இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்". (1 கொரிந்தியர் 15:13) என்கின்றார். ஆக இயேசுவின் உயிர்ப்பு நம் ஒவ்வொருவருக்கும் உயிர்ப்பு.
 
3. பாவங்களுக்கு மீட்பு
                   இயேசுவினுடைய இந்த உயிர்ப்பு நம் பாவங்களுக்கு மீட்பு தருகின்றது. நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள், கஷ்டங்கள், பாரங்கள், பிணி, நோய் மற்றும் பேய் அனைத்தும் இயேசு சாவைக் கடந்து வெற்றி பெற்று உயிர்த்ததை போல, இவை நம் வாழ்வை விட்டு மீட்கப்படுகின்றது.
 
4. சாட்சிய வாழ்வின் அழைப்பு
            ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய இந்த உயிர்ப்பு நம் ஒவ்வொருவரையும் சாட்சிய வாழ்வுக்கு   அழைப்பு தருகின்றது. "மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்". (யோவான். 20:18) எனும் இறை வார்த்தைகளுக்கு ஏற்ப  பெண்ணின் சாட்சியத்தை பெருமையாக ஏற்றுக்கொள்ளாத யூத சமுதாயத்தின் பெண் தான் கண்ட  காட்சியை சாட்சியாக பகிர்ந்து கொள்கின்றார். "இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்". (திருத்தூதர் பணிகள். 10:41) எனும் பேதுருவின் வார்த்தைகள் உயிர்த்த இயேசுவுக்கு அவர் சாட்சியம் பெற்றதை சுட்டிக் காட்டுகின்றது. இவ்வாறு மகதலா மரியாவும், பேதுருவும் மற்றும் சீடர்களும் இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சி பகர்ந்தார்கள். அதைப்போல நாம் ஒவ்வொருவரும் சாட்சி பகர இந்த பெருவிழா நமக்கு அழைப்பு தருகின்றது.

   கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்தவர்கள் என்னும் அடையாளத்தை தாங்கி நிற்கின்றோம்இயேசுவினுடைய  உயிர்ப்பை நம்பி, இந்த உயிர்ப்பு நமக்கு மீட்பையும், மறுவாழ்வுக்கான உயிர்ப்பையும் தருகின்றது என ஏற்றுக்கொண்டு அவருக்கு சாட்சிய வாழ்வு வாழ்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பார்.