Saturday, August 15, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 16-08-2020 - பொதுக்காலம் 20ஆம் வாரம் ( ஆண்டு- A)

 

பொதுக்காலம் 20ஆம் வாரம்
(
ஆண்டு- A)

16-08-2020

ஞாயிற்றுக்கிழமை


 

நம்பிக்கையை கற்றுத்தரும் 

 வாழ்க்கையின் ஒதுக்கி வைப்புகள்


ஒருமுறை வாழ்க்கையையே வெறுத்து ஒதுக்கிய மனிதன் ஒருவன், ஒரு முனிவரிடம் சென்று என்னை என்னுடைய வாழ்க்கையில் எல்லோரும் வெறுத்து ஒதுக்குகிறார்கள். நான் என்ன செய்வது என்று தெரியவில்லை, எனக்கு ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டான். அதற்கு அந்த முனிவன் அவர் கையில் விலை உயர்ந்த மூங்கில் மரத்தின் விதைகளை கொடுத்து இதை நீ வளர்த்து வா, உன் வாழ்க்கையில் நீ முன்னேறுவாய் என்று கூறினாராம். முனிவருடைய வார்த்தையைக் கேட்ட அந்த மனிதன் விவசாயம் செய்து வாழ்க்கையில் முன்னேற போவதாகவும், என்னை எவரும் ஒதுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தோடு அவன்  தன்னுடைய நிலத்தை தயாரித்து, முனிவர் கொடுத்த விதைகளை எடுத்து, அவற்றை பயிரிட்டு வளர்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து நீர் ஊற்றி வந்தான், ஒரு வாரம் கழித்து அவன் விதைத்த அந்த விதைகள் ஒன்றும் முளைக்கவில்லை. இன்னும் சற்று பொறுமையாக தொடர்ந்து நீர் ஊற்றி வந்தான். ஒரு மாதம் கழித்து பார்க்கின்ற பொழுது எவையும் வளரவே இல்லை. இன்னும் சற்று பொறுமையாக அவன் அதை நீரூற்றி வளர்த்தான். ஒரு ஆண்டு ஆனது அப்பொழுதும் அந்த விதைகள் வளரவில்லை. இந்த விவசாயமும் என்னை ஒதுக்கி வைத்து விட்டது. நான் இந்த விவசாயத்தை விட்டுவிட்டு நகரத்திற்கு சென்று வேறு தொழிலை செய்து அதிலே நான் முன்னேறுவேன் என்று கிராமத்தை  விட்டு, விவசாயத்தை விட்டு நகரம் நோக்கிப் பயணித்தான்.

 நகரத்தில் ஏறக்குறைய   நான்கு ஆண்டுகள் பல தொழிலை செய்தான், எந்த தொழிலும் அவனுக்கு கைகூடவில்லை. அதிலெல்லாம் தோல்வியையே கண்டான். இறுதியாகஎனக்கு தொழிலும்  வெற்றியை தரவில்லை. இந்த தொழிலும் என்னை ஒதுக்கி வைத்து விட்டது என்று கூறி நான் மீண்டுமாக கிராமத்துக்கு செல்வேன். மீண்டுமாக என்னுடைய தொழில் விவசாயத்தையே  செய்வேன் என்ற மனநிலையோடு கிராமத்தை நோக்கி பயணித்தான். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முனிவர் கொடுத்த அந்த விதைகள் இரண்டு தளிர்களை  விட்டிருந்ததால் இவனுக்கும் ஒரே ஆச்சரியம்ஒரு வாரம் கழித்து பார்க்கின்ற பொழுது   ஐந்து அடி உயரம் வளர்ந்து இருந்தது

இரண்டு வாரங்கள் கழித்து பார்க்கின்ற பொழுது 10 அடி உயரம் வளர்ந்து இருந்தது. 5 வாரங்கள் கழித்து பார்க்கின்ற பொழுது 35 அடி உயரம் அவை வளர்ந்து இருந்தது. அப்பொழுதுதான் அந்த மனிதனுக்கு புரிந்தது முனிவர் தன்னுடைய வாழ்க்கைக்கு என்ன கூற வருகிறார் என்று. வாழ்க்கையில் எத்தனை பேர் நம்மை ஒதுக்கினாலும், வாழ்க்கையே நம்மை ஒதுக்கினாலும், வாழ்க்கையில் நாம் செய்கின்ற அனைத்தும் நம்மை ஒதுக்கினாலும் நம்பிக்கையோடு காத்திருக்கும் பொழுது வாழ்க்கையில் வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்கும். இது தான் 5 ஆண்டுகள் கழித்து வளரும்  சீன மூங்கில் நமக்கு கூறிச்சென்ற சீன மூங்கில் தத்துவம்.

 இன்றைய நாளிலே இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு கூறுகின்ற உண்மையாக இருக்கின்றது. வாழ்க்கையில் நம்மை யார் ஒதுக்கினாலும், நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், நம்முடைய வாழ்க்கையே நம்மை ஒதுக்கினாலும், நம்பிக்கையோடு நாம் காத்திருக்கின்ற பொழுது, வெற்றி நம்மை நோக்கி வரும். அத்தகையோராய் வாழ  இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு அழைப்பு தருகிறது.

 இன்றைய முதல் வாசகம் எத்தகைய ஒரு சூழ்நிலையிலும் நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்ய நம்மை அழைக்கின்றது. குறிப்பாக நாம் சோர்ந்து போகிற வேளையிலும், நாம் ஒதுக்கப்படுகின்ற வேளையிலும், நம்பிக்கையோடு  இறைவனை நோக்கி நாம் செல்ல  அழைக்கின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல்  பிற இனத்தவராகிய உங்களுக்குச் சொல்கிறேன்யார் யாரெல்லாம் வாழ்க்கையிலே ஒதுக்கப்பட்டு நசுக்கப்பட்டு இருக்கிறார்களோநம்பிக்கையோடு இருக்கின்ற பொழுது ஒதுக்கப்பட்ட அவர்களுக்கு வெற்றி உண்டு என்னும் செய்தியை மீண்டுமாக நம்முன் வைக்கிறார்.

  இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசு கிறிஸ்துவை நாடி வந்திருக்கும்   கானானியப் பெண் மூன்று முறை ஒதுக்கப்படுவதை பார்க்கின்றோம்

 முதன் முதலாக  கானானியப் பெண் "ஐயா தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என் மகள் பேய் பிடித்து கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்" என்று கூறுகின்றபோது இயேசு மறுமொழி கூட சொல்லவில்லை என்பதையும் சீடர்கள் "நமக்கு பின்னால் வருகின்ற அவரை அனுப்பிவிடும்" என்று அவரை முதன் முறையாக ஒதுக்குவதை பார்க்கின்றோம்

 இரண்டாவது முறையாக "இஸ்ரேல் குலத்தில் காணாமல் போன ஆடுகளாய் இருப்போரிடமே  நான் அனுப்பப்பட்டேன்" என்று இயேசு அந்த பெண்ணை குறித்து சீடர்களிடம் கூறி சென்ற பொழுது அவர் இரண்டாவது முறையாக அவரை ஒதுக்கியதை பார்க்கின்றோம்.

        மூன்றாவது முறையாக "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்று மீண்டும் அந்தப் பெண்ணானவள் ஒதுக்கப்படுவதை பார்க்கின்றோம். இந்த மூன்று முறையும் இறைமகன் இயேசு கிறிஸ்து கானானியப் பெண்ணுக்கு வைத்த 3 சோதனைகள்  என்று கூறலாம். ஒவ்வொரு முறையும் வாழ்க்கையில் அவள் ஒதுக்கப்படும் பொழுது, ஒவ்வொரு முறையும் வாழ்க்கையில் அவள் சோதிக்கப்படும் போது, எந்த அளவுக்கு  நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக ஒரு சோதனை. அதனால் தான் "அம்மா உமது நம்பிக்கை பெரிது, நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று கூறி நம்பிக்கையால் ஒதுக்கப்படுவது வாழ்க்கையில் வெற்றி உண்டு என்பதை காட்டுகின்றார்.

 இன்று நாமும் நம்முடைய வாழ்க்கையில் பலரால் ஒதுக்கப்படுவதை உணர்கின்றோம்இது பலமுறை நம்முடைய வாழ்க்கையில் நடக்கின்றது. நாம் நம்முடைய வாழ்க்கையில் எத்தனை முறை  ஒதுக்கப்பட்டாலும்இழிவுப்படுத்தப் பட்டாலும் நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். கானானியப் பெண்  இறைவன் மீது தொடர்ந்து வைத்த அந்த நம்பிக்கையை போல, அன்னை தெரேசா இறைவன் மீது கொண்ட நம்பிக்கை தான் பலமுறை அவர் பலரால் வெறுக்கப்பட்டாலும், ஒதுக்கப்பட்டாலும், என்னை நேசிப்பது இறைவன் என்று இறைவனில் நம்பிக்கை கொள்ள வைத்தது. நாமும் வாழ்க்கையில் பலர் நம்மை ஒதுக்கினாலும், வாழ்க்கையில் நாம் பல முறை தோற்றாலும், நம்பிக்கையில் வளர்வோம். நம்முடைய வாழ்க்கையின் ஒதுக்கல்கள், வெறுப்புகள் மற்றும் இழிவுகள் நம்மை நம்பிக்கையில் வளர செய்யும் என்ற நம்பிக்கையோடு  வாழ்வோம்.

                                     இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.












 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.