Tuesday, June 27, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A)- 02-07-2023- ஞாயிற்றுக்கிழமை


🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(02 ஜூலை  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: 2 அரசர்கள் 4: 8-11, 14-16a
இரண்டாம் வாசகம்: உரோமையர் 6: 3-4, 8-11
நற்செய்தி: மத்தேயு 10: 37-42 

இயேசுவுடையோராக வாழ்வோம் 

        ஒரு முறை சூஃபி ஞானியிடம் ஒருவன், உங்களுடைய வாழ்வின் வழியை உங்களுக்கு காட்டியது யார்? என்று கேட்கிறான். அதற்கு அவரோ ஒரு நாய் என்றார். என்ன நாய் உங்களது வாழ்வின் வழியை காட்டியதா? என்று ஆச்சரியத்தோடு கேட்க அதற்கு அந்த சூஃபி ஞானி, ஒரு நாள் தான் ஆற்றங்கரையில் ஒரு நாயை கண்டதாவும், அந்த நாய் தண்ணீர் தாகத்தோடு இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்ததாகவும் கூறினார். கண்முன் ஆற்றில் தண்ணீர் இருக்க, ஏன் இந்த நாய் இங்கும் அங்குமாக தாகத்தோடு அலைந்து கொண்டிருக்கிறது என்று சற்று அருகே சென்று அவர் பார்த்தாராம். அப்போதுதான் அவருக்குப் புரிந்தது அந்த நாய் தண்ணீரில் தன்னுடைய பிம்பத்தை பார்த்து விட்டு, தன்னை போலவே தண்ணீரில் மற்றொரு நாய் இருப்பதை கண்டு பயந்து தண்ணீர் குடிக்காமல் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்ததென்று. ஒரு கட்டத்தில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் தான் இறந்து விடுவோம் என்று உணர்ந்த அந்த நாய், தன்னுடைய பயம் அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு ஓடி வந்து தண்ணீரில் குதித்தது. தண்ணீர் குடித்து விட்டு மகிழ்ச்சியோடு சென்றது. இப்போது அந்த சூஃபி ஞானி அந்த மனிதரைப் பார்த்து கூறுகிறார். அந்த நாய்க்கு மிகப்பெரிய தடையாக அதுவே இருந்தது, இதைப் போலத்தான் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் நாம் வெற்றி கொள்வதற்கு தடையாக இருப்பது நாமும் நம்மைச் சார்ந்தவைகளும்தான் என்றார். கிறிஸ்தவர்களாகிய நாம் இறைவனை அடைய, அவரில் சங்கமமாக மற்றும் அவருடையோராக மாற நமக்கு தடையாக இருப்பது நாமும் நம்மைச் சார்ந்தவைகளும்தான் என்கிறார் இயேசு கிறிஸ்து. 

இயேசுவுடையோராக வாழ தடைகள்

        இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இயேசுவுடையோராக வாழ அழைப்பு பெறுகிறோம். இயேசுவுடையோர் என்பது இயேசுவை கொண்ட வாழ்வாகும், அதாவது நமது வாழ்வு அவரை மையப்படுத்தியதாக மற்றும் அவர் பிரசன்னம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதாகும். நாம் பெற்ற திருமுழுக்கு இத்தகைய ஒரு வாழ்வை வாழவும், மற்ற திருவருட்சாதனங்கள் இவ்வாழ்வில் நிலைத்திருக்கவும் நமக்கு வழிகாட்டுகிறது. ஆனால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நவநாகரிக சமூக வாழ்வில் கிறிஸ்துவை உடைய ஒரு வாழ்வை வாழ்வதற்கு பல தடைகள் நமக்கு இருக்கின்றன. அவற்றுள் அதிகமான தடைகளுக்கு நாமும் நம்மைச் சார்ந்தவைகளுமே காரணமாக அமைகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு இத்தகைய மூன்று முக்கியமான தடைகளை எடுத்துரைக்கிறார். 

1. உறவுகளோடு வாழ்வு 
2. சிலுவையற்ற வாழ்வு
3. சுயநலமான வாழ்வு 

இத்தடைகளை உடைத்தெறிந்து இயேசுவுடையோராக வாழ அழைப்பு பெறுகின்றோம்.

1. உறவுகளோடு வாழ்வு

        பொதுவாக ஒரு மனிதன் நான்கு வகையான உறவுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அவை,

அ. தன்னோடு உறவு
ஆ. பிறரோடு உறவு
இ. இயற்கையோடு உறவு
ஈ. இறைவனோடு உறவு

            இதில் முதல் மூன்று வகையான உறவுகளுக்கு அடித்தளமாக இருப்பது இறைவன். நாம் நம்மோடும், பிறரோடும் மற்றும் இயற்கையோடும் உறவு கொண்டு வாழ அடிப்படையும் அடித்தளமுமாக இருப்பது இறை உறவு. எனவேதான் இயேசு இத்தகைய உறவுகளைக் காட்டிலும் இறை உறவில் இணைந்திருக்க அழைப்பு தருகிறார். ஆனால் பல வேளைகளில் நாம் இறை உறவை காட்டிலும்  நம்மோடு நம்மைச் சார்ந்த உறவுகளோடும் அதிகம் நிலைத்திருக்கின்றோம். அதனால் அவைகள் இறை உறவுக்கு தடையாக அமைந்து விடுகின்றன. எனவேதான் இன்றைய நற்செய்தியில் இயேசு, அவரைவிடத் தந்தையிடமோ, தாயிடமோ, மகனிடமோ மற்றும் மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோர் அவருடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர் (மத் 10:37) என்கிறார். அதாவது பிறரோடு உள்ள உறவுகளைக் காட்டிலும் இறை உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் போது இயேசுவுடையோராக வாழலாம். பன்னிரெண்டு வயதில்  இயேசு ஆலயத்தில் அறிஞர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது அவரைத் தேடி வந்த தாய் தந்தையரிடம் நீங்கள் ஏன் என்னை தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? (லூக் 2:49-50) என்று கேட்பதில் அவர் இறை உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெளிவாகிறது.

2. சிலுவையற்ற வாழ்வு

        நாம் வாழும் சமுதாயத்தில் எல்லோரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழ ஆசை கொள்கின்றோம், அதனால் வாழ்வின் எத்தகைய சூழ்நிலைகளிலும் துன்பங்களை ஏற்க மறுக்கின்றோம். ஆனால் இயேசு தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர் (மத் 10:38) என்கிறார். இது சிலுவை அன்புக்கு நம்மை அழைத்துச் செல்கிறது, அதாவது துன்ப துயரங்களை, வாழ்வின் சவால்களை ஏற்று வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்வு இயேசுவைக் கொண்டதாக அமையும். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (யோவான் 12:24) நாம் ஏற்கும் துன்பமும், சவால்களும் மற்றும் வேதனையும் நம் வாழ்வின் சிலுவைகள் அச்சிலுவையை சுமந்தால்தான் இயேசுவை நம் வாழ்வாக்க முடியும். “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். (மத் 16:24) என்னும் இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப சிலுவையற்ற வாழ்விலிருந்து சிலுவையோடு வாழ்வு என்னும் நிலைக்கு கடந்து செல்வோம்.

3. சுயநலமான வாழ்வு

        இயேசுவுடையோராக வாழ தன்னலம் என்னும் சுயநலத்தை அகற்றி, பொது நலம் என்னும் பிறர் நலத்தோடு வாழ வேண்டும். அதனால்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தன் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர் என்கிறார். மேலும்,  இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (மத் 10:42) இது இவ்வுலகின் பொருள், பணம், பதவி, பட்டம் ஆகியவற்றைவிட இயேசுவை சார்ந்து வாழ அழைப்பு தருகிறது.
எவரும் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய இயலாது என்பதை உணர்ந்து, வாழ்வின் எல்லா நிலைகளிலும் இவ்வுலகின் அழிந்து போகும் பொருட்களை காட்டிலும் நிலைவாழ்வு தரும் இயேசுவே வாழ்வென உணர்வோம்.

        இன்றைக்கு நம்மை அறியாமலே இறைஉறவுக்கு தடையாக இருக்கும் உறவுகளோடு, சிலுவையற்ற மற்றும் சுயநல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவும், மகிழ்வும் மற்றும் பொருளும் இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை நிரந்தரமல்ல மாறாக இறைவனை கொண்ட வாழ்வே நிரந்தரம் என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். கிறிஸ்துவே வாழ்வின் துவக்கமாகவும், மையமாகவும், முடிவாகவும் மற்றும்  முழுமையாகவும் அமைய இறையருளை வேண்டுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.