பொதுக்காலம் 18ஆம்
வாரம்
(ஆண்டு- A)
02-08-2020
ஞாயிற்றுக்கிழமை
பலுகிப்பெருகுவோம்
"அன்பை பகிரும்போது மகிழ்ச்சி பலுகிப்பெருகும்.
இரக்கத்தை பகிரும் போது ஆறுதல் பலுகிப்பெருகும்.
அறிவை பகிரும்போது ஆற்றல் பலுகிப்பெருகும்.
தன்னம்பிக்கையை பகிரும்போது பலம் பலுகிப்பெருகும்.
நேரத்தை பகிரும்போது நம் வாழ்வே பலுகிப்பெருகும்".
ஆக வாழ்வில் பகிர்தல் என்றுமே பலுகிப் பெருகச் செய்யும். இதைத்தான் திருத்தூதர் பணிகள் 20:35-ல் பவுலடிகளார் "பெற்றுக்
கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு
கூருங்கள்" என்று கூறுகின்றார். இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமது பரிவும்
பகிர்தலும் நம் வாழ்வை பலுகிப் பெருக்கும் என்னும் சிந்தனையை முன்
வைக்கின்றது.
இயேசுவின் பரிவும் - சீடர்களின் பார்வையும்
பகிர்தலுக்கு
அடிப்படையாக இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பரிவு காணப்படுகின்றது.
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு பரிவு கொண்டவுடன் பகிர்வு ஏற்படுகின்றது.
அங்கு நோயாளிகள் குணமாக்கபடுகின்றார்கள். ஆனால் சீடர்களின் எண்ணங்களோ
பரிவில் அல்ல, மாறாக அவர்களை அனுப்பி விட வேண்டும் என்ற ஒரு பார்வையில்
மட்டுமே இருந்தது. பார்வை வெளிப்புற அடையாளம், பரிவு உட்புற அடையாளம்.
இயேசு உட்புற அடையாளத்தை கண்டுகொண்டார் சீடர்கள் வெளிப்புற அடையாளமான
பார்வையிலே இருப்பதைப் பார்க்கின்றோம் அதனால்தான் சீடர்களின் பார்வை
அவர்களை அனுப்பி விடவேண்டும் என இருந்தது. இயேசுவின் இயேசுவின் பரிவு
பகிர்தலை உண்டாக்கியது.
இயேசுவின் அக்கறையும்- ஏரோதின் அநீதியும்
இன்றைய
நற்செய்தி காணப்படும் மத்தேயு பதினான்காவது அதிகாரத்தில் ஏரோது ஒரு
விருந்து ஒன்று தருவதை பார்க்கின்றோம். இன்றைய நற்செய்தியிலும் இறைமகன்
இயேசு கிறிஸ்து விருந்து ஒன்றை தருகின்றார். ஏரோது தந்த விருந்து
மாளிகையில், இயேசு தந்த விருந்து புல்தரையில். ஏரோது தந்த விருந்து
அநீதியின் அடையாளமாக அமைந்தது. இயேசு தந்த விருந்து அவர் அக்கறையின்
அடையாளமாக அமைந்தது. அநீதி ஒருவரைக் கொன்றது, இயேசுவின் அக்கறை பலரை வாழ
வைத்தது. ஏரோதின் விருந்து அநீதியில் முடிந்தது, இயேசுவின் விருந்து பரிவில், பகிர்வில் நிறைவேறியது, பலரை வாழ வைத்தது.
பலுகிப் பெருகிட அழைப்பு
பழைய
ஏற்பாட்டில் ஆபிரகாம் கொண்ட நம்பிக்கை, ஆபிரகாம் என்னும் ஒரு மனிதர் ஒரு
இனமாக உருவாகும் அளவுக்கு பலுகிப் பெருகச் செய்தது. கிறிஸ்து என்னும் ஒரு
மனிதனின் வாழ்வு, இன்று 2.4 மில்லியன் கிறிஸ்தவர்களை உலகமெங்கும் பலுகிப்
பெருகச் செய்திருக்கின்றது. அன்னை தெரேசா என்னும் ஒரு சகோதரியின் வாழ்வு,
இன்று ஆயிரக்கணக்கான அருட் சகோதரிகளாக பலுகிப் பெருக செய்திருக்கின்றது.
அவருடைய சேவை, இன்று பல சேவைகளாக அகில உலகமெங்கும் பலுகிப் பெருகி
இருக்கின்றது. இன்று நமது வாழ்வும் நம்முடைய குணங்களும் பலுகிப் பெருக நாம்
அழைப்பை பெறுகின்றோம்.நிலத்தில்
விதைத்த விதைகள் 30, 60 மற்றும் 100 மடங்குகளாக பலுகிப் பெருகுவதை
பார்க்கின்றோம். 5 மற்றும் 2 தாலந்தை பெற்றவர்கள் அதை இன்னும் அதிகமாக
பலுகிப் பெருக்கியதை பார்க்கின்றோம். எனவே நாம் நம்மிலே இருப்பதை
பயன்படுத்துகின்ற போது, அதை பகிர ஆரம்பிக்கின்ற போது, அது மென்மேலும்
பலுகிப் பெருகுவதை நாம் பார்க்கின்றோம்.
அன்பார்ந்தவர்களே, நம்மிடையே
இருப்பதை பகிரும் பொழுது அது பலுகிப் பெருகும். தொடக்கநூல் 18: 1-4 -ல்
ஆபிரகாம் உணவு அளிக்கின்ற போது குழந்தை பாக்கியம் பெறுகின்றார். 1
அரசர்கள் 17 :8 -16 -ல் சாரிபாத்து கைம்பெண் உணவு அளிக்கின்ற போது
தொடர்ந்து எண்ணையும், மாவும் குறைபடாமல் பலுகிப் பெருகுகின்றது. இறைவன்
நமக்கு எண்ணற்ற திறமைகளை, திறன்களை மற்றும் குணநலன்களை
கொடுத்திருக்கின்றார். இவை அனைத்தும் நாம் மற்றவர் இடையே பகிர்கின்ற போது
அது பலுகும். இன்று, நாமும், நம் வாழ்வும், குணங்களும், திறன்களும் மற்றும்
திறமைகளும் பலுகிப் பெருக இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகின்றது.
நம்மையும் நம் வாழ்வையும் பலுகிப் பெருகுவோம்.
இறை ஆசிர் பெறுவோம்.
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்.