🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(05 பிப்ரவரி 2023, ஞாயிறு)
வழங்குபவர்
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை
முதல் வாசகம்: எசாயா 58: 7-10
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 2: 1-5
நற்செய்தி: மத்தேயு 5: 13-16
உப்பும் ஒளியும் காட்டும் சீடத்துவம்
பொதுக்காலத்தின் ஐந்தாவது ஞாயிற்றுக் கிழமையின் இறைவார்த்தை வழிபாடு இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உப்பாகவும் மற்றும் ஒளியாகவும் பிறருக்கு திகழ்வதே கிறிஸ்துவின் சீடத்துவ வாழ்வு என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கின்றது. இயேசு பயன்படுத்தும் இந்த இரண்டு உருவகங்களும் நாம் நன்கு அறிந்தவையே ஆகும். நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற உப்பு மற்றும் ஒளி என்னும் இந்த இரண்டு உருவகங்களின் குணங்களை சிந்தித்து அவை சீடத்துவ வாழ்விற்கு எடுத்துரைக்கின்ற பண்புகளை நமதாக்க அழைப்பு பெறுகின்றோம்.
உப்பும் சீடத்துவமும்
உப்பிற்கென்று பல குணங்கள் உண்டு. நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். (மத்தேயு 5:13) என்னும் இன்றைய நற்செய்தியின் வார்த்தைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு உப்பின் குணமும் நம்மை அர்த்தமுள்ள கிறிஸ்தவ சீடத்துவ வாழ்வுக்கு அழைப்பு தருகிறது.
1. உப்பு தனித்துவமானது:
சமையலுக்கு நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது உப்பு. வேறு எதிலும் கிடைக்காத தனித்துவமான சுவையை தன்னகத்திலே கொண்டுள்ளது. இது பயன்பாட்டிற்கு ஏற்றவாறு சுவையை தருகிறது. கிறிஸ்தவ சீடத்துவ வாழ்வுக்கு அழைக்க பெற்ற நாம் ஒவ்வொருவரும் மாறி வருகின்ற இந்த மாய உலகின் ஆசைகளில் மூழ்காதவாறு தனித்துவமிக்கவர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம்.
2. உப்பு பாதுகாப்பது:
பதப்படுத்தப்படுவதற்கும் கெட்டுப் போகாமல் இருப்பதற்கும் நாம் அதிகம் பயன்படுத்துவது உப்பு. இது பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாப்பது மட்டுமல்லாமல் சுத்தமும் செய்கிறது. இயேசுவின் சீடர்களாக வாழுகின்ற நாம் ஒவ்வொருவரும் பிறரை தவறான வழியிலிருந்து பாதுகாக்கவும் மற்றும் அனைவரையும் தூய வாழ்வுக்கு அழைத்து செல்லவும் அழைக்கப்படுகின்றோம்.
3. உப்பு சுவையூட்டுவது:
"உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்னும் சொல்லாடலுக்கு ஏற்ப நாம் உண்ணும் உணவுக்கு சுவையூட்டுகிறது உப்பு. இதைப் போல கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்து என்னும் சுவையை பிறருக்கு நம் சொல்லாலும், செயலாலும் மற்றும் வாழ்வாலும் அளிப்பதே உண்மையான சீடத்துவமாகும்.
4. உப்பு ஊடுருவுவது:
சமையலுக்கு நாம் பயன்படுத்தும் உப்பு உணவோடு ஒன்றாக கலந்துவிடுகிறது. தன்னை அழித்து, உணவின் உருவத்தை ஏற்று எங்கும் ஊடுருவியிருக்கும் உப்பை போல கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் செல்லும் இடமெல்லாம் கிறிஸ்துவையும் மற்றும் அவர் தருகின்ற நற்செய்தியின் விழுமியங்களையும் பறைசாற்றுபவர்களாக இருக்க வேண்டும்.
5. உப்பு மலிவானது:
சமையலுக்கு பயன்படுத்தப்படும் எத்தனையோ பொருட்கள் மிக அதிகமான விலையில் விற்கப்பட்டாலும் ஒரு காலமும் உப்பு அதிக விலைக்கு விற்கப்பட்டதில்லை. அதே வேளையில் உப்பில்லாமல் எவரும் சமைத்ததும் இல்லை. இத்தகைய அத்தியாவசியமான பொருளான உப்பு எப்போதும் மலிவாக எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இருக்கிறது. இந்த உலகிற்கு உப்பாய் இருக்க அழைக்கப்படுகின்ற கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் எல்லோரையும் சென்று அடைபவர்களாக இருக்க வேண்டும். நம் வழியாக கிறிஸ்துவும் கிறிஸ்துவின் மதிப்பீடுகளும் எல்லோரையும் சென்றடைய வேண்டும்.
6. உப்பு திரும்ப பெற முடியாதது:
உப்பை ஒரு முறை நாம் சமையலுக்கு பயன்படுத்தி விட்டால், அதை மற்ற காய்கறிகளைப் போலவோ அல்லது பருப்பை போலவோ தனியே பிரித்தெடுக்க முடியாது. அதேபோல நமது கிறிஸ்தவ சீடத்துவ வாழ்வு ஒருபோதும் நம்மிலிருந்து பிரித்தெடுக்க முடியாததாக அமைய வேண்டும், மற்றும் நாம் பிறருக்கு எடுத்துரைக்கின்ற கிறிஸ்துவும் அவரின் மதிப்பீடுகளும் மற்றவர்களிடமிருந்து பிரித்தெடுக்க முடியாததாக அவர்களுக்கு சென்று சேர வேண்டும்.
ஒளியும் சீடத்துவமும்
விவிலியத்தில் ஒளி இறைவனையும் (1 யோவான் 1:5) மற்றும் இயேசுவையும் ( யோவான் 8:12/9:5) சுட்டிக் காட்டுகிறது என்பதை நாம் அறிவோம். ஏனெனில் “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்”.(யோவான் 8:12) என இயேசுவே எடுத்துரைக்கிறார். மேலும் "என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்." (யோவான் 12:46) என தன்னை ஒளியாக அடையாளப்படுத்தியது மட்டுமல்லாது பிறரையும் அவ்வொளியில் வழி நடத்துவேன் என்கிறார். இன்றைக்கு அவ்வொளியின் மக்களாக நாம் வாழ்ந்திட "நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்." (மத்தேயு 5:14) என்கிறார். ஒளியின் குணங்களை தமதாக்கி கிறிஸ்துவின் சீடத்துவத்தில் வாழ அழைக்கப்படுகின்றோம்.
1. ஒளி பிராகாசிப்பது:
ஒளி என்றாலே அது பிரகாசிக்கும், தனது பிரகாசிக்கும் தன்மையை ஒருபோதும் தன்னிலே வைப்பதில்லை. தன்னை சுற்றியிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் அது கொடுக்கிறது. இன்றைக்கு நாமும் மரக்காலுக்குள் உள்ள விளக்காக அல்லாது, விளக்குத் தண்டு மற்றும் மலைமேலிருக்கும் நகர் போல, சுயநலமில்லாத ஒளியாய் பிறருக்கு வாழ்வு தந்து நம்மை அர்ப்பணிக்கும் சீடத்துவ வாழ்வை வாழ்வோம்.
2. ஒளி ஊடுருவுவது:
ஒளி கண்ணாடியிலும் மற்றும் தண்ணீரிலும் ஊடுருவி செல்கின்ற தன்மை கொண்டது. ஒளியின் மக்களாக வாழ அழைக்கப்பட்ட நாம் எவ்வாறு ஒளியாம் இயேசு கிறிஸ்து மனித மனங்களில் ஊடுருவி இறையாட்சியை பறைசாற்றினாரோ அதேபோல நாமும் இவ்வுலகின் எல்லா இடங்களிலும் மற்றும் மனித மனங்களிலும் ஊடுருவி இறையாட்சியை எடுத்துரைக்க அழைப்புப் பெறுகிறோம்.
3. ஒளி வழிகாட்டுவது:
கரையிலிருக்கும் கலங்கரை விளக்கு கடலிலிருக்கும் கப்பலுக்கு கரையை நோக்கி வருவதற்கு வழி காட்டுவது போல, இயேசுவின் சீடர்களான நாம் பாவ குழியில் விழுந்து இறை வழியை மறந்து வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு ஒளியாக திகழ்ந்து புது வழியை காட்ட முயற்சிப்போம்.
4. ஒளி பாதுகாப்பது:
ஒளி இருளையும் இருளிலிருக்கும் தீயதையும் சுட்டிக்காட்டி நம்மை பாதுகாப்பது போல இயேசுவின் சீடத்துவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இருளான இவ்வுலகின் மாயைகளையும் மற்றும் கவர்ச்சிகளையும் பிறருக்கு சுட்டிக்காட்டி அவர்களை பாதுகாப்போம். "ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்." (எபேசியர் 5:8) என்னும் இறை வார்த்தைக்கு ஏற்றவாறு அவர்கள் வாழ கிறிஸ்து என்னும் ஒளியில் அவர்களை வழிநடத்துவோம்.
5. ஒளி வித்தியாசப்படுத்துவது:
தண்ணீரில் மிதக்கும் எண்ணெய் போல இவ்வுலகில் எது இருள் மற்றும் எது ஒளி என வித்தியாசப்படுத்துவது ஒளியாகும். இதுவே சரியானவற்றையும் மற்றும் தவறானவற்றையும் பிரித்துக் காட்டுகிறது. “இன்னும் சிறிது காலமே ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்கள்மேல் வெற்றி கொள்ளாதவாறு ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்து செல்லுங்கள்." (யோவான் 12:35) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் ஒளியின் பாதையில் நடப்போம்.
6. ஒளி கவர்ந்திழுப்பது:
பொதுவாகவே ஒளியை நோக்கி நடக்கவும் மற்றும் ஒளியிருக்கின்ற இடத்தில் வாழவும் நாம் ஆசைப்படுவோம். ஒளி மனிதர்களை மட்டுமல்லாது சிறிய பூச்சிகளை கூட அதனை நோக்கி வர கவர்ந்திழுக்கும் குணம் கொண்டதாகும். "ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது." (எபேசியர் 5:9) எனும் இறைவார்த்தைக்கேற்ப இவ்வொளியை நோக்கி எல்லோரும் கவர்ந்திழுக்கப்பட, நீதியிலும் மற்றும் உண்மையிலும் வளர நாம் ஒளியின் தூண்களாய் மாறுவோம்.
அன்பார்ந்தவர்களே, இறைமைந்தன் இயேசு கிறிஸ்து ஏதோ எடுத்துக்காட்டிற்காக உப்பையும் மற்றும் ஒளியையும் பயன்படுத்தவில்லை. மாறாக அதனுள்ளிருக்கும் ஆழமான பண்புகளை உணர்ந்து அதன் வழியாய் நாம் சீடத்துவத்தில் வளர மற்றும் வாழ இவற்றை பயன்படுத்துகிறார். எனவே இத்தகைய பண்புகளை நமதாக்கி நாளும் இயேசுவின் சீடத்துவத்தில் வாழ்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.