Saturday, August 13, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 20-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 14 -08-2022- ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம் : எரேமியா 38: 4-6, 8-10
இரண்டாம் வாசகம் :
எபிரேயர் 12: 1-4
நற்செய்தி : லூக்கா 12:49-53

"மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன்"

ஆதிமனிதனின் முதல் கண்டுபிடிப்புக்கு அடித்தளமாக இருந்தது கற்கள். கற்களைக் கொண்டுதான் மனிதன் அன்று முதல் கருவிகளை மற்றும் சக்கரத்தை கண்டுபிடித்தான். மேலும் இந்த கற்களை உரசுகின்ற போது அவன் நெருப்பையும் கண்டு கொண்டான். நெருப்பு மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது, ஏனென்றால் இந்த நெருப்பு தான் மனிதன் தன்னை விலங்குகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பயன்பட்டது, மனிதனின் வாழிடத்தை காட்டிக் கொடுத்தது, இரவிலும் பணி செய்ய விளக்கை கண்டுபிடிக்க காரணமாயிருந்தது மற்றும் இதே நெருப்பு தான் மனிதன் உண்ட இறைச்சியையும் மற்றும் காய்களையும் சுட்டு மற்றும் சமைத்து சாப்பிடுவதற்கு அடிப்படையாக இருந்தது. ஆக, நெருப்பு ஆதிமனிதனுக்கு நாகரிக வளர்ச்சியின் துவக்கமாக அமைந்தது என்று கூறலாம். இன்றைக்கு இதே நெருப்பு தான் நம்முடைய வாழ்க்கையிலும் பல மாற்றங்களை செய்து கொண்டிருக்கின்றது. பொதுக்காலத்தின் 20-வது ஞாயிற்று கிழமையாகிய இன்றைய இறைவார்த்தை வழிபாடு கிறிஸ்தவ வாழ்வை புதுப்பிக்க கிறிஸ்து அளிக்கும் நெருப்பை அதாவது தீயை நம்முன் வைக்கின்றது.

இன்றைய நற்செய்தியை வாசிக்கின்ற போது இயேசுவின் வார்த்தைகள் நம் ஒவ்வொருவரையும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்குகிறது. இயேசுவின் பிறப்புக்குப் பிறகு "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" என்று வானதூதர்கள் புகழ்ந்து பாடினார்கள் (லூக்கா 2: 13-14). இயேசு தம் சீடர்களை இருவர் இருவராக பணிக்கு அனுப்புகின்ற பொழுது, நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் அவர்களுக்கு வாழ்த்து கூறுங்கள். நீங்கள் கூறும் அமைதி அவர்கள் மேல் தங்கட்டும் என்கிறார் (மத்தேயு 10:12-13). இயேசு"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்." (யோவான் 14:27) மற்றும் "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்"( மத்தேயு 5:9) என்று பறைசாற்றுகிறார். இயேசு தன் உயிர்ப்புக்கு பிறகு சீடர்களை சந்திக்கின்ற பொழுதெல்லாம் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்கிறார். இவ்வாறாக அவருடைய பிறப்பு, பணி வாழ்வு மற்றும் உயிர்ப்புக்கு பிறகு உள்ள காட்சிகள் அனைத்தும் இயேசு அமைதியை பறைசாற்றுபவர் என்பதை காட்டுகிறது. பிறகு ஏன் இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தைகள் "மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன்", "அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்" என்கிறது. இன்றைய நற்செய்தியின் பகுதிக்கும் அதனைத் தொடர்ந்துள்ள மற்ற பகுதிகளுக்கும், இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த மூன்று தவறான எண்ணங்கள் காரணங்களாக அமைகின்றது.
1. மெசியா மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த மட்டுமே வந்தார்.
2. மெசியா இன்னும் வரவே இல்லை.
3. மனிதன் கடவுளோடு அமைதி ஏற்படுத்த தேவையில்லை.

அதுமட்டுமல்லாது, இயேசு இம்மண்ணுலகில் நீதியை நிலைநாட்டி இறையாட்சியை அறிவிக்க விரும்பினார்‌, எனவே தான் தீ மூட்ட வந்தேன் என்கிறார். இங்கு இயேசு எடுத்துரைக்கின்ற தீ, நன்மையிலிருந்து தீமையை பிரித்தெடுக்கும் மற்றும் பயனுள்ளதிலிருந்து பயனற்றவையை பிரித்தெடுக்கும், இது தான் இயேசு எடுத்துரைக்கும் பிளவுமாகும். இறுதி நாளில் நீதியின் அரசராக நன்மை செய்தோரையும் மற்றும் தீமை செய்தோரையும் பிரித்தெடுத்து நீதியை நிலைநாட்டி, உண்மையான அமைதியை தரும் இறையாட்சியை அமைக்கின்றார்.

விவிலியத்தில் "தீ" என்னும் வார்த்தை பல அர்த்தங்களை எடுத்துரைக்கிறது.

1. இறை பிரசன்னம்:
பழைய ஏற்பாட்டில் இறைவன் மோயீசனை அழைக்கின்ற போது எரியும் முட்புதரில் தன்னுடைய பிரசன்னத்தை வெளிப்படுத்துகிறார் (விப 3:1-10). இங்கு "தீ" இறைபிரசன்னத்தின் அடையாளமாக மாறுகிறது.
2. இறைத்தூய்மை:
இறைவன் எசாயாவை அழைத்த போது நான் தூய்மையற்ற உதடுகளை கொண்டிருக்கின்றேன் என்று அவர் கூறியபோது, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது,” என்றார் ஆண்டவர் (எசாயா 6:7). இங்கு "தீ" இறைத்தூய்மையின் அடையாளமாக இருக்கிறது.

3. இறை வல்லமை(தூய ஆவி)
புதிய ஏற்பாட்டில் திருமுழுக்கு யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்." (லூக்கா 3:16) என கூறுவது "தீ" தூய ஆவியின் இறைவல்லமையின் அடையாளமாக இருக்கிறது. பெந்தகோஸ்து பெருவிழாவின் போது நெருப்பு நாவுகளின் உருவில் இறங்கி வந்த தூய ஆவி சீடர்களுக்கும், அன்னை மரியாவுக்கும் இறை வல்லமையை தருவதை பார்க்கின்றோம். ( திபணி 2:3)

4. இறைத்தீர்ப்பு:
"தீ" இறைத்தீர்ப்பின் அடையாளமாகவும் அமைகிறது. "நற்கனி தரா மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்” (லூக்கா 3:9) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் இறைவன் தீமையை, பயனற்றதை, நற்கனி தரா மனிதர்களை என யாவற்றையும் தீயிலிட்டு அழித்து நீதியையும் மற்றும் நிரந்தர நிலையான அமைதியையும் மண்ணுலகில் நிலைநாட்டுவார்.

கிறிஸ்து ஏற்படுத்தும் தீயும் நமது வாழ்வும்

ஆக கிறிஸ்து இம்மண்ணில் தீயை மூட்ட வந்தேன் என்று கூறுகின்ற பொழுது, மண்ணுலகம் எங்கும் இறைபிரசன்னத்தை பரப்புவதற்காக, மனிதர்களின் பாவங்களை மற்றும் தீமைகளை நீக்கி தூய்மை படுத்துவதற்காக, தூய ஆவியின் இறைவல்லமையை நமக்கு தருவதற்காக மற்றும் நமது வாழ்வை நீதித் தீர்ப்பீடுவதற்காக வந்திருக்கிறார் என்பது அர்த்தமாகும். எனவே, இன்றைக்கு நமது வாழ்வை சோதித்தறிவோம். நமது வாழ்வில் நாம் செய்த பாவங்களை, தீமைகளை நமது தவறான எண்ணங்களை, பேச்சுகளை மற்றும் செயல்களை இறைவன் பாதத்தில் அர்ப்பணித்து, கிறிஸ்துவின் "தீ" நம்மை தூய்மைப்படுத்தவும், இறை வல்லமையும் இறைபிரசன்னமும் நமது வாழ்வை நிறைக்க, அதனால் நாம் இறைவனின் நீதி தீர்ப்புக்கு உள்ளாக நம்மையும் நம் குடும்பத்தாரையும் முழுவதுமாக தயார் செய்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

       காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)


காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...(ஆங்கிலம்)