Saturday, June 27, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 28-06-2020 - பொதுக்காலம் 13ஆம் வாரம் ( ஆண்டு- A)

பொதுக்காலம் 13ஆம் வாரம் ( ஆண்டு- A)

28-06-2020

ஞாயிற்றுக்கிழமை.

 

 

இறை உறவு; நிலா உறவா? நிலையான உறவா?

 

            கல்லூரி ஒன்றில் பேராசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவனைப் பார்த்து உனக்கு திருமணம் ஆகும்போது எப்படிப்பட்ட பெண் உனக்கு தேவை என்று கேள்வி கேட்டாராம். அதற்கு அந்த மாணவன் எனக்கு நிலா மாதிரி பெண் வேண்டும் என்று கூறினான். உடனே பேராசிரியர், நிலா மாதிரி அப்படி என்றால் அமைதியான ஒரு பெண் உனக்கு தேவையா? என்று கேட்க, அதற்கு இல்லை  என்று கூறினாராம். உடனே மீண்டும் பேராசிரியர், அப்படியானால்  நிலா வெண்மையாக இருக்கும்,  வெள்ளை நிறத்தொரு ஒரு பெண் வேண்டுமா? என்று கேட்க, அதற்கு இல்லை என்று கூறிய அந்த மாணவன் யோசித்து,  நிலா  இரவில் மட்டும் வரும் ஆக இரவில் மட்டும் எனக்கு தேவைப்படுகின்ற ஒரு பெண் வேண்டும் என்று கூறினானாம். அன்பார்ந்தவர்களேஇன்று நம்முடைய உறவுகள் இப்படித்தான் இருக்கின்றது. நம்முடைய உறவுகள் சுயநலமான உறவுகளாக, நம்முடைய தேவைக்கு பயன்படுகின்ற உறவுகளாக இருக்கின்றது. இப்பேற்ப்பட்ட உறவு தான் நாம் இறைவனிடம் கொண்டிருக்கின்ற உறவு. நம்முடைய உறவானது என்றும் நிலையான உறவாக, பொதுநல உறவாக, அழியா உறவாக அது இறை உறவாக இருக்க இன்றைய இறை வார்த்தை நமக்கு அழைப்பு தருகிறது.

 

இறை உறவும் - இரத்த உறவும்

 

  இன்று  நம்முடைய உறவு இரத்த உறவு. இந்த இரத்த உறவை விட,  மேலான இறை உறவில் நிலைத்திருக்க இன்றைய   நற்செய்தி  வாசகம் நமக்கு "என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்." (மத்தேயு 10:37) இவ்வாறு அழைப்பு தருகின்றது. இன்று நாம் இரத்த உறவுகளுக்கு முக்கியம் கொடுத்து, இறை உறவை மறந்து கிடக்கின்றோம். பல வேளைகளில் நமது இரத்த உறவுகள் தான் எனக்கு எல்லாமே என்று நினைக்கின்றோம். நம்முடைய மனித உறவுகளுக்கு மேலான ஒரு இறை உறவில் நாம் நிலைத்திருக்க இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகின்றது.

 

 

இதைத் தான் இறைமகன் இயேசு கிறிஸ்து இவ்வாறு  "விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” (மத்தேயு 12:50) தன்னுடைய பெற்றோர்களிடம்  குறிப்பிடுகின்றார்.

 

அழியும் உறவும் - அழியா உறவும்

 

மண்ணுலகின் இரத்த உறவுகள் அனைத்தும் அழிந்து போகக்கூடிய உறவுகளாக இருக்கின்றது. அவை அனைத்தும் நிலையற்ற உறவுகள் ஆனால் நிலையான என்றுமே அழியாத ஒரு உறவு என்றால் அது இறை உறவுதான். இறைவனோடு நாம் கொண்டிருக்கின்ற உறவு நம்மை வாழ வைக்கின்ற உறவு அது என்றும் நிலையாக, என்றுமே அழியாத ஒரு உறவாக இருக்கின்றது. இதைத்தான்விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.” (யோவான் 6:51) நாம் பார்க்கின்றோம்.  எனவே வாழ்வு தருகின்ற, நிலையான உணவான இந்த இயேசு என்னும் இறை உறவில் நாம் இணைந்திருக்க இன்றைய இறைவார்த்தை நமக்கு மீண்டுமாக அழைப்பு தருகிறது.

 

சுயநல உறவும் - பொதுநல உறவும்

 

மண்ணுலகின் இன்றைய உறவுகள் அனைத்தும் சுயநல உறவாக இருக்கின்றது. எல்லா உறவும் தனக்காக ஆதாயம் பெற்றுக்கொள்ள தேடுகின்ற ஒரு உறவாக இருக்கின்றது ஆனால் இறைவனுடைய உறவு, இறைமகன் இயேசு கிறிஸ்துவோடு நாம் கொள்ளுகின்ற  உறவு பொதுநல உருவாக இருக்கின்றது. பொதுநல உறவு என்று சொல்லுகின்ற பொழுது அங்கு மேலான அன்பும் தியாகமும் நிறைந்து இருக்கும்.

 இறைமகன் இயேசு கிறிஸ்துவினுடைய உறவு அன்பும், தியாகமும் நிறைந்த உறவாக இருக்கின்றது. அது தான் பொது நலனுக்காக, தன்னையே முழுவதுமாக அர்ப்பணித்த ஓர் உறவு.

அத்தகைய ஒரு இறை உறவில் இணைந்திட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" (யோவான் 15:13) "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16) இவை நமக்கு இறைவனுடைய பொதுநல உறவை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. நாம் கூறுகின்ற இந்த மனித உறவுகள் அனைத்தும் சுயநல உறவாகவே இருக்கின்றதுஇன்றைய முதல் வாசகம் சூனோமைச் சேர்ந்த பணக்கார பெண் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றாலும் இறைவாக்கினருக்கு  உதவுவதை, பொதுநலத்தோடு இறை உறவில் இணைய முயல்வதை நாம் பார்க்கின்றோம்.

இத்தகைய தியாக உறவோடு நாம் வாழவேண்டும் என்று இன்றைய நற்செய்தி வாசகம்   இறை உறவில் இணைய நம்முடைய வாழ்வின் சிலுவையை சுமந்து செல்லவேண்டும் என்று நமக்கு அழைப்பு தருகிறது. இன்று சுயநல உறவைத் தேடி நாம் செல்லுகின்றோமா? அல்லது பொதுநல உறவைத் தேடி செல்லுகின்றோமா?  சிந்தித்துப் பார்ப்போம்

 

இன்றைய உறவு 

 

இன்று சமுதாயத்தில் நாம் பார்க்கின்ற உறவுகள் அனைத்தும் நிலையற்றதாக, அழிந்து போகக்கூடிய, சுயநலம் உள்ள உறவுகளாக இருக்கின்றது. என்றுமே அழியா, நிலையான, வாழ்வு தரக்கூடிய இறை உறவு.  அந்த இறை உறவில்  நாம் இணைய அழைக்கப்படுகின்றோம். சில நாட்களுக்கு முன்பு நான் வாசித்த பொழுது நான்கு விதமான உறவுகளைப் பற்றி அறிந்தேன்.

1. செங்கல் உறவு

2. பறவை உறவு

3.  தேனீக்கள் உறவு 

4. வண்ணத்துப்பூச்சி 

 

 

செங்கல் உறவு

 

செங்கல் உறவு ஆனது எங்கு வைக்கப் படுகின்றதோ, அங்குதான் இருக்கும். சில உறவுகள் இப்பேர்ப்பட்ட உறவுகளாக தான் இருக்கிறது. செங்களைப் போல யாரிடமும் பழகாமல்,  நாமும் சென்று அவர்களிடம் பேசினாலும் அந்த உறவுகள் நம்மிடையே பேசாத உறவுகளாக இருக்கின்றது. இப்பேர்ப்பட்ட உறவுகளை தான் செங்கள் உறவு என்று நாம் கூறுகின்றோம்.

 

பறவை உறவு

 

 "இனம் இனத்தோடு சேரும்" என்பதைப்போல பறவை தன்னுடைய இனத்தோடு மட்டும்தான் வாழுமாம். அதுபோல சில உறவுகள் தன்னுடைய விருப்பங்களுக்கு ஏற்றார்போல இருக்கின்ற சிலரோடு மட்டும் பழகுகின்ற உறவுகளாக இருக்கின்றார்கள். தனக்கு எது ஆசையாக இருக்கின்றதோ, தனக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களோடு மட்டும் பழகுகின்ற சில உறவுகளை தான் நாம் பறவை உறவு என்று கூறுகின்றோம்.

 

 

 

 

தேனீக்கள் உறவு

 

தேனீக்கள் தன் கூட்டோடு இருக்கின்ற தேனீக்களோடு நல்ல உறவோடு இருக்குமாம் ஆனால் அருகாமையில் இருக்கின்ற, வேறு ஒரு கூட்டில் இருக்கின்ற தேனீக்களை ஒருபோதும் தன் கூட்டில் தேனீக்கள் சேர்க்காதாம். இத்தகைய உறவு தனது குடும்பத்தில் உள்ள எல்லோரையும் சேர்த்து அணைத்துக் கொள்ளுகின்ற சிலர்  இருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் ஒருபோதும் அக்கம் பக்கத்து குடும்பத்தில் இருக்கின்ற, சமூகத்தில் இருக்கின்ற, உறவுகளை சேர்த்துக் கொள்ளவே மாட்டார்கள். இத்தகைய உறவுகளை தான் நாம் தேனீக்களைப் போல உள்ள உறவுகள் என்று கூறுகின்றோம்.

 

பட்டாம்பூச்சி உறவு

 

பட்டாம்பூச்சிகள் எல்லாரிடமும் எல்லா பூக்களிடமும் சென்று தேனைப் பருகும் தேநீர் பருகிவிட்டு மகரந்தச் சேர்க்கைக்கு உதவுமாம். பட்டாம் பூச்சிகளைப் போல, இன்று சில உறவுகள் எல்லோரிடமும் பழகுகின்ற,  உதவி செய்கின்ற உறவுகளாக இருக்கின்றது. அத்தகைய உறவை தான் இறை உறவு என்று நாம் கூறுகிறோம். இன்று  பட்டாம் பூச்சியைப் போல உள்ள இறை உறவில் இணைய  அழைப்பு பெறுகிறாய். அதுதான் இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு கொடுக்க கொடுக்கின்ற செய்தியாக இருக்கின்றது. எல்லா வேளையிலும் கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்க, இணைத்திருக்க இறையுறவில் நிலைத்திருக்க நமக்கு அழைப்பு தருகிறது.

 

இன்று நாம் இந்த நான்கு வகை உறவுகளில் எத்தகைய உறவை சார்ந்தவர்களாக நாம் இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம். பட்டாம் பூச்சியைப் போல இறை உறவில் இணைகின்ற, இறை உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களாக  மாறுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.












 

 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

 

கும்பகோணம்.