🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(23 அக்டோபர் 2022, ஞாயிறு)
முதல் வாசகம்: சீஞா 35: 12-14, 16-18
இரண்டாம் வாசகம்: 2 திமொ 4: 6-8, 16-18
நற்செய்தி: லூக் 18: 9-14
தாழ்ச்சியோடு ஜெபிப்போம்
புகழ்பெற்ற ஓவியன் தன் குடும்பத்தாரோடு திரைப்படத்துக்கு சென்றான். அரங்கில் கூட்டமே இல்லை. வெறும் நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஓவியர் உள்ளே நுழைந்ததும், நான்கு பேரும் கரவொலி எழுப்பினர். கலைஞனுக்கு ஒரே மகிழ்ச்சி. என் பெருமையைப் பார்த்தாயா? என் படைப்புகளை பாராட்டுவதற்கு மக்கள் இருக்கிறார்கள் என பெருமகிழ்ச்சியோடு தன் மனைவியிடம் கூறினார். அப்போது ஒருவர் ஓடிவந்து கை குலுக்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த கலைஞன் அவரிடம், நீங்கள் என் ரசிகரா? என கேட்டான். உடனே அவர் போங்க சார், நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. இன்னும் 5 பேர் வந்தால் மட்டுமே படம் போடுவோம். இல்லையென்றால் கிடையாது என சொல்லி விட்டார்கள். அந்நேரத்தில் நீங்கள் வந்தீர்கள்? அதனால் தான் மகிழ்ச்சியில் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன், என்றார். இந்த கலைஞனை போலவே நாமும் பல நேரங்களில் தற்பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தற்பெருமையையும், ஆணவத்தையும் அகற்றி தாழ்ச்சியோடு இறைவேந்தல் செய்யவும் மற்றும் வாழ்வும் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு அழைப்பு தருகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு மனிதர்கள் ஜெபிப்பதை பார்க்கின்றோம். ஒருவர் வரிதண்டுபவர் மற்றொருவர் பரிசேயர், இவர்கள் இருவர் ஜெபத்திலும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும் ஆலயத்திற்கு சென்று இறைவனிடம் ஜெபிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஜெப உணர்வு வித்தியாசப்படுகிறது, பரிசேயரின் ஜெபத்தில் ஆணவமும், சுயநலமும் மற்றும் தற்புகழ்ச்சியும் இருந்தது. வரிதண்டுபவரின் ஜெபத்தில் தாழ்ச்சியும் தன்னிலையை உணர்ந்தமையும் இருந்தது. இங்கு வரிதண்டுபவரின் ஜெபமே ஆண்டவர் முன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இன்றைக்கு நமது ஜெபங்கள் எப்படி இருக்கின்றது? எத்தகைய உணர்வோடு நாம் ஜெபித்துக் கொண்டிருக்கின்றோம்? நமது ஜெபம் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்றால் தாழ்ச்சி என்ற பண்போடு நமது இறைவேண்டல் அமைய வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில் "தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்" (சீராக் 35:17) என்னும் வார்த்தைகள் நமது வாழ்வில் பல வேளைகளில் நாம் உணர்ந்திருக்க கூடும். ஆம், தாழ்ச்சி நிறைந்த நமது இறைவேண்டல் இறைவனால் கேட்கப்படும் என்பதையே இது காட்டுகிறது. இன்றைய நற்செய்தியிலும் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தன் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ (லூக்கா 18:13) என தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு ஜெபிப்பது இறைவனுக்கு ஏற்புடையதாக அமைகிறது. அரசர்கள் திருநூலில் நாம் ஆகாபைப் பற்றி வாசிக்கிறோம். அவன் சிலை வழிபாடு உட்பட இறைவனுக்கு எதிராகப் பல தீமைகளை செய்தான். அதனால் இறைவன் இறைவாக்கினர் எலியா வாயிலாக அவனை எச்சரித்தார். இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த எமோரியர் செய்த சிலைகளை வழிபடும் அளவுக்கு அவன் மிகவும் இழிவாக நடந்து கொண்டான் என்பதை ஆகாபு கேட்டவுடன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு வெற்றுடல்மீது சாக்கு உடை உடுத்தி நோன்பிருந்து பணிவோடு ஜெபித்தான். அப்பொழுது எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு: "என் திருமுன் ஆகாபு தன்னைத் தாழ்த்திக் கொண்டதைக் கண்டாயன்றோ? அவன் என் திருமுன் தன்னைத் தாழ்த்திக் கொண்டதால் நான் அவன் வாழ்நாளின் போது தீமை வரச் செய்யாமல், அவனுடைய மகனது வாழ்நாளின் போது அவனுடைய குடும்பத்தாரின் மேல் தீமை விழச் செய்வேன்" (1 அர 21:26-29). ஆகாபு தன் தவறுகளைப் புரிந்து கொண்டு தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு மன்றாடிய போது ஆண்டவரும் அவனை மன்னித்தார். இறைவாக்கினரான யோனா நினிவே மாநகர் மக்களுக்கு அழிவு வரும் என்று அறிவிக்கின்றார் (யோனா 3:4-10) நினிவே மக்கள் யோனா அறிவித்ததைக் கேட்டு, தாழ்ச்சியோடு இறைவேண்டல் செய்து மனம் மாறி கடவுளின் மன்னிப்பை பெற்றார். இன்றைக்கு நாமும் ஜெபிக்கும் பொழுது இறைவன் முன் நம்மையே தாழ்த்தி நமது வேண்டுதல்களை அவர் முன் அர்ப்பணிக்கும் போது நாம் அவரால் உயர்த்தப்பட்டு நம்முடைய வேண்டுதல்கள் ஆசீர்வதிக்கப்படும்.
"தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்" என்னும் இயேசுவின் வாக்கிற்கினங்க நமது ஜெபம் தாழ்ச்சியோடு கூடியதாக அமைய வேண்டும். தாழ்ச்சிக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அவர் நம்மிடம், 'நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்' (மத் 11:29) என்கிறார். அவர் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி தம்மைத் தாழ்த்தி சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவை சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார் என்று புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2:5 முதல் 8 வரை உள்ள வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களின் பாதங்களை கழுவி தாழ்ச்சி என்னும் பண்பில் வளர சீடர்களுக்கு சீடர்களுக்கு அழைப்பு தருகின்றார். இறைவனே தன்னை தாழ்த்தி சிலுவையை ஏற்றுக்கொண்டார் எனில் நாமும் வாழ்வின் பல சூழல்களில் தாழ்ச்சியை ஆடையாக அணிந்து கொள்ள வேண்டும். தாழ்ச்சிக்கு சிகரமான நமது அன்னை மரியாளைப் பாருங்கள். "இதோ ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என தன்னை தாழ்ச்சி நிறைந்த ஜெபத்தில் அர்ப்பணித்தார்.
புனித வின்சென்ட் தெ பவுல் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தைக் குறித்து பின்வருமாறு கூறுகின்றார். "தாழ்ச்சிதான் மற்ற எல்லா நற்பண்புகளையும் விட மேலானது. தாழ்ச்சி என்ற புண்ணியம் ஒருவனிடம் இல்லையென்றால் அவனிடம் இருக்கும் மற்ற எல்லாப் புண்ணியங்களும் மற்றும் நற்பண்புகளும் பயனற்றதாய்ப் போய்விடும்." புனித ஜோன் மரிய வியான்னி தாழ்ச்சியைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார். மற்ற எல்லா நற்பண்புகளையும் இணைக்கும் மாபெரும் நற்பண்புதான் தாழ்ச்சி என்னும் புண்ணியம். தாழ்ச்சி இல்லையென்றால் மாலையாகத் கோர்த்த மற்ற நற்பண்புகள் அனைத்தும் சிதறிவிடும். ஆண்டவர் இயேசுவின் அருள் கிடைக்க தாழ்ச்சியைப் போன்று பயன்படும் வேறு நற்பண்பு இல்லை என்கிறார் புனித அன்னை தெரேசா.
இன்றைக்கு பல வேளைகளில் நமது ஜெபம் சுயநலத்தோடும், சந்தேகத்தோடும், தற்பெருமையோடும் மற்றும் ஆணவத்தோடும் இருக்கின்றது. நாம் நமக்காக மட்டுமே ஜெபிக்கின்றோம். மற்றவர் நன்றாக வாழக்கூடாது என எண்ணுகின்றோம். நம் ஜெபத்திற்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இறைவன் மீது சந்தேகம் கொள்கின்றோம். நாம் தான் அதிக விசுவாசம நிறைந்தவர்கள் என ஆணவம் கொள்கின்றோம். இவையனைத்தையும் துறந்து தாழ்ச்சியோடு இறைவன் முன் நம் ஜெபங்களை அர்ப்பணிப்போம், அவர் ஆசீர் பெறுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
அன்புடன்:-
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF