🌱விவிலிய விதைகள்🌱
பொதுக் காலம் 19-ஆம் வாரம்
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
ஞாயிற்றுக்கிழமை
நற்செய்தி:- யோவான் 6: 41-51
வாழ்வு தரும் உணவின் வெளிப்பாடுகள்
உயிர் வாழ உணவு தேவை, உணவு மனிதனின் அடிப்படைத் தேவை மற்றும் உணவு தான் வாழ்வின் ஆதாரம் என உணவுக்காக, உணவின் வழியாக தான் வாழ்வதற்காக தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவழித்துக் கொண்டிருக்கின்றான் மனிதன். வெறும் நம் உடலை வாழவைக்கும் உணவுக்காகவே இத்தகைய போராட்டம் என்றால், நம் உள்ளத்தை வாழ வைத்து நிலைவாழ்வு கொடுக்கும் வாழ்வு தரும் உணவுக்கு நாம் எத்தகைய முயற்சி எடுக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. இயேசு இன்றைய நற்செய்தியில் தன்னையே வாழ்வு தரும் உணவாக வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் இவ்வார்த்தையை கேட்டு மக்கள் முணுமுணுத்தாலும், இயேசு இன்னும் ஆழமாக தன்னை வாழ்வு தரும் உணவு என்றும், இவ்வுணவை நம்புவோர் வாழ்வு பெறுவர் என்றும் எடுத்துரைக்கின்றார். இயேசுவே வாழ்வு தரும் உணவு என திருவிவிலியம் நான்கு அடையாளங்களை காட்டுகிறது.
திருவிவிலியத்தில் பல்வேறு பகுதிகளில் இறைமகன் இயேசுவை வார்த்தையாகவும், அந்த வார்த்தையே வாழ்வு என்பதையும் நமக்கு விளக்குகிறது. "அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்." (இணைச் சட்டம் 8:3) என பழைய ஏற்பாடு இறைவனின் வார்த்தை நமக்கு வாழ்வு தரும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இதைத்தான் இறைமகன் இயேசு கிறிஸ்து சாத்தானால் சோதிக்கப்பட்ட போதுகூட“⦃‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’⦄ என மறைநூலில் எழுதியுள்ளதே” (மத்தேயு 4:4) என்றார். இயேசுவே இறைவாக்கு, அவ்வாக்கு நம் அனைவருக்கும் வாழ்வு தரும் என்பதை "தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது." (யோவான் 1:1-4) என்னும் இறைவார்த்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஆக இயேசு தன்னை வாழ்வு தரும் உணவு என காட்டுவதை இறைவார்த்தை என்னும் அடையாளத்தால் நாம் புரிந்து கொள்ளலாம்.
2. பிறப்பு
நாம் ஒவ்வொருவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதற்காகவே இறைவன் தன் ஒரே மகனான இயேசுவை இவ்வுலகிற்கு உணவாக அனுப்பி இருக்கின்றார். "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்." (யோவான் 3:16) இயேசு பிறந்த பொழுது அவரை மாடுகள் உணவு உண்ணும் தீவன தொட்டியில் கிடத்தி இருந்ததும், ரொட்டிகளின் பிறப்பிடமாம் பெத்லகேமில் இயேசு பிறந்ததும் இவர் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு தரும் உணவாக வந்திருக்கிறார் என்பதைக் காட்டுகின்றது. ஆக இயேசுவின் பிறப்பு அவர் வாழ்வு தரும் உணவு என்பதன் அடையாளமாக அமைகிறது.
3. இறப்பு
இயேசுவின் பிறப்பை போல அவருடைய இறப்பும் அவர் வாழ்வு தருகின்ற உணவு என்பதை நமக்கு காட்டுகிறது. இயேசு சிலுவையில் தன்னுயிரை முழுமையாக அர்ப்பணித்து நம் ஒவ்வொருவரது பாவங்களிலிருந்து புது வாழ்வு தரும் உணவாக மாறுகின்றார். "சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்."
(1 பேதுரு 2:24) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நாம் நீதிக்காக வாழும் பொருட்டு அவர் தன்னை சிலுவையில் அர்ப்பணித்தார் என்பதை அறிகிறோம். ஆக இயேசுவின் இறப்பும் அவர் அவர் வாழ்வு தருபவர் என்பதை காட்டும் ஓர் அடையாளம்.
4. நற்கருணை
"நானே வாழ்வு தரும் உணவு" என இயேசு கூறியதன் முழுமை, அவர் தன்னையே முழுவதுமாக அர்ப்பணித்த நற்கருணையில் நாம் உணர்கின்றோம். இயேசுவின் வார்த்தைக்கு இணங்க இன்று நற்கருணை பலருக்கும் வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த திருவருட்சாதனத்தில் ஒவ்வொரு நாளும் இயேசுவை உட்கொள்ளுகின்ற நாம் நிலைவாழ்வுக்கு நம்மை தயார் செய்து கொண்டிருக்கின்றோம். இறைவார்த்தை, இயேசுவின் பிறப்பு, இறப்பு மற்றும் நற்கருணை என இவை நான்கும் இயேசுவே வாழ்வு தரும் உணவு என்பதை நிரூபித்துக் காட்டும் அடையாளங்கள் ஆகும். எனவே இயேசுவே வாழ்வு தரும் உணவு என்பதை நம்முடைய வாழ்க்கையில் நாம் உணர்வோம்.
இயேசு என்னும் வாழ்வு தரும் உணவு நமது வாழ்வுக்கு காட்டும் நான்கு வெளிப்பாடுகள்:
1. பாதுகாப்பு
ஒருவர் நமக்கு உணவு கொடுக்கின்றார் என்றால், அவர் நம்மை பாதுகாக்கிறார் என்று அர்த்தம். அன்று இஸ்ராயேல் மக்களுக்கு பாலைநிலத்தில் உணவு கொடுத்து, உயிர் தந்து வாழ வைத்தார். “இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர். அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும்." (விடுதலைப் பயணம் 16:3,4) என்னும் இறை வார்த்தையில் இதை நாம் உணர்கின்றோம். பின்பு தன் ஒரே மகனை இம்மண்ணுலகிற்கு அனுப்பி, நம் ஒவ்வொருவருக்கும் நிலை வாழ்வைத் தருகின்றார். ஆக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு இயேசுவை வாழ்வு தரும் உணவாக நமக்கு காட்டுகின்றது என்றால், அவர் நம்மை பாதுகாக்கின்றவராக இருக்கின்றார் என்பதை அது வெளிப்படுத்துகிறது.
2. மன்னிப்பு
"இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்." (மத்தேயு 6:11,12) என்னும் இயேசு கற்பித்த ஜெபத்திற்கு ஏற்றவாறு, "வாழ்வு தரும் உணவு" என்று இயேசு நம்மைப் பார்த்து கூறுகின்ற பொழுது, அவர் நமக்கு மன்னிப்பு அளிப்பவராக இருக்கின்றார் என்பதை நாம் உணர்கின்றோம்.
"உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன. இரத்தம் சிந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை." (எபிரேயர் 9:22) இயேசுவின் திருவுடலும், இரத்தமும் நம்முடைய பாவங்களை போக்குகின்ற உணவாகவும் மற்றும் பானமாகவும் இருந்து, மன்னிப்பு அளித்து நமக்கு புதுவாழ்வு தருகிறது.
"உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன. இரத்தம் சிந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை." (எபிரேயர் 9:22) இயேசுவின் திருவுடலும், இரத்தமும் நம்முடைய பாவங்களை போக்குகின்ற உணவாகவும் மற்றும் பானமாகவும் இருந்து, மன்னிப்பு அளித்து நமக்கு புதுவாழ்வு தருகிறது.
3. மீட்பு
இயேசுவை ஏற்றுக் கொள்ளுகின்ற பொழுதெல்லாம் நாம் மீட்பு பெறுகின்றோம். இதைத்தான் என்னை நம்புகின்றவர்கள் நிலைவாழ்வு பெறுவீர்கள் என்னும் இறைவார்த்தையில் நாம் உணர்கின்றோம். "நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே; மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்." (1 கொரிந்தியர் 15:3,4) நாம் பாவங்களிலிருந்து மீட்புப் பெற வேண்டும் என்பதற்காகவே இயேசு தன்னையே முழுவதுமாக சிலுவையில் அர்ப்பணித்து, நம் ஒவ்வொருவருக்கும் மீட்பு என்னும் வாழ்வு தரும் உணவாக மாறியிருக்கிறார்.
4. இறையாட்சி
“இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” (லூக்கா 14:15) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் இயேசு நம் ஒவ்வொருவருக்கும் நிலை வாழ்வு தரும் உணவை தருவதன் மூலமாக இறையாட்சி என்னும் விருந்தில் பங்கு கொள்ளவும், இயேசு என்னும் வாழ்வு தரும் உணவை நம்மில் ஏற்றுக்கொள்ளவும் அழைப்பு தருகிறார். இயேசு என்னும் வாழ்வு தரும் உணவு இறைவனின் பாதுகாப்பையும், மன்னிப்பையும், மீட்பையும் மற்றும் அவர் காட்டும் இறையாட்சியையும் நமக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறது.
இயேசு என்னும் வாழ்வு தரும் உணவை நாம் ஏற்றுக் கொள்கின்ற போது அவர் தருகின்ற பாதுகாப்பையும், மன்னிப்பையும், மீட்பையும் மற்றும் இறையாட்சியையும் நாமும் நம்முடைய வாழ்க்கையில் பெற்றுக் கொள்கிறோம்.
- அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF