Friday, April 23, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பாஸ்காகாலம் 4-ஆம் வாரம்- ( ஆண்டு- B)- 25-04-2021- ஞாயிற்றுக்கிழமை

 🌱விவிலிய விதைகள்🌱   

பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
( ஆண்டு- B)
- 25-04-2021-
 ஞாயிற்றுக்கிழமை

இயேசுவின் தலைமைத்துவ பண்பு
(...ஆயனாய்...)

        ஒருவர் உரோமை நகரை சுற்றிப் பார்த்துவிட்டு மதிய உணவை ஓட்டலில் சாப்பிடுகிறார். அதன் பிறகு அவர்  மீண்டும் சுற்றிப்பார்க்க வெளியே செல்கின்ற பொழுது கடும் பனிமழை பொழிகிறது.  அருகிலிருந்த மற்றொரு ஓட்டலில் மழைக்கு ஒதுங்குகிறார்.  அப்பொழுது அந்த ஓட்டலின்  பணியாளர் வந்து, நீங்கள் இந்த ஓட்டலில் இருக்க வேண்டுமென்றால் எதையாவது சாப்பிட வேண்டும். இல்லாவிடில், நீங்கள் இங்கு இருக்க இயலாது என்று கூறுகின்றார். அவரோ நான் இப்பொழுது தான் சாப்பிட்டேன் என்று கூற, பணியாளர் நீங்கள் எதையாவது வாங்கா விட்டால் இங்கு இருக்க முடியாது என மீண்டும் கூறுகின்றார். பின் அவர் ஒரு மேசையில் உட்கார்ந்து தனக்கென்று ஒரு பீட்சாவை வாங்கி சாப்பிடுகிறார். இந்நேரத்தில் மற்றொரு பிச்சைக்காரர் கடும் பனிப்பொழிவின் பொருட்டு ஓட்டலில்  ஒதுங்குவதை கண்டு பணியாளர் அதையே மீண்டும் அவரிடமும் சொல்கிறார். அந்த பிச்சைக்காரரோ, நான் ஒரு அனாதை, எனக்கு வீடு கிடையாது, கையில் பணமும் கிடையாது, இந்த பனிப்பொழிவிலிருந்து என்னை காத்துக் கொள்வதற்காக தான் இங்கு வந்தேன் என்று கூற, பணியாளர் மறுத்துவிட்டார். உடனே அங்கு மேசையில் அமர்ந்திருந்தவர். விரைவாக சென்று அவரை விடுங்கள், இங்கு நாங்கள் எல்லோரும் தான் சாப்பிடுகின்றோமே என்று கூறுகின்றார். பணியாளரோ  அதற்கு மறுப்பு கூறி, நீங்கள் மேனேஜரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூற,  அந்த மனிதர் அவருக்காக மேனஜரிடம் பேசி பயனில்லாமல் போனது. பிறகு, அந்த பிச்சைக்காரரை அழைத்து  தன்னுடைய மேசையில் உட்கார வைத்து, அவருக்காக இவர் உணவு வாங்கி கொடுத்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அந்த மனிதனுடைய செயலைக் கண்டு, கரங்களைத் தட்டினார்கள். சிறிது நேரத்தில் தங்களிடம் இருந்த  பணத்தையும் அந்த பிச்சைக்காரனுக்கு கொடுத்து உதவினார்கள். அன்பார்ந்தவர்களே,  ஓட்டலிலே பலர் இருந்தும் ஒரு மனிதர் மட்டும் பிச்சைக்காரனுக்காக சென்று பணியாளரிடமும், மேனேஜரிடமும் பேசி, பின்பு அந்த மனிதரை அழைத்து வந்து, அவருக்கு ஏதாவது கொடுத்து, மற்றவரையும் அவருக்காக கொடுக்க வைத்தது அந்த மனிதனுடைய உயரிய  குணம் மட்டுமல்ல, அது தான்   ஒவ்வொருவருக்கும் தேவையான தலைமைத்துவ பண்பு ஆகும். இன்று மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் அடிப்படை தேவையாக இருக்கும் ஒரு  பண்பு இந்த தலைமைத்துவப் பண்பு ஆகும். கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இறைமகன் இயேசு கிறிஸ்துவே முன் உதாரணமாக இருக்கின்றார்.  பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிற்றின்  இறைவார்த்தை வழிபாடு  இறைமகன் இயேசு கிறிஸ்து நல்ல ஒரு ஆயனாக தலைமைத்துவப் பண்பில் சிறந்து விளங்குவதையும், தன்னுடைய ஆடுகளை வழிநடத்த தன்னை முழுவதுமாக அர்ப்பணிப்பதையும், ஆயரான இயேசுவைப் பின்பற்றி நமது வாழ்க்கையில் நாமும் தலைமைத்துவப் பண்பில் நாளும் வளர அழைப்பு தருகின்றது.

    தலைவன் என்பவன் தனது  மக்களை அறிந்து, அவர்ளின் பிரச்சனைகளுக்கு ஓடிச் சென்று செவிகொடுத்து, அந்த மக்களுக்காக பரிந்து பேசி,  பிரச்சினையை தீர்த்து, அவர் கொண்ட தலைமைத்துவப் பண்பில் தன் மக்களையும் வளர்த்தெடுப்பவனாகும். இதைத் தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது, இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் நாம் இதைத்தான் பார்க்கின்றோம். மக்களை அறிந்தவராக, அவர்களுக்காக, அவர்களோடு வாழ்ந்து,  அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்து, அதே தலைமைத்துவ பண்பில் தன்னுடைய சீடர்களையும் வளர்த்தெடுத்தவராக இருக்கின்றார். இத்தகைய தலைமைத்துவப் பண்பினை விவரித்து இயேசுவை நல்லாயன் என்னும் உருவகமாக காட்டுகிறது இன்றைய நற்செய்தி வாசகம். ஆயன் மற்றும் ஆடுகள் என்பது இயேசுவின் காலத்தில் புரியாதது ஒன்றுமில்லை. ஏனெனில், விவிலியத்தின் அடித்தளத்தில் தொடக்கநூல் நான்காவது அதிகாரத்தில் ஆபேல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததையும்,  விடுதலைப்பயணம் மூன்றாவது அதிகாரத்தில் மோசே ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததையும், 1 சாமுவேல் 17-வது அதிகாரம், 34-வது வசனத்தில் தாவீது ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததையும் காண்கிறோம். எசேக்கியேல். 34: 11- 16 -ல் கடவுள் மற்றும் இஸ்ரயேல் மக்களை, ஆயன்-ஆடுகள் உறவுமுறையாய்  அழைத்ததை நாம் நன்கு அறிவோம். இயேசுவின் பிறப்பானது ஆடு மேய்த்த இடையர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. இத்தகைய பின்னனியில் தான்  இயேசு நல்ல ஆயன் என்னும் உருவகத்தை   பயன்படுத்துகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் நல்லாயனின்  மூன்று விதமான தலைமைத்துவப் பண்புகளை எடுத்துரைக்கிறது.

1. அறிதல்
2. வழிநடத்துதல்
3. பாதுகாத்தல்

1. அறிதல்
               
             ஆயன் தன்னுடைய ஆடுகளை நன்கு அறிந்தவனாக இருப்பார். எவை தன்னுடைய ஆடுகள் என்றும், அந்த ஆடுகளின்  குணங்களையும் நன்கு   அறிந்தவராக இருப்பார். இறைமகன் இயேசு கிறிஸ்துவும் நல்ல ஆயனாக ஆடுகளை அறிந்த தலைமைத்துவப் பண்பில் சிறந்து விளங்கியவராக இருக்கின்றார். தான் யாருக்கு பணியாற்ற வேண்டும், எவரை குணப்படுத்த வேண்டும், எதை சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். "உன் ஆடுகளின் வாசத்தை அறிந்தவனாய் இரு" என்னும் திருத்தந்தையின் வார்த்தைக்கு ஏற்ப, இன்று நாமும் நல்ல தலைவர்களாக இருக்க, நமது ஆடுகளை அறிந்தவர்களாக வாழ முயற்சிக்க வேண்டும். நாம் சமுதாயத்தில் தலைவராக இருக்கின்ற போது மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பன்னாட்டு சூழ்நிலைகளை நாம் முற்றிலும் அறிந்து செயல்பட வேண்டும். ஏனென்றால் அது மக்களின் சூழலாக இருக்கின்றது. குடும்பத்தில் நல்ல தலைவராக இருக்க வேண்டுமென்றால் பிள்ளைகளின் சூழ்நிலையை நாம் நன்கு அறிய வேண்டும். பிள்ளைகள் எதை விரும்புகிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்ன பேசுகின்றார்கள்? பிள்ளைகளை முழுவதுமாக புரிந்து கொள்ளக் கூடிய ஒரு மனநிலை பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும். எந்நேரமும் அவரோடு இருப்பவர்கள்,  இரவும் பகலும் அவர்களை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். சிறந்த பெற்றோர்கள் மற்றும் தலைவர்கள் இயேசுவைப் போல நல்ல தலைவராக, குடும்பத்தில் நல்ல பெற்றோராக மற்றவரை அறிந்து தலைமைத்துவ பண்பில் சிறந்து விளங்க வேண்டும்.

2. வழிநடத்துதல்

        ஆயன் தன் ஆடுகளின் பாதையை நன்கு அறிந்தவராக இருப்பார். ஆடுகளை எங்கு வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதை முற்றிலும் தெரிந்தவராக இருப்பார், இது ஆயனின் பண்பாக இருக்கின்றது. இறைமகன் இயேசு கிறிஸ்துவும் மக்களை செம்மையான பாதையில் வழிநடத்த வேண்டும், யாவரையும் இறையரசை நோக்கி, தன் தந்தையை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் தெள்ளத் தெளிவாக இருந்தார். தனது பணிவாழ்வு முழுவதிலும் அவர் இறையாட்சியை அறிவித்து தந்தையை நோக்கி  அழைத்துச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அவருடைய புதுமைகள், பணிவாழ்வு மற்றும் நற்செய்தி அறிவிப்பு என யாவும் அவர் நல்வழியில் தன்  மக்களை வழிநடத்திச் சென்றதை எடுத்துக் கூறுகின்றது. நம் சமுதாயத்தில் நல்ல தலைவராக  இருக்க வேண்டுமென்றால்,  சமுதாயத்தில் மக்களின் எதிர்கால வாழ்வை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். நலத்திட்டங்களில் கண்ணும் கருத்துமாக தெளிவானவர்களாக இருக்க வேண்டும். அடுத்து என்ன செய்யலாம்? எப்படி திட்டங்களை உருவாக்கலாம்? என்பதில் நாளும் வளர வேண்டும்.  எப்படி குடும்பத்தில் நாம் குழந்தைகளை வளர்ப்பது? எப்படி அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்வது? எப்படி அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வது? என பெற்றோர்கள் மிகத் தெளிவாக திட்டமிட வேண்டும். ஆக நல்லாயனாம் இயேசுவை பின்பற்றி பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கான பாதையை தெரிந்தவர்களாக, அவர்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பண்பில் சிறந்தவர்களாக இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

3. பாதுகாத்தல்

        கூலிக்கு ஆடுகளை மேய்ப்பவர்கள் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு செல்வார்கள், ஏனென்றால் அது அவர்களின் ஆடு கிடையாது. அவர்களுக்கு ஆடுகள் சொந்தமும் கிடையாது. எத்தகைய ஒரு சூழலிலும் தன்னுடைய ஆடுகளை பாதுகாப்பதற்கு  தன்னை முழுவதுமாக அர்ப்பணிப்பவரே சிறந்த ஆயன்.  இறைமகன் இயேசு கிறிஸ்து தன்னுடைய ஆடுகளாம்  இறைமக்களுக்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்தார்.  கல்வாரி பலியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து,  நமது பாவங்களிலிருந்து நாம் மீட்பு பெறுவதற்கு தன்னை தந்தவர். இறைமகன் இயேசு கிறிஸ்து தன்னுயிரை தந்து, நம்மை பாவத்திலிருந்து பாதுகாக்கின்றவர். இன்று, நம்முடைய சமுதாயத்திலும் நீதி, அன்பு, உண்மை என்னும் மதிப்பீடுகளின்படி நம் வாழ்வு செல்கின்ற போது உண்மை தலைவர்களாக நாம் இருக்க முடியும். நமது ஊரை மற்றும் சமுதாயத்தை அமைதியின் பாதையில் வழிநடத்த சிறந்த தலைவர்களாக நாம் வாழ வேண்டும். குடும்பத்தில் பிள்ளைகளை ஆபத்திலிருந்து, நோயிலிருந்து காப்பாற்ற பெற்றோர்கள் தன்னுயிர் தர வேண்டும். அவர்களை காக்க நம்மை தியாகம் செய்பவர்களாக மாற  வேண்டும். எத்தனை ஆடுகள் வந்தாலும், நம்முடைய ஆட்டினை  காக்கின்ற நல்லாயனாக நாம் மாற வேண்டும்.

    நல்ல தலைவர்களாக மற்றும் பெற்றோர்களாக நாம் இருக்க நல்லாயனாம் இயேசுவின் தலைமைத்துவப் பண்பில் வளர வேண்டும். ஆடுகளை அறிதல், வழிநடத்துதல் மற்றும் பாதுகாத்தல் என்னும் இம்மூன்று நல்லாயனின் தலைமைத்துவப் பண்பும் நம்முடைய வாழ்க்கையாகின்ற போது, நம்முடைய சமுதாயத்தில், குடும்பத்தில் மற்றும் வாழ்வில் நாம் எத்தகைய ஒரு பொறுப்புகளில் இருந்தாலும், அதில் சிறந்த தலைவர்களாக நாம் வளர்வோம். 

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF
                                    கும்பகோணம்