Saturday, May 1, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பாஸ்காகாலம் 5-ஆம் வாரம்- ( ஆண்டு- B)- 02-05-2021- ஞாயிற்றுக்கிழமை

                                           

🌱விவிலிய விதைகள்🌱   

பாஸ்கா காலம் 5-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
( ஆண்டு- B)
- 02-05-2021-
 ஞாயிற்றுக்கிழமை

                                      

               இறை உறவு

       -கனி தர வைக்கும் உறவு -


                


          துறவி ஒருவரை பார்வையற்ற மனிதர் பார்க்கச் செல்கிறார்.பேசி முடித்துவீடு திரும்பும் போது மாலையாகி இருள் சூழ்கிறது. துறவி அவரிடம் விளக்கு ஒன்றை கொடுக்க, அவரோ நானோ பார்வையற்றவன் எதற்கு இந்த விளக்கு என வினவுகிறார். துறவியோ விளக்குஉனக்கு அல்ல,உன் எதிரில் வருவோர்க்கு எனக் கூறுகிறார்.  விளக்கோடு பார்வையற்ற மனிதர் நடக்கின்றார், எதிரே வந்த மனிதர் அவர் மேல் மோத, பார்வையற்றவரோ, எனக்குதான் பார்வை தெரியவில்லை. உனக்குமா தெரியவில்லை என் கையில்தான் விளக்கு இருக்கிறதே என கேட்க, எதிரில் வந்தவர் உன் கையில் விளக்கு இருக்கிறது ஆனால் அது அணைந்து இருக்கிறது. அது ஒளியை பிரகாசிக்கவில்லை என்று கூறினார். அன்பார்ந்தவர்களே கிறிஸ்தவர்களாகிய நாமும் கிறிஸ்தவம் என்னும் விளக்கை எடுத்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அது ஒளிர்வதில்லை அதில்கிறிஸ்து என்னும் ஒளி பிரகாசிப்பதில்லை. ஏனென்றால் நமக்கும் கிறிஸ்துவுக்கும் உண்டான உறவு இருளடைந்து கிடைக்கின்றது. இதை ஒளி கொண்டு ஏற்ற இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு தருகிறது.

                  இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கும் இறைவனுக்கும் உண்டான உறவைப் பற்றி சிந்திக்க அழைக்கின்றது.   திராட்சைக்கொடி அதன் கிளையோடு இணைந்திருப்பது போல நாம் இறைவனோடு இணைந்து அவர் உறவில் திகழ அழைப்பு தருகிறது.  நமக்கும் இறைவனுக்கும் உண்டான உறவு நம்மை வாழ்வின் கனியை தர வைக்கின்ற உறவாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் இறை உறவின் மூன்று பண்புகளை நமக்கு வெளிப்படுத்துகிறது

1. இணைந்து கனிதரும் உறவு

         இறைவனோடு நாம் இணைந்திருக்கும் பொழுது நாம் மிகுந்த பலனை பெறுவோம். திராட்சை கொடி அதன் கிளையோடு இணைந்து இருக்கின்ற பொழுது மிகுந்த பலன் தரும். அதே போல நம்முடைய வாழ்க்கை பயணத்தில் நாம் என்றும் இறைவனோடு இணைந்து இருக்கின்ற பொழுது, நம்முடைய வாழ்வில் நாம் மிகுந்த பலனை தருவோம். இறைவனோடு இணைந்து இருக்கின்ற பொழுது நமது வாழ்வு தூய வாழ்வாக அமையும். இறையாட்சியின் பண்புகளான அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நீதி, உண்மை மற்றும் சகோதரத்துவம் நம்மில் அதிகம் வளரும்.  இறை உறவு நம்மை கனியை தர வைக்கும் உறவு இறைவனோடு இணைந்து கனி தருவதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

2. கழித்து மிகுந்த கனி தரும் உறவு

பல தருணங்களில் நம் வாழ்வு இறை உறவில் இணைந்திருந்தாலும் எண்ணற்ற துன்பங்களில் நாம் முழ்கி கிடப்போம். எனக்கு ஏன் இந்த சோதனை? நான் இறைவனோடு இணைந்து தானே இருக்கின்றேன் என்று நினைப்போம். இவையனைத்தும் நம்முடைய வாழ்க்கையில் நாம் இன்னும் அதிகமாக வளர, நம்பிக்கையிலும் விசுவாசத்திலும் வளர, இறைவன் நமக்குத் தருகின்ற சோதனைகள், துன்பங்கள். திராட்சைக் கொடி கழித்து விடுவதைப் போல, நம்முடைய வாழ்க்கையில் இறைவனோடு இருக்கின்ற பொழுதும் இறைவன் நம்முடைய வாழ்க்கையில் எண்ணற்ற சோதனைகளையும் துன்பங்களையும் தருவது நாம் மிகுந்த பலன் தருவதற்கு, இன்னும் அதிகமான விசுவாசத்தில் மற்றும் நம்பிக்கையில் வளர்வதற்கு தான். வாழ்வின் இத்தகைய சோதனைகளை ஏற்று இன்னும் மிகுந்த கனி தர தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

3. இணைந்திராமல் உலர்ந்து-எரிந்து போகும் உறவு

                  நாம் இறைவனுடைய உறவை விட்டு விலகி இருக்கின்ற பொழுது நாம் திராட்சை கொடியை போல தறிக்கப்படுவோம், உலர்ந்துபோவோம் மற்றும் எரிக்கப்படுவோம்.  வாழ்வின் பல தருணங்களில் நாம் இறைவனை மறக்கின்ற போது, இறைவனின் உறவிலிருந்து விலகி வாழும் பொழுது எண்ணற்ற சோதனைகளும் மற்றும் துன்பங்களும் நம்மை ஆட்கொள்ளும். நாம் பாவ வாழ்க்கையில் முழ்கி துன்பக்கடலில் விழுந்து கிடப்போம். இன்று நமது வாழ்வு இறைவனோடு இணைந்து இராமல் திராட்சை கொடியை போல தறிக்கப்பட்டு, உலர்ந்து மற்றும் எரிந்து கிடக்கின்றதா? சிந்திப்போம்.

பொதுவாக நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவை மூன்று வகை கோடுகளுக்கு ஒப்பிடுவார்கள். 

முதல்வகை -தண்ணீரிலே வரையப்பட்ட கோடு:

வரைந்தவுடன் மறைந்துவிடும். நகம், முடி, வெட்டுவது போல   உண்டான உறவு. தண்ணீரில் வரையப்பட்ட கோட்டை போல நம்மில் சிலருக்கு திருமுழுக்கு பெற்றவுடன்   நமக்கும்   இறைவனுக்கும்    உண்டான உறவு மறைந்துவிடுகிறது. நாம் திருவருட்சாதனங்கள் பெற்றவுடன் நமக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவு மறைந்து விடுகின்றது.

 இரண்டாவது வகை- மணலில் வரையப்பட்ட கோடு:

                இத்தகைய உறவு சில நேரம் இருக்கும், மழை வந்தால் மறைந்து விடும், காற்றடித்தால் மறைந்துவிடும். கை, கால் இவையெல்லாம் நமக்கு   நீரிழிவு நோயின் பொருட்டு வெட்டி எடுப்பது போல உண்டான உறவு.   மணலிலே வரையப்பட்ட கோட்டை போல உள்ள உறவு நாம் கேட்பது    கிடைக்கலன்னா முறிந்துவிடும் போன்ற உறவு. 

 மூன்றாவது வகை- பாறையில் செதுக்கப்பட்ட கோடு

இத்தகைய உறவு இடி, மழை வந்தாலும் அழியவே அழியாத ஒரு உறவு. இது இதயத்திற்கும் உடலுக்கு உண்டான உறவைப் போல உள்ள உறவு. தந்தைக்கும் மகனுக்கு இடையேயான ஒரு உறவு. இன்று நம்முடைய உறவு எப்படி இருக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். எனக்கும் இறைவனுக்கும் உண்டான உறவு வெறும் தண்ணீரில் வரையப்பட்ட கோட்டை போல, மணலிலே வரையப்பட்ட கோட்டை போல, இருக்கின்றதா அல்லது பாறையில் செதுக்கப்பட்ட கோட்டை போல இருக்கின்றதா ? இறைவனோடு இணைந்திருக்கும் நம் உறவு திராட்சைக்கொடி கிளையோடு இணைந்திருப்பது போல மற்றும் பாறையில் வெட்டப்பட்ட கோட்டை போல என்றும் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.

அருட்பணி. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்