விவிலிய விதைகள்
பொதுக்காலம் 2ஆம் வாரம் ( ஆண்டு- B)
17-01-2021
ஞாயிற்றுக்கிழமை
கலங்கரை விளக்காக குரு காட்டும் வழி
1.
குருவோடு இருப்போம்
இன்றைய முதல் வாசகத்தின் அடித்தளத்தில் சாமுவேல் ஆண்டவரின் இல்லத்தில் படுத்திருப்பதை பார்க்கின்றோம். அவருடைய குருவாக இருக்கின்ற ஏலியும் ஆண்டவருடைய இல்லத்திலேயே படுத்திருப்பதைப் பார்க்கின்றோம். சாமுவேல் தன் குருவான ஏலியிடம் இருக்கின்றார் என்பதை இது நமக்கு தெளிவுபடுத்துகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் அந்திரேயாவும், மற்றொரு சீடரும் தன் குருவான திருமுழுக்கு யோவானுடன் நின்று கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். ஆக இறைவார்த்தையின் அடித்தளத்தில் சீடன் என்பவன் குருவோடு இருத்தல் வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நமது குருக்களோடு இருந்து பயணிக்க வேண்டும்.
2. குரு சொல் கேட்போம்
குருவின் பிரசன்னத்தில் வாழ்வது வாழ்வின் முதல் நிலையாக இருந்தாலும், அந்த குருவிடம் நம்முடைய வாழ்க்கையில் தேவைகளின் போது, பிரச்சனைகளின் போது மற்றும் குறைபாடுகளின் போது நாம் அணுகுவது மிக அவசியமானதாக கருதப்படுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேல் தன்னை அழைத்தவரை முழுமையாக உணராத போது குருவான ஏலி அவருக்கு உதவுவதை நாம் பார்க்கின்றோம். மேலும், தன் குரு கூறியவாறே மூன்றாவது முறை "ஆண்டவரே பேசும் அடியவன் கேட்கின்றேன்" என்று சாமுவேல் கூறுவதை பார்க்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு அதையே தான் வெளிப்படுத்துகின்றது, "இதோ கடவுளின் செம்மறி" என்று திருமுழுக்கு யோவான் கூறியவுடன் இரண்டு சீடர்களும் இயேசுவைப் பின்பற்றி அவரோடு தங்கியிருப்பதை நாம் பார்க்கின்றோம். ஆக, குருவோடு உடனிருத்தல் மட்டுமல்லாது குரு சொல் கேட்பதும் நம் வாழ்வின் முக்கிய நிலையாகிறது.
3. குருவாக மாறுவோம்
"யான் பெற்ற இன்பம் இவ்வையகம் எங்கும் பரவட்டும்" எனும் வார்த்தைக்கிணங்க நம்முடைய அனுபவத்தை மற்றவரோடு பகிர்ந்து நாமும் ஒரு குருவின் நிலையை அடைய வேண்டும் என்பது இன்றைய இறைவார்த்தை தரும் மூன்றாவது நிலையாக இருக்கின்றது. சாமுவேல் இறைவனை பின்பற்றி, வளர்ந்து, பிற்காலத்தில் தானே மக்களை வழி நடத்துகின்ற ஒரு குருவாக மாறுவதை பார்க்கின்றோம். இன்றைய நற்செய்தியில் அந்திரேயா தான் பெற்ற அந்த இறையனுபவத்தை தன் சகோதரர்களோடு பகிர்ந்து கொண்டு பிறருக்கு வழிகாட்டுகின்ற ஒரு குருவாகவே மாறுவதை பார்க்கின்றோம். "படித்தால் மட்டும் போதாது, படிப்பிற்கேற்ற வேலை கிடைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்" என்று கூறுவதை போல குருவோடு இருந்து குரு சொல் கேட்டால் மட்டும் போதாது, குருவாக மாறுகின்ற அளவுக்கு நாம் வளர வேண்டும் என்பதைத்தான் இந்த மூன்றாவது நிலை நமக்கு எடுத்தியம்புகின்றது.
நம் வாழ்வில் குருக்கள்
மற்றவர்களுக்கும் குருவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? மற்றவர்கள் எல்லோரும் வெளியில் நம்மைப் பார்க்கச் சொல்கிறார்கள். `அவனைப் பார் வீடு வாங்கிவிட்டான், இதோ இவனைப் பார் கார் வாங்கிவிட்டான்' என்று நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டு, செல்வம் சார்ந்த விஷயங்களில் முன்னேறுவதற்காக நம்மை வெளியில் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், குரு நம்மை நம்முள் பார்க்கச் சொல்கிறார். நம்முள் நம்மைப் பார்த்த பின், நாம் யார் என்பதை நம்மை அறியச்செய்கிறார். `ஐயோ, உன் மனம் இப்படி இருக்கிறதே... உன் புத்தி இப்படி இருக்கிறதே... நீ இன்னும் பக்குவப்படாமல் இருக்கிறாயே' என்று கவலை கொள்கிறார்.
மற்றவர்களெல்லாம் நம்மிடம் எதைப் பார்க்கிறார்களோ, அதை குரு பார்ப்பதில்லை. மற்றவர்களெல்லாம் நம்மிடம் எதைப் பார்ப்பதில்லையோ அதை குரு பார்க்கிறார். மற்றவர்களெல்லாம் உங்களின் அறிவை, சம்பாத்தியத்தை, பணியின் தன்மையைப் பார்க்கிறார்கள். குருவுக்கு இவையெல்லாம் ஒரு முக்கியமான விஷயமே இல்லை. அவர் இவற்றையெல்லாம் ஒரு குப்பையாகத் தூக்கியெறிந்துவிட்டு, ` எந்தப் பாதையில் இந்த ஜீவன் பயணிக்கிறது...' என இவற்றைத்தான் குரு பார்க்கிறார். நாம் மற்றவர்களுக்கு உதவுவதில் எந்த அளவு நம் மனதைத் தயார்படுத்தியிருக்கிறோம், `டிவைன் பவர்' என்று சொல்லும் இறைசக்தியை எந்த அளவு உணர்ந்திருக்கிறோம், இறைசக்திக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம்... இவற்றையெல்லாம் தான் குரு பார்க்கிறார். இந்தப் பார்வை, உலகிலேயே குருவுக்கு மட்டும்தான் உண்டு. `உன் ஆன்மா இறைப் பாதையை நோக்கி எந்தளவு சென்று கொண்டிருக்கிறது' என்பதைப் பார்க்கக்கூடிய திறன் வாய்ந்தவர் குரு. இதனால்தான் குருவை தெய்வத்துக்கு முந்தைய நிலையில் வைத்திருக்கிறார்கள். `மாதா பிதா குரு தெய்வம்' என்பார்கள். இவர்களில் மாதா, பிதா இருவரும் இந்த உலகியல் பூர்வமான விஷயங்களில் பற்று, பந்த பாசங்களை வைக்குமாறு செய்வார்கள். ஆனால், குரு மட்டுமே உங்களை அருளியலுடன் இறைவன்பால் எடுத்துச் செல்லக்கூடியவர். அதனால்தான் குருவை தெய்வத்தை விட உயர்ந்தவராகச் சொல்கிறார்கள். மாதாவும் பிதாவும் உங்களை உலகியலுடன் கட்டிப்போடுவார்கள். குருவும் தெய்வமும் உங்களைக் கட்டுகளிலிருந்து பிரிப்பார்கள். பந்த பாசக் கட்டுகளிலிருந்து உங்களை விடுவிப்பார்கள். அதனால்தான் திருவள்ளுவர் கூறினார், `இந்தப் பற்றுகளிலிருந்தெல்லாம் உன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால், மனதை அதனுடன் கட்டிப்போட்டுக்கொள்' என்று.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
`பற்று' என்பதற்கு `பாசம்' என்று ஓர் அர்த்தமும் உண்டு. `கடவுளின் பாதம்' என்றும் ஓர் அர்த்தம் உண்டு. `இறைவனின் பாதத்தை நான் பற்றிக்கொண்டால், மற்ற பற்றுகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முடியும்' என்பதைத்தான் இவ்வாறு அவர் கூறுகிறார். இன்று உங்கள் வாழ்வின் குருக்களாக இருப்பவர்கள், உங்களை வழி நடத்துகின்ற பங்குத் தந்தையர்கள், ஆன்மீக தந்தையர்கள், உங்களுடைய பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உங்களுடைய வீட்டிலிருக்கின்ற பெரியவர்கள். இவர்கள் எல்லாம் நம்முடைய வாழ்க்கையில் குருக்களாக மற்றும் நமக்கு வாழ்க்கையை கற்று தருபவர்களாக இருப்பவர்கள். நம் வாழ்வில் நாம் உலகப் பற்றிலிருந்து விலகி இறைப்பற்றில் இணைய வேண்டும் என்பதை நமக்கு ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொடுக்கின்றார்கள். அவர்களின் குரலை கேட்கின்ற சீடர்களாக அவர்களோடு இருந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு, நாமும் பிற்காலத்தில் அவர்களைப்போல குருக்களாக மாறுகின்ற வாழ்வை வாழ இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகின்றது, அவ்வழைப்பை ஏற்று வாழ முயல்வோம்.
Fr.
குழந்தை யேசு ராஜன் CMF