முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 3: 1-8a, 13-15
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 10: 1-6, 10-12
நற்செய்தி: லூக்கா 13: 1-9
கடைசி வாய்ப்பு
ஒரு முறை குடும்பத்தில் தந்தை தன் மகனுக்கு புதிய மொபைல் போன் வாங்கி தருவதாக முடிவு செய்கின்றார், செய்தித்தாளை பார்த்தபொழுது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வந்திருந்தது. எனவே தன் மகனிடம் இருக்கின்ற பழைய செல்போனை கொடுத்துவிட்டு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் புதிய செல் போன் வாங்குவதற்கு யோசிக்கிறார். இதையறிந்த அவரது மனைவி 'எனக்கு போன் இல்லை, எனவே மகனின் பழைய மொபைல் போனை எனக்கு கொடுத்து விடுங்கள்' என்று கூறுகின்றார். தந்தையும் மகனின் பழைய போனை மனைவிக்கு தருவதாகவும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் மகனுக்கு புதிய போன் வாங்கித் தருவதாகவும் முடிவெடுக்கிறார்.
இங்கு தந்தையின் முடிவு சற்று வேடிக்கையாகத்தான் இருக்கிறது. மொபைல் போனை எக்ஸ்சேஞ் ஆஃபர் கொடுத்து வாங்குகின்ற பொழுது எப்படி பழைய போனை மனைவியிடம் கொடுக்க முடியும். கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, இந்த மனிதர் நினைத்தது போலதான் இன்று நம்முடைய வாழ்க்கையும் அமைகின்றது. நான் மனமாற்றம் பெற வேண்டும், புதிய மனிதனாக இறைவனை நோக்கி செல்ல வேண்டும் என்று இந்த தவக்காலத்தில் நாம் நினைக்கின்றோம். ஆனால் பாவம் என்னும் பழைய மொபைல் போன் நம்மிடையே தான் இருக்க வேண்டும் என ஆசைபடுகின்றோம். பாவத்தை விட்டால் தான் புதிய மொபைல் போனான மனமாற்றம் கிடைக்கும் என்பதை அறிந்தும் பாவத்தை நம்மிடையே வைத்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இத்தகைய நிலை மாறி மனமாற்றம் என்னும் புதுவாழ்வு பெற கடைசி வாய்ப்பு நமக்கு தரப்படுகிறது. நாம் பயணித்துக் கொண்டிருக்கின்ற இந்த தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு இறைவார்த்தை வழிபாடு, நாம் மனம் திரும்புவதற்கு இறைவன் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கின்றார், அது தான் கடைசி வாய்ப்பு என்னும் மையச்சிந்தனையை நம்முன் வைக்கின்றது.
மிதியடிகளை அகற்று
இன்றைய முதல் வாசகத்தில் மோயீசன் தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது இறைவனால் அழைக்கப்படுகின்றார். இறையழைப்பை பெற்றாலும் தன்னுடைய மிதியடிகளை அகற்றிவிட்டு தான், செல்ல முடியும் என்னும் நிபந்தனை பெறுகின்றார். கிறிஸ்தவர்களாகிய நமக்கு இங்கு மிதியடிகள் என்பது நமது பாவ வாழ்வு. நாம் இறைவன் அருகே செல்ல வேண்டுமானால், மனமாற்றம் பெற்றவர்களாக பாவம் என்னும் மிதியடிகளை அகற்ற வேண்டும். இங்கு மோயீசனுக்கு இறைவன் "மிதியடிகளை கழற்றி வைத்துவிட்டு என்னிடம் வா" என்னும் ஒரு வாய்ப்பை கொடுக்கின்றார். இறைவன் நமக்கும் நமது பாவத்தை விட்டு, மனம் மாறி அவர் அருகே செல்ல வாய்ப்பு தருகிறார். இதை உணர்ந்து வாழ நாம் அழைக்கப்படுகின்றோம்.
ஆன்மீகப் பாறை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கொரிந்து நகர் மக்களுக்கு இஸ்ரயேல் மக்களின் வாழ்வை முன்னுதாரணமாக காட்டி, அவர்கள் தங்களுடைய பாவ வாழ்வை அதாவது முனுமுனுப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார். இவர்கள் பாவ வாழ்வை விட்டு, மனம்மாறி கிறிஸ்து என்னும் ஆன்மீக பாறையிலிருந்து தண்ணீரை பெறுபவர்களாக இருக்க வேண்டும் எனும் ஒரு அழைப்பை கொடுக்கின்றார். "நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது"(யோவான் 15:5) என்னும் இயேசுவின் வார்த்தைகள் இங்கு வாழ்வு பெறுகின்றன.
கடைசி வாய்ப்பு
இன்றைய நற்செய்தியில் அத்தி மரத்திற்கு கடைசி வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தனது திராட்சை தோட்டத்தில் பல ஆண்டுகளாக கனி தராமல் இடத்தை அடைத்துக் கொண்டிருந்த அத்திமரத்தை வெட்டுவதற்கு உரிமையாளர் கூறியபோது, தொழிலாளர் அந்த மரத்திற்கு கடைசி ஒரு வாய்ப்பை அதாவது இன்னொரு ஆண்டுகள் தர கேட்டு, அதுவும் தரப்படுகிறது. இன்றைக்கு நமக்கும் இறைவன் மீண்டும் ஒரு வாய்ப்பு, அதாவது கடைசி வாய்ப்பை தருகிறார். இது நாம் மனம் மாறுவதற்கான வாய்ப்பு. பலமுறை பல வாய்ப்புகள் நமக்கு தரப்பட்டிருந்தாலும், இறைவன் இந்த தவக்காலத்தில் பாடுகளை தியானிப்பதன் வழியாக மற்றும் வாழ்வின் சிலுவைகளை சுமப்பதன் வழியாக மீண்டுமாக நமக்கு ஒரு வாய்ப்பு தருகிறார். இன்று தோட்ட தொழிலாளி போல, நம் மத்தியிலே பணியாற்றுகின்ற அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினர், நம்மை சுற்றி கொத்தி உரமிட தயாராக இருக்கிறார்கள். அதையேற்று கனி கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோமா? இறைவன் தரும் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்த முயற்ச்சி செய்வோம்.
இறைவனது உடமை
திராட்சைத் தோட்டம் என்பது ஒரு தனி நபரின் உடமை, அதிலுள்ள அத்தி மரத்தை வெட்டுவது என்பது அவர் எடுக்கும் ஒரு நடவடிக்கை, அது உரிமையாளருக்கு உரிய ஒரு அதிகாரம். ஏனெனில் அது அவர் மரம், அவர் விரும்பியபடி அதை அவர் வெட்ட முடிவெடுக்கலாம், இதில் வேறு எவரும் தலையிட முடியாது. அதே போலத்தான் கடவுள் இந்த உலகத்தை படைத்தார், இது அவரது சொத்து மற்றும் உடமை. நாம் ஒவ்வொருவரும் அவருக்கு சொந்தமானவர்கள். இந்த இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் நாம் எல்லோரும் இருக்கின்றோம். இத்தோட்டத்தில் பலன் தரா மரங்களாக நாமிருந்தால், நம்மையும் ஒரு நாள் வெட்டுவதற்கு இறைவன் தீர்ப்பீடுவார், அதற்கு அவருக்கு உரிமையும் உண்டு.
"மனிதர்களே! கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்? உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கியவரிடம், “ஏன் என்னை இவ்வாறு செய்தாய்?” எனக் கேட்குமோ? (உரோமையர் 9:20) என்னும் வார்த்தை இறைவனின் உரிமையை காட்டுகிறது.
ஆனால் பல வேளைகளில் நாம் இறைவனது படைப்பு என்பதை மறந்து, தன்னாட்சி பெற்றவர்கள் என்ற உணர்விலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்? என்று சொல்லுகின்ற உரிமை இறைவனுக்கு இல்லை என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால், உண்மை என்னவெனில் நாம் இறைவனது திராட்சைத் தோட்டத்தில் அவரது உடைமையாக இருக்கின்றோம். இதைத்தான் பவுல் அடிகளாரும் நாம் இறைவனுக்கு சொந்தமானவர்கள், நம்முடைய உடல் இறைவனின் ஆலயம் என்றும் குறிப்பிடுகின்றார். எனவே, நாம் ஒவ்வொருவரும் அவர் எதிர்பார்க்கின்ற பலனை கொடுக்க அழைக்கப்பெறுகின்றோம். உரிமையாளரின் எதிர்பார்ப்பு சரியானது, நாம் இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் நடப்பட்ட ஒரு அத்தி மரம். பல இடங்களில் குறிப்பாக சாலை ஓரங்களில் மற்றும் காடு பகுதிகளில் எண்ணற்ற அத்தி மரங்கள் இருக்கலாம். ஆனால் அவைகளுக்கு யாரும் உரமிடவில்லை, யாரும் அதை பொருட்படுத்தவில்லை. அவைகள் பாறை மற்றும் ஆழமற்ற மண்ணில் அரிதான ஊட்டச்சத்துக்களோடு வாழ வேண்டியிருக்கிறது. ஆனால் இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் இருக்கின்ற நாம் கொத்தி உரமிடப்பட்டு, தேவையான நீரளித்து வளர்ந்தவர்கள். எனவே தான் உரிமையாளர் நம்மிடையே இருந்து பலனை எதிர்பார்க்கிறார், அதாவது மனமாற்றத்தை எதிர்பார்க்கிறார். அவருக்கு உகந்த வாழ்வை வாழ கடைசியாக ஒரு வாய்ப்பையும் நமக்கு தருகிறார். எவ்வாறு முதலீட்டாளர் தனது முதலீட்டில் ஒரு லாபத்தை எதிர்பார்கிறாரோ, அதே போல இறைவன் அத்தி மரங்களான நம்மிடையே மனமாற்றம் என்னும் பலனை எதிர்பார்த்து இருக்கிறார். மீட்பின் வரலாற்றில் இறைவன் மனிதனுக்கு பலவிதமான வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார். இஸ்ராயேல் மக்கள் ஒவ்வொரு முறையும் பாவம் செய்யும் பொழுது, தனது நீதித்தலைவர்கள், அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள் வழியாக அவர்களை மனமாற்றம் பெற்று, மீண்டுமாக அவரிடம் வருவதற்கு ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கொடுக்கிறார். இன்றைக்கு நமக்கும் பல்வேறு வகைகளில் அதே போல வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதோ மனமாற்றம் பெறுவதற்கு மீண்டும் இறைவன் தவக்காலம் என்னும் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார், இதை கடைசி வாய்ப்பாக எண்ணி மனம் மாறுவோம், அவரிடம் சரணடைவோம்.
அன்புடன்,
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF