Friday, February 10, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலத்தின் 6-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A)- 12-02-2023- ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 6-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(12 பிப்ரவரி  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: சீராக்கின் ஞானம் 15: 15-20
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 2: 6-10
நற்செய்தி: மத்தேயு 5: 17-37

கோபம் என்னும் கொடுங்காரன்

  பொதுக்காலத்தின் 6-ஆம் ஞாயிறு திருவழிபாட்டு இறைச்சிந்தனைக்கு உங்களை அன்போடு வரவேற்கின்றேன். இன்றைய நற்செய்தியில் “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்." (மத்தேயு 5:17) என திருச்சட்டத்தை நிறைவேற்றுதல் பற்றி எடுத்துரைக்கின்ற இயேசு, இறைவன் மோசே வழியாக பழைய ஏற்பாட்டில் கொடுத்த பத்து கட்டளைகளில் சிலவற்றை அதாவது, கொலை செய்யாதே, கோபம் கொள்ளாதே, சகோதர சகோதரிகளையும் மற்றும் எதிரியையும் மன்னித்து வாழு, பெண்களை இச்சையோடு நோக்காதே, மணமுறிவைத் தேடாதே, பொய்யாணை இடாதே மற்றும் நேர்மையோடு இரு என தம் சீடர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அதன் ஆழ்ந்த உண்மைகளை விளக்குகிறார். இக்கட்டளைகளில் பல கட்டளைகளை பின்பற்ற இடையூறுதலாக நம்மிலிருக்கும் கோபத்தை அறவே விட்டொழிய இன்று அழைக்கப்படுகின்றோம். மனித உறவுகளில் ஏற்படுகின்ற பல்வேறு பிளவுகளுக்கு காரணம் நம்மிலிருக்கும் கோபம் என்னும் கொடுங்காரன். யாருக்கும் பயன்படாத இந்த கோபம் என்னும் செடியை வேரோடு பிடுங்கி எறிவதே நம் வாழ்க்கைக்கு நல்லது. இயேசுவும் "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்." (மத்தேயு 5:22) என கோபமின்றி வாழ அழைப்பு தருகின்றார்.

விவிலியத்தில் கோபம்:-

     விவிலியத்தில் பலர் கோபம் கொண்டதை வாசிக்கின்றோம். "காயினையும் அவன் காணிக்கையையும் ஆண்டவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது." (தொடக்க நூல் 4:5) பொறாமையால் எழுந்த இந்த கோபம் ஆபேலை கொன்றது. "ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை பிலயாமுக்கு அடியில் படுத்துக்கொண்டது; பிலயாம் சினம் கொண்டு தம் கோலால் கழுதையை அடித்தார்." (எண்ணிக்கை 22:27) மற்றும் "இது யோனாவுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அவர் கடுஞ்சினங் கொண்டு ஆண்டவரிடம் முறையிட்டார்." (யோனா 4:1) இங்கு பிலயாம் கழுதையின் மீது கொண்ட கோபமும், யோனா இறைவன் மீது கொண்ட கோபமும் புரிந்து கொள்ளாமையால் எழுந்த கோபமாகும். மேலும், "பாளையத்தை மோசே நெருங்கி வந்தபோது கன்றுக் குட்டியையும் நடனங்களையும் கண்டார். மோசேக்குச் சினம் மூண்டது. அவர் தம் கையிலிருந்த பலகைகளை மலையடிவாரத்தில் வீசியெறிந்து உடைத்துப் போட்டார்." (விடுதலைப் பயணம் 32:19) மற்றும் "அப்போது உசாவுக்கு எதிராக ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. கடவுள் அவனது தவற்றுக்காக அங்கேயே அவனை வீழ்த்தினார்." (2 சாமுவேல் 6:7,8) இங்கு மோசே மக்களின் மீது கொண்ட கோபமும், ஆண்டவர் உசா மீது கொண்ட கோபமும் அவர்கள் பாவம் செய்ததால் எழுந்த கோபங்களாகும். இவ்வாறு விவிலியத்தில் பல காரணங்களுக்காக பலர் கோபம் கொண்டதை நாம் வாசிக்கின்றோம்.
 
கோபத்தின் விளைவு:-

"கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்." (மத்தேயு 5:21) என பத்து கட்டளைகளில் ஒன்றான 'கொலை செய்யாதே' என்னும் கட்டளையை இயேசு எடுத்துரைக்கின்ற போது, கொலை செய்வது வெளிப்புற செயலாக இருந்தாலும் அதற்கு காரணமாக இருப்பது உள்ளத்திலிருந்து வெளிப்படும் கோபம் தான் என்கிறார். அக்கோபத்தை நம்மிடையேயிருந்து அகற்றுகின்ற பொழுது இப்பெரும் பாவத்தை நம் வாழ்விலிருந்து தடுக்கலாம். அதுமட்டுமல்லாது, "எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது." (மத்தேயு 5:32) என இன்று நமது குடும்பங்களில் கோபம் மணமுறிவுக்கான காரணமாக அமையக்கூடாது என்கிறார். இதைத்தான் திருத்தூதர் பவுல் "சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்..." (எபேசியர் 4:26) என கோபம் நம்மை பாவம் என்னும் பள்ளத்தாக்கில் தள்ளாமல் இருக்கட்டும் என்கிறார்.

கோபத்தின் பதில் - மன்னிப்பும் நல்லுறவும்:

கோபமின்றி வாழ்வதற்கு அழைப்பு தருகின்ற இயேசு, அக்கோபத்திற்கான பதிலையும் அதாவது அதிலிருந்து நாம் மீண்டு வருவதற்கு மன்னிப்பு மற்றும் நல்லுறவு என்னும் வழியையும் காட்டுகிறார். நீங்கள் உங்களுடைய காணிக்கையை பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருடனாவது உங்களுக்கு மனத்தாங்கலிருந்தால் அதாவது கோபமிருந்தால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள் என்று மன்னிப்பையும் நல்லுறவையும் நம் கோபத்திற்கான மருந்தாக இயேசு எடுத்துரைக்கிறார். அதேபோல உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்திற்கு கூட்டிச் செல்லும்போது அவருடன் வழியிலேயே உடன்பாடு செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என நமது சினத்தை அதாவது நம்மிலிருக்கும் கோபம் என்னும் கொடுங்காரனை வெளியேற்றி யாவரிடமும் குறிப்பாக நம் பகைவரிடம் மன்னிப்பு கேட்டு நல்லுறவோடு வாழ அழைப்பு தருகிறார். ஒரு சமயம் ஆபிரகாம் லிங்கனிடம் வந்த ஒருவர், “எனக்கு ஒருவன் தீங்கு செய்து விட்டான். அதை என்னால் மறக்க முடியவில்லை. அவன் மேல் உள்ள என் கோபத்தை அடக்க முடியவில்லை” என்றார். உடனே ஆபிரகாம் லிங்கன், “உங்கள் கோபத்தை எல்லாம் கொட்டி ஒரு கடிதம் எழுதிக் கொண்டு வந்து என்னிடம் கொடுங்கள்” என்றார். அதேபோல், அந்த நபரும் ஒரு கடிதம் எழுதிக் கொண்டு வந்து லிங்கனிடம் காட்டி, “என் மனசில் இருக்கும் குமுறலை எல்லாம் கொட்டி இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறேன். இதைத் தபாலில் சேர்த்து விடட்டுமா?’ என்று கேட்டார். அப்போது லிங்கன், “உங்கள் கோபம் குறைந்ததா? மனம் அமைதியாக இருக்கிறதா?’’ என்று கேட்க, அவர் “ஆம்” என்று கூறினார். “சரி… இப்போது அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போடுங்கள். அவரை மன்னித்துவிடுங்கள். உங்கள் மனச்சுமை குறையும். அதுதான் முக்கியம்” என்றார். கடிதம் எழுதிக் கொண்டு வந்த நபர், ஆபிரகாம் லிங்கனை ஆச்சரியத்தோடு பார்த்தார். அதைக் கண்ட லிங்கன் அவரிடம் புன்முறுவலுடன்,“ அவரை நீங்கள் திட்டலாம், கோபப்படலாம். அதனால் உங்கள் மனச்சுமைதான் அதிகரிக்கும். உங்களுக்குள் உள்ள உறவு நசிந்து விடும். இப்போது உங்களுக்குள் ஒரு அமைதி இருக்கிறது. இதுதான் நல்லது” என்றார். ஆம் மன்னிப்பும் நல்லுறவும் கோபம் என்னும் கொடுங்காரனுக்கு சிறந்த மருந்தாகும்.

கோபமும் நம் வாழ்வும்:

ஒரு ஞானியிடம், கோபம் என்றால் என்ன? என்று கேட்டபோது 'பிறர் செய்த தவறுக்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளக்கூடிய தண்டனை' என்கிறார். கோபம் நம் உடலில் அட்ரினலின் அதிகரிக்க காரணமாகிறது. கோபப்படும் போது நம் தசைகள் இறுக்கமடைகிறது. வியர்வை, இதய துடிப்பு மற்றும் சுவாசம் விரைவுபடுத்தப்படுகிறது. கோபப்படும் போது நுாற்றுக்கணக்கான நரம்புகள் நம்மில் செயல்படுகின்றன என்பதை அறிவியல் தெரிவிக்கிறது. மேலும் நாம் அதிகமாக கோபப்படுகின்ற பொழுது நம்முடைய நரம்புகள் செயல் இழக்க வாய்ப்பு உண்டு. இது இதய நோய்க்கும் காரணமாக அமையும் என்கிறார்கள் மருத்துவர்கள். கோபம் அதிகம் உள்ளவர்கள் அடிக்கடி இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் தோல் நோய்களால் அவதியுறுகிறார்கள். கோபம் உடலை மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும் அதனால் பலர் பெரும்பாலும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். நம்மில் கோபம் ஏற்படுகின்ற பொழுது நாம் நம்மை மறந்து விடுகின்றோம் அதனால் நமது பேச்சுகள் மற்றும் செயல்கள் நம்மை அறியாமலே வெளிப்படுகிறது. இது குடும்பங்களில் பிரச்சனைகளை உருவாக்கி அதுவே பிளவுக்கு காரணமாக அமைகிறது. இன்றைக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் கோபம் ஒரு பெரும் பிரச்சனையாகவே மாறியிருக்கிறது. ஒரு சீடன் தன் குருவிடம் கேட்டான். “ என்னால் எனது கோப இயல்பைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை.” குரு அவனிடம், “ உனது கோபம் எங்கே? எனக்குக் கொஞ்சம் காட்டு” என்றார். சீடன் ஆச்சரியப்பட்டான். “இப்போதைக்கு என்னிடம் கோபம் இல்லை, அதனால் என்னால் அதைக் காட்ட முடியாது” என்றான். குரு பதில் அளித்தார். “பிரச்னை ஒன்றும் இல்லை. கோபம் வரும்போது என்னிடம் கொண்டுவந்து காட்டு” என்றார். சீடன் கடுப்புடன், “கோபம் வந்தவுடன் என்னால் கொண்டுவந்து உடனடியாகக் காட்ட முடியாதே” என்றான். அத்துடன், “எதிர்பாராத வேளையில் கோபம் வரும். அதை நான் உங்களிடம் வந்து காட்டுவதற்குள் நிச்சயமாக மறைந்தே போய்விடும்” என்றான் சீடன். “அப்படியானால் கோபம் என்பது உனது உண்மையான இயல்பாக இருக்க முடியாது” என்றார் குரு. “கோபம் உனது உண்மையான இயல்பாக இருக்கும் எனில் எந்தச் சமயத்திலும் என்னிடம் அதைக் கொண்டுவந்து காட்ட முடியும். நீ பிறக்கும்போது உன்னிடம் அது இல்லை. உனது பெற்றோரும் உன்னிடம் தரவில்லை. அதனால் அது வெளியிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அதை ஒரு குச்சியால் அடித்து விரட்டு” என்றார் குரு. நமது அன்றாட வாழ்வில் கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் அது நம் உடல் நிலையையும் மற்றும் மனநிலையையும் பாதித்து நம்மையும், நம் உறவையும் அழித்து விடும் என்பதை புரிந்து வாழ்வோம். "நீங்கள் சினம், சீற்றம், தீமை ஆகிய அனைத்தையும் அகற்றி விடுங்கள்." (கொலோசையர் 3:8) என்னும் இறைவார்த்தைக்கு ஏற்ப கோபத்தை விட்டு கடவுள் படைத்த இந்த அழகான உலகில் உடல், உள்ள நலத்தோடும் மற்றும் உறவுகளோடும் மகிழ்வாய் வாழ்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பார்.