Friday, July 9, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 15-ஆம் வாரம் - ( ஆண்டு- B)- 11-07-2021- ஞாயிற்றுக்கிழமை

  🌱விவிலிய விதைகள்🌱

பொதுக் காலம் 15-ஆம் வாரம்

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி:- மாற்கு. 6: 7- 13


இருவர் இருவராக....
(தனிமைக்கு துணை)




"அது ஒரு வெள்ளிக்கிழமை, வாழ்க்கையை
வெறுத்தவன் போல் இருந்தேன்.
யாருமே எனக்கில்லை
என்று நினைத்தேன்,
தனிமையில் இருந்தேன்,
செய்வது அறியாது தவித்தேன். தொலைபேசியில்
அம்மாவிடம் பேசினேன்,
மனதில் அமைதி கிடைத்தது. நண்பனை சந்தித்தேன்,
என்னில் மகிழ்ச்சி கிடைத்தது.
அடுத்த நாள் வீட்டிற்கு சென்று,
மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்தேன்.
என் வாழ்வே மீண்டும் கிடைத்தது."


இன்று, நம்முடைய கண்ணோட்டத்தில் மிகப் பெரிய அளவில் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது தனிமை உணர்வு. உண்மையாகவே நாம் தனியாக இருக்கும் பொழுது என்ன நினைக்கின்றோமோ, என்ன செய்கின்றோமோ, என்ன சிந்திக்கின்றோமோ அது தான் நாம் என்று சொல்லலாம். தனிமையை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் தனிமை நம்மை பயன்படுத்தி விடும். நம்மிடம் மறைந்திருக்கக் கூடிய உணர்வுகள் எல்லாமே நாம் தனியாக இருக்கும் பொழுது தான் வெளி வரும். தனிமை என்பது புறக்கணிக்கப்பட்ட நிலை, அதனால் ஏற்படும் ஒரு உணர்ச்சி. அது ஆபத்தானது. அது நமது சுய மதிப்பீட்டை குறைத்து விடும். புறக்கணிக்கப்படும் போது ஏற்படும் உணர்ச்சியும், உடலின் வலிகளும் நமது மூளையின் ஒரே பகுதியில் இருந்து தோன்றுவதாக நரம்பியல் நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதனால் தான் நாம் தனிமையை அத்தனை வலியாய் உணர்கிறோம். நமக்கு யாருமில்லை என்ற எண்ணம் அத்தனை வலி நிறைந்ததாய் நமக்குள் இறங்குகிறது. தனிமை என்பது ஒரு உணர்ச்சி. ஒரு கோபத்தை போல, ஒரு மகிழ்ச்சியை போல, ஒரு துக்கத்தை போல அதுவும் ஒரு உணர்ச்சி அவ்வளவே. நமது சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறும்போது, நம்மை நோக்கி ஆறுதலாய் ஒரு கரம் நீளும் போது, நம்மை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்ளும்போது, நமக்கான கவனத்தை ஒருவர் கொடுக்கும் போது நீரில் கரையும் பனிக்கட்டி போல தனிமை கரைந்து விடும். ஆம், நம் வாழ்க்கையின் தனிமை உணர்வுக்கு துணை வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றது இன்றைய இறைவார்த்தை பகுதி.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சீடர்களை இருவர் இருவராக அனுப்புகிறார் (மாற்கு. 6:7). இயேசு தனது சீடர்களை தனித்தனியாக அனுப்பவில்லை மாறாக இருவர் இருவராக அனுப்புகிறார். "ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார்" (தொடக்க நூல். 2:18) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் இறைமகன் இயேசு கிறிஸ்து தன்னுடைய பணியை செய்த போது தனது சீடர்களோடும், அவர்கள் பணி வாழ்வை துவங்குகின்ற போது இருவர் இருவராக அனுப்புவதும், நம்மையும் நமது வாழ்வில் தனிமை உணர்வில் வாழாது துணை கொண்டு வாழ அழைப்பு விடுக்கிறது‌. மேலும் இயேசு தனது சீடர்களை இருவர் இருவராக அனுப்புவது அதிலிருக்கும் எண்ணற்ற நன்மைகளை காட்டுகின்றது.

1. பாதுகாப்பு:

தனிமையில் இருப்பதை காட்டிலும் இருவர் இருவராக இருப்பது மிகுந்த பாதுகாப்பை தரும். தன் சீடர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இயேசு இருவர் இருவராக அவர்களை பணி வாழ்விற்காக அனுப்புகிறார்.
2. பயிற்சி:

இயேசுவுக்கும் சீடருக்கும் உண்டான உறவில் மூன்று நிலைகள் இடம் பெறுவதைப் பார்க்கின்றோம்.
1. அழைத்தல்
2. அனுப்புதல்
3. ஆற்றுப்படுத்துதல்

இயேசு தன் சீடர்களை அழைத்து இருவர் இருவராக அனுப்புதல் என்பது பயிற்சியின் அடையாளமாக இருக்கிறது. அழைத்த தன் சீடர்களை எப்போதும் தன்னோடு இருக்க அவர் விடவில்லை. மாறாக அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை அனுப்புகிறார் மற்றும் அவர்களை ஆற்றுப்படுத்துகிறார்.

3. அனுபவம்:

அனுப்ப-படுதல் இங்கு அனுபவ-படுதல் ஆகும். இயேசுவின் பணியை தொடர சீடர்களுக்கு அனுபவத்திற்கான வாய்ப்பு தரப்படுகிறது. இது ஒரு களப்பயிற்சி, இயேசுவுடன் இருந்து இயேசுவின் போதனைகளை கேட்டு வளர்ந்த சீடர்கள், அதை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

4. ஒற்றுமை:

சீடர்கள் இருவர் இருவராக அனுப்புவது ஒற்றுமையையும் நமக்கு எடுத்துரைக்கிறது. தனிமையில், தன்னந்தனியாக அல்லாது பிறரோடு பணிக்கு செல்வது உறவை வளர்த்தெடுக்கிறது மற்றும் அவர்களோடு இருக்கும் ஒற்றுமையையும் நமக்கு காட்டுகிறது.

5. சாட்சி:

"ஒருவனது எந்தக் குற்றத்தையும் எந்தப் பழி பாவச் செயலையும் உறுதி செய்ய, ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கு மூலத்தாலே அது உறுதி செய்யப்பட வேண்டும்" (இணைச்சட்டம் 19:15). என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில், யூத கலாச்சாரத்தின் படி இருவர் என்பது உண்மையை நிருபிக்கும் சாட்சியாகவும் அமைகின்றது.

6. எளிமை:

எந்த ஒரு வேலையையும் ஒருவர் தனியாக செய்வதற்கும், பிறரோடு இணைந்து செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. தனியாக செய்யும் பொழுது வேலையின் பளு அதிகமாக இருக்கும். மற்றவரோடு இணைந்திருக்கின்ற பொழுது அந்த வேலை நமக்கு மிகவும் எளிமையாக இருக்கும். இறைப்பணியையும் பிறருடன் இணைந்து செய்வது வேலைப்பளுவையும், தனிமை உணர்வையும் நீக்கும் என்பதை இறைமைந்தன் இயேசு உணர்ந்திருக்கிறார். எனவே தான் தன்னுடைய சீடர்களை இயேசு இருவர் இருவராக அனுப்புகிறார்.

இவையனைத்தும் இயேசு தன்னுடைய சீடர்களை இருவர் இருவராக அனுப்புவதன் கனிகளாகும். அது மட்டுமல்லாது, அவர்கள் தனிமையுணர்வில் சிக்காமல் இருப்பதற்கான வழிகளாகும். தனிமையில் மற்றும் தனிமை உணர்வில் இருக்கும் பலருக்கு துணை மிகப்பெரிய மருந்தாக கருதப்படுகிறது. இன்று நாம் வாழுகின்ற சமுதாயத்திலே பலர் தனிமையுணர்வில் முழ்கி இருக்கிறார்கள், இவர்கள் இறைத்துணையையும் மற்றும் இறைவன் கொடுத்த மனித துணையையும் மறந்து போய் இருக்கின்றார்கள். வாழ்வில் வரும் சிறு சிறு கஷ்டங்களை எண்ணி இவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு தனிமையுணர்வில் மூழ்கி இருக்கிறார்கள். நம் அணைவருக்கும் இறைவன் என்னும் ஒரு துணை உண்டு, அது போலவே, இறைவன் கொடுத்த மனைவி, கணவன், பிள்ளைகள், தாய், தந்தை, சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்கள் என்னும் துணையும் உண்டு, இவர்களை நம் வாழ்வில் உணர வேண்டும் மற்றும் அவர்களோடு வாழ வேண்டும். அப்போது, தனிமை என்னும் பேய் நம்மை விட்டு விலகும். இறைவழியில் நாம் நடப்போம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


- அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF