பொதுக்காலம் 14ஆம் வாரம் ( ஆண்டு- A)
05-07-2020
ஞாயிற்றுக்கிழமை
சுகமான குழந்தை உள்ளம் பெறுவோம்
கடந்த ஏப்ரல்
மாதம் 30 ஆம்
தேதி பாலிமர்
செய்திகள் தொலைக்காட்சியில் வெளிவந்த ஒரு
சோகக் கதை
அது. சென்னை
சென்ட்ரலில் சுமைதூக்கும்
தொழிலாளராக வேலை
பார்த்தவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த 53 வயதான
ரவி. கொரோனா
ஊரடங்கு காரணமாக
தன்னுடைய வேலையை
இழந்து, சென்னை
ஜாபர்கான்பேட்டையில் இருக்கின்ற
தன்னுடைய சகோதரியின்
வீட்டில் தனது
தாயை சந்திக்க
சென்றார். ஏறக்குறைய
20 நாட்கள் அங்கு
தங்கி இருந்த
ரவி ஏற்கனவே
காச நோயால்
அவதியுற்ற காரணத்தால்
லேசான காய்ச்சலும்
இருமலும் மீண்டும்
வரத் தொடங்கியிருக்கிறது. அவருடைய தொடர்
இரும்பலை கண்டுணர்ந்த
வீட்டு உரிமையாளர்
ரவியை வீட்டில்
வைக்கக் கூடாது
எனக் கூறவே,
ரவி வீட்டிற்கு
முன்பாக அமர்த்தப்பட்டார். அவருக்கு உணவும்,
நீரும் அங்கேயே
வழங்கப்பட்டது. தொடர்ந்து
பல நாட்கள்
இருமலால் அவதியுற்ற
ரவியை கண்ட
அப்பகுதி மக்கள்
அவருக்கு கொரோனா
வந்து இருக்கக்கூடுமோ என சந்தேகித்தனர். இதனால் வீட்டு
உரிமையாளர் சென்னை
மாநகராட்சி சுகாதார
அலுவலரிடம் தகவல்
கொடுக்கவே, அவர்கள்
வந்து ரவியை
அழைத்துச் சென்று,
கொரோனா பரிசோதனை
செய்து வைத்து
மீண்டும் அவர்
வீட்டின் முன்பாகவே
இறக்கி விட்டு
விட்டனர்.
நாட்கள் பல அடையவே மக்களுடைய பேச்சைக் கேட்டு வேறு தெருவில் உள்ள ஒரு இடத்தில் சென்று அமர்ந்திருக்கின்றார். தொடர்ந்து அவருக்கு உணவும், நீரும் கிடைக்காமல் அவர் ஒருநாள் அதிகாலையில் இறந்து கிடந்தார். அவர் கொரோனாவால் தான் இறந்திருப்பார் என அந்த பகுதி மக்கள் அவருடைய சடலத்தை கூட எடுக்க அருகில் வரவில்லை. அவரது கொரோனா பரிசோதனை ஆய்வு முடிவு வந்த பிறகு அவருக்கு கொரோனா இல்லை என்று அறிந்தவுடன் அவருடைய உடலானது மாநகராட்சி அலுவலர்களால் எடுக்கப்பட்டது. நோயினால் அவதியுற்று இருந்த ஒரு மனிதரை குடும்பமும், சமூகமும் ஒதுக்கி வைத்ததால் ஒருவர் தன்னுடைய உயிரை இழந்த சோகம் இது. நோய் என்னும் சுமை ஒரு பக்கம் இருக்க, சமூகத்தால் ஒதுக்கி வைத்த சுமை மற்றொரு பக்கம். இத்தகைய பெரும் சுமையால் அவதியுற்ற ஒரு மனிதன் இறுதியாக உயிரை இழந்து இருக்கின்றார். இன்று இந்த ரவியை போல பலரும் பலவிதமான சுமைகளால் அவதியுற்று கொண்டிருக்கின்றன. இந்த சுமைகளை பாரங்களையெல்லாம் நீக்கி, இவர்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பவராக, சுமை தாங்கியாக இறைமகன் இயேசு கிறிஸ்து இருக்கின்றார் என்பதைத்தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு எடுத்துரைக்கின்றது.
சுமைகளை இறக்கி வைக்கின்ற சுமைதாங்கி இறைமகன் இயேசு கிறிஸ்து இரண்டு வகையான உள்ளங்களை பற்றிக் கூறுகின்றார்.
1. சுகமான குழந்தை உள்ளம்
2. சுமையான பரிசேய உள்ளம்.
1. சுகமான குழந்தை உள்ளம்
யூத மரபில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் வெளிப்படுத்த வேண்டிய மறையுண்மையை குழந்தைகளுக்கு இன்றைய நற்செய்தியில் வெளிப்படுத்தப்படுவது என்பது துய்மையான, சுகமான மற்றும் சுமையற்ற குழந்தை உள்ளத்தை நமக்கு காட்டுகிறது.
குழந்தை உள்ளம், பாவம், பொறாமை, கஷ்டம், துன்பம், நோய் மற்றும் பாவம் என்னும் சுமையற்ற உள்ளமாக, சுகமான உள்ளமாக இருக்கின்றது. இதைத் தான் இறைமகன் இயேசு கிறிஸ்து லூக்கா 9:48-ல் "இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார். என்கிறார். மேலும் மாற்கு 10:14-ல் “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது என்கிறார். இவை அனைத்தும் சுகமான குழந்தை உள்ளத்தை எடுத்து காட்டுகிறது.2. சுமையான பரிசேய உள்ளம்
இறைமகன் இயேசு கிறிஸ்து "சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள்" என அழைப்பு தருகின்றார். இங்கு சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என இயேசு பரிசேயரையும் மறைநூல் அறிஞர்களையும் கூறுவதை பார்க்கின்றோம். இது அவர்கள் சுயநலம், பகைமை, பொறாமை, பாவம், விபச்சாரம், களவு, பொய். சாட்சி, வஞ்சிட்டு பேசுதல் என்ற எண்ணற்ற சுமையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற உள்ளமாக இருப்பதை பார்க்கிறோம்.
நம் உள்ளங்கள் -சுகமா? சுமையா?
இன்று நம்முடைய உள்ளங்கள் சுகமானதா அல்லது சுமையானதா என்று நாம் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். பல வேளைகளில் நம்முடைய உள்ளங்கள் பரிசேய உள்ளத்தை போல பொறாமை உணர்வோடும், பகைமை உணர்வோடும், சுயநலத்தோடும், பாவத்தோடும், கஷ்டத்தோடும், வேதனையோடும் நோயோடும் சுமையாக இருக்கிறது. இத்தகைய சுமைகளோடு நாம் வாழுகின்ற பொழுதெல்லாம் நாம் பரிசேய உள்ளத்தை கொண்டிருக்கின்றோம். மாறாக இன்று நாம் சுகமான, யாருக்கும் தீங்கு நினையாத, எந்த ஒரு பாவமும் இல்லாத குழந்தை உள்ளத்தோடு வாழ, இன்றைய நாளிலே இறைவார்த்தையின் அடித்தளத்தில் அழைக்கப்படுகின்றோம்.
நாம் நம்மீது சுமத்தும் சுமைகள்
நாம் பல வேளைகளில் நம்முடைய வாழ்க்கையில் எண்ணற்ற சுமைகளை சுமத்திக் கொண்டு தான் இருக்கின்றோம். மற்றவர் மீது பொறாமை கொள்வது, மற்றவரோடு பகைமை உணர்வோடு வாழ்வது, சுயநலத்தோடு வாழ்வது என எண்ணற்ற சுமைகளை நாம் நம்மீது சுமத்தி கொண்டிருக்கின்றோம். இன்று நாம் நம்முடைய சுமைகளை இறக்கி வைக்க இறைமகன் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் "சுமை சுமந்து சோர்ந்திருப்பொரே எல்லோரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று கூறுகின்றார். நாம் நம்முடைய சுமைகளை இறைவன் முன் இறக்கி வைத்து, அவருடைய இளைப்பாறுதலை பெற்று செல்ல, இறைமகன் இயேசு கிறிஸ்து கொடுக்கின்ற ஒரு புதிய வாழ்வை, குழந்தை உள்ளத்தை பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகின்றோம்.
பிறர் மீது நாம் சுமத்தும் சுமைகள்
பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் யூத சட்டம் என்னும் சுமையை மக்கள் மீது சுமத்தினார்கள். நாம் இன்று நம்முடைய வாழ்க்கையில் நம்மீது மட்டுமல்லாது, பிறர் மீதும் சுமத்திக் கொண்டு தான் இருக்கின்றோம். பல வேலைகளில் பிறர் மீது மட்டுமே நாம் சுமைகளை சுமத்துகின்றவர்களாக மாறி கொண்டிருக்கின்றோம். சாதி, சமயம், மொழி, இனம், நோய், பேய், படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன் மற்றும் தாழ்ந்தவன் என்னும் எண்ணற்ற பெயர்களால் பலர் மீது நாம் சுமைகளை சுமத்தி கொண்டிருக்கின்றோம். இன்று நாம் பிறர் மீதும் சுமைகளை சுமத்துகின்றவர்களாக அல்லாது பிறருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்கின்றவர்களாக மாற அழைக்கப்படுகின்றோம்.
இயேசு :- சுமைகளை சுகங்களாக மாற்றுபவர்
கலாத்தியர். 6:2-ல் "ஒருவர் மற்றவருடைய சுமைகளை தாங்கிக் கொள்ளுங்கள்" என்னும் பவுல் அடிகளாருடைய வார்த்தைகளுக்கு ஏற்ப, பிறருடைய சுமைகளை சுமக்கின்ற சுமை தாங்கியாக, இறைவன் இயேசு கிறிஸ்து எவ்வாறு நம்முடைய பாவம் என்னும் சுமைகளை சிலுவையில் சுமந்தாரோ, அதேபோல நாம் ஒருவர் மற்றவருடைய கஷ்டங்களை, துன்பங்களை சுமக்கின்ற சிலுவைகளை, இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் சுமந்து செல்வோம். இறைமகன் இயேசு கிறிஸ்து சுமைகளை சுகங்களாக மாற்றுவார். அவரைப்போல நாமும் ஒருவர் மற்றவருடைய சுமைகளை சுகங்களாக மாற்றுவோம். நம்மிலே குழந்தை உள்ளத்தை யாவருக்கும் உருவாக்கிக் கொடுப்போம்.
யோவான். 2:7-ல் இயேசு கானாவூர் திருமணத்தில் அவமானம் என்னும் சுமையை இறக்கி வைக்கின்றார். யோவான். 6 :11-ல் 5000 பேருக்கு பாலைநிலத்தில் பசி என்னும் சுமையை இறக்கி வைக்கின்றார். லூக்கா. 17: 14 -ல் 10 தொழு நோயாளிகளுக்கு நோய் என்னும் சுமையை இறக்கி வைக்கின்றார். லூக்கா. 19: 5 -ல் சக்கேயுவுக்கு பாவம் என்னும் சிலுவை சுமையை இறக்கி வைக்கின்றார். மத்தேயு 17 :18-ல் சிறுவனுக்கு பேய் என்னும் சுமையை இறக்கி வைக்கின்றார். லூக்கா. 7 :14-ல் நயீன் ஊர் கைம்பெண் மகனுக்கு இயேசு மரணம் என்னும் சுமையை இறக்கி வைக்கின்றார். லூக்கா. 8:24-ல் சீடருக்கு பயம் என்னும் சுமையை காற்றையும் கடலையும் கடிந்து இறக்கி வைக்கின்றார்.
ஆக இறைமகன் இயேசு கிறிஸ்து துன்பம், துயரம், கஷ்டம், பாரம், இழப்பு, ஏமாற்றம், அவமானம், தாகம், பசி, நோய், பாவம், மரணம், பயம், ஏக்கம் என்னும் சகலவிதமான சுமைகளையும் இறக்கி வைக்க கூடிய வல்லவராக இளைப்பாறுதல் தர கூடியவராக இருக்கிறார். அவரில் நாம் இளைப்பாற இறையருளை வேண்டி பக்தியாய் மன்றாடுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்.