Monday, April 18, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பாஸ்கா காலம் 2-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) -----24-04-2022 - ஞாயிற்றுக்கிழமை




முதல் வாசகம்: திப 5: 12-16

இரண்டாம் வாசகம்: திவெ 1: 9-11a, 12-13, 17-19

நற்செய்தி:  யோவான் 20: 19-31


நம்பிக்கையை வளர்க்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு

நிக்கோலஸ் ஜேம்ஸ் 1982 டிசம்பர் 4-ஆம் தேதி பிறந்தவர். இவர் உணர்ச்சிமயமான ஆஸ்திரேலிய பேச்சாளர். இவர் பிறவிலேயே டெட்ரா அமெல்லியா சின்ட்ரோம் என்னும் நோயினால் தனது இரண்டு கைகளையும் மற்றும் கால்களையும் இழந்தவர். குழந்தை பருவத்தில் இருந்தே பல இன்னலுக்கு ஆளானவர். ஆரம்பத்தில்; இவரது குறைபாட்டின் காரணமாக கல்வி நிறுவனங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்பு சட்ட மாறுதலின் காரணமாக மனநிலை குன்றியவர்களோடு இணைந்து படிக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டது. இவர் தனது எட்டாவது வயதில் வாழ்வின் மீது நம்பிக்கையின்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின் தனது பெற்றோர்களின் உடனிருப்பால் மற்றும் அன்பால் வாழ்வில் நம்பிக்கை பெற்று, தனது வாழ்விற்கு தேவையான யாவற்றையும் வேறு ஒருவர் உதவியின்றி தானாகவே செய்ய ஆரம்பித்தார். தனது குறைகளை தாண்டி 17வது வயதில் லைப் வித்தவுத் லிமிட் என்னும் நிறுவனத்தை துவங்கினார். இவரது சேவையுணர்வை பார்த்து பலரும் இவரது நிறுவனத்திற்கு உதவ முன் வந்தனர். 2005-ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த நபர் என்னும் விருதை பெற்றார். 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், தனது 21வது வயதில் கணக்கியல் மற்றும் நிதியியல் திட்டமிடலை இரட்டை பட்டமாக முடித்தார். மிகச்சிறந்த பேச்சாளராக ஐந்து கண்டங்களில் உள்ள 25 நாடுகளில் 3 மில்லியனுக்கும் அதிகமானவர்களில் உரையாற்றியுள்ளார். பிறவிலேயே தனது இரண்டு கைகளையும் மற்றும் கால்களையும் இழந்து, வாழ்க்கையின் மீது நம்பிக்கையிழந்து, தற்கொலை முயற்சிக்கு சென்ற ஒரு மனிதர், இன்றைக்கு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, பல விருதுகளையும் பெற்று, மிகச்சிறந்த பேச்சாளராகவும், சேவையுணர்வு கொண்ட மனிதராகவும் திகழ்ந்து உலகறிந்தவராக இருக்கின்றார். இதற்கு அன்று அவர் நம்பிக்கையிழந்து, தற்கொலை செய்ய நினைத்த போது அவரோடு உடனிருந்த பெற்றோர்கள் தான் காரணம், அவர்களுடைய ஒன்றிப்பும் உடனிருப்பும் அவருக்கு நம்பிக்கையை அளித்து புது வாழ்வைத் தந்தது. நமது வாழ்விலும் ஒன்றிப்பும் உடனிருப்பும் நம்பிக்கையை வளர்க்கும் என்பதை அறிந்துக்கொள்ள அழைக்கப்படுகிறோம். இன்று பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடுகின்றோம். இது உயிர்ப்பின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம் ஒவ்வொருவரையும் கிறிஸ்தவ வாழ்வில் ஒன்றினைந்து நம்பிக்கையை ஆழப்படுத்த அழைக்கிறது.

தோமாவின் ஒன்றிப்பு

இன்றைய நற்செய்தியை வாசிக்கின்ற போது திருத்தூதர் தோமா சந்தேகம் கொண்ட ஒரு மனிதர் என நமக்கு நினைக்க தோன்றுகிறது. இயேசுவோடு உடன் வாழ்ந்து, அவருடைய போதனைகளை கேட்டு வளர்ந்த ஒரு மனிதர், எப்படி இயேசு உயிர்த்தார் மற்றும் நம் மத்தியில் தோன்றினார் என்பதை நம்பாமல் இருப்பார் என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. இயேசு தம் சீடர்களிடம் நான் செல்லும் இடத்திற்கு உங்களால் வர முடியாது. கொஞ்ச நாள் உங்களுடன் இருப்பேன், மீண்டும் நான் செல்வேன். மீண்டும் நான் வருவேன் என்றெல்லாம் போதித்துக் கொண்டிருக்கும் போது, "நீர் எங்கே போகின்றீர்? என்றே எங்களுக்கு தெரியாது, அப்படியிருக்க நீ போகும் இடத்திற்கு வழியை எப்படி தெரிந்து கொள்ள இயலும் (யோவான் 14:5) என்று தோமா சொல்கிறார். இயேசு இறந்த இலாசரை காண செல்வோம் என்று சொல்லும் போது தோமா மற்ற சீடர்களிடம் "நாமும் அவரோடு செல்வோம் அவரோடு இறப்போம்" என்று சொல்கிறார். (யோவான் 11: 16) அப்படியென்றால் மற்ற சீடர்களை காட்டிலும் தோமா ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர் என்பது புரிகிறது. பின்பு ஏன் சீடர்கள் தோமாவிடம் “ஆண்டவரைக் கண்டோம்” என்று கூறிய போது தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். தோமா இயேசுவுடன் இருந்து அவர் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருந்தாலும், இயேசுவின் இறப்புக்கு பிறகு அவர் கிறிஸ்தவ ஒன்றிப்பை தவற விட்டிருக்கிறார். அதாவது திருத்தூதர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே அறையிலிருந்த பொழுது தோமா மட்டும் அங்கு இல்லை, அன்று திருத்தூதர்களோடு இல்லாத நிலை தான் அவர் இயேசுவின் மீது சந்தேகம் கொள்ள வைத்திருக்கிறது. தோமா திருத்தூதர்களோடு ஒன்றித்திருந்த போது இயேசு மீண்டும் தோன்றுகிறார். அதுவரைக்கும் கண்டாலும் அவருடைய காயங்களில் விரலை விட்டால் தான் நம்புவேன் என்று சந்தேக வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்த தோமா இயேசுவை பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்கிறார் (யோவா 20:28). இங்கு கிறிஸ்தவ ஒன்றிப்பு இயேசுவை காண செய்து மற்றும் அவரது நம்பிக்கையை புதுப்பிக்க செய்கிறது.

திருத்தூதர்களின் ஒன்றிப்பு

இன்றைய முதல் வாசகத்தில் உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கை கொண்ட திருத்தூதர்கள் பல்வேறு அரும் அடையாளங்களையும் மற்றும் அதிசயங்களையும் நிகழ்த்துவதாக தரப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பேதுரு நடந்து செல்லும் போது அவருடைய நிழல்படுகின்ற இடமெல்லாம் உடல் நலமற்றோரை அவர்கள் வைத்தது, மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது (திப 5: 12). இன்றைய இரண்டாம் வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் யோவானுக்கு வெளிப்படுத்திய திருவெளிப்பாடு அதாவது அருளடையாளங்கள் தரப்பட்டிருக்கிறது (திவெ 1:19). ஆண்டவர் இயேசுவின் இறப்புக்கு பிறகு அச்சத்தால் மூழ்கி கிடந்த சீடர்கள், இயேசுவின் தோற்றத்தால் மற்றும் தூய ஆவியின் வருகையால் நம்பிக்கை கொண்டார்கள். இதற்கு அடிப்படை காரணம் அவர்கள் மத்தியில் இருந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு, இயேசு அவர்களுக்கு தோன்றிய போதும் மற்றும் தூய ஆவியாரின் வருகையின் போதும் இவர்கள் அனைவரும் ஆங்காங்கே தனித்தனி அறையில் அல்லாது, ஒன்றாக ஒற்றுமையாக ஜெபித்து கிறிஸ்தவ ஒன்றிப்பை வெளிப்படுத்தினார்கள். "ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்"(திப 5:14). இது தான் இவர்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையை ஆழப்படுத்தி, யாவருக்கும் கிறிஸ்துவை எடுத்துரைத்து, அற்புதங்களை நிகழ்த்த காரணமாக அமைகின்றது.

கிறிஸ்தவர்களின் ஒன்றிப்பு

தோமா கிறிஸ்தவ ஒன்றிப்பை தவறவிட்டதால் இயேசுவை பார்க்கின்ற வாய்ப்பை இழந்தார் மற்றும் அவரது நம்பிக்கையில் தளர்ந்தார். நமது வாழ்க்கையிலும் நாம் கத்தோலிக்க திருஅவையோடு ஒன்றிணைந்து இல்லாத போது நமது நம்பிக்கை தளர்கிறது, "ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே" (1 யோவான் 5:4). திருஅவையோடு நாம் ஒன்றித்து வாழ்கின்ற பொழுது, நமது அன்றாட கிறிஸ்தவ பணிகளாக ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பங்கு கொள்ளுவோம், இறைவார்த்தையை கேட்டு தியானிப்போம், திருவருட்சாதனங்களில் பங்கு பெறுவோம் மற்றும் இறையாசீரை பெற்றவர்களாக நமது இறைநம்பிக்கையில் நிலைத்து வாழ்வோம், ஆக கிறிஸ்தவ ஒன்றிப்பு தான் நமது இறைநம்பிக்கையை வளர்த்தெடுக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையிலும் குடும்பமாக கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் என ஒன்றாக ஒற்றுமையாக வாழும் போது அவர்களில் அதாவது ஒருவர் மற்றவர் மீது நம்பிக்கை உருவாகிறது. "நாம் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் கொள்ளக் கற்றால் தான் போராட்டத்தில் நாம் வெல்வோம்" என்கிறார் லெனின். நாம் நமது வாழ்க்கை என்னும் போராட்டத்தில் நம்பிக்கையோடு வெற்றி பெற ஒற்றுமை அவசியமாகிறது. வாழ்வில் பொறாமையையும் மற்றும் பகைமையுணர்வையும் வெறுத்து உறவுகளோடு ஒன்றித்து வாழ்வோம், நம்பிக்கையில் நாளும் வளர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

 காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...


                                  https://youtu.be/w5_DRhE_mIg