முதல் வாசகம்: திப 5: 27b-32, 40b-41
இரண்டாம் வாசகம்: திவெ 5: 11-14
நற்செய்தி: யோவான் 21: 1-19
உனக்கு என்னிடம் அன்பு உண்டா?
விஜய் ஒரு கால்பந்து விளையாட்டு வீரன். அவன் எவ்வளவு நல்லா விளையான்டாலும் அவனுக்கு போட்டிகள்ல விளையாட வாய்ப்பே கிடைக்காது. அவன் சும்மா வெறுமனே பென்ச்ல உதவி ஆளா உக்கார வச்சிருப்பாங்க. என்னதான் தன்னோட மகன் பெஞ்சுல இருந்தாலும் அவனோட அப்பா அவன் பங்கெடுத்துக்கிற எல்லா போட்டிக்கும் வந்துடுவார். விஜய் தன்னோட பள்ளி படிப்ப முடிச்சு காலேஜ் போனான். அங்கேயும் கால்பந்து விளையாட்டுல ஈடுபட்டான் விஜய். அந்த விளையாட்டுகளையும் ஒன்னு விடாம பாக்க வந்துடுவாரு அவுங்க அப்பா. சில காலங்களுக்கு அப்புறமா விஜயோட அப்பா மரணமானாரு. இந்த செய்தி கேட்ட விஜய் கால்பந்தாட்ட கொச் கிட்ட போயி விசயத்த சொன்னான். நீ போயிட்டு வா விஜய் நீ இன்னைக்கு போட்டியிலயும் விளையாடல அதனால எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லைனு சொன்னாரு. ஊருக்கு போன விஜய் எல்லா சடங்குகளையும் முடிச்சுட்டு திரும்பவும் காலேஜ்க்கு வந்தான். அன்னிக்கு ஒரு போட்டி இருந்துச்சு அங்க போயி கொச் கிட்ட சார் நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன் இன்னைக்கு என்ன விளையாட வைங்கன்னு சொன்னான். சுமாரா விளையாடுற விஜய போட்டியில விளையாட வைக்க அவருக்கு விருப்பம் இல்ல அதனால் கொஞ்சம் யோசிச்சாறு. திரும்ப திரும்ப விஜய் வேண்டி கேட்டுக்கிட்டதால அவரும் சம்மதிச்சாரு. போட்டி ஆரம்பமாச்சு , எப்பவும் இல்லாம அன்னைக்கு விஜய் ரொம்ப ஆக்ரோஷமா விளையாண்டான். அவனால முடியாதுன்னு சொன்ன எல்லா திறமைகளையும் அந்த போட்டியில அவன் செஞ்சு கட்டினான். இவ்வளவு நாள் தன்னோட நண்பன் இப்படி விளையாடுவான்னு கூட தெரியாத மத்த விளையாட்டு வீரர்களும் ரொம்ப நல்லா விளையாண்டாங்க. விஜயோட திறமையான விளையாட்டாள அன்னி க்கு போட்டியா அவுங்க ஜெயிச்சாங்க. விஜய் கிட்ட வந்த எல்லாரும் அது எப்படிடா இன்னைக்கு மட்டும் இவ்வளவு நல்லா விளையான்டான்னு கேட்டாங்க. அப்பத்தான் விஜய் சொன்னான் நாம விளையாடுற எல்லா விளையாட்டையும் பாக்க எங்க அப்பா வருவாருன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா அவர் ஒரு பார்வையற்றவருன்னு உங்க எல்லாருக்கும் தெரியுமா, என்னதான் அவர் நேர்ல போட்டிய பாக்க வந்தாலும் அவரால போட்டிய பாக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். அதனாலதான் என்னோட விளையாட்டு கொஞ்சம் சுமாரா இருந்துச்சு. இன்னைக்கு எங்க அப்பா இறந்துட்டாரு அவரோட ஆத்மா இன்னைக்கு விளையாட்ட பாக்கனும்னு நம்புனேன். அதனால தான் எங்க அப்பாவ திருப்திபடுத்த இன்னைக்கு நல்லா விளையாண்டேன் அப்படின்னு சொன்னான். விஜய்க்கும் அவன் அப்பாவுக்கும் இடையே இருந்த அன்பை உணர்த்த வைக்கிறது இந்த கதை. நமக்கும் நம் அப்பா இறைவனுக்கும் இடையே இருக்கும் அன்பை சிந்திக்க வைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு தன்னுடைய உயிர்ப்பிற்கு பிறகு சீடர்களுக்கு பல்வேறு தருணங்களில் காட்சியளிக்கின்றார். அவ்வாறாக இன்றைய நற்செய்தியில் தன்னுடைய சீடர்களில் ஏழு பேருக்கு அவர் காட்சியளிக்கின்றார், அப்பொழுது அவர்களின் பழைய மற்றும் இருளான வாழ்விலிருந்து புதிய மற்றும் ஒளி தரும் வாழ்வுக்கு அழைத்து செல்கின்றார். இன்றைய நற்செய்தி சீடர்களின் மாற்றத்தையும் அதிலும் குறிப்பாக பேதுருவின் மாற்றத்தையும் எடுத்தியம்புகிறது, இது தான் அன்பை மையப்படுத்திய வாழ்வு.
1. சீடர்களின் மாற்றம்:-
இயேசு கொடுத்த அழைப்பை ஏற்று, தங்களது மீன்பிடி வலைகள், படகு என தங்களது தொழிலை முற்றிலும் விட்டு, அவரோடு மூன்று ஆண்டுகள் பயணித்த திருத்தூதர்கள், இயேசுவின் இறப்புக்கு பிறகு குறிப்பாக இன்றைய நற்செய்தியில் மீண்டுமாக தங்களது பழைய நிலைக்கு செல்கின்றனர். "இதோ! உலக முடியும் வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்தேயு 28:20) என்று இயேசு கொடுத்த அழைப்பை மறந்து மீண்டுமாக தங்களது தொழிலை செய்ய சென்றது சீடர்களின் பழைய நிலையை எடுத்துக்காட்டுகிறது. மீண்டுமாக மீன்பிடி தொழிலை செய்தது, அதை இரவு நேரத்தில் செய்தது, அவர்களுக்கு மீன்பாடு கிடைக்காமல் இருந்தது மற்றும் இயேசு அங்கு கரையிலிருந்தும் அவரை உணராமலிருந்தது என எல்லாம் சீடர்களின் பழைய மற்றும் இருளான நிலையை எடுத்துரைக்கிறது. “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” (யோவான் 21:6) என இயேசு கூறியது அவர் தரும் புது வாழ்வை மற்றும் ஒளியை தருகிறது. இங்கு இயேசுவால் பழைய பாவ நிலை மறைந்து அவர்களுக்கு புதிய நிலை உருவாக்கப்படுகிறது, மீன்பிடி தொழில் மறைந்து அன்பின் பணிவாழ்வு என்னும் புதிய அழைப்பு தரப்படுகிறது. அவர்களுக்கு உணவு தந்து தனது இறுதி இராவுணவை, பாடுகளை, இறப்பு மற்றும் உயிர்ப்பை எடுத்துரைத்து "என் ஆடுகளைப் பேணி வளர்" (யோவான் 21: 15) மற்றும் "என்னைப் பின் தொடர்" (யோவான் 21: 19) என்னும் அன்பின் வழியை அவர்களுக்கு காட்டுகின்றார்.
2. பேதுருவின் மாற்றம்:-
மத்தேயு 16: 22 வசனத்திலேயே இயேசு தன்னுடைய பாடுகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்து கொண்டிருந்த போது பேதுரு இயேசுவைப் பார்த்து "ஆண்டவரே இது வேண்டாம், இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்கின்றார். மேலும், லூக்கா 22: 54-62 வசனங்களில் இயேசுவை கைது செய்து பிலாத்துவின் அரண்மனையில் அழைத்து சென்ற போது, அங்கிருந்த ஒரு பெண்மணி பேதுருவைப் பார்த்து நீயும் அவரோடு இருந்தவன் தானே? என்று கேட்கின்ற பொழுது பேதுரு இயேசுவை தெரியாது என மூன்று முறை மறுதலிக்கின்றார். மத்தேயு 14: 29 -ல் இயேசு கடல்மீது நடந்து வருவதைக் கண்டு பேதுருவும் நடக்க ஆசை கொள்கின்றார், ஆனால் அவர் நம்பிக்கையற்று மூழ்கும் நிலைக்கு உள்ளாகுகின்றார். பேதுருவின் இத்தகைய தடுமாற்ற நிலையிலிருந்து நம்பிக்கையான நிலைக்கு அதாவது அன்பின் பணி வாழ்வுக்கு இன்றைய நற்செய்தியில் இயேசு அழைப்பு கொடுக்கின்றார். அதனால் தான் மூன்று முறை இயேசு பேதுருவை நோக்கி "எனக்கு உன்னிடம் அன்பு இருக்கின்றதா?" என்று கேட்கின்றார். அக்காலத்தில் மூன்று முறை கேட்பது ஒரு செயலை உறுதிப்படுத்துவதன் அடையாளமாக இருக்கின்றது. இயேசு பேதுருவை பார்த்து மூன்று முறை கேட்பது அவரையும் மற்றும் சீடர்களையும் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்து வாழ்வதற்கான அழைப்பாகும். இறை அன்பை உணர்ந்தால் மட்டும் போதாது, உணர்ந்த அன்பை நம்முடைய வாழ்வாக்க வேண்டும், அதாவது தொடர்ந்து இயேசுவினுடைய அன்பு பணியை செய்ய வேண்டும் என்பதன் அடையாளம்.
ஏன் இந்த கேள்வி?
இயேசு ஏன் இந்த கேள்வியை பேதுருவிடம் கேட்க வேண்டும்? இதன் வழியாக நம் ஒவ்வொருவரையும் ஏன் அன்பின் பணி வாழ்வுக்கு அழைப்பு கொடுக்க வேண்டும்? அன்பையே மையப்படுத்திய ஒரு பணியை மூன்று ஆண்டுகளாக வாழ்ந்து, அதன் உச்சக்கட்டமாக தன்னுயிரையே அன்பின் நிமித்தமாக அளித்து, தனது உயிர்ப்பின் காட்சிகளால் அதை நிலை நாட்டுகிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் அன்பை உணர மற்றும் வாழ வேண்டும் என்பதே அவர் தரும் அழைப்பின் நோக்கம். யோவான் நற்செய்தி இயேசுவின் "நானே" என்னும் ஏழு வார்த்தைகளை எடுத்துக்கூறுகிறது. இது இயேசுவே நமக்கு முதலும் - முடிவும், வாழ்வும் - ஒளியும், உணவும் - வழியும், உயிரும் - உயர்ப்புமாக என எல்லோருக்கும் எல்லாமாய் இருக்கிறார் என்பதை காட்டுகிறது, அதாவது தனது முழுமையான அன்பை வெளிப்படுத்துகின்றார் என்பதை உணர்த்துகின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவினுடைய "நானே" என்னும் ஏழு வார்த்தைகளையும் வெளிப்படுத்துகிறது.
1. “உலகின் ஒளி நானே" (யோவான் 8:12)
"உலகின் ஒளி நானே" என்ற இயேசு சீடர்கள் இரவில் மீன் பிடிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதை கண்டு, "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்" (21:6) என்று கூறி அதிகாலை வெளிச்சத்தில் அதிக மீன்களை பிடிக்க செய்கிறார்.
2. “வாழ்வு தரும் உணவு நானே" (யோவான் 6:35)
"வாழ்வு தரும் உணவு நானே" என்று கூறிய இயேசு சீடர்களிடம் "உணவருந்த வாருங்கள்" (21:12) என்று அப்பத்தையும் மற்றும் மீனையும் மட்டும் கொடுக்காமல் அன்பின் பணிவாழ்வுக்கான வழியை காட்டுகிறார்.
3. "நானே வாயில்" (யோவான் 10:9)
"நானே வாயில்" என்று கூறிய இயேசு அவரது இறப்புக்கு பிறகு மீண்டுமாக பழைய தொழிலுக்கு சென்ற சீடர்களை, இயேசு என்ற வாயிலின் வழியாக சென்று அவர் பணியாற்ற மூன்றாம் முறையாக தோன்றுகிறார் (21:14).
4. "நல்ல ஆயன் நானே" (யோவான் 10:11)
"நல்ல ஆயன் நானே" என்று கூறிய இயேசு பேதுருவை நோக்கி, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? என்று கேட்கின்ற பொழுது "என் ஆடுகளை மேய்" (21:16) என்று ஆயனின் வழியில் நல்லாயனாக வாழ்வதற்கு வழியை காட்டுகிறார்.
5. “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே" (யோவான் 11:25)
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே" என்று கூறிய இயேசு, பேதுரு "எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்த போகிறார்" (21:19) என்பதை முன்கூட்டியே எடுத்துரைத்து உயிர்த்தெழுதலையும் மற்றும் சாட்சிய வாழ்வையும் எடுத்துரைக்கிறார்.
6. “வழியும் உண்மையும் வாழ்வும் நானே" (யோவான் 14:6)
"வழியும் உண்மையும் நானே" என்று கூறிய இயேசு, இறுதியாக பேதுருவிடம் "என்னைப் பின்தொடர்"(21:19) என அவருக்கு வழியை காட்டுபவராக இருக்கிறார்.
7. “உண்மையான திராட்சைச் செடி நானே" (யோவான் 15:1)
"நானே திராட்சைச் செடி, நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது, என் அன்பில் நிலைத்திருங்கள். (யோவான் 15:4) என்று கூறிய இயேசு பேதுருவிடம் உனக்கு என்னிடம் அன்பு உண்டா? என்று கேட்டு சீடர்களையும் நம் ஒவ்வொருவரையும் அன்பின் வழியில் வாழ்வதற்கான ஒரு அழைப்பை தருகிறார்.
இயேசுவின் இந்த "நானே" எனும் ஏழு வார்த்தைகளும் இன்றைய நற்செய்தியில் இயேசுவின் அன்பாக நம் ஒவ்வொருவருக்கும் காட்டப்படுகிறது. நாம் அன்பின் வழியில் வாழ்வதற்கு அவர் தருகின்ற ஒரு அழைப்பாகவும் அமைகின்றது. கிறிஸ்தவர்களாகிய நாம் தவக்காலம் முடிந்துவிட்டது, இனி பழையபடி நாம் இறைவனை மறந்து விடுவோம், கோவிலுக்கு செல்லாமல் இருப்போம், பிறருக்கு உதவாமல் இருப்போம் என்ற எண்ணங்களைத் தவிர்த்து, இயேசுவின் உயிர்ப்பு காட்டுகின்ற அன்பின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
5. “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே" (யோவான் 11:25)
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே" என்று கூறிய இயேசு, பேதுரு "எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்த போகிறார்" (21:19) என்பதை முன்கூட்டியே எடுத்துரைத்து உயிர்த்தெழுதலையும் மற்றும் சாட்சிய வாழ்வையும் எடுத்துரைக்கிறார்.
6. “வழியும் உண்மையும் வாழ்வும் நானே" (யோவான் 14:6)
"வழியும் உண்மையும் நானே" என்று கூறிய இயேசு, இறுதியாக பேதுருவிடம் "என்னைப் பின்தொடர்"(21:19) என அவருக்கு வழியை காட்டுபவராக இருக்கிறார்.
7. “உண்மையான திராட்சைச் செடி நானே" (யோவான் 15:1)
"நானே திராட்சைச் செடி, நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது, என் அன்பில் நிலைத்திருங்கள். (யோவான் 15:4) என்று கூறிய இயேசு பேதுருவிடம் உனக்கு என்னிடம் அன்பு உண்டா? என்று கேட்டு சீடர்களையும் நம் ஒவ்வொருவரையும் அன்பின் வழியில் வாழ்வதற்கான ஒரு அழைப்பை தருகிறார்.
இயேசுவின் இந்த "நானே" எனும் ஏழு வார்த்தைகளும் இன்றைய நற்செய்தியில் இயேசுவின் அன்பாக நம் ஒவ்வொருவருக்கும் காட்டப்படுகிறது. நாம் அன்பின் வழியில் வாழ்வதற்கு அவர் தருகின்ற ஒரு அழைப்பாகவும் அமைகின்றது. கிறிஸ்தவர்களாகிய நாம் தவக்காலம் முடிந்துவிட்டது, இனி பழையபடி நாம் இறைவனை மறந்து விடுவோம், கோவிலுக்கு செல்லாமல் இருப்போம், பிறருக்கு உதவாமல் இருப்போம் என்ற எண்ணங்களைத் தவிர்த்து, இயேசுவின் உயிர்ப்பு காட்டுகின்ற அன்பின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
அன்புடன்:-
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...
(கேட்டு மகிழுங்கள்)
https://youtu.be/NKp1EXTZLWw