Saturday, October 15, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 29-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 16 -10-2022- ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(16 அக்டோபர் 2022)

முதல் வாசகம்: விப 17: 8-13
இரண்டாம் வாசகம்: 2 திமொ 3: 14- 4: 2
நற்செய்தி: லூக் 18: 1-8


விடாமுயற்சி தரும் மாற்றம்

படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த மனிதருக்குப் பேசவோ, நடக்கவோ முடியாது. உடலில் ஒரு விரலைத் தவிர வேறெந்த பாகத்தையும் அசைக்க முடியாது. அந்த நிலையில் இருக்கும் மற்ற எவருமே மரணம் சீக்கிரமாக தன்னிடம் கருணை காட்டாதா என்று ஏங்குவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது. ஆனால் வாஷிங்டன் ரோப்ளிங் (Washington Roebling) என்ற அந்த மனிதரின் உடலைத் தான் விதியால் தொட முடிந்ததே தவிர அவருடைய கனவையும், மன உறுதியையும் அந்த ஒரு பரிதாப நிலையிலும் தொட முடியவில்லை. இத்தனைக்கும் அவர் தன் கனவை நிறைவேற்றும் முயற்சியில் தன் தந்தையை இழந்திருந்தார். தன் உடல் இயக்கத்தையும் இழந்திருந்தார். ஆனால் அவரால் தன் கனவை இழக்க முடியவில்லை. நியூயார்க் நகரத்தில் மன்ஹட்டன் பகுதியையும், லாங் ஐலேண்ட் ப்ரூக்ளின் பகுதியையும் இணைக்க கிழக்கு நதியின் குறுக்கே 5989 அடி நீளமுள்ள தொங்குபாலம் கட்ட தன் தந்தையோடு சேர்ந்து எண்ணியிருந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் (1870 ஆம் ஆண்டில்) அது போன்ற பாலம் சாத்தியமே அல்ல என்று வல்லுனர்கள் கருதினார்கள். வாஷிங்டன் ரோப்ளிங்கும், அவர் தந்தை ஜான் ரோப்ளிங்கும் இருவருமே இஞ்சீனியர்கள். அவர்கள் சாத்தியம் என்று நம்பினார்கள். அந்தப் பாலம் கட்டும் பணியைத் தொடங்கவும் செய்தார்கள். பாலம் கட்டும் பணியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே கட்டுமானப் பணி நடந்த இடத்திலேயே ஒரு விபத்தில் தந்தை ஜான் ரோப்ளிங்க் இறந்து போனார். அந்தப் பணியைத் தொடர்ந்த மகன் வாஷிங்டன் ரோப்ளிங்கும் ஒரு விபத்தில் அடிபட்டு மூளையின் சில பாகங்கள் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எல்லோரும் அந்தப் பாலம் முட்டாள்தனமான முயற்சி என்றும், ராசியுமில்லாதவை என்றும், அந்த விபத்துகள் அதற்கான ஆதாரம் என்றும் விமரிசித்தார்கள். சிகிச்சைக்குப் பின் வாஷிங்டன் ரோப்ளினுக்கு அசையும் ஒரு விரலும், அசையாத மனமும் மட்டுமே எஞ்சி இருந்தன. அவர் அந்த பரிதாப நிலையிலும் உள்ளதை வைத்து முடிந்ததைச் செய்ய எண்ணினார். சில நாட்களில் மனைவி எமிலியுடன் விரலாலேயே தன் கருத்துகளைத் தெரிவிக்கும் ஒரு முறையை உருவாக்கிக் கொண்டு பாலம் கட்டும் எஞ்சீனியர்களை வரவழைக்கச் சொன்னார். அவர்களும் வந்தனர். மனைவி மூலம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கினார். மீண்டும் பாலம் கட்டும் பணி ஆரம்பித்தது. கணவருக்காக எமிலி தானும் கணிதம், கட்டிடக் கலை ஆகியவற்றைக் கற்று அந்தப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அவர் மேற்பார்வையில் 11 ஆண்டுகளில் அந்தப் பாலம் நிறைவு பெற்றது. வாஷிங்டன் ரோப்ளினின் அந்தக் கனவு 1883ல் ப்ரூக்ளின் பாலம் என்ற பெயரில் நனவாகி வரலாற்றுச் சின்னமானது. அந்தப் பாலத்தைத் திறந்து வைத்தார் அமெரிக்க ஜனாதிபதி. விடாமுயற்சி மனித வாழ்வின் கனவுகளையும் மற்றும் இலட்சியங்களையும் அடைய இறைவன் தந்த மாபெரும் கருவி. இதை கிறிஸ்தவர்களாகிய நாமும் நமது ஜெப வாழ்வில் பயன்படுத்திட இன்றைய இறைவார்த்தைகளின் வழியாய் இறைவன் நம்மை அழைக்கிறார்.

"இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்." (1 தெசலோனிக்கர் 5:17) என்னும் பவுல் அடிகளாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப இன்றைய நற்செய்தி வாசகம் இடைவிடாது ஜெபிக்க அழைப்பு தருகிறது. இடைவிடாது தொடர்ந்து நீதிக்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்ற கைம்பெண் மற்றும் நேர்மையற்ற நடுவரின் உவமையை இறைமைந்தன் இயேசு எடுத்துரைத்து அதே விடாமுயற்சியை நம்முடைய வாழ்விலும் கொண்டிருக்க அழைக்கிறார். இன்றைய நற்செய்தி விடாமுயற்சி தரும் இரண்டு வகையான மாற்றத்தை எடுத்துரைக்கிறது.

1. தன்னில் மாற்றம்
2. பிறரில் மாற்றம்

1. தன்னில் மாற்றம்

இன்றைய நற்செய்தியில் விடாமுயற்சியோடு நீதி கேட்டு போராடிக் கொண்டிருந்த கைம்பெண்ணுக்கு விடாமுயற்சியின் பலனாக நீதி கிடைக்கிறது. இது தன்னில் அவர் கண்ட மாற்றத்தை காட்டுகிறது.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் "

என்ற வள்ளுவரின் வரிகள் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். முயற்சி செய்ய செய்ய நமக்குள்ளேயே ஒரு ஆர்வம் வந்துவிடும். நம்மில் ஏற்படுகின்ற இந்த நம்பிக்கையும் ஆர்வமும் நாம் நமது இலக்குகளை மற்றும் இலட்சியங்களை அடைவதற்கு வழி வகுக்கும். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் இடைவிடாமல் மற்றும் மனம் தளராமல் ஜெபிக்கின்ற பொழுது நிச்சயம் நாம் இறைவனால் ஆசீர்வதிக்கப்படுகின்றோம். அவருடைய பிள்ளைகளாக மாறுகின்றோம்.

2. பிறரில் மாற்றம்

விடாமுயற்சி நம்மில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. நம்மைச் சார்ந்த மற்றும் நமக்காக உதவி செய்தவர்களையும் மாற்றுகிறது. நற்செய்தியில் நேர்மையற்ற நடுவர் தன்னுடைய நேர்மையற்ற தன்மையிலிருந்து மாறுபட்டு செயல்படுகிறார். கடவுளுக்கு அஞ்சாதவன் மற்றும் மக்களை மதிக்காதவன் தன்னுடைய நேர்மையற்ற தன்மையிலிருந்து மாறி, நேர்மையாக அந்த பெண்ணுக்கு நீதி வழங்குவது அவளது விடா முயற்சியால தான். இன்றைக்கு நமது வாழ்விலும் விடாமுயற்சியுடன் இறைவனை நோக்கி ஜெபிக்கின்ற பொழுது அது நம்முடைய குடும்பங்களுக்கும் ஆசீர்வாதமாக அமையும்.

                    லூக்கா நற்செய்தி 11:5-10-ல் நண்பன் வந்து கதவை தட்டிக் கொண்டே இருக்கின்றான், அவனுடைய தொல்லையின் பொருட்டு அவன் எழுந்து அவனுக்கு தேவையான ரொட்டியை கொடுக்கின்றான், விடா முயற்சி வெற்றி தருகிறது. மத்தேயு நற்செய்தி 15:27-28-ல் இஸ்ராயேல் குலத்தை சாராத கானானிய பெண் விடாமுயற்சியுடன் தொடர்ந்து இயேசுவிடம் பரிந்து பேசிக்கொண்டே இருக்கிறார், இறுதியாக மாற்றத்தை உணர்கிறாள். மாற்கு நற்செய்தி 10:46-52 -ல் பார்வையற்ற பர்த்திமேயு 'இயேசுவே தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று விடாமுயற்சியோடு நம்பிக்கையோடு வேண்டிக் கொண்டே இருக்கின்றான், இறுதியாக பார்வையைப் பெறுகிறான். இன்றைக்கு நமது வாழ்விலும் கிறிஸ்தவர்களாகிய நாம் பல வேளைகளில் ஜெபிக்கின்ற போது மனம் தளர்ந்து விடுகின்றோம். விடாமுயற்சியோடு தொடர்ந்து இறைவனிடம் ஜெபிக்க மறந்து விடுகின்றோம். குறிப்பாக, நமது சோதனை மற்றும் துன்பமான காலகட்டங்களில் நாம் இறைவனிடம் நம்பிக்கையோடு தொடர்ந்து ஜெபிக்க தவறி விடுகின்றோம். நான் இறைவன் மீது நம்பிக்கையாக இருக்கின்றேன் மற்றும் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கின்றேன் ஆனால், எனக்கு இறைவன் எதையும் செய்யவில்லை என்று நாம் மனம் தளர்ந்து விடுகின்றோம். நாம் ஒவ்வொரு முறையும் ஜெபிக்கின்ற பொழுது இறைவன் அருகே சென்று கொண்டிருக்கிறோம். இறைவனுடைய அருள் வரங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றோம். இது நம்முள் ஏற்படுகின்ற நாம் அறியாத ஒரு மாற்றம். எனவே நாம் ஒவ்வொரு முறையும் ஜெபிக்கின்ற பொழுது இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்தவர்களாக ஒவ்வொரு நாளும் இடைவிடாது நம்பிக்கையோடு ஜெபத்தில் அவரோடு இணைவோம்.

மனம் தளராது விடாமுயற்சியோடு செயல்படுவது வெறும் நமது ஜெப வாழ்விற்கு மட்டுமல்லாது, நமது அன்றாட வாழ்வில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் விடாமுயற்சி அடிப்படையாக தேவைப்படுகிறது. நாள்தோறும் குறைந்தபட்சம் ஐந்து பக்கங்களாவது எழுதிவிட வேண்டும் என்று விடாமுயற்சியோடு எழுதியதுதான் பெர்னாட்ஷாவைத் தலைசிறந்த எழுத்தாளர் என்ற வரிசையில் கொண்டு நிறுத்தியது. வெற்றி சாதாரணமாக யாருக்கும் கிடைத்து விடுவதில்லை. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி கிட்டும். தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோம். அவர் அந்த வெற்றியை அடையும்முன் ஆயிரம்முறை தோற்றிருக்கிறார். அதற்காக அவர் அவருடைய முயற்சியைக் கைவிட்டுவிடவில்லை. தொடர் ஆராய்ச்சி செய்ததன் விளைவாகவே ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் என்னும் உயர்நிலையை தாமஸ் ஆல்வா எடிசன் அடைய முடிந்தது. "அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் " வெற்றி பெற வேண்டுமா? விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும் அழைத்துக் கொண்டு கை கோர்த்து நடந்து பாருங்கள். ஜெபத்தில் மட்டுமல்ல வாழ்விலும் தோள்கொடுக்கும் விடாமுயற்சி, சுவைத்து பாருங்கள்‌. இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-

Frகுழந்தை யேசு ராஜன் CMF