நற்செய்தி:-
உள்ளதை கூர்மையாக்குங்கள்
அவன் ஒரு மரம் வெட்டும் தொழிலாளி பல நாட்களாக வேலையில்லாமல் இருந்தான். ஒரு நாள் கிடைத்தது அதிக ஊதியத்துடன் கூடிய வேலை. மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றாக வேலை செய்ய வேண்டும் என தீர்மானித்தான். முதல் நாள் பன்னிரன்டு மரங்களை வெட்டினான். அடுத்த நாள் எட்டு மரங்கள் மட்டுமே அவனால் வெட்ட முடிந்தது. மூன்றாவது நாள் வெறும் ஐந்து மரங்கள் மட்டுமே வெட்டினான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒவ்வொரு நாளும் ஏன் எனது திறன் குறைந்து கொண்டே வருகிறது என யோசித்தான். பின் அவன் முதலாளியிடம், “ஐயா! என் உடம்பில் பலம் அதிகம் உண்டு. நன்றாக வேலை செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் உள்ளது, ஆனால் என்னால் அதிக மரங்கள் வெட்ட முடியவில்லை” என்றான். அதற்கு முதலாளி அவனிடம் நீ கடைசியாக எப்பொழுது உனது மரம் வெட்டும் இரம்பத்தை கூர்மை செய்தாய்?” என்று கேட்க, அந்த தொழிளாளியோ, கூர்மை செய்வதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை, நான் நிறைய மரங்களை வெட்ட வேண்டும் என்று கூறினான். அதற்கு அந்த முதளாளி, “நன்றாக வேலை செய்ய வேண்டும், ஒன்றை அடைய வேண்டும் என்ற இலக்கு மட்டும் போதாது மாறாக அதற்கான தயாரிப்பும் மிக அவசியமாகும். நீ நான்கு மணி நேரம் வேலை செய்தால் மூன்று மணி நேரம் இரம்பத்தை கூர்மை செய்ய பயன்படுத்து” என்று கூறினார்.
இன்று நம்மிடையே இலட்சியம் மற்றும் இலக்கு நிறைய உண்டு, ஆனால் அதற்காக எவ்விதமான தயாரிப்பும் இருப்பதில்லை. கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட வேண்டும், இயேசுவை எனது உள்ளத்தில், இல்லத்தில், ஊரில், குடிலில் மற்றும் வாழ்வில் ஏற்க வேண்டும் என ஆசை இருக்கலாம், ஆனால் அதற்கான தயாரிப்பு பல மடங்கு நம்மில் இருக்க வேண்டும் என்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. பிறந்திருக்கின்ற இந்த திருவருகை காலம் ஒரு தயாரிப்பின் காலம், வரவிருக்கின்ற இயேசுவை நம்மில் ஏற்பதற்கு நம்மை முழுமையாக தயாரிக்க இது அழைக்கிறது.
“ஆண்டவருக்காக வழியை ஆயுத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்” (எசாயா 40:3) என்னும் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் இன்றைய நற்செய்தியிலும் தரப்பட்டிருக்கிறது. அன்று இயேசுவின் பிறப்புக்கு முன்பு திருமுழுக்கு யோவான் பாலைவனத்தில் மக்களை தயாரித்தார். இயேசு தனது பணி வாழ்வுக்கு முன் நாற்பது நாட்கள் பாலைவனத்தில் தன்னை முழுமையாக தயாரித்தார்.(மத்தேயு 4:1-2) இயேசு வாழ்ந்த காலத்தில் யூத சமுதாயத்தில் மெசியாவின் வருகைக்காக தயாரித்து வந்தனர். இன்று, நாமும் ஆண்டவரின் பிறப்புக்காக நம்மை தயாரிக்க அழைக்கப்படுகின்றோம்.
“The Seven habits of Highly Effective People” அதாவது “அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் ஏழு பழக்கங்கள்” என்னும் ஆங்கில புத்தகம் ஸ்டீபன் கோவே அவர்களால் எழுதப்பட்டது. இதில் இவர் குறிப்பிட்டுள்ள ஏழாவது பழக்கம் தான் “Sharpen the Saw” அதாவது “ரம்பத்தை கூர்மைபடுத்து”, அப்படியென்றால் உனது வாழ்வில் வெற்றியடைய தயாரிப்பாக, உடல் உள்ள, ஆன்மீக மற்றும் சமூக நலம் என்னும் நான்கு நிலைகளையும் கவனிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதில் இன்றைய இறைவார்த்தை எடுத்துரைக்கும் தயாரிப்பு வெறும் நம்முடைய உடல் மற்றும் சமுதாயம் சார்ந்ததல்ல, மாறாக நமது உள்ளம் மற்றும் ஆன்மீகத்தை சார்ந்தது. நமது உள்ளத்தளவில் நாம் இறைவனின் வருகைக்காக நம்மை தயாரிக்க அழைக்கப்படுகின்றோம். மரம் வெட்டுவதற்காக கோடாரியையும், இரம்பத்தையும் கூர்மைப்படுத்துகின்ற நாம், இயேசுவின் வருகைக்காக நம்மை கூர்மைப்படுத்த அதாவது தயாரிக்க அழைக்கப்படுகின்றோம். நமது தயாரிப்பு நான்கு வழிகளில் அமையலாம்.
1. ஜெபத்தில்: கிறிஸ்தவர்கள் அன்றாட வாழ்க்கையில் செய்கின்ற ஒவ்வொரு செபங்களும் அவர்களை இறைவன் முன்பாக கொண்டு சேர்க்கின்றது. திருஅவையில் பலர் ஜெபத்தின் வழியாக இறைவனை நோக்கி சென்றிருக்கிறார்கள். இந்த நாட்களில் நாம் செய்கின்ற ஒவ்வொரு ஜெபமும் இறைவன் நமது உள்ளத்தில் வருவதற்காக நாம் செய்கின்ற தயாரிப்பு. எனவே, ஜெபத்தில் இறைவனை வரவேற்க நம்மை தயாரிப்போம்.
2. ஆன்மீக செயல்களில்: ஜெபத்தோடு நமது அன்றாட ஆன்மிக செயல்பாடுகளாக தினமும் திருப்பலியில் பங்கு கொள்வது, இறைவார்த்தையை வாசிப்பது, ஜெபமாலையில் பங்கேற்பது, அன்பிய கூட்டங்களிலும் பக்த சபைகளிலும் தமது பங்களிப்பை அளிப்பது மற்றும் பிறருக்கு உதவுவது என்னும் ஆன்மீக செயல்பாடுகளும் நம்மை இறைவனின் வருகைக்காக தயாரிக்கின்ற கருவிகளாகும்.
3. பாவ மன்னிப்பில்: இன்றைய நற்செய்தி வாசகம் நாம் செய்த ஒவ்வொரு பாவங்களையும் நினைத்து அதற்காக மன்னிப்பு கேட்டு புதுவாழ்வு பெறுவதற்கு அழைப்பு தருகிறது. பாவமற்ற வாழ்க்கை- தூய்மையான வாழ்க்கை, தூய்மையான வாழ்க்கை- இறைவனுக்கு உகந்த வாழ்க்கை, அத்தகையதொரு வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் முயற்சி செய்கின்ற பொழுது அதுவே இறைவன் நமது உள்ளத்தில் வருவதற்கான சிறந்த தயாரிப்பாகும்.
4. மனமாற்றத்தில்: இருளான நமது பழைய பாவ வாழ்விலிருந்து அதாவது நமது தீய எண்ணங்கள், செயல்கள் மற்றும் வார்த்தைகள் இவற்றிலிருந்து புதியதொரு வாழ்வு வாழ்வதற்கு முயற்சி செய்கின்ற பொழுது, நமது உள்ளத்தில் இறைவனை வரவேற்க நாம் நம்மை தயாரிக்கின்றோம். ஆக மனமாற்றமே திருவருகைக் காலத்தில் கிறிஸ்தவர்களின் சிறந்த தயாரிப்பு.
நமது வீடுகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு நாம் மேற்கொள்ளுகின்ற தயாரிப்புகள் ஏராளம். வெறும் மண்ணுலக வாழ்விற்கே நாம் எண்ணற்ற முறையில் தயாரிப்புகளை மேற்கொள்கின்ற போது விண்ணுலக வாழ்விற்கு நம்மை அழைத்துச் செல்லுகின்ற இயேசுவின் வருகைக்கு நாம் எத்தகைய முறையில் தயாரிக்க போகின்றோம்? எனவே, இந்த ஆண்டு நமது கிறிஸ்துமஸ் பெருவிழாவின் தயாரிப்பு வெறும் சமூக மற்றும் உடல் சார்ந்த தயாரிப்பாக அல்லாமல், உள்ளம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த தயாரிப்பாக அமைய நம்மை கூர்மையாக்குவோம்.
ஆடியோவாக கேட்க...