பொதுக்காலம் 34ஆம் வாரம்
கிறிஸ்து அரசர் பெருவிழா
(ஆண்டு- A)
22-11-2020
ஞாயிற்றுக்கிழமை
நமக்காக
ஒர்
அரசர்
திரு அவையானது இன்று கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. இறைவாக்கினர், அரசர் மற்றும் குரு என்னும் கிறிஸ்துவின் முப்பெரும் செயல்பாடுகளில் ராஜ செயல்பாடாக கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் அரசராக இருக்கின்றார். அவர் தருகின்ற இறையரசுக்குள் நாம் நுழைய வேண்டும், இந்த அரசர் நமக்கான அரசர், இவர் தருகின்ற இறையரசு நமக்கானது என்னும் கருத்தை இவ்விழாவானது நமக்கு உணர்த்துகின்றது. மேலும் கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகைக்காக நம்மையே நாம் ஆயுத்தப்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொண்டு திருவழிபாட்டு ஆண்டின் இறுதி வாரத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா 1925-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி திருத்தந்தை பதினொன்றாம் பத்திநாதர் வெளியிட்ட தனது "Quas Primas" எனும் திருத்தூது மடலின் வழியாக திருஅவைக்கு அறிவிக்கப்பட்டது.
திருவிவிலியத்தின் அடித்தளத்தில் இயேசு அரசராகவும், அவர் நமக்கு தருகின்ற இறையாட்சியை பற்றியும், நான் எண்ணற்ற பகுதிகளிலே வாசிக்கின்றோம். இயேசுவினுடைய பிறப்புக்கு முன்பே வானதூதர் அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை அறிவித்த போது "அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” . (லூக்கா 1:32,33) என இவ்வாறாக இயேசுவினுடைய இறையாட்சி பற்றி எடுத்துரைத்து இருக்கின்றார். அதன்பிறகு இயேசுவினுடைய பிறப்புக்குப் பின்பு அவரை காண வந்த மூன்று அரசர்கள் “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” ( மத்தேயு 2:2) என இவ்வாறாக அவர்கள் கேட்டதும் இயேசு ஒரு அரசராக பிறந்திருக்கிறார் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. இயேசு பிலாத்து முன்பே நின்ற பொழுதும் “அப்படியானால் நீ அரசன்தானோ?” . (யோவான் 18:37) என இவ்வாறாக கேட்டதும், அதன் பிறகு அவர் சிலுவையில் அறைந்த பிறகு பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் “நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது. (யோவான் 19:19) என விவிலியம் இயேசுவின் அரசைப் பற்றியும், அவரது இறையாட்சியை பற்றியும் நமக்கு எடுத்துரைப்பதாக இருக்கின்றது. கிறிஸ்து அரசருக்கும், இவர் நமக்குத் தருகின்ற இறை ஆட்சிக்குமான குணநலன்கள் எண்ணிலடங்கா, அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.
1.
எல்லா காலத்துக்கும் அரசர்:-
"இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்" (எபிரேயர் 13:8) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் கிறிஸ்து அரசர் அன்றும், இன்றும், என்றுமே மாறாதவராக, நம் ஒவ்வொருவருக்கும் அரசராக இருக்கின்றார். இவருடைய அரசும் என்றும் அழியாத அரசாக இருக்கின்றது. வரலாற்றிலே பாபிலோனிய, கிரேக்க, எகிப்து, உரோமை மற்றும் ஆங்கில அரசுகள் என எண்ணற்ற பேரரசுகள் இருந்தாலும் மற்றும் பார்வோன், நெபுகத்நேசர், அலெக்சாண்டர், நெப்போலியன், அகஸ்து சீசர் மற்றும் நீரோ என எண்ணற்ற பேரரசர்கள் இருந்தாலும், இவர்கள் மற்றும் இந்த அரசுகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே நிலைத்து நின்றது. 2000 ஆண்டிற்கும் மேலாக நிலைத்து நின்ற ஒரு அரசர் என்றால் அது கிறிஸ்து அரசர் தான். 2000 ஆண்டிற்கும் மேலாக நிலைத்து நின்ற ஒரு அரசு என்றால் அது கிறிஸ்துவின் இறையரசு தான். ஆக கிறிஸ்து அரசர் எக்காலத்துக்குமான அரசராக இருக்கின்றார். அழிந்து போகக்கூடிய அல்லது சிறிது காலம் நிலைத்து நிற்கக்கூடிய இந்த உலகில் எல்லாம் நிலையற்றது, என்றுமே நிலைத்து நிற்கக்கூடிய, எக்காலத்திற்கும் சொந்தமான, கிறிஸ்து அரசர் தருகின்ற இறையரசில் நாம் நிலைத்து நிற்போம்.
2. இவர்
ஆட்சிக்கு முடிவில்லை:-
"அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” (லூக்கா 1:33) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் கிறிஸ்து அரசர் தருகின்ற இறையாட்சிக்கு இவ்வுலகில் முடிவே இல்லை. இது என்றும் தொடரக்கூடியது, வரலாற்றில், நாம் வாழும் சமுதாயத்தில், நாம் கண்டிராத, கண்டு கொண்டிருக்கின்ற அனைத்து ஆட்சிகளும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான ஆட்சியாகவே இருக்கின்றது. ஆனால் கிறிஸ்து அரசர் தருகின்ற இறையாட்சி முடிவில்லாத ஆட்சியாக இருக்கின்றது. இறைவனுடைய ஆட்சியானது, இறைமகன் இயேசு கிறிஸ்து தருகின்ற இந்த இறையரசு தொடர்ந்து நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கின்றது. எனவே, முடிவற்ற இந்த ஆட்சியில் நாம் இணைந்திருப்போம்.
3. இவ்வுலகைச்
சார்ந்த ஆட்சியல்ல:-
“எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” (யோவான் 18:36) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் கிறிஸ்து நமக்காக தருகின்ற ஆட்சி, இறையரசின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, நீதி, ஒற்றுமை மற்றும் பகிர்வு ஆகிய மதிப்பீடுகளின் அடித்தளத்திலே கட்டப்பட்டிருக்கின்ற ஓர் இறையாட்சி. இன்றைய மண்ணுலக ஆட்சி பணம், பதவி மற்றும் பட்டம் எனும் அடித்தளத்தில் கட்டப்பட்டு இருக்கின்ற ஆட்சியாக இருக்கின்றது. இத்தகைய ஆட்சி எண்ணற்ற உயிரை அழிக்கக் கூடியதாகவும், எண்ணற்ற மக்களை துன்பப்படுத்த கூடியதாகவும் இருக்கிறது. இம்மண்ணுலக ஆட்சி போன்று அல்லாது, நிலையான, விண்ணுலக ஆட்சியாக இருக்கின்ற இறையாட்சியில் நாம் இணைந்து வளர்வோம், வாழ்வோம்.
4. உண்மையை
எடுத்துரைக்கும் ஆட்சி:-
பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” (யோவான் 18:37) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் இன்று நம்மை ஆண்டு வரும் ஆட்சிகளெல்லாம் பொய்மையின் பிறப்பிடத்தில், அநீதியின் வழியில் உருவெடுத்து வந்தவை. பொது நலமின்றி தனது நலத்திற்காக, சுயநலத்திற்காக வளர்ந்து வருகின்ற ஆட்சிதான் இன்றைய ஆட்சி. இது பொய்மையை, மாய உலகத்தினை இவ்வுலகத்திற்கு எடுத்துரைக்கின்றது. ஆனால் கிறிஸ்து இயேசுவின் ஆட்சி உண்மையை எடுத்துரைக்கின்ற இறையாட்சியாக அமைகின்றது. நமக்காக, நம் மத்தியில், நம் உருவில் பிறந்த, நம் கிறிஸ்து அரசர் இறைமைந்தன் இயேசு கிறிஸ்து, நமக்காக தருகின்ற இறையரசு, முற்றிலும் உண்மையை எடுத்துரைக்கின்ற ஒர் ஆட்சி. அது நமதாகும் போது நாமும் உண்மையின் மக்களாவோம்.
வரலாற்றில் நாம் காணும் ஒவ்வொரு அரசருக்கும் அதிகாரம், அந்தஸ்து மற்றும் படை பலம் என இவை மூன்றும் முக்கிய காரணிகளாக அமைகின்றது. கிறிஸ்து அரசருக்கு இவை அன்பிலும், பணியிலும் மற்றும் சீடத்துவத்திலும் நிறைவு பெறுகிறது.
a. அதிகாரம்
(அன்பில்)
குறிப்பிட்ட எல்லைக்குள் செயற்படுத்தக்கூடிய சிறப்புரிமையே அதிகாரம் ஆகும். அரசருக்கு அதிகாரம் என்பது தான் ஒரு நாட்டை ஆளவேண்டும், இவ்வுலகையே ஆளவேண்டும் என்பதாகும். தன்னுடைய அரச பதவியால் தான் இவற்றை அரசன் பெற்றுக் கொள்கிறான். ஆனால் கிறிஸ்துவின் அதிகாரம் பதவியில் அல்ல, மாறாக அன்பில் அமைகின்றது. கிறிஸ்துவின் வாழ்வு முழுவதும் அன்பை அடித்தளமாக வைத்து அமைகின்றது. இவர் உலகை ஆள வந்த அரசர் அல்ல, மாறாக இவ்வுலகை பாவத்திலிருந்து மீட்க வந்த அரசர். இவற்றை, இந்த அரசர் தன்னையே முழுவதுமாக அன்பின் வெளிப்பாடாக சிலுவையில் அர்ப்பணித்ததில் காட்டுகின்றார். இயேசுவினுடைய இறையாட்சி அதிகாரத்தில் அல்ல, அன்பில் நிறைவடைகிறது.
b. அந்தஸ்து
(பணியில்)
அரச பதவியிலுள்ள செல்வாக்கு, மற்றும் உரிமை போன்றவற்றில் ஒர் அரசர் எய்துவதாக அந்தஸ்து அமைகின்றது. எல்லா அரசருக்கும் அரண்மனை, அரியணை, மணிமகுடம், அந்தப்புறம், தன்னுடைய அரண்மனை சார்ந்த இடங்கள் மற்றும் போரில் வென்ற நாடுகள் என அனைத்தும் தன்னுடைய அந்தஸ்தாக கருதப்படுகிறது. இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவுக்கு மக்களே மிகப்பெரிய அந்தஸ்து. நம் அரசர் கிறிஸ்துவுக்கு அரண்மனையும் அல்ல, அரியணையும் அல்ல, மணிமகுடமும் அல்ல, அந்தபுரமும் அல்ல மாறாக அவர் பிறந்த மாட்டு கொட்டகையும், பணி செய்த ஏழைகளும், சமாரியர்களும், வரிதண்டுபவர்களும் பாவிகளும் மற்றும் சுமந்த சிலுவையும் அவரது மிகப்பெரிய அந்தஸ்து ஆகும். இயேசுவினுடைய இறையாட்சியில் அந்தஸ்து அவர் பணியில் நிறைவடைகிறது.
c. படைபலம்
(சீடத்துவத்தில்)
அரசர்களின் மிகப்பெரிய சக்தியாக இருப்பது படைபலம் தான். அதில் தான் அவர்களின் ஆட்சியே அமைகின்றது. கணக்கற்ற படைவீரர்கள், குதிரைப்படை, யானைப்படை மற்றும் தேர்ப்படை என இவை யாவும் ஒர் அரசின் படைபலத்தை காட்டுகிறது. கிறிஸ்துவுக்கு சீடர்களே படைவீரர்கள், சிலுவையும், முள்முடியும் மற்றும் பாடுகளும் அவர் படைபலங்கள். இன்று அகிலமே அரசராம் கிறிஸ்துவை அறிவதற்கு அவரின் சீடத்துவம் என்னும் படைபலமே காரணமாகும்.
சிலுவையினால், தன் பாடுகளினால் உருவாக்கிய ஒர் அரசு கிறிஸ்து அரசரின் இறையரசு. இவ்வரசில், நாம் எப்பொழுதும் இணையவும், நமக்காக இந்த அரசு இருக்கின்றது என்பதை உணரவும், மாறி வரும் இந்த மாய உலகின் கவர்ச்சிகளை கடந்து, ஆசைகளை தவிர்த்து, போலிகளை ஒழித்து, நிலையற்றதை மறந்து, அன்பையும், அமைதியையும், நீதியையும், நேர்மையையும் மற்றும் உண்மையையும் விதைக்கின்ற இறையரசுக்குள் நுழைவோம். கிறிஸ்துவில் வாழ்வோம். இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார்.
|
|
||||
|
|
|
|||
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம். |