திருவருகைக் காலம் முதல் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(27 நவம்பர் 2022, ஞாயிறு)
முதல் வாசகம்: எசா 2:1-5
இரண்டாம் வாசகம்: உரோ 13: 11-14
நற்செய்தி: மத் 24: 37-44
விழிப்பும் - தயாரிப்பும்
அன்பிற்குரியவர்களே,
புதிய திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கமாக திருவருகைக் காலத்தில் நுழைந்திருக்கின்றோம். நான்கு வாரங்கள் கிறிஸ்து பிறப்புக்காக நம்மை நாமே தயாரிக்க திரு அவை இக்காலத்தை தந்திருக்கிறது. ஆக இது ஒரு தயாரிப்பின் காலம். நான்கு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் கீழை நாட்டு திருச்சபையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆறாம் தேதி திருக்காட்சி திருவிழாவை கொண்டாடினார்கள். அதில் பலரும் திருமுழுக்கு பெறுவதுண்டு, இவர்கள் இத்திருமுழுக்கை பெறுவதற்கு பல நாட்களாக தங்களை தயாரிப்பதுண்டு, இவர்கள் எடுத்துக் கொண்ட இந்த தயாரிப்பின் நாட்களே பின்னர் திருவருகைக் காலமாக அதாவது கிறிஸ்து பிறப்பு பெருவிழா தயாரிப்பின் காலமாக மாறியது.
முட்டை வியாபாரி ஒருவர் தனக்குப்பின் தன் கடையை நிர்வகிக்கக்கூடிய திறமை தன்னுடைய இரு மகன்களில் யாரிடம் இருக்கின்றது என்று சோதித்தறிந்து அவனிடம் கடையை ஒப்படைக்க நினைத்தாராம். எனவே தன் இரு மகன்களையும் அழைத்து அவர்கள் இருவருக்குமே தலா 1000 ரூபாயை கொடுத்து கடைக்கு முட்டை வாங்கி வரச் சொன்னாராம். இருவரும் சந்தைக்கு சென்றனர். மூத்த மகன் நன்றாக யோசித்து ஆயிரம் ரூபாயில் 200 ரூபாய்க்கு முட்டை வைக்கக் கூடிய பெட்டியையும், 100 ரூபாய்க்கு அந்த பெட்டிக்கு ஒரு பூட்டையும், மீதமுள்ள 700 நூறு ரூபாய்க்கு முட்டையையும் வாங்கினான். ஆனால் இளைய மகன் 200 ரூபாய்க்கு முட்டை வைக்கக் கூடிய பெட்டியை வாங்கிவிட்டு, ஏன் தேவையில்லாமல் பூட்டிற்காக 100 ரூபாய் செலவு செய்ய வேண்டும், மீதமுள்ள 800 ரூபாய்க்கு முட்டையை வாங்குவோம் அப்போது தான் தந்தை என்னை பாராட்டி கடையின் உரிமையை எனக்கு கொடுப்பார் என நினைத்தான். இருவரும் முட்டையை எடுத்துக்கொண்டு வருகின்ற வழியில், தண்ணீர் குடிக்கலாம் என்று ஒரு மரத்தருகே தங்களது முட்டை பெட்டிகளை வைத்தார்கள். அப்போது மரத்திலிருந்து குரங்குகள் வந்து பூட்டு போடாத முட்டை பெட்டியை திறந்து அதிலிருந்த முட்டைகளை எடுத்து வெளியே வீசி அனைத்தையும் நாசமாக்கியது. இறுதியாக வரவிருக்கின்ற ஆபத்தை அறிந்து விழிப்போடு அதற்காக தயாரித்த மூத்த மகனை தந்தை பாராட்டி கடையின் முழு பொறுப்பையும் ஒப்படைத்தார். இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தை வழிபாடும் நம் ஒவ்வொருவரையும் விழிப்போடும் தயாரிப்போடும் வாழ அழைக்கிறது.
இன்றைக்கு நமது அன்றாட வாழ்வில் அனைத்து செயல்பாடுகளுக்கும் மற்றும் நமது இலக்குகளை அடைவதற்கும் விழிப்பும் தகுந்த முன்தயாரிப்பும் அவசியமாகிறது. கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரையும் திருஅவையானது இறைமகன் இயேசுவை நமது வாழ்விலும் மற்றும் உள்ளத்திலும் ஏற்றுக்கொள்ள விழிப்போடு தயாரிக்க அழைப்பு தருகிறது. இச்சிந்தனையை நம்மில் விதைக்க இன்றைய நற்செய்தியில் இயேசு இரண்டு விதமான எடுத்துக்காட்டுகளை கூறுகிறார்.
1. நோவாவும் மக்களும்
பழைய ஏற்பாட்டில் நோவா ஆண்டவருடைய வார்த்தையை ஏற்று வரவிருக்கும் பேராபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள விழிப்போடு பெட்டகத்தை தயாரிக்கிறார். இந்த முன் தயாரிப்பு நோவாவின் குடும்பத்தையும் பல உயிரினங்களையும் காப்பாற்றியது. ஆனால் நோவா காலத்தில் வாழ்ந்த மக்கள் வரவிருக்கின்ற ஆபத்தை அறியாது சிற்றின்ப ஆசைகளில் மூழ்கி நோவாவை ஏளனம் செய்து வாழ்ந்து மழை வெள்ளத்தில் இறந்தனர். விழிப்பும் தகுந்த முன்தயாரிப்பும் இங்கு வாழ்வு கொடுத்தது.
2. வீட்டு உரிமையாளரும் திருடனும்
இன்றைய நற்செய்தியில் இயேசு திருடன் வரும் வேளையில் வீட்டு உரிமையாளர் தன் வீட்டிலுள்ள பொருட்களை பாதுகாப்பதற்காக விழிப்போடு இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறார். வீட்டு உரிமையாளரின் விழிப்பு நிலை தான் அவரது உடமைகள் அனைத்தையும் பாதுகாக்கும். இவ்வாறு இவ்விரு எடுத்துக்காட்டுகளின் வழியாக இயேசு நம் ஒவ்வொருவரையும் விழிப்போடும் தயாரிப்போடும் வாழ அழைப்பு தருகிறார்.
இன்றைய இரண்டாம் வாசகமும் "இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்; உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது." (உரோமையர் 13:11) என ஆண்டவரின் வருகையை எதிர்கொள்ள விழித்திருந்து தயாரிக்க அழைப்பு தருகிறது. இத்திருவருகைக் காலத்தில் நாம் நான்கு நிலைகளில் விழிப்போடும் தகுந்த முன் தயாரிப்போடும் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக நம்மை தயாரிக்க முடியும்.
1. இயேசுவை அறிதல்
விழிப்பின் முதல் நிலையாக கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை அறிந்திருக்க வேண்டும். இவர் நமக்காக இந்த மண்ணுலகில் மனிதனாக அவதரித்து சிலுவையில் தன்னுயிரை அளித்து நம் பாவங்களிலிருந்து மீட்பு கொடுத்தார் என்பதை முற்றிலும் அறிய வேண்டும். மேலும் இவர் ஒவ்வொரு நாளும் இறைவார்த்தை மற்றும் நற்கருணையின் வழியாக நம்முள் வருகின்றார் என்பதையும் அறிந்து அதற்காக நம்மை தயாரிக்க வேண்டும். குறிப்பாக நாம் துவங்கியிருக்கின்ற இந்த திருவருகைக் காலத்தில் பிறக்க இருக்கும் இயேசுவை நம் உள்ளத்திலும் வாழ்விலும் பிறக்க செய்ய விழிப்போடு நம்மை தயாரிக்க வேண்டும். வெறும் அன்றாட நாட்டு நிகழ்வுகளை மட்டும் அறிந்து கொள்பவர்களாக நாம் இல்லாது, நமக்காக ஒருவர் இருக்கின்றார் என அறிந்து அவரை ஏற்றுக்கொள்ள நம்மை முழுவதுமாக தயாரிப்போம்.
2. தன்னை அறிதல்
விழிப்பின் இரண்டாவது நிலையாக தன்னிலையை முற்றிலுமாக நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இயேசுவை அறிந்த நாம் அவரை நமது வாழ்க்கைக்குள் கொண்டுவர முடியும். நமது கிறிஸ்தவ வாழ்வு எப்படியிருக்கின்றது? கிறிஸ்துவுக்குள் நம்முடைய வாழ்வு எத்தகைய நிலையில் இருக்கின்றது? மேலும் இந்த கிறிஸ்துவை நம்முள் மற்றும் நம் வாழ்க்கைக்குள் ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோமா? இந்த திருவருகைக் காலத்தில் இயேசுவை நம்முள் ஏற்றுக் கொள்வதற்கு, நமது பங்குகளில் பாவசங்கீர்த்தனம் செய்கின்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் நமது உள்ளங்களையும் வாழ்வையும் தூய்மைப்படுத்தி இயேசுவை நம்முள் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
3. பிறரை அறிதல்
விழிப்பின் மூன்றாவது நிலையாக நம்மோடு உடல் வாழுகின்ற சகோதர சகோதரிகளை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். இறைவனை அறிந்து, நம் நிலையை அறிந்து இறைவனை நம்முள் ஏற்றுக் கொண்ட நாம் பிறரையும் ஏற்றுக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். குறிப்பாக இத்திருவருகைக் காலத்தில் நம்மோடு உடன் வாழுகின்ற ஏழை எளிய மக்களை அறிந்து அவர்களுக்கு உடை மற்றும் உணவு கொடுத்து உதவிட வேண்டும். இதுவும் பிறக்கவிருக்கின்ற இயேசுவுக்காக நாம் எடுக்கும் தயாரிப்பாகும். எனவே நம்முடைய சமுதாயத்திலிருக்கின்ற நம் சகோதர சகோதரிகள் இறைவனை ஏற்றுக்கொள்ள தங்களை தயாரிக்கவும், அவர்களை தயாரிப்பதன் மற்றும் உதவுவதன் மூலமாக நம்மை நாமே தயாரிக்கவும் முயற்சி எடுப்போம்.
4. சூழலை அறிதல்
விழிப்பின் நான்காவது நிலை நாம் வாழும் சூழலை அறிந்திருத்தல். குறிப்பாக நம்முடைய குடும்பம், இல்லம், பங்கு மற்றும் சமுதாயத்தின் நிலையை நன்கு அறிந்து, நாம் நம்மை தயாரித்தது போல நம்முடைய சூழலையும் இயேசுவின் வருகைக்காக மற்றும் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக தயாரிக்க நாம் உதவ வேண்டும். "ஒளிமயமாகிறது. ஆதலால், “தூங்குகிறவனே, விழித்தெழு; இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்” (எபேசியர் 5:14) என்னும் இறைவார்த்தைக்கு ஏற்ப நமது பங்கு சமூகம் கிறிஸ்துவில் உயிர்த்தெழ மற்றும் விழித்தெழ நமது பங்களிப்பை தருவோம். பிறக்கவிருக்கின்ற இயேசு பாலகனை நம் வாழ்வாக்க நம்மை முழுவதுமாக தயாரிப்போம். அன்று பத்து கன்னியர்களுள் முன்மதியுடைய ஜவர் விளக்குகளோடும் மற்றும் எண்ணெய் கலன்களோடும் மணமகனை எதிர்கொள்ள வந்தது போல, நாமும் ஆண்டவரை எதிர்கொள்ள விழிப்போடு நம்மை தயாரித்து அவரை நமது உள்ளங்களில் ஏற்றுக் கொள்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பார்.
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை