Monday, May 2, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) -----08-05-2022 - ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம்: திப 13: 14, 43-52

இரண்டாம் வாசகம்: 13: 14, 43-52

நற்செய்தி:  யோவான் 10: 27-30

வாழ்வு தரும் நல்லாயன்

ஒரு ஆசிரியர் தன்னுடைய வகுப்பில் அதிகம் சேட்டை செய்த ஒரு பையனை எழுப்பி, கரும்பலகையில் நூறு என்று எழுதி இது எவ்வளவு என்று கேட்டார். அதற்கு அந்தப் பையன் இதெல்லாம் ஒரு கேள்வியா என நினைத்து நூறு என்று சொன்னான். உடனே ஆசிரியர் அதன் வலது பக்கத்தில் மற்றொரு பூஜ்ஜியத்தை இட்டு, இது எவ்வளவு என்று மீண்டும் கேட்டார். அதற்கு அந்தப் பையன் ஆயிரம் என்றான். உடனே ஆசிரியர் மீண்டும் அதன் வலது பக்கத்தில் மற்றொரு பூஜ்ஜியத்தையிட்டு, இது எவ்வளவு என்று கேட்டார். அதற்கு அவனோ பத்தாயிரம் என்றான். இப்பொழுது ஆசிரியர் பத்தாயிரத்திற்கு இடதுபக்கம் ஒரு பூஜ்ஜியத்தை இட்டு இது எவ்வளவு என்று கேட்டார், அந்தப் பையன் 10,000 தான் என்றான். மீண்டும் ஆசிரியர் இடது பக்கத்தில் மற்றொரு பூச்சியத்தை இட்டு இது எவ்வளவு என்று கேட்டார். அதற்கு அந்தப் பையன் பத்தாயிரம் தான் என்றான். இப்போது ஆசிரியர் அந்த பையனை பார்த்து நூறுக்கு பின்னால் பூஜ்ஜியத்தை சேர்த்து கொண்டே செல்கின்ற பொழுது அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது, ஆனால், அதே பூஜ்ஜியத்தை முன்னால் சேர்க்கும் பொழுது அதன் மதிப்பு அப்படியே இருந்தது, இதை போலத்தான் நமது வாழ்க்கையும் என்றார். உன்னை வழிநடத்துபவர்களை நீ பின்பற்றினால் வாழ்க்கையில் மதிப்பு கூடும், ஆனால் அவர்கள் முன் நீ செல்ல நினைத்தால் வாழ்க்கையில் உனக்கு உயர்வே இராது என்றார். இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதைத்தான் எடுத்துரைக்கின்றது. நம்மை வழி நடத்துகின்ற நல்ல ஆயனாம் இயேசுவை நாம் பின்பற்றுகின்ற போது, அவர் நமக்கு நிலைவாழ்வை தருவார். "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்" (யோவான் 10:11) என்றுரைத்து அதை வாழ்ந்து காட்டிய இறைமகன் இயேசு கிறிஸ்து நல்லாயனாக இருக்கின்றார். இந்த நல்லாயனை பின்பற்றினால் நிலை வாழ்வை பெறுவோம் என்னும் சிந்தனையை நம்முன் வைக்கின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

ஆயன் - ஆடுகள்:-

பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்களுக்கும் இறைவனுக்கும் உண்டான உறவு ஆயன் மற்றும் ஆடுகளுக்கான உறவை போன்றது என்பதை எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக நாம் உணர இயலும். "நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்" (34:15). "நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும். அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும். இஸ்ரயேலின் மலைகளின்மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும்" (34:14). "காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டு வருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்" (34:16) என இறைவன் ஆயனாக இருந்து இஸ்ராயேல் மக்களை வழி நடத்தியதையும், இந்த ஆயனின் பண்பு நலன்களையும் எடுத்துரைக்கின்றார். மேலும், "என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்" (எரேமியா 3:15) என வரவிருக்கின்ற மெசியா நல்ல ஆயனாக இருப்பார் என்பதையும் இறைவாக்கினர் எரேமியா வழியாக இறைவன் பழைய ஏற்பாட்டிலே முன்அறிவித்திருக்கிறார். புதிய ஏற்பாட்டில் ஏரோது அரசன் யூதர்களின் அரசராக இயேசு பிறக்க போகின்றார் என்பதை ஞானிகளின் வழியாக அறிந்து அதை உறுதிப்படுத்த, தலைமைக் குருக்களையும் மறைநூல் அறிஞர்களையும் அழைத்து கேட்ட போது அவர்கள் ஏரோதிடம், "என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்" (மத்தேயு 2:5-6) என பிறக்கவிருக்கும் இயேசு ஆயரென தோன்றுவார் என்றனர். இயேசு தனது பணி வாழ்வில் தன்னையே நல்ல ஆயன் என்றுரைத்தும் (யோவான் 10:11), நல்ல ஆயனை போல மக்கள் மீது பரிவு கொண்டு வாழ்ந்தும் (மத்தேயு 14: 13-21) மற்றும் நூறு ஆடுகளில் தொலைந்து போன ஒரு ஆட்டினை கண்டறியும் ஆயனின் உவமையை எடுத்துரைத்தும் வாழ்ந்தார் (லூக் 15:1-9). இவையனைத்திற்கும் மேலாக ஒரு ஆயன் தன்னுடைய ஆடுகளுக்காக தன் உயிரையும் கொடுப்பான் என்பதை கல்வாரி மலையில் தன்னுயிரை சிலுவையில் தந்து செய்தும் காட்டினார் (யோவான் 19: 28-30).

ஆயன் தரும் நிலைவாழ்வு

"ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!" (திருப்பாடல்கள் 100:3) என்னும் திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகளுக்கு ஏற்ப ஆயனாக இருக்கின்ற இறைமகன் இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் நிலை வாழ்வை தருகின்றார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் உறுதிப்படுத்துகிறது. இன்றைய முதல் வாசகம் திருத்தூதரான பவுல் சிறந்த ஆயன் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இன்றைய இரண்டாம் வாசகம் நாம் பெறவிருக்கின்ற நிலை வாழ்வு எப்படியிருக்கும் என்பதை நமக்கு குறிப்பிட்டு காட்டுகிறது. அந்த நிலையான வாழ்வில் நமக்கு பசியே மற்றும் தாகமே இராது மற்றும் தேவ ஆட்டுக்குட்டி வாழ்வளிக்கும் நீரூற்றுக்கு நம் ஒவ்வொருவரையும் வழிநடத்தி செல்லும், அங்கு கிறிஸ்துவின் மந்தைகள் மகிழ்வாய் இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கிறது. ஆயன் தரும் நிலைவாழ்வை நாம் பெற்று கொள்ள இரண்டு நற்பண்புகளை நாம் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் இறைமகன் இயேசு.

1. அவர் குரலுக்கு செவி கொடுத்தல்
(இறைவார்த்தைக்கு செவி கொடுப்போம்)


ஆடுகள் ஆயனின் குரலுக்கு செவி கொடுத்தால் மட்டுமே, எந்த ஒரு ஆபத்துமின்றி, ஆயனின் வழியில் நலமோடு அதன் கொட்டிலை சென்று அடைய இயலும். கிறிஸ்தவர்களாகிய நாம் நிலைவாழ்வை பெற்றுக் கொள்ள ஆயனாம் இயேசுவின் குரலுக்கு செவி கொடுக்க வேண்டும். நமது அன்றாட வாழ்வில் இயேசுவின் குரலுக்கு செவி கொடுத்தல் என்பது இறை வார்த்தைக்கு செவி கொடுத்தலாகும். உயிருள்ள மற்றும் வாழ்வு கொடுக்கின்ற வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் கேட்பதற்கு நமக்கு வாய்ப்புகள் பல வழிகளில் தரப்பட்டாலும், நம்முடைய இல்லங்களில் விவிலியங்கள் இருந்தாலும், அதை வாசித்து மற்றும் அதற்கு செவி கொடுத்து அதை வாழ்வாக்குகின்ற கிறிஸ்தவர்களுக்கு தான் நிலைவாழ்வு கிடைக்கும் என்றுரைக்கின்றார். இன்றைக்கு ஆயனின் வார்த்தையாம் இறைவார்த்தைக்கு செவி கொடுத்து வாழ நாம் தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

2. அவரை பின்பற்றுதல்
(கிறிஸ்தவ வாழ்வு)


ஆடுகள் ஆயனை பின்பற்றினால் மட்டுமே சரியான பாதையில் ஆட்டுக் கொட்டிலை சென்றடைய இயலும். என்னைப் பின்பற்றி வாருங்கள் என்று கூறிய ஆயனாம் இயேசுவை பின்பற்றுகின்ற கிறிஸ்தவர்களாக நாம் வாழ அழைக்கப்படுகின்றோம், அதுவே நிலை வாழ்வுக்கான வாயிலாக அமைகின்றது. இன்றைக்கு ஆயனாம் இயேசுவை பின்பற்ற திருஅவை நமக்கு எண்ணற்ற வழிகளை ஏற்படுத்தி தந்திருக்கின்றன. திருவருட்சாதனங்கள் நமக்கு திருஅவை தந்த மிகப்பெரிய கருவிகளாக இருக்கின்றது, இன்னும் குறிப்பாக ஒவ்வொரு நாளும் நாம் பங்கேற்க வேண்டிய திருப்பலி மற்றும் குடும்ப ஜெபமாலை நம்மை இயேசுவைப் பின்பற்ற தயாரிக்கின்ற சிறந்த கருவிகளாகும். இவைதான் நமக்கு சிறந்த கிறிஸ்தவ வாழ்வை தரும், அதுவே நிலை வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும். தினமும் திருப்பலியில் பங்கு கொண்டு மற்றும் செபமாலை செபித்து நல்லதொரு கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து ஆயனை பின்பற்ற தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

"ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை" (திருப்பாடல்கள் 23:1) என்னும் திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, நம் ஆயனாம் இயேசு நம்மோடு இருக்கையில் எந்த குறையுமில்லை என்று மகிழ்வோடு வாழ்வோம். ஆயினின் குரலுக்கு செவி கொடுத்து மற்றும் அவரைப் பின்பற்றி அவர் தரும் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF


                     காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...


புத்தம் புதிய காணிக்கைப் பாடல்

(கேட்டு மகிழுங்கள்)

https://youtu.be/NKp1EXTZLWw