🌱விவிலிய விதைகள்🌱
கிறிஸ்து பிறப்பு பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(25 டிசம்பர் 2022, ஞாயிறு)
முதல் வாசகம்: எசா 9: 2-4, 6-7
இரண்டாம் வாசகம்: தீத்து 2: 11-14
நற்செய்தி: லூக் 2: 1-14
இயேசுவை சந்திப்போமா?
பாலைவனத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு காலையில் சென்று தூரத்தில் உள்ள மலையைப் பார்த்துக் கொண்டு நின்றால் கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஒரு பரிசு உள்ளது என்று ஒருவன் கேள்விப்பட்டான். உடனே அவன் காலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தான். மணலின் மீது அவன் நிழல் நீண்டு மெல்லியதாக விழுந்தது. பரிசை பெற அவன் மணலைத் தோண்ட ஆரம்பித்தான். அவன் தோண்ட… தோண்ட… சூரியன் மேலெழுந்து கொண்டிருந்தது. அவனது நிழல் சுருங்கி கொண்டே இருந்தது. அவன், தோண்டிக் கொண்டே இருந்தான். நண்பகலில் அவன் நிழல் அவன் காலடிக்குள் நுழைந்து கொண்டது. நிழலே இல்லை. அவன் ஏமாற்றத்தால் அழுது புலம்பினான். அப்பொழுது அவ்வழியே வந்த ஒரு பெரியவர் அவன் செயல் கண்டு சிரித்தார். அவன் அவரைப் பார்த்து யாவற்றையும் கூறினான். பின்பு அவர் கூறினார். பார் இன்னும் புரியவில்லையா, இப்போதுதான் உன் நிழல் நீயிருக்கும் சரியான இடத்தைக் காண்பிக்கிறது. அப்படியானால், நீ எதிர்பார்த்த பரிசு உனக்குள்ளே இருக்கிறது என்றார். கிறிஸ்து இயேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இன்று நாம் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த கிறிஸ்மஸ் பெருவிழா கூட கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரிலும் கிறிஸ்து என்னும் பரிசு நமக்காக பிறந்திருக்கிறது. இந்தப் பரிசை நாம் சந்தித்து பிறருடன் பகிர்வதன் வழியாய் மானிடர் யாவரையும் ஏற்று மகிழ்வோடு வாழலாம் என்னும் மையச் சிந்தனையை தருகிறது.
இன்றைய நற்செய்தியில் பெத்லகேமில் இயேசு பிறந்த போது வயல்வெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு ஆண்டவரின் தூதர், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்." (லூக் 2:10-11) என்று எடுத்துரைத்த போது இடையர்கள் சென்று இயேசுவை சந்தித்தனர். அக்காலத்தில் இடையர்கள் மதிக்கப்படாத ஒரு சமூகமாக கருதப்பட்டார்கள். கடவுளோ இஸ்ராயேல் மக்களின் நல்ல ஆயனாக சித்தரிக்கப்பட்டார். தன் ஒரே மகனின் பிறப்பை மதிக்கப்படாத இச்சமூகத்தினருக்கு வானத்தூதர் வழியாக அறிவிக்கிறார். இந்நிகழ்வை நாம் நான்கு நிலைகளில் சிந்திக்கலாம்.
1. நம்பினர்
இயேசுவின் பிறப்புக்குப் பிறகு அச்செய்தியானது வானத்தூதர் மூலமாக இடையர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது அவர்கள் அதை முழுமையாக நம்பினார்கள். இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டது, (லூக்கா 2:15) ஆண்டவரின் செய்தி இது என்பதை இடையர்கள் நம்பியதை எடுத்துரைக்கிறது. அதுமட்டுமல்லாது "இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கிறேன்" என்று கூறியது இயேசுவின் பிறப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி என்பதையும் அதனை அவர்கள் நம்பி ஏற்றுக் கொண்டதையும் காட்டுகிறது. அனைத்திற்கும் மேலாக "உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" என்னும் வானத்தூதரின் செய்தி இயேசுவின் பிறப்பு வெறும் யூதர்களுக்கான பிறப்பு அல்ல மாறாக எல்லோருக்குமானது என்பதை தெளிவுபட எடுத்துரைக்கிறது. இச்செய்தியை முழுமையாக நம்பியதால்தான் உடனே இயேசுவை சந்திக்க அவர்கள் சென்றனர். இன்றைக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் பிறந்திருக்கின்ற இயேசு நமக்காக பிறந்திருக்கின்றார் என்பதை நாம் முழுமையாக நம்பி ஏற்றுக் கொள்கின்றோமா? உண்மையாகவே இந்த கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு மகிழ்வை தருகிறதா? என சிந்தித்து பார்க்க அழைப்பு பெறுகின்றோம்.
2. சென்றனர்
இயேசுவின் பிறப்புச் செய்தி அறிவிக்கப்பட்டபோது அதை நம்பி இடையர்கள் ஒருவர் மற்றவரிடையே வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து பிறந்திருக்கின்ற இயேசுவை சந்திக்கலாம் என்று முடிவெடுத்து செல்கிறார்கள். இங்கு இவர்கள் தனித் தனியாக செல்லவில்லை மாறாக எல்லோரும் ஒன்றாக சேர்ந்து செல்கிறார்கள். பிறந்திருக்கின்ற குழந்தையை சந்திக்க செல்வதற்கு அவர்கள் அதிக நாட்களும் மற்றும் நேரமும் எடுத்துக் கொள்ளவில்லை. அச்செய்தி அறிவிக்கப்பட்டவுடன் தங்களுக்குள் பேசி தாமதிக்காமல் விரைந்து சென்றதாக நாம் வாசிக்க கேட்கின்றோம். இயேசுவின் பிறப்பை மகிழ்வோடு ஏற்று நம்பியது மட்டுமல்லாது அந்த இயேசுவை காண்பதற்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து விரைந்து சென்றதை போல நமக்காக பிறந்திருக்கின்ற இயேசுவை சந்திக்க நான் செல்கின்றோமா? இந்த சந்திப்பு வெறும் கிறிஸ்துமஸ் அன்று நாம் சென்று பார்க்கின்ற குடில் அல்ல மாறாக நம் வாழ்வு முழுவதும் இந்த இறைவனை ஏற்று கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு கிடைக்கும் அழைப்பாகும்.
3. கண்டனர்
இந்நிகழ்வின் மூன்றாவது நிலை தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் அதன் பெற்றோர்களான மரியாவையும் மற்றும் யோசேப்பையும் சந்தித்தது ஆகும். இடையர்கள் மகிழ்வோடு இயேசுவை சந்தித்ததை போல இன்றைக்கு நாமும் நமது வாழ்க்கையில் மகிழ்வோடு அவரை எல்லா நாளும், நேரமும் மற்றும் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் அவரது பிரசன்னத்தை உணர்கின்றவர்களாக நம்மை மாற்றுகின்றதா நமது சந்திப்பு? என் சிந்திப்போம்.
4. பகிர்ந்தனர்
இடையர்கள் குழந்தையை கண்டது மட்டுமல்லாது, அவர்கள் வானத்தூதரின் மூலமாக கேள்வியுற்ற யாவற்றையும் பிறரோடு பகிர்ந்தார்கள். அதைக் கேட்டு யாவரும் வியப்படைந்தனர். இங்கு பகிர்தல் என்பது நமக்காக ஒருவர் பிறந்திருக்கிறார் என்ற இடையர்களின் உள்ளத்து மகிழ்வை வெளிப்படுத்துகிறது. தாங்கள் கொண்ட அந்த மகிழ்வை இடையர்கள் மற்றவரோடு பகிர்ந்ததைப் போல நாம் சந்தித்து உணர்ந்த இயேசுவை மற்றவரோடு பகிர்வதற்கு அழைப்புப் பெறுகின்றோம். இன்றைக்கு கிறிஸ்துமஸ் பெருவிழாவின் போது ஒருவர் மற்றவருக்கு நாம் கைக்குலுக்கி கொடுப்பது கிறிஸ்து பிறப்பு வாழ்த்து மட்டுமாக இருந்து விடக்கூடாது மாறாக கிறிஸ்துவை நாம் சந்தித்து அந்த சந்திப்பின் அடையாளமாக நம்முள் எழுகின்ற மகிழ்வின், அன்பின், மனித மாண்பின், சகோதரத்துவத்தின் மற்றும் சமத்துவத்தின் உணர்வுகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள அழைப்பு பெறுகின்றோம். இத்தகைய பகிர்தலில்தான் இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா அர்த்தம் பெறுகின்றது.
தொடக்கத்தில் இறைவன் உலகை படைத்த போது எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. இறைவன் இந்த உலகிற்கு ஒளியை படைத்து ஒளியை தருகிறார் அவ்வொளியில் வாழ்வதற்கு மனிதரையும் படைத்து அழைப்பு தருகிறார். ஆனால் எல்லா மனிதர்களும் இவ்வொளியில் வாழ்வதில்லை. இயேசுவின் மாட்டு கொட்டகை பிறப்பும், தீவனத்தொட்டியில் கிடத்தியிருப்பதும் அவர் ஏழை எளியவருக்காக எளிய உருவில் புது ஒளியாக பிறந்திருக்கின்றார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவர் பிறப்பை சந்திக்கும் நாமும் ஏழை எளியவரை ஏற்றுக் கொள்ள அழைப்பு பெறுகின்றோம். 2000 ஆண்டுகளாக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அர்த்தம் பெற வேண்டுமென்றால், கிறிஸ்துவோடு சந்திப்பும், பிறரோடு பகிர்வும் மற்றும் நம் வாழ்வும் இயேசுவின் பிறப்புக்கான காரணத்தை வெளிப்படுத்தி காட்ட வேண்டும். இது வெறும் சமயத்தை உருவாக்குகின்ற பிறப்பு அல்ல, மாறாக சமத்துவத்தை உருவாக்குகின்ற பிறப்பு. மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் சமத்துவத்தோடும், சகோதரத்துவோடும் மற்றும் நல்லுறவோடும் இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவினுடைய பிறப்பு நமக்கு எடுத்துரைக்கின்ற உண்மை.
இயேசு நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு தர வந்தவர். இம்மண்ணுலகில் எத்தகைய மனிதர்கள் பிறந்திருந்தாலும், எல்லா பிறப்புகளும் நிரந்தரமான மகிழ்வையும் மற்றும் வாழ்வையும் தருவதில்லை. கிறிஸ்துவின் பிறப்பு மட்டும் தான் நிரந்தரமான மகிழ்வை தருகிறது. இது மனித மாண்பையும் மற்றும் உறவுகளையும் ஏற்றுக் கொள்ளுகின்ற பொழுதுதான் முழுமை அடைகிறது. இறைவனின் மீட்பு திட்டத்தில் எத்தனையோ நீதித் தலைவர்களும், அரசர்களும் மற்றும் இறைவாக்கினர்களும் இந்த சமத்துவத்தையும் மனித மாண்பையும் காப்பதற்கு முயற்சித்த போதெல்லாம் தோல்வி கண்டார்கள். தன் ஒரே மகனான இறை மைந்தன் இயேசு கிறிஸ்து இம்மண்ணுலகில் மனிதனாக அவதரித்த போது அவரும் சிலுவை சாவுக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் தான் வாழ்ந்த காலத்தில் தன் பிறப்புக்கான காரணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக அக்காலம் முதல் இக்காலம் வரை இந்த மனித மாண்பை காப்பதற்கு இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவை தொடர்ந்து நீடிக்கவில்லை. அது தொடர்ந்து காக்கப்பட வேண்டும் என்பதைத்தான் நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எடுத்துரைக்கின்றன. ஆனால், இன்றும் மக்களின் அடிமைத்தனமும் தாழ்நிலையில் மனிதர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இத்தகைய அடிமைத்தனத்தை ஒழித்து யாவரையும் மதம், சாதி, இனம் மற்றும் நிறம் என்னும் வேறுபாடுகளை கலைத்து ஏற்றுக் கொள்ளுகின்ற பொழுதுதான் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த கிறிஸ்து பிறப்பு அர்த்தம் பெறுகின்றது. இன்றைக்கு நம்முடைய குடும்பத்தில் நாம் அனைவரையும் ஏற்றுக் கொள்கின்றோமா? நம் உறவுகள் யாவரையும் ஏற்றுக் கொள்கின்றோமா? இன்று நாம் கொண்டாடக் கொண்டிருப்பது வெறும் சமய கிறிஸ்மஸ் பெருவிழா மட்டுமல்ல மாறாக சமத்துவ கிறிஸ்மஸ் பெருவிழா அப்படியென்றால் எல்லோரையும் எந்தவிதமான வேறுபாடின்றி ஏற்றுக் கொள்வதாகும். இதைத்தான் இயேசுவின் பிறப்பு இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டதும் மற்றும் இடையர்கள் சென்று இயேசுவை கண்டு கொண்டதும், பகிர்ந்ததும் நமக்கு எடுத்துரைக்கிறது. இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை