Friday, January 28, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 4-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) ----- 30-01-2022- ஞாயிற்றுக்கிழமை

🌱விவிலிய விதைகள்🌱

 பொதுக்காலம் 4-ஆம் ஞாயிறு

தமிழ் திருவழிபாட்டு மறையுரை
      
முதல் வாசகம்: எரேமியா 1: 4-5, 17-19

இரண்டாம் வாசகம்: கொரிந்தியர் 12: 31- 13: 13

நற்செய்தி:  லூக்கா 4: 21-30

 
அன்பால் உடனிருப்பவர்களை உருவாக்குவோம்

                  சில நாட்களுக்கு முன்பு நான் வாசித்த கதை அது. அலுவலகத்தில் தான் எதிர்பார்த்ததுபோல ப்ரமோஷன் கிடைக்காததால், வேலையை விடப் போகிறேன் என்றாள் சுமதி.  ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் டீம் லீடரான அவள் அசிஸ்டன்ட் மேனேஜர் ப்ரமோஷன் ரேஸில் இருந்தவள் எனத் தெரியும். "எனக்கு ப்ரமோஷன் கொடுக்காததுமில்லாம என்னைப்போல MBA கூட முடிக்காத ராஜேஷுக்கு அதை அவங்க கொடுத்தது பிடிக்கலை'' என்று தன் தோழியிடம்  சொன்னாள். எதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது மனித இயல்பு என்பது புரிந்தாலும் நிலைமையை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள, யோசிக்க சொன்னாள் தோழி. என்னைவிட ராஜேஷ்கிட்ட அப்படி என்ன தகுதி அதிகமாயிருந்திருக்கு?" என எண்ணினாள். "அவன் MBA கூட படிக்கவில்லை, ஆனா ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் தொடர்பா போன வருஷம் இரண்டு சர்ட்ஃடிபிகேட் கோர்ஸ் முடிச்சான். அது கூடுதல் அட்வான்டேஜ் ஆகிடுச்சு போல" என்றாள். "உன் வேலைக்கு அந்த கோர்ஸ் அவ்வளவு முக்கியமா, அப்படின்னா ப்ரமோஷனை எதிர்பார்த்த நீ ஏன் அதை பண்ணல?" என்ற தோழியின் கேள்விக்கு மெளனமாக இருந்தாள் சுமதி. எதிர்பார்த்த பதவி உயர்வு வரவில்லை என நம்மில் பலரும் புலம்புவோம். ஆனால், அந்த ப்ரமோஷனுக்கு எப்படியெல்லாம் தகுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என பல நேரங்களில் சிந்தக்கவும், அதை நோக்கி நம் கவனத்தை செலுத்தவும் தவறிவிடுவோம். இன்று நமது வாழ்க்கை பயனமும் இப்படி தான் இருக்கிறது. நம்மோடு உடனிருப்பவர்களின் வளர்ச்சியை கண்டு பொறைமை கண்டு, அவர்களை சந்தேகிக்கின்ற நாம் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகின்றோம். இத்தகைய தேவையற்ற எண்ணங்களை அழித்து நம்மோடு உடனிருப்பவர்களை அன்பால் உருவாக்க இன்றைய இறைவார்த்தை அழைப்பு தருகிறது.

                இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தொழுகைக் கூடத்தில் வாசித்ததை மற்றும் பேசியதைக் கண்டு மக்கள் வியப்புற்றனர் மற்றும் பாராட்டினர்.  அவரை பார்த்து, வியந்து மற்றும் பாராட்டிய மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசு செய்த செயலைக் கண்டு வியந்த அவர்கள் அவரை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு மூன்று காரணங்களை தரலாம்.

1.  தெரிந்த முகம்
2. பொறாமை உள்ளம்
3. சந்தேக குணம்
 
1.தெரிந்த முகம்

          நாம் வியக்கின்ற அளவுக்கு அருள் மொழிகளை பேசும் இம் மனிதர் நமக்கு தெரிந்தவர் தானே. "இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?  இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர் தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்?" (மத்தேயு 13:54-56)     என எண்ணற்ற கேள்விகளை கேட்கிறார்கள். தெரிந்த முகம்  அவரை  ஏற்றுக் கொள்ள தடையாக மாறுகிறது. இப்படிதான் நமது வாழ்க்கையும்  இருக்கின்றது. "பழகப் பழகப் பாலும் புளிக்கும்" என்று கூறுவார்கள், அதிகம் பழகுவதால் என்னவோ தெரியவில்லை நாம் நம்முடன் இருப்பவர்களின் நல்ல குணங்களை மறந்து விடுகின்றோம். 

        எங்கோ தெரியாதவர்கள் செய்கின்ற சாதனைகளை பார்த்து வியந்து பாராட்டி அவர்களின் ரசிகர்களாக மாறும் நாம், நம் மத்தியில் வாழுகின்றவர்களை மற்றும் நமது குடும்பங்களில் இருக்கின்றவர்களை பாராட்ட மறந்து விடுகின்றோம். நம் குடும்பத்தில் இருக்கின்ற கணவன், மனைவி மற்றும் பிள்ளைகளின் சாதனைகளை அவர்களுடைய அலுவலகங்களில் இருக்கின்றவர்கள் மற்றும் தெருவில் இருக்கின்றவர்கள் பாராட்டுவார்கள் ஆனால் உடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் அதை அறிந்திருந்தும் அதை பாராட்டுவதில்லை ஏனென்றால் அவர்கள் தெரிந்த முகம். ஓட்டலுக்கு சென்று, சாப்பிட்டு சாப்பாடு நன்றாக இருக்கின்றது என்று வியந்து பாராட்டுகின்ற நாம், ஒவ்வொரு நாளும் நமக்கு உணவு தரும் நம்முடைய தாய், மனைவி மற்றும் சகோதரிகளின் சமையலை ஒரு நாளும் பாராட்டுவதில்லை ஏனென்றால் அவர்கள் தெரிந்த முகம்.  பிறரை பாராட்ட, அவர்களின் சாதனையை ஏற்றுக்கொள்ள தெரிந்த முகம் ஒரு தடையாக ஒருபோதும்  மாறிவிடக்கூடாது.  இது நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் பொருந்தும். தலைமுறை தலைமுறையாக கிறிஸ்தவர்களாக இருப்பதால் என்னவோ தெரியவில்லை, நம்முடைய கிறிஸ்தவ விசுவாசமும் தெரிந்த முகமாக இருப்பதால் அது மறைந்த முகமாக மாறியிருக்கின்றது.  அதுவே நம்மை அன்றாட திருப்பலியில் பங்கு கொள்வதற்கும், ஜெபமாலை ஜெபிப்பதற்கும், இறைவார்த்தையை வாசித்து, தியானிப்பதற்கும் மற்றும் குடும்ப ஜெபமாலையை ஜெபிப்பதற்கும் தடைக்கல்லாக மாறியிருக்கின்றது.  தெரிந்த முகம் என்னும் தடைக்கல்லை தூக்கியெறிந்து, இறைவனையும் நம்மோடு இருக்கின்ற ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொண்டு மகிழ்வோடு வாழ முயலுவோம்.

2. பொறாமை உள்ளம்

           ஜப்பான்காரன் வேலை செய்யவில்லை என்றால் செத்து விடுவான். சீனாக்காரன் சூதாடாமல் இருந்தால் செத்து விடுவான். நம்ம சொந்தக்காரன் நாம் சந்தோஷமாக இருந்தால் செத்து விடுவான். இதுதான் இன்றைய உலகம்,  இவர்கள் தான் இன்றைய மனிதர்கள். பொறாமை எனும் நோயினால் அவதியுற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இயேசுவின் சொந்த ஊர் மக்கள் சாதாரண ஒரு தச்சரின் மகன் எப்படி இந்நிலைக்கு உயர முடியும்? எப்படி ஞானம் மிகுந்தவராக வளர முடியும்?  என பேசுவதே, அவர்களின் பொறாமை உள்ளத்தையும், இயேசுவை ஏற்றுக் கொள்ளாமையையும் காட்டுகிறது. ஒருவர் மற்றவரின் மிகச்சிறந்த நடத்தை, சாதனை அல்லது உடைமை ஆகியவற்றை பெறமுடியாமல் போகும் போதும் மற்றும் அதைப் பெற விரும்பும் போதும் அல்லது மற்றொருவர் அதைப் பெறக்கூடாது என விரும்பும் போதும் நிகழும் ஒரு வித உணர்ச்சியாக வரையறுக்கப்படுவதே  பொறாமையாகும். பெர்ட்ராண்ட் ருஸ்ஸல் என்பவர் பொறாமை மகிழ்ச்சியின்மையின் முக்கிய காரணங்களில் ஒன்று எனக் கூறுகின்றார். இது மனித இயல்பின் உலகளாவிய நோய் ஆகும்.  

            பொறாமை படைத்த நபர் தனது பொறாமையால் தனக்கு மட்டும் மகிழ்வின்மையை விளைவிப்பது இல்லை மாறாக பிறருக்கும் இடையூறுகளை ஏற்படுத்துகிறார். பொறாமை என்பது ஏழு கொடும் பாவங்களில் ஒன்றாகும்.  சொந்த அண்ணன் மற்றும் தம்பி தனது வாழ்க்கையில் நல்ல வேலை, வீடு என உயர்ந்தாலும் பொறாமைப்படும் ஒரு நிலை இன்று நமது சமுதாயத்தில் நிலவி வருகிறது. நான் மட்டும் இப்படி இருக்க மற்றவர் ஏன் வளர வேண்டும்? என்னும் பொறாமை உள்ளம் தான் இன்று நம்மையும், நம்முடைய சமுதாயத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறது.  இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவது போல நம்முடைய உள்ளங்கள் அன்பின் உள்ளமாக மாற பொறாமை உள்ளம் தூக்கி எறியப்பட வேண்டும். வாழ்ந்து உயர்ந்து விட்டால் பொறாமையில் பேசுவார்கள். தாழ்ந்து விழுந்து விட்டால் கேவலமாக பேசுவார்கள். இவ்வளவு தான் மனிதர்களின் உலகம் என எண்ணி நமது பொறாமை உள்ளத்தை மாற்றி அன்பில் வாழ்வோம்.

3. சந்தேக குணம்

      "சந்தேகத்தை போல் வேகமாக வளரும் விஷ விருட்சம் வேறேதுவுமில்லை". நற்செய்தியில் "கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உன் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்" (லூக்கா 4:23) என  இயேசு கூறுவது அவர்களுடைய சந்தேகத்தை நமக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறது. இயேசுவின் வாசிப்பையும் மற்றும் பேச்சையும் கேட்டு வியந்து பாராட்டிய மக்கள்  அவரை ஏற்று கொள்ளாததற்கு அவர்களில் இருந்த சந்தேக குணமே காரணமாக அமைகிறது.  அன்று இறைவன் முன் ஆபிரகாம்(தொ.நூல் 17:15-21), கிதியோன்(நீதி.த 6:36-40),  செக்கரியா(லூக் 1:18) மற்றும் பேதுரு (மத் 18: 30-31) சந்தேகம் கொண்டது போல இன்று நாமும் நம்முடைய குடும்பத்தில் நமது கணவர் மற்றும் மனைவி மீது  சந்தேகம் கொண்டு நமது வாழ்வை இழந்து  வருகின்றோம்.  தேவையற்ற சின்ன சின்ன சந்தேகங்கள் தான், பெரிய பெரிய பிளவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. சந்தேகங்களை ஒழித்திடும் போது நம் உறவுகளை இணைக்கும் மற்றும் மகிழ்விக்கும்.

அன்பால் வெல்லுவோம்

               "வாழ்வின் உண்மையான பொருள், அன்பு செலுத்துவதிலும், அன்பு செலுத்தப்படுவதிலுமே பொதிந்துள்ளது" என்கிறார் புனித அன்னை தெரசா. ஆலிவ் மரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எண்ணெய் இருப்பதைப் போலவே, படைப்பின் ஒவ்வொரு பகுதியிலும் அன்பு ஊடுறுவுகிறது. ஆனால் ஓர் ஆரஞ்சுப் பழத்தின் நறுமணச்சுவையை சொற்களால் விளக்க முடியாது, அதே காரணத்திற்காக அன்பிற்கு சொல்விளக்கம் கூறுவதும் மிகவும் கடினம். அதன்` நறுமணச்சுவையை அறிய நீங்கள் பழத்தைச் சுவைக்க வேண்டும். அன்பும் அதுபோலத்தான்.  "அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்"(1 கொரிந்தியர் 13:7) என்னும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடிகளாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப பிறரை வெறுக்க வைக்கும்  எண்ணங்களை ஒழிக்க அன்பை ஏற்று வாழ்வோம். தெரிந்த முகமும், பொறாமை உள்ளமும் மற்றும் சந்தேக குணமும் நம்மிலிருந்து அன்பால் அழிக்கப்படும் போது, நாம் மட்டும் அல்ல நம்மோடு உடனிருப்பவர்களும் உருவக்கப்படுவார்கள்.

இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


அன்புடன்

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF