பேறுபெற்றவர்களா? சபிக்கப்பட்டவர்களா?
(பேறுபெற்றவர்களாக்கும் இறைநம்பிக்கை)
அவர் அப்பா ஒரு பள்ளி ஆசிரியர்,
சிறிய வயதிலிருந்தே படிப்பைக் காட்டிலும் வேலை செய்வதை அதிகம் விரும்பியவர்.
பள்ளியில் பாடம் கற்ப்பதை காட்டிலும் சாலைகளில் வேலை செய்பவர்கள் எப்படியெல்லாம் வேலை செய்கிறார்கள் என்று நுணுக்கமாக பார்த்து அறிந்தவர்.
ஒருமுறை தன் தாயிடம் சென்று, 'ஒரு நாள் நிச்சயம் நான் அதிகம் சம்பாதிப்பேன், உன்னை நிச்சயம் நன்றாக பார்த்துக் கொள்வேன்' என்று வாக்கு கொடுத்தவர்.
பள்ளி படிக்கின்ற பொழுதே வார இறுதி விடுமுறையில் பஜ்ஜி விற்று பணம் சம்பாதித்தவர்,
இளம் வயதிலேயே ஏமன் நாட்டுக்கு சென்று வேலை செய்தவர். இரண்டு ஆண்டுகளில் அதே எண்ணெய் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வகித்தவர். இந்தியாவுக்கு வந்த பிறகு நெசவுத் தொழிற்சாலையை துவங்கி, பிறகு பல முதலீட்டாளர்களை ஒன்று சேர்த்து ரிலையன்ஸ் நிறுவனத்தை உருவாக்கியவர், ஆம் அவர் தான் தீருபாய் அம்பானி. இன்று மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கின்ற இவரது வாழ்க்கை பயணத்தில் வெறும் வெற்றிகள் மட்டும் வந்தது என்று சொல்லி விட முடியாது. எண்ணற்ற தடைகளும், போராட்டங்களும் மற்றும் சவால்களும் வந்ததாக அவரே கூறியிருக்கிறார். இவை அனைத்திலிருந்தும் அவர் மீண்டும் எழுந்து வந்தது அவருடைய நம்பிக்கையால் மட்டுமே என்கிறார்.
இவர் மட்டுமல்ல உலகின் எல்லா பகுதியிலும் இன்று உயர்ந்தவர்களாக, மக்களால் போற்றப்படுபவர்களாக இருக்கின்ற ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் தோல்விகளை சந்தித்து,
அச்சவால்களில் மூழ்கி விடாமல் நம்பிக்கையோடு மீண்டும் எழுந்தவர்கள்.
அம்பானிக்கு மட்டுமல்ல உலகில் உள்ள யாவருக்கும் வெற்றியாளர்களாக மற்றும் மக்கள் மத்தியில் பெரும் பெயர் பெற்றவர்களாக மாற நம்பிக்கை மாபெரும் சக்தியாக இருக்கிறது. நம்மை உயர்த்துவதும் வீழ்த்துவதும் நாம் நம் மீதும், நமது வாழ்வின் மீதும் வைக்கின்ற நம்பிக்கையில் தான் இருக்கின்றது.
இது நமது கிறிஸ்தவ வாழ்விற்கும் பொருந்தும். நம்மை பேறுபெற்றவர்களாக்குவதும், சபிக்கப்பட்டவர்களாக்குவதும் நாம் இறைவன் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் தான் இருக்கின்றது என்பதை விவரித்து விளக்குகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. எது நம்மை பேறுபெற்றவர்களாக்குகிறது?
எது நம்மை சபிக்கப்பட்டவர்களாக்குகிறது? என்னும் கேள்விகளுக்கு விடையளிக்கிறது இன்றைய பொது காலத்தின் ஆறாம் ஞாயிற்றுக்கிழமை திருவழிபாடு. நமது இறை நம்பிக்கை தான் இறைவனில் நம்மை பேறுபெற்றவர்களாக்குகிறது என்பதை சிந்தித்து பார்க்க அழைக்க பெறுகின்றோம்.
இறை மற்றும் மனித நம்பிக்கை
இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டோர், ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர் என்கின்றார். யூதா அரசன் யோயாக்கின் பாபிலோனியர்கள் படையெடுத்து வந்த போது முழுவதுமாக சரணடைந்தான். வலிமையற்ற எகிப்து நாட்டு மனிதர்களிடத்தில் நம்பிக்கை வைத்து கொல்லப்பட்டு இறந்தான். ஆண்டவரின் மக்களுக்கு அரசனாக இருக்கின்ற யோயாக்கின் பாபிலோனிய படையெடுப்பின் போது இறைவன் மீது நம்பிக்கை கொள்ளாமல், மனிதர் மீது நம்பிக்கை கொண்டு தன்னுயிரையும் பாபிலோனிய அடிமைத்தனத்தையும் உருவாக்கியதால் ஏரேமியா இறைவாக்கினர் இவ்வாறாக விவரித்து எழுதுகின்றார். நமது வாழ்விலும் பாபிலோனிய படைகள் போல் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள், சவால்கள், தாக்கங்கள் பாரங்கள் மற்றும் கடன் தொல்லைகள் என எல்லா சூழலிலும் நாம் இறைவன் மீது முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதுதான் நம்மை வாழ வைக்கும், கிறிஸ்தவ வாழ்வில் பேறுபெற்றவர்களாக்கும். இதை தான் ஏரேமியா ஆண்டவரில் நம்பிக்கை வைக்கின்றவர், நீர் அருகே நடப்பட்ட மரத்தைப் போல பசுமையாக வாழ்கின்றவர்கள் எனவும், மனிதரில் நம்பிக்கை கொள்பவர் வறண்ட பகுதியான பாலை நிலத்தில் வளர்கின்ற புதரை போலானவர்கள் என உருவகங்களாக எழுதுகிறார்.
இறை மற்றும் உலக நம்பிக்கை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும் விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம் என இவ்வுலகின் மீது நம்பிக்கை கொள்ளாது, கிறிஸ்துவின் மீதும் மற்றும் அவர் உயிர்ப்பின் மீதும் நம்பிக்கை கொண்டு வாழ அழைப்பு தருகிறார். உலகச் சிந்தனைகளின் படி இறப்பு மற்றும் உயிர்ப்பு பற்றி நினைத்துப் பார்த்த கொரிந்து நகர மக்களுக்கு, உயிர்க்கும் போது இருக்கும் உடல் அழியாமையை அணிந்து கொள்கின்றது என்றும், இந்த அழியா உடலையே இயேசு பெற்றார் என்றும், அவரின் இறப்பில் பங்கேற்கும் நாம் அவரைப் போல அழியா உடல் பெற்று உயிர்ப்போம் என்னும் இறைநம்பிக்கையை எடுத்துரைக்கிறார். மாறிவரும் இந்த நுகர்வு கலாச்சார உலகில் ஆசைகள் நம்மை அலைக்கழித்து கொண்டிருக்கிறது. அதுவே வாழ்வின் மையமாக மாறி, இலட்சியங்களில் இருந்து நம்மை சீர்குலைத்து கொண்டிருக்கிறது. இந்நிலை மாறி இவ்வுலக உடலின் மேல் அல்ல, இறைவனின் உயிர்ப்பில் நம்பிக்கை வைக்க அழைக்கின்றார் திருத்தூதர் பவுல்.
இறை மற்றும் பண நம்பிக்கை
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் சமவெளி பொழிவை தருகிறது. மத்தேயு நற்செய்தி தரும் மலைப் பொழிவிலிருந்து சிறிது மாறுபட்டதாக இருக்கிறது. அங்கு எட்டு பேறுகளை நாம் வாசிக்கின்றோம். லூக்கா நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி நான்கு பேறுகளையும் மற்றும் நான்கு சாபங்களையும் எடுத்துரைக்கிறது. ஏழைகள், பட்டினியாய் இருப்போர், அழுவோர் மற்றும் கிறிஸ்துவின் பொருட்டு வெறுக்கப்பட்டு இகழப்படுவோர் பேறுபெற்றவர்களாகவும், செல்வம் படைத்தோர், உண்டு கொழுத்திருப்போர் மற்றும் பிறரைப் பார்த்து ஏளனமாக சிரித்து இன்புறுகின்றோர் சபிக்கப்பட்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள். எழ்மை, பட்டினி, அழுகை மற்றும் துன்பம் தான் நம்மை பேறுபெற்றவர்களாக மாற்றுகிறதா? இல்லை. இவர்கள் உடலால் துன்பபட்டாலும், ஆன்மாவில் இறைவனோடு இணைந்து, அவர் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்கிறார்கள். எனவே தான் இவர்கள் இறைவனில் பேறு பெற்றவர்களாக திகழ்கிறார்கள். சபிக்கப்பட்டவர்கள் இறைவனில் நம்பிக்கை வைக்கவில்லை, அவர்கள் பணத்திலும் பொருளிலும் மற்றும் உணவிலும் நம்பிக்கை வைத்தார்கள். இன்றைய நற்செய்தியில் கூறப்படுகின்ற செல்வர்கள் பணத்தில் நம்பிக்கை வைத்தார்கள், உண்டு கொழுத்திருப்பவர்கள் உணவில் நம்பிக்கை வைத்தார்கள், சிரித்து இன்புறுகின்றவர்கள் பிறர் பொருளில் நம்பிக்கை வைத்து பாவத்தில் வாழ்ந்தார்கள். எனவே தான் இவர்கள் சபிக்கப்பட்டவர்களாக கருதப்படுகிறார்கள். ஆக பணத்தில், உணவில் மற்றும் பொருளில் நம்பிக்கை வைத்தவர்கள் சபிக்கப்பட்டவர்களாகவும், இறைவனில் நம்பிக்கை வைப்பவர்கள் பேறுபெற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இன்றைக்கு நமது வாழ்விலும் பணம், பொருள், பதவி மற்றும் சொத்துகள் மீது உள்ள ஆசைகளில் நாம் இறைவனிடமிருந்து பிரிந்து சபிக்கப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் இறைவனில் நம்பிக்கை கொள்ளுகின்ற பொழுது தான், பேறுபெற்றவர்களாக, இறையாட்சியில் இணைந்தவர்களாக வாழ முடியும். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
காணொளியில்/ஆடியோவில் காண...