Friday, May 5, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பாஸ்கா 5-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A) - 07-05-2023 - ஞாயிற்றுக்கிழமை

 

🌱விவிலிய விதைகள்🌱
பாஸ்கா காலத்தின் 5-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(07 மே  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: திபணி 6: 1-7
இரண்டாம் வாசகம்: 1 பேதுரு   2: 4-9
நற்செய்தி: யோவான் 14: 1-12

இயேசுவை அறிவோம்

         நன்பகல் நேரம், மதிய வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும், உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்.” என நினைத்துக்கொண்டே சென்றான். அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான்“ என நினைத்துக்கொண்டே சென்றான். மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.“ காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென்றான். சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கிவிட்டு சென்றார். ஆக நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே, அதுவே நம் வாழ்வையும் தீர்மானிக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நம் வாழ்வும் நல்முறையில் அமைய நம் எண்ணங்கள் கிறிஸ்துவை அறிந்திருக்க வேண்டும். பாஸ்கா காலத்தின் 5-ஆம் ஞாயிற்றுக்கிழமை நம் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவை அறிந்து வாழ அழைப்பு தருகிறது.

        நாம் பாஸ்கா காலத்தில் பயணித்தாலும், இன்றைய நற்செய்தியை வாசிக்கும் போது இயேசு தந்தையிடம் செல்வதற்கு முன்பு தன் சீடர்களுக்கு எடுத்துரைக்கும் பிரியாவிடை செய்தியை போலவே தெரிகிறது. இது நாம் கொண்டாடவிருக்கும் இயேசுவின் விண்ணேற்ற பெருவிழாவிற்கும் மற்றும் தூய ஆவியாரின் வருகைக்கும் (ஆவியில் மீண்டும் வருகை) நம்மை தயாரிக்கும் முதல் புள்ளியாக இருக்கிறது. இப்புள்ளியே நாம் இயேசுவை அறிவதற்கும் அழைப்பு தருகிறது.

இயேசுவின் பணி வாழ்வை இரண்டு நிலைகளாக பிரிக்கலாம்.

1. உயிர்ப்புக்குப் முன் பணி வாழ்வு
2. உயிர்ப்புக்குப் பின் பணி வாழ்வு

1. உயிர்ப்புக்குப் முன் பணி வாழ்வு:
        இது இயேசுவின் மூன்று ஆண்டு பொதுப்பணியை எடுத்துரைக்கிறது. இப்பணி வாழ்வில் இயேசு சீடர்களை அழைத்தார், தன்னோடு உடனிருக்க, தன் பணியை தொடர்ந்தாற்ற அவர்களை தயாரித்தார். இறையாட்சியை பற்றி பறைசாற்றினார், நோய்களை குணமாக்கினார், பேய்களை ஓட்டினார் மற்றும் இறந்தோரை உயிர்ப்பித்தார். சிலுவைப் பாடுகளை ஏற்று தன்னுயிர் தந்தார்.

2. உயிர்ப்புக்குப் பின் பணி வாழ்வு:
        இது முற்றிலும் இயேசுவின் சீடர்களுக்கான பணி வாழ்வாகவே அமைகிறது. அச்சத்திலிருந்த சீடர்களுக்கு நம்பிக்கையூட்டுவது, துணையாளராம் தூய ஆவியை அனுப்ப வாக்களிப்பது, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்" என்று எடுத்துரைப்பது மற்றும் "நான் மீண்டும் உங்களுக்காக வருவேன்" என்று கூறுவது என இயேசுவின் இவ்வாழ்வு சீடர்களை தயாரிப்பதாகவே அமைகிறது. இன்றைக்கு நாம் வாசிக்க கேட்ட நற்செய்தி பகுதியும் இயேசுவின் இத்தகைய பணி வாழ்வாகவே அமைகிறது. இப்பகுதி கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரையும் அவரை முழுமையாய் அறிந்து கொள்ள அழைப்பு தருகிறது.

இயேசுவை அறிய அடையாளங்கள்

இன்றைய நற்செய்தியின் முதல் பகுதி இயேசுவின் மூன்று வாக்குறுதிகளை எடுத்துரைக்கிறது.
1. இறை நம்பிக்கை (14:1)
2. இறையரசு (14:2)
3. இறை வருகை (14:3)

        இது நாம் இயேசுவை அறிவதற்கும் மற்றும் அவரில் வாழ்வதற்குமான அடையாளங்களாகும். மேலும் இது அச்சத்திலும் கலக்கத்திலுமிருந்த சீடர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும், மனவுறுதி அளிப்பதாகவும் அமைகிறது. இப்பகுதி அச்சத்திலும் வாழ்வின் கலக்கத்திலும் சூழ்ந்திருக்கும் நமக்கும் நம்பிக்கையூட்டி இயேசுவை அறிந்து கொள்ள வழிகாட்டுகிறது.

அறிதல் காட்டும் வழியும் வாழ்வும்

                இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம் தனக்கும் தந்தைக்கும் உண்டான உறவை வெளிப்படுத்துகிறார். “நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்” (யோவான் 14:7) என்கிறார். ஆக இயேசுவை அறிந்திருப்பது தந்தையாகிய இறைவனை அறிந்திருப்பதாகும். இயேசுவை அறிந்திருப்பது சரியான வழியிலும், உண்மையிலும் மற்றும் நேர்மையான வாழ்விலும் நடப்பதாகும். இதைத்தான் இயேசு “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" என்கிறார் (யோவான் 14:6). இங்கு இயேசு கிறிஸ்தவர்களாகிய நமக்கு வாழ்வின் வழியை காட்டுவேன் என்றும், உண்மையை விளக்கி கூறுவேன் என்றும் மற்றும் புதுவாழ்வை பெற உதவுவேன் என்றும் சொல்லவில்லை. மாறாக, தன்னையே வழியாக உண்மையாக மற்றும் வாழ்வாக எடுத்துரைக்கிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பாவத்தால் தவறான வழிக்குள் செல்லாமலிருக்க இயேசுவே வழியாகிறார். "என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா" (யோவான் 10:27-28) என்கிறார். ஆக ஆடுகளை சரியான பாதையிலே வழி நடத்துகின்ற நல்ல ஆயனாக இயேசு இருக்கிறார். அவர் பாதையில் நாமும் செல்ல அழைப்பு பெறுகிறோம். பாவத்தால் இழந்து போன வாழ்வை இயேசுவே நம் வாழ்வு என உணர்ந்து, அவரை அறிந்து வாழ்வதன் மூலம் பெற்று கொள்ள அழைப்பு பெறுகின்றோம். இன்று மட்டுமல்லாது என்றும் நம் மனித வாழ்வு கிறிஸ்துவை அடித்தளமாக்கி அமைதல் வேண்டும். இதற்காகவே இயேசு தன்னை "வாழ்வு தரும் உணவு நானே" (யோவான் 6:35) என்று அடையாளப்படுத்தி நம் ஒவ்வொருவருக்கும் நற்கருணையின் வழியாய் வாழ்வு கொடுத்து வருகிறார். மேலும், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்." (யோவான் 11:25) என இயேசுவில் நம்பிக்கை கொள்பவர் என்றுமே வாழ்வார் என்கிறார். இன்னும், "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்." (யோவான் 3:16) என்றும் கூறுகிறார். எனவே இயேசுவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு அவரை முழுமையாக அறிந்து கொள்வோம். அவர் தரும் வாழ்வைப் பெற்றுக் கொள்வோம்.

இயேசுவை அறிய தடைக்கற்கள்

        பொதுவாகவே மனிதர்களிடத்தில் இரண்டு விதமான ஆசைகளுண்டு அதுவே ஒரு கிறிஸ்தவன் இயேசுவை முழுமையாக அறிந்து கொள்ளவும், அறிதலால் அவன் உணரும் இயேசு என்னும் வழியையும், உண்மையையும் மற்றும் வாழ்வையும் பெற தடையாக இருக்கிறது. அதற்கு இருவரை இன்றைய நற்செய்தி எடுத்துக்காட்டாக தருகிறது.

1. தோமா

            தோமா இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்கிறார். (யோவான் 14:5) இது விண்ணகம் செல்ல வேண்டும் என்னும் மனித ஆசையை காட்டுகிறது. தோமா இயேசு போகுமிடத்தை அறிகின்ற ஆசையிலே இருந்தார். பொறுமையோடு காத்திருக்கவும் அவருக்கு மனமில்லை மற்றும் இயேசுவை பின்பற்றி அதை அறிந்து கொள்ள அவர் நினைக்கவும் இல்லை. பொறுமையின்மையும், விண்ணக ஆசையும் தோமாவிடம் இருந்ததை நாம் கண்டுணர முடிகிறது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலும் நாம் பல வேளைகளில் பொறுமையின்மையோடும், ஆசைகளோடும் வாழ்வது இயேசுவை அறிவதற்கு தடைக்கல்லாக இருக்கிறது.

2. பிலிப்பு

           பிலிப்பு, இயேசுவிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” (யோவான் 14:8) என்கிறார். இது கடவுளைக் காண வேண்டும் மற்றும் இயேசு இன்றி இறைவனை அனுபவித்து விட வேண்டும் என அவர் நினைத்ததை எடுத்துக்காட்டுகிறது. பிலிப்பு இயேசுவில் இறைவனை கண்டுணரவில்லை. இயேசுவே இறைவனை அடையும் வழி என்பதை உணரவில்லை. இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நாமும் விதைக்காமல், நீரூற்றி செடியை வளர்க்காமல், அறுவடை மட்டும் செய்து விட வேண்டும் என எண்ணுகிறோம். அதாவது நம்முடைய பக்தி முயற்சிகள் மற்றும் இறை நம்பிக்கை வழியாய் இயேசுவை அடையாமலே இறைவனில் கலந்து விட வேண்டும் என நினைக்கின்றோம்.
            அன்று நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, “இவர் உண்மையாகவே இறைமகன்” என்றார்கள்.(மத்தேயு 27:54) இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து இயேசுவே நம் வழி, உண்மை மற்றும் வாழ்வு என அவரை முழுவதுமாக அறிந்து கொள்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.