Thursday, November 11, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 33-ஆம் வாரம் - ( ஆண்டு- B) ----- 14-11-2021- ஞாயிற்றுக்கிழமை


 
முதல் வாசகம் : 

             தானியேல் 12: 1-3

இரண்டாம் வாசகம் : 

             எபிரேயர் 10: 11-14, 18

நற்செய்தி:-

மாற்கு 13:24-32


விவிலிய விளக்கம்:-

1. இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தைகள் இரண்டு காரணங்களின் பிண்ணனியில் கொடுக்கப்படுகிறது.
1. எருசலேமின் அழிவு
2. இயேசுவின் இரண்டாம் வருகை
2. "கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது" (மாற்கு 13:24) என்னும் இறைவார்த்தை இயேசுவின் இரண்டாம் வருகையில் அவரது மாட்சியால் எவ்விதமான ஒளியும் தெரியாது என்பதன் அடையாளம் (எசாயா 24:23).

3. "அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்"(மாற்கு 13:26). என்பது தந்தையின் வலப்பக்கம் அமர்ந்த இறைமைந்தன் இயேசு, நம்மை நோக்கி இரண்டாம் முறையாக வருவதைத்தான் மேகங்கள் மீது வருவார் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

4. "வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்" (மாற்கு 13:27). என்னும் வார்த்தைகள் இயேசு வானதூதர்களின் வழியாய் தேர்ந்து கொள்ளப்பட்ட நம் ஒவ்வொருவரையும் அழைப்பார் மற்றும் தீர்ப்பிடுவார் என்பதை சுட்டிக்காட்டுகிறது (1 தெச.4:17).

5. எருசலேமின் அழிவும் மானிட மகனின் வருகையும் அத்திமர உருவகம் கொண்டு விளக்கப்படுகிறது.

மறையுரை:-

நிகழ்காலத்தில் வாழ்வோம்
(தீர்ப்பும் - வாழ்வும்)

ஒரு முதலாளி தன்னுடைய தொழிலாளியை அடிக்கடி துன்புறுத்தி அதிக வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றான். இதனால் மனம் நொந்து போன அந்த தொழிலாளி, ஒரு நாள் முதலாளியின் வீட்டை விட்டு 'இந்த வேலையே எனக்கு வேண்டாம்' என்று சென்று விடுகிறான். சென்றவன், எங்கு செல்வது என்று தெரியாமல் காட்டுக்குள் சென்று ஒரு குகையில் வாழ்கின்றான். அந்தக் காட்டில் கிடைக்கும் பழங்களை உண்டு, நீரை அருந்தி உயிர் வாழ்கின்றான். ஒரு நாள் இரவு அவன் குகைக்குள் வருகின்றான், அவனுக்கு ஒரே ஆச்சரியமும், அதிர்ச்சியும் காத்திருக்கிறது. அங்கு ஒரு சிங்கம் காலில் அடிப்பட்டு அவதியுற்று கொண்டிருப்பதை பார்க்கின்றான். அதைக் கண்ட அவன் அந்த சிங்கத்தின் அருகே சென்று அதன் காலுக்கு மருந்து வைத்து அதற்கான முதலுதவியை செய்கின்றான். ஓரிரு நாட்களில் அந்த சிங்கம் நலம் பெற்று அந்த குகையை விட்டு சென்று விடுகின்றது. எவ்வளவு நாள் தான் இந்த குகையிலேயே இருப்பது என்று எண்ணி ஊருக்குள் செல்கின்றான். அங்கு அவன் தன் முதலாளியிடம் மாட்டிக் கொள்கின்றான். முதலாளி அவன் மீது பொய் குற்றம் சுமத்தி அந்த நாட்டு அரசரிடம் ஒப்படைத்து விடுகின்றான். அரசரோ அவனுக்கு மரண தண்டனை விதிக்கின்றான், அந்த நாட்டின் முறைப்படி மரண தண்டனை குற்றவாளிகள் சிங்கத்தின் முன் மைதானத்தில் விடப்படுவர், சிங்கம் அவர்களை கொல்ல அதை அனைவரும் பார்ப்பர், இந்த தொழிலாளியும் அவ்வாறே விடப்பட்ட பொழுது, அங்கு வந்த சிங்கம் அவனை கொல்லாமல் அவனருகே வந்து, அவன் காலை நக்கி கொடுக்கின்றது. சிறிது நேரம் கழித்த பிறகு தான் அவனுக்கு புரிந்தது, அந்த சிங்கத்திற்கு தான் அன்று அவன் முதலுதவி செய்திருந்தான். இதைக் கண்ட அரசனுக்கும் மக்களுக்கும் ஒரே ஆச்சரியம், அதன் பின் அரசர் அவனை அழைத்து நடந்த யாவற்றையும் கேட்டறிகின்றான். அவனும் நடந்த யாவற்றையும் எடுத்துரைக்கின்றான். அரசர் அவனுக்கு பொற் காசுகளை பரிசாக கொடுத்து, அந்த முதலாளியை சிறையில் அடைக்கின்றான். நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்ல மற்றும் இரக்க செயல்கள், நிச்சயம் ஒரு நாள் நம்மை வாழ வைக்கும். இதைத்தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு சொல்கின்ற செய்தியாக இருக்கின்றது.
நிகழ்காலத்தில் நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்ல செயலுக்கும், பிற்காலத்தில் புது வாழ்வு கிடைக்கும், நிகழ்காலத்தில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் பிற்காலத்தில் நம்மை தீர்ப்புக்கு உள்ளாக வைக்கும்.
திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் இருக்கின்ற நமக்கு உலக முடிவு மற்றும் இயேசுவின் இரண்டாம் வருகை பற்றிய வாசகம் திருஅவையால் தரப்பட்டிருக்கிறது. இது திருவருகைக் காலம் மற்றும் கிறிஸ்து பிறப்புக்கு நம்மை தயாரிப்பதாக அமைகிறது. கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கின்ற இயேசு 'வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்குவார்' என நம்பிக்கை அறிக்கையில் நாம் அறிக்கையிடும் வார்த்தைகளுக்கு இன்றைய நற்செய்தி வாசகம் பின்னணியாக அமைகின்றது. நமது எல்லா துன்பமான மற்றும் கஷ்டமான சூழ்நிலைகளிலிருந்து நம்மை மீட்க இயேசு மீண்டும் வருவார் என்பதை இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் எடுத்துரைக்கின்றது.
இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இது கஷ்டமும் துன்பமுமே வாழ்க்கையாக மாறிப்போன யூத மக்களுக்கு வரவிருக்கும் மெசியாவால் புதுவாழ்வு பிறக்கும் என்னும் நம்பிக்கை செய்தியை தருகிறது. இன்றைய இறைவார்த்தை வழிபாடு நிகழ்காலத்தில் நாம் படுகின்ற துன்பங்களுக்கு எதிர்காலத்தில் புது வாழ்வும் மற்றும் நிகழ்காலத்தில் நாம் செய்கின்ற பாவங்களுக்கு எதிர்காலத்தில் தீர்ப்பும் கிடைக்கும் என்பதையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது. ஆக இயேசுவின் வருகை வாழ்வையும் தீர்ப்பையும் நமக்கு கொடுக்கும். எதிர்காலத்தில் நாம் தீர்ப்பை பெற போகின்றோமா? வாழ்வைப் பெற போகின்றோமா? என்பதை சிந்தித்து நிகழ்காலத்தில் அர்த்தமுள்ள வாழ்வை வாழ அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

தீர்ப்பு:

     நாம் ஒவ்வொருவரும் இந்த மண்ணுலக வாழ்வின் முடிவில் அவரவர் செயல்களுக்கு ஏற்ப தீர்ப்புக்கு உள்ளாக்கப்படுவோம். இன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான வெகுமதிகள் அல்லது தண்டனைகள் உண்டு. “நமது வேலை மற்றும் நேரத்தின்படி அல்ல, மாறாக நமது அன்பின் செயல்களின்படியே நமக்கு வெகுமதி அளிப்பார்” என்கிறார் புனித சியன்னா கேத்தரின். நற்செயல்களுக்கு நிரந்தரமான வெகுமதி உண்டு. இன்று நாம் செய்யும் தீய செயல்களுக்கு அதாவது பாவங்களுக்கு நிச்சயம் ஒரு நாள் அவரால் தீர்ப்பிடப்படுவோம். “நாம் எதை விதைக்கிறோமோ, அதையே அறுவடை செய்வோம்” (கலாத்தியர் 6:7.) நம்மை சோதித்தறிய வேண்டிய நேரம் இது. செய்த தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய வேண்டிய நேரம் இது. நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்போம், அதற்காக நம்மால் முடிந்த இரக்க செயல்களை செய்வோம். எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தில் அர்த்தமுள்ள முறையில் வாழ்வோம்.

வாழ்வு:

"துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது." (மத்தேயு 5:4,10) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நிகழ்காலத்தில் இறைவனுக்காக, இறையாட்சிக்காக, திருஅவையின் எல்லா நலனுக்காக மற்றும் இறைவார்த்தையின்படி வாழ்வதற்காக துன்பங்களை ஏற்றுக்கொள்கின்ற நாம் இறைவனால் இறையாட்சி என்னும் புது வாழ்வுக்கு அழைத்துச் செல்லப்படுவோம். இயேசுவின் தீர்ப்பு உண்மை, அன்பு மற்றும் நீதியின் அடிப்படையில் அமையும். நாம் எப்பொழுதும் நமது தீர்ப்பை எதிர்கொள்ள நன்கு தயாராக இருக்க வேண்டும், நமது அன்றாட வாழ்வில் நாம் இரக்கச் செயல்களோடு, பிறர் மீது அன்பு செலுத்தும் போது நிச்சயம் நாம் இறைவனால் வாழ்வுக்கான நீதித் தீர்ப்புக்கு உள்ளாக்கப்படுவோம்.

        இன்று நாம் வாழும் நமது வாழ்க்கை தான் நாளைய வாழ்வையும் தீர்மானிக்கும். இது தான் உண்மை, ஒவ்வொரு நாளையும் நம் கடைசி நாளாக எண்ணுவோம். இன்று நம்மால் முடிந்த நல்லதைச் செய்வோம், நாளை நமக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். எல்லா விதமான கவலை, துன்பம் மற்றும் வருத்தம் என யாவற்றையும் விட்டு விடுவோம். அதிலிருந்து மீண்டு வருவோம். ஒவ்வொரு நாளும், கடந்து செல்லும், ஒவ்வொரு மணி நேரமும் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கிறது; ஒவ்வொரு நாளையும் கணக்கிடுவோம். வாழ்வின் சாதாரண நிகழ்வுகளில் நாளும் இயேசு நம்மிடம் வருகிறார், நற்கருணையில் மற்றும் நமது சகோதர சகோதரிகளிடத்தில் அவரை வரவேற்போம். நமது அன்பை காட்டுவோம். நம்பிக்கையுடனும் அமைதியுடனும் எதிர்காலத்தை நோக்குவோம், ஏனென்றால் கடவுளின் வலது பக்கத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கும் இயேசு, இரண்டாம் வாசகத்தில் நாம் கேட்டது போல் சிலுவையில் தம்முடைய பலியின் மூலம் நம்முடைய பாவ மன்னிப்பையும், நம்முடைய தூய மற்றும் புது வாழ்வையும் உறுதி செய்கிறார்.

இறைவன் நம் வாழ்க்கையை வாழ அருள்புரிவாராக; ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி மற்றவர்களுக்கு நன்மை செய்ய, மகிழ்ச்சியான புதுவாழ்வு வாழ முயலுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


ஆடியோவாக கேட்க...

             https://youtu.be/wAVfzx-MWDI

அன்புடன்,

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF