விவிலிய விதைகள்
தவக்காலம் 4-ஆம் வாரம் ( ஆண்டு- B)
14-03-2021
ஞாயிற்றுக்கிழமை
நிலைவாழ்வு தரும் ஆன்மீகம்
அருணிமா சின்ஹா 1989- ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் நகர் என்னும் ஊரில் பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், ஓடும் ரயிலில் இருந்து 2011-ஆம் ஆண்டு சில கொள்ளையர்களால் அவள் கீழே தள்ளப்பட்டாள். 24-மணி நேரம் சுயநினைவை இழந்து, 49-ரயில்கள் அவள் மீது ஏற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் விளைவாக, அவளது இடது காலை முழங்காலுக்குக் கீழே வெட்ட வேண்டியிருந்தது, அவளுக்கு வலது காலில் தடிகளும், முதுகெலும்பில் பல எலும்பு முறிவுகளும் கிடைத்தன. கால் இழந்து, வாழ்வை இழந்த நிலையில் கண்டங்களின் மிக உயர்ந்த சிகரங்கள் ஒவ்வொன்றிலும் ஏறி இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதை, அவரது நோக்கமாக கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே 2014 -ஆம் ஆண்டு வரை ஏழு சிகரங்களையும் இவ்வாறு செய்துள்ளார். 2015 - ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மஸ்ரீ விருதை இந்திய அரசு வழங்கி கவுரவித்தது. கால் இழந்து, வாழ்வை இழந்த நிலையில் அருணிமா சின்ஹா எப்படி வாழ்வில் சாதித்தார் எனும் கேள்விகளுக்கு ஊடகங்கள் அன்று வெளியிட்ட அவரது பதில் "நம்பிக்கை". ஆம், அன்று அருணிமா சின்ஹாவுக்கு வாழ்வு கொடுத்து, இன்று மிகப்பெரிய மலை ஏறுபவராக மற்றும் விளையாட்டு வீராங்கனையாக மாற்றியது அவளது நம்பிக்கை தான். என்றும் நம் எல்லோருக்கும் வாழ்வு தருவது நம்பிக்கை தான். "நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்" (2 கொரிந்தியர் 5:7) என்னும் பவுலடிகளாரின் வார்த்தைக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டு வாழ நமக்கு இன்றைய நாளிலே அழைப்பு தரப்படுகின்றது. அதிலும் சிறப்பாக நம் இறைவன் தருகின்ற அந்த நிலை வாழ்வைப் பெற நம்பிக்கை எனும் ஆன்மீகத்தை பற்றிக்கொள்ள அழைக்கப்படுகின்றோம்.
1. நிலைவாழ்வுக்கான பயணம்
நமது வாழ்க்கை ஒரு பயணமாக இருக்கின்றது. இந்த பயணத்திலேயே மனிதன் எதையோ தேடிக் கொண்டே இருக்கின்றான். கிறிஸ்தவர்களாகிய நாம் வாழ்க்கையில் எதை தேடினாலும் நாம் இறுதியாக இறைவனை தேடவும் மற்றும் இறைவன் தருகின்ற நிலை வாழ்வை தேடவும் அழைக்கப்படுகிறோம். இந்த நிலைவாழ்வு தருபவர் இறைமகன் இயேசு கிறிஸ்துவாக இருக்கின்றார். "கடவுள் நமக்கு நிலை வாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று" (1 யோவான் 5:11) என்னும் வார்த்தைகளே இதற்கு சான்று. கிறிஸ்துவில் நாம் கொள்ளுகின்ற நம்பிக்கையே நிலை வாழ்வு தருகின்ற ஆன்மீகம்.
2. நிலைவாழ்வு தருபவரின் இரு உருவகங்கள்
இன்றைய நற்செய்தி வாசகம் இறைமகன் இயேசு கிறிஸ்து நிலைவாழ்வு தருபவர் என்னும் இரண்டு உருவகங்களை வெளிப்படுத்தி காட்டுகின்றது.
a. உயர்த்தப்பட்ட பாம்பு (சிலுவையில் இயேசு)
"பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்"(யோவான் 3:14,15) எனும் இறைவார்த்தைகள் பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் இறைவனின் வழி தவறி சென்று, தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட போது அவர்கள் மீண்டும் வாழ்வு பெற, மோசே பாம்பு ஒன்றை செய்து அதை உயர்த்தி காட்டுகின்றார். அதைப் பார்த்தவர்கள் வாழ்வு பெறுகிறார்கள். அதுவே மானிட மகனுக்கும் உருவகப்படுத்தப்படுகிறது. சிலுவையில் தொங்கும் இறைமகன் இயேசு கிறிஸ்துவை பார்க்கின்ற நாம் ஒவ்வொருவரும், நமது பாவ வாழ்விலிருந்து மீட்பு என்னும் புது வாழ்வைப் பெறுவோம். நிலைவாழ்வு தரும் மீட்பராக இவரே இருக்கின்றார், இவரில் நம்பிக்கை கொள்ளுவோம்.
b. ஒளி
இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு கிறிஸ்து ஒளியாக உருவகப்படுத்தி காட்டப்படுகிறார். கிறிஸ்து என்னும் ஒளி வாழ்வு தருகின்ற ஒளியாக இருக்கிறது. “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவான் 8:12) என்னும் இறைவார்த்தையும் நமக்கு இதையே சுட்டிக்காட்டுகிறது.
3. நம்பிக்கை என்னும் ஆன்மீகம்
நம்பிக்கை வைத்தல் என்பது புது விதமான ஆன்மீகம். "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16) எனும் இறைவார்த்தையின் அடித்தளத்தில், இவர் மீது நம்பிக்கை கொண்டு நிலைவாழ்வை பெறுவது ஒரு புது ஆன்மீகமாக இருக்கின்றது. இறை நம்பிக்கையோடு வாழ்வதே புது ஆன்மீகம் தான். அந்த நம்பிக்கையில் என்றும் ஊன்றியவர்களாக வாழ, இறைவனில் நம்மை அர்ப்பணிப்போம். நிலை வாழ்வைப் பெறுவோம்.
4. நம் வாழ்வில் நம்பிக்கையின் மூன்று நிலைகள்
நாம் எல்லோரும் குளத்தில் இருந்த மூன்று மீன்களின் கதையை
தெரிந்து இருப்போம். வருமுன் காப்போம்,
வரும்பொழுது காப்போம்
மற்றும் வந்தபின் காப்போம் என்னும் அக்கதையின் கருத்துகளை நன்றாகவே அறிந்து
இருப்போம். ஏறக்குறைய இதே கருத்தைத் தான் நமது நம்பிக்கை வாழ்க்கையிலும் நான்
பார்க்கின்றேன்.
a. வருமுன் நம்பிக்கை
பல வேளைகளில் நாம் இறைவனின் நீதி தீர்ப்புக்கு முன்பு, அதாவது ஒரு கஷ்டமான மற்றும் துன்பமான சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்பே நம்பிக்கை கொண்டு விடுகின்றோம். விவிலியத்தில் இறைவாக்கு உரைக்க பட்டு உடனடியாக மனம் மாறிய பலரை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம் (திருமுழுக்கு யோவான் மற்றும் சீடர்கள்)
b. வரும்பொழுது நம்பிக்கை
நம்மில் பலர் இத்தகைய நம்பிக்கைதான்
கொண்டிருக்கின்றோம். ஒரு கஷ்டம் மற்றும் துன்பம் வருகின்ற போது நாம் இறைவனை
நாடுகின்றோம் என்பது வரும்பொழுது நம்பிக்கை. இயேசுவைக் கண்டு மனம் மாறிய சக்கேயு, இயேசு வருகின்றார் என அறிந்து, அவரிடம் வந்து, சுகம் பெற்ற நோயாளிகள் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
c. வந்தபின் நம்பிக்கை
தனக்கு தண்டனை கிடைக்கப் போகிறது, தான் இறக்க போகின்றேன் என அறிந்து, சிலுவையில் நல்ல கள்ளன் இயேசுவிடம் பேசி மனம் மாறுகின்ற சூழ்நிலையே வந்தபின் நம்பிக்கை என்பதற்கான எடுத்துக்காட்டாகும். 'பட்டால் தான் புரியும்' என நம்மில் அதிகமானோர் வாழ்வில் கஷ்டங்கள் படுகின்ற பொழுதுதான் வாழ்வின் பாடங்களை உணர்கின்றோம்.
5. நிலைவாழ்வு தரும் ஆன்மீகம்
“ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” (யோவான் 11:21,22) எனும் லாசரின் சகோதரியின் வார்த்தைகள் நம்பிக்கையின் வார்த்தைகளாக இருக்கின்றது. அதன் பலனாக அவர் சகோதரர் வாழ்வு பெறுவதை பார்க்கின்றோம். நாமும் நமது வாழ்க்கையில் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு புது ஆன்மீகத்தில் இணைகின்ற போது நிலை வாழ்வு பெறுவோம். நாம் நம்பிக்கை கொண்டு நிலைவாழ்வு பெற இரண்டு வழிகள் நமக்கு தரப்படுகின்றது. ஒன்று இறைவார்த்தை மற்றொன்று இயேசுவின் பாடுகள் இவற்றின் மீது நாம் நிலையான நம்பிக்கை கொள்ளுகின்ற பொழுது நிலைவாழ்வு நம்மை வந்து சேரும்.
(1)- இறைவார்த்தை
"என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை
வாழ்வைக் கொண்டுள்ளனர்"
(யோவான் 5:24) என்னும் இறை வார்த்தையின் அடித்தளத்தில் இயேசுவின்
வார்த்தையை நாம் உணர்ந்து, அவரை நம்புகின்ற போது நிலை வாழ்வைப் பெறுவோம். எனவே இறைவார்த்தையை வாழ்வாக்குவோம், நிலை வாழ்வை பெறுவோம்.
(2)- இயேசுவின் பாடுகள்
"பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்"(யோவான் 3:14,15) என்னும் இன்றைய நற்செய்தியின் வார்த்தைகள் சிலுவையில் நமக்காக உயிர் துறந்த இயேசுவை நாம் பார்க்கின்ற போதெல்லாம், அவர் மீது நம்பிக்கை கொள்கின்ற போதெல்லாம் நிலைவாழ்வை பெறுவோம் என்பதை காட்டுகிறது. எனவே இந்த தவக்காலத்தில் இயேசுவின் பாடுகளை தியானித்து, அவர் மீது நம்பிக்கை கொண்டு அவர் தரும் நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
அருட்பணி.
குழந்தை
யேசு
ராஜன்
CMF
கும்பகோணம்
தவக்காலம்-மனமாற்றத்தின் பாதை-21/
அருட்பணி.அ.குழந்தை யேசு ராஜன். கிச
மற்றும் கிளாரட் இல்ல சகோதரர்கள்/
https://youtu.be/xUmxyJ97CvE